சிங்கள மக்களை நேசியுங்கள், சிங்கள அரசை நிராகரியுங்கள். தமிழ் மக்களை நேசியுங்கள், தமிழ் இனவாதிகளை நிராகரியுங்கள். அதுபோல் யாரெல்லாம் முஸ்லிம் மக்களை நேசிக்காமல் முஸ்லிம் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனரோ, அவர்களை நிராகரியுங்கள். குறிப்பாக யாரெல்லாம் முஸ்லிம் மக்களைச் சாராது அரசுடன் நிற்கின்றனரோ, அவர்களை முதலில் நிராகரியுங்கள். இவர்களின் இன, மத கோசங்கள், உங்களை மோதவிட்டு, அவர்கள் அதில் குளிர்காய்வது தான். தங்கள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து, தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள், மற்றவர்களைத் துணைபோக அனுமதிக்காதீர்கள்.
அனைத்து முஸ்லிம்கள் பெயரில் "எமது முஸ்லிம் தலைமைகளைப் பாதுகாக்க ஒன்றுபடுங்கள்!" என்று, இன்று இனங்களைப் பிளந்து ஓடுக்கும் பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்து கோசம் எழுப்புகின்ற கேலிக்கூத்தைக் காணமுடிகின்றது. தனது தனிப்பட்ட குற்றக் கும்பல் தனத்தை மூடிமறைக்க, முழு முஸ்லிம் மக்களையும் இனவாதம் மூலம் உசுப்பேற்ற முனைகின்றனர். "முஸ்லிம் தலைமை" பற்றி பேசிக்கொண்டு "வடக்கில் எமது வாழ்வுரிமையை ஜனாதிபதி அவர்களே உறுதிப்படுத்துங்கள்!" என்று கோசம் போடுகின்றனர். இது உண்மையில் ரிசாட் பதியுதீனின் மந்திரி பதவியைக் காப்பாற்றக் கோருகின்றது. ஜனாதிபதிக்கும் "முஸ்லிம் தலைமைக்கும்" என்ன தான் அப்படி உறவு? எதற்கு இங்கு "முஸ்லிம் தலைமை"? ஏன் ஜனாதிபதியே அதை பார்த்துக் கொள்வார் தானே! இடையில் ஏன் பொறுக்கித் தின்னும், ரிசாட் பதியுதீன் போன்ற பொறுக்கிகளுக்கு என்ன தேவை இருக்கின்றது? இங்கு "முஸ்லிம் தலைமை" முஸ்லிம் மக்கள் எனும் பெயரில் பொறுக்கித் தின்பதுதான். முஸ்லிம் மக்கள் அல்லாத பேரினவாத அரசுடன் சேர்ந்த ஓட்டுமொத்த மக்களையும் ஒடுக்கும் ரிசாட் பதியுதீன், முஸ்லிம் தமிழ் மக்களை பிளந்து மோதவிடுவதன் மூலம் "முஸ்லிம்களை வாழவிடு" என்று கூறுகின்ற கூற்று குறுந்தேசியத்தை சார்ந்த நிற்கின்றது.
அரசு முஸ்லீம் வழிபாட்டுத்தலங்களுக்கு எதிராக எப்படி அணுகுகின்றதோ, அதையே தமிழ்மக்களுக்கு எதிராக முஸ்லிம் பெயரில் ரிசாட் பதியுதீன் மன்னாரில் ஆடிக்காட்ட முனைகின்றார். இப்படி இன்று இனம் மதம் சார்ந்த அரச பயங்கரவாதம் தான், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சார்ந்த ஒன்றாக இட்டுக்கட்டி காட்டப்படுகின்றது.
"புலிகளின் மறுபிறப்பை நிறுத்து!" என்று முஸ்லீம் மக்களின் பெயரில் ரிசாட் பதியுதீன் கும்பல் கோசமிடுகின்றனர். ரிசாட் பதியுதீன் அரசுடன் சேர்ந்து இயங்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பள்ளிவாசல்களுக்கு வழிபட வந்த மக்களைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக புலிப்பாணியில் இனவாதத்தை தூண்டி விடுகின்றார்.
புலிகள் அன்று எப்படி தங்கள் அதிகாரம் மூலம் இனவாதத்தை தூண்டி முஸ்லீம் மக்களை ஓடுக்கினரோ, அதேயொத்த அதிகாரத்தின் துணையுடன் குறுகிய முஸ்லிம் இனவாதத்தை தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர்.
ரிசாட் பதியுதீனின் மன்னார் நீதிமன்றம் மேலான தாக்குதல், மிரட்டல் .. என அனைத்தும் இன்று முழுமையாக அம்பலமான நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கக் கோரும் போராட்டங்கள் கூர்மையாகி உள்ள நிலையில் தான், மிக மோசமான இனவாதத்தை தூண்டி அதில் சரணடைய முனைகின்றார். "எமது பூர்வீக மண்ணை மீட்டுத்தாருங்கள்" என்று பூர்வீகமில்லாதவர்களைக் கொண்டு கோசம் போடுகின்றனர். மீள் குடியேற்றத்தை தமிழ் மக்கள் தடுப்பதாகவும், அவர்களின் வாழ்விடத்தை தமிழ் மக்கள் அபகரித்து வைத்து இருப்பதாகவும் இட்டுக்கட்டும், ஒரு பச்சையான இனவாதத்தை பிற பிரதேச அப்பாவிகள் மூலம் தூண்டிவிடுகின்றனர்.
முஸ்லிம் மக்களின் சட்டபூர்வமான வாழ்விட உரிமைகளை தமிழ் மக்கள் மறுப்பதாகவும், அதை அவர்கள் தர மறுப்பதாகவும் கூறுகின்ற புரட்டுகள் அனைத்தும் இட்டுக்கட்டியவை. புலிக்கு பின் இதுவொரு விடையமேயல்ல. இங்கு சட்டபூர்வமான தனி உரிமை சார்ந்த விதிவிலக்கான உதிரி சம்பவங்கள் ஏதாவது இருப்பின், அது தனியுரிமை வழக்குகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது. இந்த விடையத்தில் முஸ்லிம் தமிழ் என்ற எந்த வேறுபாடுமின்றி, தனியுடமை சம்மந்தமான விடையமாக தான் எங்கும் உள்ளது. இப்படித்தான் இருக்கின்றது உண்மை.
மறுதளத்தில் அன்று முஸ்லிம் மக்கள் மேலான ஒடுக்குமுறையை புலிகள் செய்தனர். அதே புலிகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய தமிழ்மக்கள் இதைச் செய்யவில்லை. இன்று முஸ்லீம் மக்கள் மத்தியில் அரசின் துணையுடன் இனவாதத்தை தூண்டிவிடும் ரிசாட் பதியுதீன் கூட, புலிகளின் அதே பாணியில்தான் இன்று செய்கின்றார். இங்கு "புலிகளின் மறுபிறப்பை நிறுத்து!" என்பது, உண்மையில் அவர்களே புலிகளாக மாறி இனவாதத்தை தூண்டி கோசம் போடுகின்றனர். இன்று எப்படி இனம் சார்ந்த தமிழ் தலைமைகள் உள்ளனரோ, அப்படித் தான் முஸ்லிம் தலைமைகளும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர்.
இங்கு "மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்காதே!! முஸ்லிம்களை வாழவிடு," என்பது, முஸ்லிம் மக்களைத் தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழவிடாது தடுப்பதன் மூலம், "பயங்கரவாதத்தை" தோற்றுவிப்பது தான். புலிப் "பயங்கரவாதம்" அரசின் இனவாதக் கொள்கையினாலும், அரசபயங்கரவாதத்தினாலும் தோற்றம் பெற்றது. இங்கு "மீண்டும் வடக்கில் பயங்கரவாதம்" தோன்றுமாயின் நீங்களும் உங்கள் அரசும் தான் அதற்கு காரணமாக இருக்கிறீர்கள். எப்படி தமிழ்மக்கள் முஸ்லிம் மக்கள் மேலான பயங்கரவாதத்துக்கு காரணமாக இருக்கவில்லையோ, அப்படியே முஸ்லிம் மக்கள் கூட காரணமாக இருக்கமாட்டார்கள்.
இன்று இனவாதமும், அரச பயங்கரவாதமும், பாசிசமாக்கலும் சார்ந்து இலங்கையை ஆளும் வர்க்கங்களும், அதை முன்னெடுக்கும் அரசும், அதன் பின் பிழைக்கும் உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் தான், மக்களை ஒடுக்கி மீண்டும் வன்முறையைத் தூண்டுகின்றனர்.
இன்று புலியில்லாமல் அரசியல் நடத்த முடியாத நிலையில் அரசியல் முதல் அரசு இயந்திரம் வரை, புலி வருகின்றது என்று கூச்சல் போடுகின்றனர். அரசியல் என்பது ஆயுதமும், வன்முறையுமே என்று புலிகள் பாணியில் கூறுகின்ற, பாசிச வக்கிரம் எங்கும் இன்று கொப்பளிக்கின்றது. இனவாதம் மூலம் மீண்டும் ஒரு புலியை தோற்றுவிப்பதன் மூலம் மக்களைப் பிளந்து ஆள அரசும், அரச எடுபிடிகளும் தலைகீழாக குதித்தெழுகின்றனர்.
இவர்கள் தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள். அதற்கு மற்றவர்கள் துணைபோவதை அனுமதிக்காதீர்கள்.
பி.இரயாகரன்
29.07.2012
1.பேரினவாத ஒட்டுண்ணியாக அரசியல் நடத்தும் முஸ்லீம் தலைமைத்துவம்
2.மன்னாரில் முஸ்லீம் தமிழ் இன மத மோதலை தூண்டிவிடும் அரசியல் பின்னணி குறித்து..