Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"போராட்டத்தின்" பெயரில், "இடதுசாரியத்தின்" பெயரில், "முற்போக்கின்" பெயரில் இன ஜக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்று வர்க்க ஐக்கியத்தை உயர்த்தி, இன ஜக்கியத்தைக கோரும் எமது தனித்துவமான முரணற்ற அரசியல் நிலையும், இதில் சமரசம் செய்யாத எமது போராட்டமும், சமூக அக்கறை உள்ளவர்களை இதன் பால் வழிநடத்தத் தொடங்கி இருக்கின்றது. தமிழ்-சிங்கள சமூக முன்னோடிகள் மத்தியில், இதுவொரு அரசியல் முன்னோக்காக மேலெழுந்து வருகின்றது. இதனால் இதற்கு எதிரான எதிர் தாக்குதல்கள், பலமுனையில் கூர்மையடைகின்றது. அதுவே சில எதிர்நிலைக் கோட்பாடாக உருவாக்கம் பெறுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் இன முரண்பாடு தோன்ற, வர்க்கப் போராட்டம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டைக் கூட எமக்கு எதிராக முன்வைக்கின்றனர். இலங்கையில் வர்க்க முரண்பாட்டை முறியடிக்க, ஆளும் வர்க்கங்கள் இனமுரண்பாட்டை முன்தள்ளியது என்ற பாட்டாளி வர்க்க அரசியலை மறுக்கும் எதிர்நிலை வாதம் தான் இது. வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள், இனவாதத்தை கைவிடுகின்றோம் என்ற எதிர்நிலை அரசியல் தர்க்கம். வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்க அமைப்பை அனுசரித்தால், மற்றைய முரண்பாடுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்ற ஆளும் வர்க்க கோட்பாடுகளை இன்று முன்வைக்கின்றனர்.

மற்றைய முரண்பாடுகளை வர்க்க அரசியலில் இருந்து நீக்கி, ஆளும் வர்க்க அரசியலுக்கு கீழ்ப்படுத்தி போராட்டங்களைச் சீரழித்தவர்கள் தான், இன்று வர்க்க போராட்டம் தான் இந்த முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது என்று கூறி வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோருகின்றனர்.

வர்க்கப் போராட்டம் சாத்தியமின்மை பற்றியும், இன ஐக்கியம் சாத்தியமின்மை பற்றியும் அடிக்கடி பலர் பல முகமூடிகளை அணிந்தபடி இன்று கூறுகின்றனர். இலங்கையில் இன ஐக்கியமும், வர்க்கப்போராட்டமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தொடங்கி, அதில் தங்கள் பங்கை மறுப்பதில் இருந்து, வர்க்க அரசியலை அரசியல் எங்கும் நீக்கம் செய்வதுவரை மிக முனைப்பாக செயல்படுத்துகின்றனர்.

வர்க்கப் போராட்டம் தான் இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது என்ற, ஆளும் வர்க்க நடைமுறையைச் சார்ந்து நின்று இனமுரண்பாட்டை எடுத்துக் காட்ட முற்படுகின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது வர்க்கமற்ற அமைப்பில் இருந்து உருவாகவில்லை. இருக்கின்ற இந்த வர்க்க அமைப்பின் அரசியல் விளைவாகும்.

இலங்கையை ஆளும் வர்க்கங்கள் நிலவும் வர்க்க முரண்பாட்டை பின்தள்ளவே, இனமுரண்பாட்டை மேலே கொண்டு வந்தன. வர்க்கப் போராட்டம் இன முரண்பாட்டைக் கொண்டுவரவில்லை. வர்க்கப் போராட்டத்தை மறுக்க ஆளும் வர்க்கம் முன்தள்ளிய இனமுரண்;பாட்டை முறியடிக்கவே, சுயநிர்ணயத்தை மார்க்சியம் முன்வைக்கின்றது.

முரணற்ற சரியான இந்த வர்க்கக் கோட்பாட்டை சிங்கள தரப்பு மட்டுமல்ல, தமிழ் தரப்பு கூட வர்க்கக் கண்ணோட்டத்தில் முன்னெடுக்கவில்லை. மாறாக சுயநிர்ணயத்தை இனவாத கண்ணோட்டத்தில் திரித்து, இன ஐக்கியத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் மறுதளித்தனர். இப்படி இருக்க தமிழ்-சிங்கள பரந்துபட்ட மக்கள் இனவாதிகளாக இருப்பதாக குற்றஞ்சாட்டும் இவர்கள் கூட, வர்க்கக் போராட்டத்தை அரசியலாகக் கொண்டு செயல்படுபவர்களல்ல. இந்த வகையில் இன ஐக்கியம் சாத்தியமில்லை, வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை என்று கூறுகின்ற இந்த மூகமூடிக் கும்பலையும் நாம் இதன் மூலம் இனம் காணமுடியும்.

வர்க்கப் போராட்டத்தை முறியடிக்கவே மற்றைய முரண்பாடுகளை ஆளும் வர்க்கம் முன்னுக்கு கொண்டு வருகின்றனர் என்ற உண்மையைக் கொண்டு, வர்க்கப் போராட்டத்தையே எதிர்மறையில் மறுக்க முனைகின்றனர். மிக நுட்பமான இந்த எதிர்நிலைக் கோட்பாடு சில உண்மைகளை போட்டு உடைத்துப் போடுகின்றது.

1.மற்றைய முரண்பாடுகள் சுரண்டும் வர்க்கத்தின் அரசியல் நடைமுறைக் கோட்பாடாக இருக்கின்றது என்பதை நிறுவுகின்றது.

2.இதற்கு எதிரான போராட்டம் வர்க்கரீதியாக மட்டும் தான், முரணற்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தில் தான் தீர்க்க முடியும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

வர்க்கரீதியான போராட்டத்தை முடக்க முனையும் முரண்பாடுகள், ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்தது என்ற வகையில், இதற்கு எதிரான போராட்டம் கூட இந்த வர்க்கத்துக்கு எதிராகவே நடத்தப்பட வேண்டும். ஆக வர்க்கரீதியாக நடத்தப்படவேண்டும் என்பதையும், வர்க்க ஐக்கியத்தைக் கோருவதையும் இது நிறுவுகின்றது.

வர்க்கரீதியான இன ஐக்கியம் சாத்தியமில்லை என்பது, இங்கு மாற்றத்தை மறுக்கும் இயங்கியல் மறுப்புக் கோட்பாடாகும். வர்க்கப்போராட்டம் சாத்தியமற்றது என்பது நகைப்புக்குரியதாகின்றது

இன்று குவியும் மூலதனங்கள் என்ன செய்கின்றது. தனித்தனி மனித உழைப்புக்குப் பதில், மனிதனின் கூட்டுழைப்பை உருவாக்குகின்றது. இது தவிர்க்க முடியாமல், அவர்களுக்கு இடையில் தனித்தனியான தனிவுடமையிலான உழைப்பு சார்ந்த சிந்தனை முறையையே இல்லாதாக்குகின்றது. பொது உழைப்பு, பொது வாழ்வு சார்ந்த மனித சிந்தனையை உருவாக்குகின்றது. இப்படி கூட்டுழைப்பும், இன்றைய குவிந்த உற்பத்திமுறையும், மனித முரண்பாடுகளை இல்லாதாக்குகின்றது. பால், இனம், சாதி, நிறம், நாடு… கடந்து, அனைவரையும் ஒரு கூட்டுழைப்பின் கீழ் கொண்டு வருகின்றது. இது மனிதர்களை உழைப்பின் கீழ் ஒருங்கிணைக்கின்றது. தனித்தனி மனிதர்களின் தனிவுடமைக்குப் பதில், இன்றைய மூலதனக் குவிப்பின் எதிர்மறையான சமூக விளைவுதான் இதுதான். இந்தச் சமூக பொருளாதார அமைப்பில் பால், இனம், சாதி, நிறம்… சார்ந்த, அதாவது இயற்கை அல்லாத வேறுபாடுகளை உழைப்பும் அது சார்ந்த வாழ்க்கைமுறையும் இல்லாததாக்குகின்றது. புதிய வாழ்வியல் முறை, பழைய சிந்தனை முறையை படிப்படியாக இல்லாததாக்குகின்றது. இப்படி பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றம், பழைய சிந்தனைக்குப் பதில் புதிய சிந்தனை மாற்றத்தை அளவுரீதியாக ஏற்படுத்துகின்றது. இதில் ஏற்படும் பண்புரீதியான மாற்றம் வர்க்கப் புரட்சியாக இருப்பதை சாத்தியமற்றது என்று கூறுகின்ற புரட்டை தான், இங்கு நாம் தெளிவாக காண்கின்றோம்.

இந்த உண்மை ஒருபுறம் இருக்க, மறுதளத்தில் மற்றைய முரண்பாடுகளை முன்னுக்கு கொண்டு வரும் வர்க்க முரண்பாடு சார்ந்த வர்க்கப்பேராட்டம் பற்றிய கருதுகோள், மற்றைய முரண்பாடுகள் போல் இல்லாத ஒன்றைச் சார்ந்தல்ல.

மனிதனை மனிதன் சுரண்டும் தனிவுடைமையிலான வர்க்க அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாடுதான் வர்க்க முரண்பாடு. அதிகமாக இன்னும் அதிகமாக சுரண்டுவது இந்த சமூக அமைப்பின் உள்ளார்ந்த இயங்குவிதியாக இருக்கின்றது. இதனால் முரண்பாடு தவிர்க்க முடியாத அதன் விளைவாகின்றது. இந்தச் சமூகப் பொருளாதார அமைப்பில் வர்க்க முரண்பாடு எங்கும் எதிலும் இயங்கும் விதியாகின்றது.

இதனால் நாம் அறியப்பட்ட யுத்தங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களாக இருப்பதை காண்கின்றோம். மனிதனை மனிதன் சுரண்டும் வரை, வர்க்கப் போராட்டம் எங்கும் எதிலும் அரசியல் சாரமாகின்றது. இங்கு வர்க்கமற்ற அதாவது சுரண்டலற்ற அமைப்பு மட்டும் தான், வர்க்க முரண்பாட்டை இல்லாததாக்கும்.

இந்தச் சமூக பொருளாதார வர்க்க அமைப்பில் மனித உழைப்பை மட்டுமல்ல, மற்றவனின் தனிவுடமைகளை பறித்தல் தான் அதன் இயக்கம். இங்கு உழைப்புக்கான கூலியைக் கூட, மீளப் பறிக்கும் நுகர்வுப் பண்பாடுவரை இதைப் புரிந்து கொள்ளவேண்டும். தனிப்பட்ட மனிதர்களின் தனிவுடமையையும், சமூகச் சொத்துடமையையும் பறித்துக் குவிப்பதன் மூலம், சொத்துடமையை இழத்தல் என்பது எதிர்முனைக் கூறாகவே இயங்குகின்றது. தனிவுடமை சார்ந்து சிலரிடம் குவியும் உடமையும், உடமை எதுவுமற்ற பரந்துபட்ட மக்கள் கூட்டமும் என்ற சமூகப் பிளவும் ஏற்படுகின்றது. இப்படிச் சிலரின்; சொத்துக்குவிப்பு சார்ந்து பரந்துபட்ட மக்கள் வாழவேண்டிய அவலம், முரண்பாடாகின்றது. இப்படி சிலரின் இந்தச் சொத்தை சமூக உடமையாக மீளப்பறிப்பதன் மூலம் தான், மனிதன் வாழமுடியும் என்ற முரண்பாடு வர்க்கப் போராட்டமாக வெடிக்கின்றது. இதைத்தான் சாத்தியமில்லை என்கின்றனர். மக்கள் சொத்துடமைக்கு அடிமையாக, அதன் சுரண்டல் விதிக்குள் கைகாட்டி அடிமையாக பணிந்தும் இணங்கியும் வாழ்வார்கள் என்று கூறுகின்றனர்.

இவர்கள் தான் செல்வத்தை மீள சமூக உடமையாக்குவதை தடுக்க, மனிதப் பிளவுகளை உருவாக்குகின்றனர். இதற்கு அமைவாகவே கோட்பாடுகளையும், மனித முரண்பாடுகளையும் முன்னுக்கு கொண்டுவருகின்றனர். இன ஐக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்றைய பிரச்சனைகளை தீர்க்க வர்க்கப் பார்வை மட்டும் போதாது என்கின்றனர், பொருத்தமற்றது என்கின்றனர். இப்படி பல விதத்தில் வர்க்கப் போராட்டத்தை தடுக்க பல்வேறு கோட்பாடுகளை முன்தள்ளுகின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்பவர்களையும், வர்க்கப் போராட்டத்தை அரசியலாக கொள்ளாதவர்களையும் இனம் கண்டு கொண்டு, போராட வேண்டிய அரசியல் தெளிவு எமக்கு அவசியமானது.

பி.இரயாகரன்

26.08.2012