Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனித வாழ்வை எப்படி எந்த வழியில் நாம் புரிந்து கொள்வது? நாம் புரிந்து வைத்திருப்பது முழுமையானதா? என் வாழ்வைக் கூட நான் புரிந்து கொண்டுள்ளேனா? இப்படி நான் என்னை, என்னை சுற்றிய மனிதர்களை, முழு உலகத்தை எப்படி, எந்த அடிப்படையில் புரிந்துகொண்டு இருக்கின்றேன்? இப்படி என் அறிவையும், என் புரிதலையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நான் என் வாழ் நிலையின் எல்லைக்குள் தான், அந்த வாழ்வின் இருப்புக்கும் இயல்புக்கும் ஏற்றதான அறிவும் புரிதலுமே, எனது சொந்த வெளிப்பாடாகின்றது. நான் என் என்ற குறுகிய அறிவு மற்றும் புரிதல் சார்ந்த கண்ணோட்டத்தைக் கடந்து, நாங்கள் எங்கள் சார்ந்த அறிவையும் புரிதலையும் பெறுவது எப்படி? இதற்கு மனித சிந்தனை எதன் பிரதிபலிப்பு என்ற தெளிவு எமக்கு அவசியமானது.

இதுபற்றி லெனின் "மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்" என்ற நூலில் கூறுவதை பார்ப்போம். "இயற்கை என்பது – அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது – மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகின்றது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கின்றது. அதே போல்தான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துகளும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கின்றது" என்றார்.

இப்படி வாழ்க்கை சார்ந்த எமது கருத்துக்கள், முரண்பாடுகள் பொருளாதார அமைப்பு முறை சார்ந்து பிரதிபலிக்கின்றது. எமது பொருளாதார அமைப்பு முறை இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் முன்னேறிக் கொண்டும் இருப்பதால், சமூக அறிவும் கூட மாறிக் கொண்டே இருக்கின்றது. இது கூட இயல்பாக சமூக இயக்கத்தில் அளவுரீதியான மாற்றத்தையும், புரட்சிகளின் போது பண்புரீதியான மாற்றத்தையும் சந்திக்கின்றது. இங்கு எமது அறிதல் புரிதல் நிலையானதல்ல, மாற்றத்துக்கு உட்பட்டது. எப்போதும் முழுமை நோக்கிப் பயணிப்பது தான்.

ஆணாதிக்க அமைப்பில் ஆணுக்கு உட்பட்டு வாழும் பெண்ணின் அடிமைத்தனத்தை பெண் தன் வாழ்நிலை சார்ந்து புரிந்து கொள்வதை, ஆண் தன் வாழ்நிலை சார்ந்து புரிந்து கொள்ள முடியாது. தாழ்ந்த சாதிய மக்கள் தம் இழிவான சாதிய வாழ்நிலையைச் சார்ந்து புரிந்து கொள்வதை, உயர் சாதிய வாழ்நிலை மூலம் புரிந்துகொள்ள முடியாது. இப்படித்தான் அனைத்தும். இந்த வகையில் வாழ்நிலை ஒரு வாழ்வியலை மட்டுமல்ல, அதில் இருந்து ஒரு சிந்தனையையும் முரணையும் கூட உருவாக்கின்றது. இப்படி முரண்பட்ட வாழ்நிலைகள், முரண்பட்ட சிந்தனைகள் உருவாகின்றது. இது மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடாக, சமூக முரண்பாடாக மாறுகின்றது.

இது இப்படித்தான் இருக்குமா? மாறாத ஒன்றா? நாம் இதை முழுமையான வாழ்வியலாக, முரணற்ற சிந்தனையாக உணர முடியாதா? இன்று இருப்பது தான், ஆதிச் சமூக அமைப்பில் இருந்ததா? நாளை இப்படியே தொடர்ந்து நீடிக்குமா?

இங்கு இயற்கை சார்ந்த முரண்பாடுகள் அல்லாத அனைத்தையும், அனைவரும் தங்கள் வாழ்வியல் சார்ந்த முரணற்ற சிந்தனை மூலம் உணரமுடியும். ஆக இங்கு இதை வாழ்வியல் முறைதான் தான் தீர்மானிக்கின்றது. அதாவது பொருளாதார அமைப்பு முறைதான் இதைத் தீர்மானிக்கின்றது. எம் வாழ்வுக்கு தேவையான பொருளை நாம் பெறும் முறைமைதான் வாழ்வியல் சார்ந்த சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. முரணற்ற வாழ்வியல், சிந்தனை மனித விருப்பங்களோ, நல்லெண்ணங்களோ அல்ல. அப்படியானால் இதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் என்ன?

ஆதிமனிதன் தன் கூட்டுழைப்பு மூலம் இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த போது, அவன் தனக்குள் முரண்பட்டது கிடையாது. அவனின் வாழ்நிலை வேறுபடாத நிலையில், அவனுக்குள் சிந்தனைகள் வேறுபடவில்லை. இது போல் விவசாயம் சார்ந்த பெண் ஆதிக்க சமூக அமைப்பில் பெண்ணுக்கு இடையில் முரண்பாடு இருந்தது கிடையாது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான முரண்பாடு இருந்தது. இதன் பின் கால்நடை சார்ந்து ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆணுக்கு இடையில் முரண்பாடு இருந்தது கிடையாது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான முரண்பாடு இருந்தது. இதன் பின்னான ஆணாதிக்கத் தனியுடமைச் சமூக அமைப்பில் தான் மனிதர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றுகின்றது. இப்படித்தான் சமூக முரண்பாடுகள் மட்டுமின்றி, மனித சிந்தனைகளும் கூட முரண்பட்டன.

இன்று குவியும் மூலதனங்கள் தனித்தனி மனித உழைப்புக்குப் பதில், மனிதனின் கூட்டு உழைப்பை உருவாக்குகின்றது. இந்தக் கூட்டான உழைப்பு, அவர்களுக்கு இடையில் தனித்தனித் தனிவுடமையிலான உழைப்பு சார்ந்த சிந்தனையை இல்லாதாக்குகின்றது. பொது உழைப்பு, பொது வாழ்வு சார்ந்த மனித சிந்தனையை உருவாக்குகின்றது. உழைப்புச் சார்ந்த மனித முரண்பாடுகளை, இன்றைய உற்பத்திமுறை இல்லாதாக்குகின்றது. இப்படி கூட்டு உழைப்பு பால், இனம், சாதி, நிறம்… கடந்து, அனைவரையும் ஒரு கூட்டுழைப்பின் கீழ் கொண்டு வருவதுடன், மனிதர்களை உழைப்பின் கீழ் ஒருங்கிணைக்கின்றது. தனித்தனி மனிதர்களின் தனிவுடமைக்கு பதில், மூலதன குவிப்பின் எதிர்மறையான சமூக விளைவு இதுதான். பொருளாதார அமைப்பில் பால், இனம், சாதி, நிறம்… சார்ந்த, அதாவது இயற்கை அல்லாத வேறுபாடுகளை உழைப்பும் அது சார்ந்த வாழ்க்கைமுறை இல்லாதாக்குகின்றது. புதிய வாழ்வியல் முறை, பழைய சிந்தனை முறை படிப்படியாக இல்லாதாகின்றது. பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றம், பழைய சிந்தனைக்குப் பதில் புதிய சிந்தனை மாற்றத்தை அளவுரீதியாக ஏற்படுத்துகின்றது. பண்புரீதியான மாற்றத்துக்கு, புரட்சி அவசியம்.

ஆனால் இந்த அளவுரீதியான மாற்றம், சமூகத்தை தானாக தன்னியல்பாக மாற்றிவிடாது. அளவுரீதியான இந்த மாற்றம் தனிவுடமை அமைப்புக்கு கீழ் நடக்கின்றது. இதை மாற்றி அமைக்கும் பண்புரீதியான மாற்றம் அவசியமானது. நிலவும் தனியுடமை அமைப்பு தூக்கியெறியப்படாத வரை, கூட்டு உழைப்பின் கீழ் வாழும் மக்கள் அதைச் செய்யாத வரை மனித முரண்பாடுகள் வர்க்க முரண்பாடாக தொடர்ந்து நீடிக்கும். இதை ஒருங்கிணைத்து செய்யும் கட்சியும், தனியுடமையை இல்லாதாக்கும் அமைப்பு முறையும் அவசியமாகின்றது.

மார்க்சியம் தன் வர்க்கப் போராட்டத்தில் தனிச் சொத்துடைமை ஒழித்தலைக் கோருகின்றது. இதன் மூலம் மனிதர்களுக்குள் முரணற்ற வாழ்நிலை மற்றும் கூட்டு உழைப்பு மூலம் பழைய சிந்தனைமுறைக்குப் பதில், புதிய வாழ்வியல் சிந்தனைமுறையைக் கோருகின்றது. இதை மனித வாழ்வில் இருந்துதான், விஞ்ஞானபூர்வமாக மார்க்சியம் எடுத்துக் காட்டுகின்றது. "எங்கள் போதனை செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வரட்டுச் சூத்திரம் அல்ல" என்றார் எங்கெல்ஸ். லெனின் இதைத்தான் "மார்க்சியம் உயிரற்ற வரட்டு சூத்திரமல்ல. .. செயலுக்கு உயிருள்ள வழிகாட்டி" என்றார். வாழ்வியல் மாறும் போது, மனித சிந்தனைகள் மாறுகின்றது. மனித முரண்பாடுகள் மறைகின்றது. இந்தச் செயலுக்குரிய வழிகாட்டியாக, மார்க்சியம் மட்டும் தான் வழிகாட்டுகின்றது.

 

பி.இரயாகரன்

05.08.2012

 

தொடரும்

1.மார்க்சியம் என்பது என்ன? - மார்க்சியத்தை புரிதல், கற்றல், நிறுவுதல் பகுதி - 01