பொதுவாக புலியெதிர்ப்பு அரசியல் குறித்து மட்டும் தான், இந்தத் தவறான புரிதல் இன்று பொதுவானதாகக் காணப்படுகின்றது. அரசு - புலி இரண்டையும் எதிர்க்கின்ற பிரிவிலும் கூட, இதே தவறான அரசியல் போக்கு தான் காணப்படுகின்றது. புலியெதிர்ப்பின் அரசியல் சாரம் எப்படி ஜனநாயகத்தை மட்டும் கொண்டு இயங்குகின்றதோ, அதே ஜனநாயகத்தைக் கொண்டு அரசு – புலி எதிர்ப்பு அரசியலும் இயங்குகின்றது. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்று புலியை மட்டும் எதிர்க்கின்றது, மற்றது அரசு – புலி இரண்டையும் எதிர்க்கின்றது. இதற்கு அப்பால், இவர்களுக்கிடையிலான அரசியல்ரீதியாக வேறுபாடு தெளிவாக வெளிப்படுவதில்லை.
இந்த அரசியல் பின்புலத்தில் தான்
1. அரசு – புலி இரண்டையும் எதிர்க்கின்ற பிரிவு, புலியை மட்டும் எதிர்க்கின்ற பிரிவுடன் கூட பல மட்டத்தில் கூட்டமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
2. அரசு – புலி எதிர்ப்பில் இரு வேறுபட்ட கண்ணோட்டம் கொண்ட இடது வலது வேறுபாடு இன்றி, ஒன்றாக வலதுக்கு கீழ்ப்பட்டு செயல்படுகின்றனர்.
அரசு – புலியை எதற்காக எதிர்க்கவேண்டும்;? வெறும் ஜனநாயகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டால், அது இந்த சமூக அமைப்பிலான முதலாளித்துவ சமூக அமைப்பின் ஜனநாயக விரோதக் கூறை ஜனநாயகமாக மீளக் கோருவதில் தான் முடிகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் முரணற்றதாக இயங்குவதில்லை. அதுவே ஜனநாயகத்தை மறுப்பதை, அடிப்படையாகக் கொண்டே தான் இயங்குகின்றது.
ஜனநாயகம் என்பது முதலாளித்துவக் கூறாக இருப்பது மட்டுமின்றி, அது ஜனநாயக மறுப்பாகவும் இருக்கின்றது. ஜனநாயக மறுப்புதான், "ஜனநாயக" த்தின் இருப்பாகும். அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் அர்த்தமிழந்துவிடும். அனைவருக்கும் ஜனநாயகத்தை இந்த "ஜனநாயக" அமைப்பில் பெற முடியாது. ஜனநாயக அமைப்பு இருக்க வேண்டும் என்றால், "ஜனநாயக" மறுப்பு ஜனநாயகத்தின் ஊடாக செயற்பட்டேயாக வேண்டும். இந்த அமைப்பில் ஜனநாயகம் முரணற்றதாக இயங்குவதில்லை.
இந்த வகையில் அரசு – புலி எதிர்த்த போராட்டம், வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாக கொள்ளாத வரை, அவை வெறும் முதலாளித்துவ ஜனநாயக எல்லைக்குள் மையப்பட்ட ஒன்றாக மாறி இலக்கின்றிச் சீரழிகின்றது. அதன் அரசியல் இந்தச் சமூக அமைப்பின் எல்லைக்குள், வலதுசாரிய கூறாக ஓடுக்கும் வர்க்கம் சார்ந்ததாக இயங்குகின்றது.
ஆக இங்கு முதலாளித்துவ ஜனநாயகத்தின் முரணற்ற கூறுகளை, முதலாளித்துவ சமூக அமைப்பில் பெற முடியாது. சோசலிச அமைப்பில்தான் முரணற்ற முதலாளித்துவ கூறுகள் அமுலுக்கு வரும். ஏன் முதலாளித்துவ புரட்சி நடவாத சமூகங்களில், குறைந்தபட்ச முதலாளித்துவ கூறைக் கூட புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் தான் சாதிக்க முடியும்.
இன்று இலங்கை அரசுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நடத்துவதா அல்லது ஜனநாயகத்தை கோரி போராடுவதா என்ற அதே கேள்வி, புலியை மையப்படுத்திய அரசியலுக்கும் பொருந்தும்.
ஜனநாயகப் போராட்டத்துக்குள் வர்க்கப் போராட்டதை நடத்துவதா அல்லது வர்க்கப் போராட்டத்திற்குள் ஜனநாயக போராட்டத்தை நடத்துவதா என்ற இரண்டு அடிப்படையான வேறுபாட்டைக் கொண்ட இவை, இரு வேறு போராட்டங்களாகும். இரு வேறு வர்க்கங்களின் நேர் எதிரான கண்ணோட்டமாகும். குறிப்பாக குட்டிபூர்சுவா வர்க்கம் ஜனநாயகத்தின் கீழ் வர்க்கப்போராட்டத்தை பற்றிப் பேசுகின்றது. பாட்டாளி வர்க்கமோ, வர்க்கப் போராட்டத்தின் கீழ் ஜனநாயகப் போராட்டத்தை பற்றி பேசுகின்றது.
இந்த அடிப்படை வேறுபாட்டை புரட்சிகர சக்திகள் அரசியல்ரீதியாக வேறுபடுத்தி அணுக வேண்டும். இந்த அரசியல் அடிப்படை எங்கும் பொருந்தும்.
இன்று புலியின் அரசியல் செல்வாக்கு உள்ள புலத்தில், அதற்கு எதிரான போராட்டம் மற்றும் கருத்துகள் என்பது, வர்க்கக் கண்ணோட்டம் சார்ந்து ஜனநாயகத்தைக் கோருவதாக இருக்கவேண்டும். ஜனநாயகக் கண்ணோட்டம் சார்ந்த வர்க்கக் கண்ணோட்டம், குட்டிபூர்சுவா வர்க்கக் கண்ணோட்டமாகும்.
பொதுவாக புலி – அரசு எதிர்ப்பு என்ற அடையாளம் மட்டும் போதாது. மாறாக வர்க்க கண்ணோட்டம் கொண்ட புலி – அரசு எதிர்ப்பு அரசியலை முன்வைப்பது அவசியமானது. வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்தாத ஜனநாயகம் "சுற்றி சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே" சுற்றுவது தான்.
அனைத்தையும் வர்க்க கண்ணோட்டத்தில் அணுகுவதும், அதை முதன்மைப்படுத்திச் செயல்படுவதும் அவசியம்.
பி.இரயாகரன்
27.08.2012