Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மைக் காலமாக சில சம்பவங்கள் மீது, சில காலகட்டங்கள் மீது.., விமர்சனம் செய்வதன் மூலம், அதை மட்டும் தவறாக காட்டுகின்ற பம்மாத்தான "சுயவிமர்சன" "விமர்சன" அரசியலை அரங்கேற்றுகின்றனர். அம்பலப்பட்டுபோன புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ். வரை, இந்த உத்தி மூலம், மீண்டும் மக்களை எமாற்ற முனைகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் அரசியல் சரியாக இருந்ததாக காட்டிக் கொண்டு, மீண்டும் அதை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் கூறும் "தவறான" சம்பவங்கள், "தவறான" காலகட்டத்துக்கான பொறுப்பை தனிநபர்கள் மீதும், குறித்த சூழல் மீதும், மற்றவர்கள் மீதும் சுமத்தும் இவர்கள், இது தாங்கள் கொண்டிருந்த அந்த அரசியலின் தவறல்ல என்கின்றனர். இதன் மூலம் மற்றவர்கள் மீது இலகுவாக குற்றம் சாட்டுவதன் மூலம், அதை தங்கள் சரியான அரசியலின் ஒரு "தவறாக" இட்டுக்கட்டி காட்ட முற்படுகின்றனர். இது தவறு அல்ல, மாறாக அந்தந்த அரசியலின் பண்பு ரீதியான அளவு ரீதியான அரசியல் வெளிப்பாடாகும். இங்கு "தவறு" குறித்த இவர்களின் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது, கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்துடன் கூடிய அரசியல் மோசடியாகும்.

 

 

வலதுசாரிய புலிகள் முதல் இடதுசாரி ஈ.பி.ஆர்.எல்.எவ். வரை, தங்கள் மக்கள் விரோத அரசியல் அடித்தளத்தை முன்னிறுத்தும் மோசடியில் இறங்கி இருக்கின்றனர். இதன் பின் அமைப்பு ரீதியாக உள்ளவர்கள் தொடங்கி தனிநபராக தம்மை முன்னிறுத்தும் பிரமுகர்கள் வரை, இந்தவகை உத்தியான குறுகிய அரசியல் மூலம் மக்கள் விரோத அரசியல் மோசடியில் இறங்கியுள்ளனர்.

இந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு அண்மைக் காலமாக தம்மை மீள முன்னிறுத்தி, சுயவிமர்சனம் - விமர்சனம் என்ற பெயரில் அரசியல் மோசடியை செய்து வருகின்றனர். இந்தியா இராணுவம் மண்ணில் இருந்த காலத்தையும், அக்காலத்தில் தங்கள் அரங்கேற்றிய குற்றத்தையும் ஒரு "துன்பவியல்" சம்பவமாக காட்டி, தங்களை சரியான மக்கள் சார்ந்த அரசியல் அமைப்பாக இருந்ததாக காட்ட முற்படுகின்றனர்.

இந்த வகையில் வரதராஜப்பெருமாளின் கட்டுரைகள், புஸ்பராணியின் நூல் வெளியீட்டு விழா உரைகள், அவர்களின் கூட்டங்களிலும் இந்த "துன்பவியல்" பற்றிப்பேசி, தம்மை சரியான மாற்று சக்தியாக முன்னிறுத்தி காட்ட முனைகின்றனர். இந்த வகையில்:

1.இலங்கையில் இந்தியா தலையிட்ட காலகட்டத்தில் மட்டும் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஒரு "தவறான" மக்கள் விரோத இயக்கமாக இருந்ததா? மற்றைய காலத்தில் சரியான ஒரு அரசியல் இயக்கமாக இருந்ததா?

2.ஈ.பி.ஆர்.எல்.எவ். பேசிய இடதுசாரிய அரசியல், பாட்டாளி வர்க்க அரசியலா?

3.புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். இனை அழிக்கா விட்டால், அது குறைந்தபட்சம் தேசிய இயக்கமாக இருந்திருக்குமா? புலிகள் அழித்ததால் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ். மக்கள் விரோத நடத்தைகளில் ஈடுபட்டதா?

ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் இடதுசாரிய அரசியல் மக்களைச் சார்ந்ததா? இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் அரசியல், பாட்டாளி வர்க்க அரசியலைக் கொண்டு இருந்ததா? இல்லையே. அதன் இடதுசாரியம் மக்கள் விரோத அரசியல் அடிப்படையைக் கொண்ட, கூலிக் குழு அரசிலாகும். சர்வதேச எகாதிபத்திய முரண்பாடுக்குள்ளான ரூசியா முகம் சார்ந்தும், அதன் அரசியல் பின்புலத்தில் இந்தியா சார்ந்த கூலிப்படையாகத் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ். உருவானது. 1983 முதல் இந்திய கூலிப்படைக்கான அரசியல்-இராணுவ பயிற்சியில் முழுமையாக ஈடுபட்ட ஒரு இடதுசாரிய கோசத்தைக் கொண்ட வலதுசாரிய இயக்கமாகும்.

இந்த வகையில் 1980களில் தேசிய கூறுகள் சார்ந்து உருவான எல்லா இயக்கங்கள் போலவேதான் ஈ.பி.ஆர்.எல்.எவ். உருவானது. தேசிய சக்திகளாக, தேசிய நலனை முன்னிறுத்தி தங்களை அர்ப்பணிக்கும் தியாக மனப்பான்மையுடன் தான் அனைத்து அமைப்புளும் உருவானது. இதில் பிரபாகரனாகட்டும், பத்மநாபவாகட்டும், இந்த நோக்கில் இருந்து வேறுபடுத்தி பார்க்கமுடியாது. ஆனால் தனிப்பட்ட நபர்களின் தனி இயல்புகளும், தலைமைப் பண்புகளும் வேறுபட்டன.

மறுதளத்தில் இவர்கள் தலைமை தாங்கிய அமைப்புகள், அவை கொண்டிருந்த வேறுபட்ட அரசியல் பின்புலத்தில், அவை தம்மை இராணுவமயமாக்கம் சார்ந்திருந்த மக்கள் பிரிவுடன் கொண்டிருந்த உறவு, அதன் வளர்ச்சியின் போதான குணவியல்புகளை வேறுபடுத்தின. தேசிய கூறு சார்ந்த முற்போக்கு அரசியல் அடிப்படை முன்னுக்கு இருந்தவரை தான் இவை நீடித்தது. அதன் பின் மற்றவர் நலன் சார்ந்த கூலிக் குழுமனப்பாங்கு முதன்மையான அரசியல் கூறாகியது.

ஆரம்பம் முதல் இவர்கள் கொண்டிருந்த அரசியல், மக்களை புரட்சிக்கு தயார் செய்யும் மக்கள் அரசியலைக் கொண்டு இருந்ததா? இல்லை. இதில் புலிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ். இற்கும் எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது. வெறும் கூலிக் குழுவாகத்தான் தங்கள் அரசியலை கொண்டு இயங்கினர்.

தாங்கள் முன்னெடுத்த தேசிய விடுதலையை, யார் மூலம் எப்படி பெறுவது என்பதில் இருந்து இது தொடங்குகின்றது இதன் மக்கள் விரோதக் கூறுகள். இந்த வகையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை, மக்கள் அல்லாத சக்திகளின் நலன்களுடன் இணைத்தபோது, அது மக்கள் விரோத சக்தியாக தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியது.

இந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். சொந்த மக்களைச் சாராது, சர்வதேச முரண்பாடுக்குள்ளான கூலி குழுவாக ரூசிய-இந்திய நலன் சார்ந்த இயக்கமாகவே தன்னை அடையாளப்படுத்தி இயங்கியது. இப்படி சர்வதேச ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் இடது அணி சார்ந்து, தேசிய விடுதலை போராட்டத்தை சீரழித்தது. மறுதளத்தில் அமெரிக்க நலன் சார்ந்த வலது  இயக்கமாக புலி உருவாக்கியது.

இப்படி அன்றைய ரூசியா-அமெரிக்கா ஏகாதிபத்திங்கள் சார்ந்து, அந்த அரசியல்  முரண்பாடுக்குள்ளான மக்கள் விரோத தேசிய இயக்கங்களாகவே அணி பிரிந்தன. இப்படி ஈ.பி.ஆர்.எல்.எவ். ஒரு கூலி குழு அரசியலை கொண்டு இயங்கியது.

இங்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். ரூசியா எகாதிபத்தியத்தை சோசலிச நாடாகவும், தாம் கொண்டிருந்த இடதுசாரியத்தை கம்யூனிசமாக சித்தரித்தது. 1960 களில் சோவியத் மார்க்சியத்தை கைவிட்டு ரூசியா எகாதிபத்தியமாக சிதைந்து சீரழிந்ததுக்கு எதிராக, சீனா கம்யூனிஸ்ட்டுகளினதும் உலக கம்யூனிஸ்டகளினதும் வர்க்க அரசியல் பாதையை இவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதை எதிர்த்த ஈ.பி.ஆர்.எல்.எவ். ரூசியா எகாதிபத்திய நலனையும், அதற்கு அமைவாக இயங்கிய தென்னாசிய பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியாவையும் சார்ந்த ஒரு கூலிக் குழுவாகவே தன்னை உருவாக்கியது.

மக்களை சார்ந்த இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எவ். இருக்கவில்லை. ரூசியா-அமெரிக்கா நலன் சார்ந்த இயக்க பிளவும், எந்த மக்களை எப்படி இதற்காக அணிதிரட்டுவது என்பதில் இவர்களுக்குள் வேறுபாடு அது சார்ந்த அரசியல் முரண்பாடும் வலது இடதாக  மேலோங்கியது.

இந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். ரூசியா ஏகாதிபத்தியம் சார்ந்த இடதுசாரிய அரசியல் தளத்தில் ஒரு கூலிக் குழுவாக இயங்குகியது. அது ஒடுக்கப்பட்ட சாதிகளை, சுரண்டப்பட்ட பிரிவுகளை மையப்படுத்தி, இடதுசாரிய மார்க்சிய கோசங்களுடன் இந்தியா நலன் சார்ந்த கூலிக் குழுவாக இயங்கியது. புலிகளும் இடதுசாரிய கோசங்களுடன், இதற்கு எதிரான யாழ்மேலாதிக்க சக்திகளை மையப்படுத்தி இயங்கியது.

இங்கு இந்தியா ஈ.பி.ஆர்.எல்.எவ். என்ற ரூசியா சார்பு இடது கோச அமைப்புக்கு வெளியில், ரெலோ போன்ற புலிப்பாணி வலதுசாரிய சொந்த கூலிக் குழுவையும் உருவாக்கியது.

இப்படி சர்வதேச முரண்பாட்டுக்குள் உருவான கூலிக் குழு இயக்கங்கள், மக்களை சார்ந்த அமைப்பாக இருக்கவில்லை. இப்படித்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ். கூலிக்குழு உருவானது. புலிகள் அழித்ததால், ஈ.பி.ஆர்.எல்.எவ். இந்தியக் கூலிக் குழுவாக மாறவில்லை. அது அரசியல் ரீதியாக கூலிக் குழுவாக இருந்ததால், இந்தியாவின் கூலிக்குழுவாக இயங்கியது.

இந்தியாவின் கூலிகுழுவாக வந்திறங்கிய காலகட்ட நடவடிக்கைகள், புலிகளின் எதிர்வினையின்பாலதல்ல. மாறாக 1980முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ். கொண்டிருந்த அரசியல் பண்பு ரீதியான அளவு ரீதியான வெளிப்பாடுதான். இது தான் கொண்டு இருந்த அரசியலின் பண்பு ரீதியான அளவு ரீதியான அரசியல் உட்கூறாகும்.

1990களில் பிரமேதாச இந்த இந்தியக் கூலிக் குழுவை புலிக்கு எதிராக அங்கிகரித்து இருந்தால், இன்று டக்கிளஸ் இருக்கும் இடத்தில், ஈ.பி.ஆர்.எல்.எவ். தான் இருக்கும்.

வரலாற்று சூழலில் ஏற்பட்ட சர்வதேச முரண்பாடுகளும், முரண்பட்ட சக்திகளின் இருப்பைக் கூட தீர்மானித்தன. இந்த வகையில் இந்தியாவின் வெளியேற்றம், ரூசியா ஏகாதிபத்திய சிதைவு, ஈ.பி.ஆர்.எல்.எவ். என்ற கூலி குழு அரசியல் பாத்திரத்தின் அவசியத்தை இல்லாதாக்கியது. அத்துடன் அந்த அமைப்பின் முக்கிய தலைமை உறுப்புகள்  கொல்லப்பட்ட நிலையில், அது சிதைந்து சிதறிய நிலையில், இலங்கை அரசுடன் கூடிக்குலாவிய அரசியல் பின்புலத்தில் இருந்து தன்னை இன்று வேறுபடுத்திக் காட்ட, ஈ.பி.ஆர்.எல்.எவ். புலியுடன் ஒப்பிட்டு தனக்கு புதுவேசம் போட்டுக் காட்ட முனைகின்றது.

இந்தியா தலையிட்ட தங்கள் காலத்தை "துன்பவியல்" காலகட்டமாகவும், அதை செய்ய புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறுவதன் மூலம், தாங்கள் சரியாக இருந்ததாக நிறுவ முனைகின்றனர். அதை "சுயவிமர்சனமாக" அணுகுவது போன்று அரசியல் தோற்றப்பாட்டை உருவாக்கும் மோசடியில் இறங்குகின்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். ரூசியா- இந்தியா கைக்கூலித்தன அரசியலை சுயவிமர்சனம் செய்யாத, அந்த மக்கள் விரோத அரசியல் செயற்பாட்டை சரியாக கருதுகின்ற மக்கள் விரோத அரசியலையே, தங்கள் சுயவிமர்சனம் என்கின்றனர். சம்பவங்களையும், குறித்த சில காலகட்டங்களையும் "துன்பவியலாக"வும் "தவறாக"வும் காட்டுவதன் மூலம், தங்கள் மக்கள் விரோத அரசியலை மீண்டும் அரங்கேற்ற முனைகின்றனர். புலிகளின் சில பிரிவுகள் "சம்பவங்களையும்", "காலகட்டங்களையும்" தவறாக காட்டுவதன் மூலம், புலி அரசியல் சரியாக இருந்ததாக கூற முற்படுவது போல் தான்,  ஈ.பி.ஆர்.எல்.எவ். உம் அதையே செய்ய முனைகின்றது.

புலிகள் வலதுசாரியத்தை சார்ந்து இதை செய்ய, ஈ.பி.ஆர்.எல்.எவ். இடதுசாரியத்தை சார்ந்து இதை முன்வைக்க முனைகின்றது. இந்த வேறுபாட்டைத் தவிர, மக்கள் விரோத அரசியலை சார்ந்த இரண்டும் ஒன்று தான். இதன் மூலமாக இவர்கள்  புதுவேசம் போட்டு, மக்களுக்கு மீண்டும் ஆடிக்காட்ட முனைகின்றனர்.

பி.இரயாகரன்

12.07.2012