சிங்கள பேரினவாத பாசிச ஆட்சியாளர்களின் பாத தூசு தட்டி மீளவும் ஒரு வரலாற்று துரோகத்தை முன்னைநாள் போராளி இயக்கங்களும் இன்றைய துரோகிகளும் அரங்கேற்றினர். 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்து போன இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் எந்த விதமான நியாயத்தையும் கூட வெற்றி பெறமுடியாத நிலையில் காலம் காலமாக இருந்து வரும் எந்த வித அதிகாரமும் அற்ற நிருவாக பிரிவுகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டு எலும்பு துண்டுக்காக நாய் சண்டையில் ஈடுபட்டனா.
தமிழ் மக்கள் சிங்கள மக்கள் போன்று வாழும் உரிமைக்கான போரில் முன்பு ஈடுபட்டவர்கள் இன்று அதை கைவிட்டு சிங்கள இனவாதத்திற்கு காட்டிகொடுத்த நிகழ்வு முன்னைய துரோகத்தை விட இன்று தேசிய விடுதலைப் போராட்டம் உள்ள நிலையில் மிகமோசமான வரலாற்று துரோகமாகும்.
இத்தேர்தல் இனவாத அரசுக்கு தனது இனவெறி கொடூர தாக்குதலை மேலும் தீவிரமாக்க கம்பளம் விரித்து கொடுத்ததுடன் மட்டும் இன்றி தேசிய விடுதலை போராட்டத்தின் எதிர்கால அரசியல் வழியை பற்றிய ஒருநடை முறை அனுபவத்தையே போராடுபவர்களுக்கு தந்துள்ளது.
இத் தேர்தல் எதிர்பார்த்ததை விட அமைதியாக நடந்ததுடன் கணிசமான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனா.; தேர்தலில் நின்ற முன்னாள் ஆயுதம் ஏந்திய போராளி துரோகிகளும் அகிம்சைவாதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி எட்டப்பர்களும் தங்கள் விபச்சாரத்தை அரங்கேற்றினர். ஒருவரை ஒருவர் மாறி குத்து சண்டைகள் அனேகமான மனித உரிமைமீறல் மீது முன்வைத்த நிலையில் அரசியல் வேறுபாடு அற்ற இந்த குழுக்களுக்கு இடையில் மக்களின் தெரிவு வன்முறையில் ஈடுபடாத கூட்டணி சார்பாக இருந்தது. இது துல்லியமாக கடைவிரிக்க முழுமையான பலத்தை கூட்டணி கொண்டிராமை மட்டும் தான் பலத்தை நிறுவ தடையாக இருந்தது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் புலி உட்பட ஒரு தேர்தல் நடக்குமாயின் அத்தேர்தல் முடிவுகள் கூட்டணி சார்பாக மட்டும் இருக்கும். ஆயுதம் ஏந்திய குழுக்கள் படிப்படியாக ஒதுக்கப்பட்டு அரசியல் அநாதை ஆகும் நிலமைக்குள் செல்வர். சிலவேளை முதல் தேர்தல் மட்டும் புலிக்கு சார்பாக இருக்கமுடியும்.
தியாகங்கள் போராட்டங்கள் என்பன எல்லாம் பந்தாடப்படும். இது ஏன்? ஏற்படும் என்ற கேள்வி தான் எதிர்கால தேசிய விடுதலைப் போராட்டத்தையும் பலப்படுத்தும.; தமிழீழ விடுதலை புலிக்கும் கூட்டணி க்கும் மற்றய துரோக குழுக்களுக்கும் அரசியல் ரீதியில் என்ன வேறுபாடு என்ற கேள்விதான் அடிப்படையான பிரச்சனையாக உள்ளது
இங்கு துரோகம் இழைத்து ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற குறிப்பான அரசியல் வேறுபாட்டிற்கு வெளியில் கூட்டணிக்கு சார்பான வகையில் பொதுவாக மனித உரிமைமீறலில் ஈடுபடவில்லை என்ற சாதகமான நிலையும் அரசியல் நிலவரத்தில் மக்களின் முன் எந்த விதமான தெரிவிற்கும் இடமில்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு கிடைக்கும் அரசியல் தீர்வு கூட பலவிதமான விளக்கத்திற்கூடாக ஒரு தேர்தலுக்கு மட்டும் புலிக்கு பகுதியளவில் சாதகமாக இருக்கும். மக்கள் ஒருபகுதி ஆயுதபோரட்டத்தையும் ஒருபகுதி அகிம்சை போரட்டத்தையும் பெரும் பகுதி இதில் எதிலும் இன்றியே உள்ளனர். இன்று தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் எந்த பிரிவு மக்களும் எந்த குழுவையும் ஆதரிக்கும் அளவுக்கு குறித்த அரசியல் நலன்களின் பின்னால் அணிதிரட்டப்படவில்லை. புலிகள் இன்று நடத்தும் போராட்டத்தில்; கூட பார்வையாளராக ஆதரவாளர்களாக எதிராக இருக்கின்றனரே ஒழிய குறித்த நலன் சார்ந்த குறித்த மக்கள் பிரிவு இல்லாத நிலை என்பது நாளைய விடுதலைப் புலிகளை அரசியல் அநாதைகள் ஆக்கும். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.
இதை இன்று புரிந்து கொள்வது அவசியமானதும் அடிப்படையானதுமாகும். தமிழ் பேசும் மக்களின் பொதுவான ஐனநாயக தேசிய கோரிக்கைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு உட்பட்ட ஓர் அரசியல் பாதையை முன்னெடுப்பதும் அதை ஆதரித்த போராட்ட அரசியல் பாதையை எடுப்பதும் தான் போராடும் அமைப்பின் அரசியல் நலங்கள் தியாகங்கள் அர்த்தமுள்ளவையாகவும் நாளை அரசியல் அநாதையாகாது தடுக்கும் ஒரே ஒரு பாதையாகும்.
இன்று இதை எல்லா தரப்பும் காண்பதும் புரிந்து கொள்ளலும் அவசியமான அவசரமான பணியாகும். இந்நிலையில் தலதாமாளிகை மீதான தாக்குதலை புலிகள் உரிமை கோராவிட்டாலும் அது புலிகளால் நடத்தப்பட்டது என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
அண்மையில் நடந்த கொழும்பு குண்டு தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமைகள் தேர்ந்து எடுக்கப்பட்டும் மக்கள் குறைந்த பகுதியில் நடத்தப்பட்டன. இது குறித்த செய்தியை தற்கொலைத்தாக்குதல் நடத்தியோர் விட்டுச் சென்று இருந்தனர்.
அப்பாவி மக்களுக்குள் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து எழுதப்படும் தொடர்ச்சியான விமர்சனங்கள், புலிகளை நோக்கிய சர்வதேச செய்தி ஊடான கேள்விகள், மற்றும் உலகளவில் புலிகள் மீதான நிர்ப்பந்தங்கள், தடைகள், அழுத்தங்கள், என்பன மக்களுக்குள்ளாள தாக்குதலை தடுத்துள்ளதே ஒழிய, புலிகளின் அரசியல் மாற்றத்தினால் அல்ல என்பதை தலதா மாளிகை சம்பவம் துல்லியமாக்கி உள்ளது.
சிங்கள அப்பாவி மக்களுக்குள் தாக்குதலை நடத்துவதை நாம் கண்டிக்கும் போது அவர்களை தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தின்பால் வென்று எடுக்க நடுநிலைப்படுத்த மற்றும் அப்பாவி மக்கள் காரணத்தால் மட்டுமே நாங்கள் எதிர்த்து வந்தோம். புலிகள் உலக கண்டனங்களைத் தவிர்க்க மட்டுமே இதை கைவிட முனைகின்றனர் அவ்வளவே என்பதை தலதா மாளிகை மீதான தாக்குதல் காட்டுகின்றது.
அவர்கள் எதிர்பார்த்ததை விட தலதா மீதான தாக்குதல் அதை செய்ததுடன், மேலும் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக உலகம் முன் மீளவும் முன் வைக்கப்பட்டு விட்டது.
500 வருட பழைமை வாய்ந்த தலதா மாளிகையும், அதில் புத்தரின் புனிதப் பொருட்கள் உள்ளது என நம்பப்படும் ஓர் இடத்தின் மீது தாக்குதல் நடத்தும் போது, அது மொத்த இன மக்கள் மீதும் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகவே அமைகின்றது.
இன்று சிங்கள பேரினவாதம் புத்த மதத்தின் ஊடாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற தாக்குதல் பேரினவாத ஒடுக்கு முறைக்கு சிங்கள மக்களை நிபந்தனையின்றி ஆதரவு அளிக்க கோருவதாகும். இது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதுமாகும்.
எப்போதும் சிங்கள மக்களை நடுநிலைப்படுத்துவதும், வென்று எடுப்பதன் மூலமும் சிங்கள பேரினவாத அரசை தனிப்படுத்தி செயல்பட வேண்டிய தேசிய விடுதலைப் போராட்டம், அதன் எதிர்திசையில் திசையறியாது செல்வது அபாயமானது, ஆபத்தானது. கடந்த தியாகங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேவை புத்திசாலித்தனமான அரசியல் மற்றும் ராஐதந்திரம். இது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையுடன் கூடிய அரசியலில் மட்டுமே சாத்தியம். இருந்தபோதும் அதற்கு வெளியிலும் குறைந்தபட்ச புத்திசாலித்தனம் அவசியம். குறிப்பாக அண்மையில் அமெரிக்க ஈரான் ஆளும் வர்க்கங்களுக்குள் நடந்த இழுபறியுடன் கூடிய அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈராக் ஒரு சிறிய நாடாக ஒரு பெரிய வல்லரசை எதிர்த்து நடத்திய ராஐதந்திரம், உலக மற்றும் போராட்டங்களின் மிக அவதானத்துக்குரிய படிப்பினைக்குரியதுமாகும்.
ஏகாதிபத்திய முரண்பாடுகளைக் கையாண்ட ஈராக் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியும், அமெரிக்காவிலேயே அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை உண்டு பண்ணியும், அரபு உலகில் ஈராக் சார்பான ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், உலகளவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்தியும் வெற்றி பெற்ற வரலாற்றை நாம் ஏன் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் கையாள முடியாது?
ஈராக் குண்டு தாக்குதலால் அல்ல (அதைச் செய்ய முடியாத நிலையில் ஈராக் இருக்கவில்லை) மாறன அரசியல் முன்னெடுப்பால் சாதித்தது. இது மேலும் துல்லியமாக வெற்றி பெற, முடிவாக வெற்றி பெறவும் அங்கு ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்த அரசியலைக் கொண்டு இருக்கவில்லை. இருந்தபோதும் நாம் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று எம் தேசிய விடுதலைப் போரில் எல்லா இனங்களும் அனைவருக்கும் உரிமை வழங்கக் கோரும் போது, நாம் இராணுவவாதங்களை மட்டும் சார்ந்து இருப்பது அல்ல. மாறாக அரசியல் ராஐதந்திரம் தான் குறிப்பான தீர்க்கமான அரிசியல் விளைவுகளை தருகின்றது. இது உலகில் நீண்ட போராட்ட வரலாறு மீள மீள கற்றுத்தருகின்றது.
இன்று எம் தேசிய விடுதலைப் போராட்டம் சிதைந்து சீரழிந்து சுத்த இராணுவவாதமாக தான் எஞ்சிப் போயுள்ளது. இது கண்மூடித்தனமான தாக்குதல் வெற்றி தோல்விகளை அரசியலாக்கி மக்கள் முன் பர¨பரம் எண்ணிக்கை அரசியலாய் போய் உள்ளது.
இந்நிலையில் சிங்கள பேரினவாத பாசிச அரசு மிகபுத்திசாலித்தனமான அரசியல் விளையாட்டில் இறங்கியுள்ளது. புலிகளை சர்வதேச ரீதியில் அம்பலபடுத்தி தனிமைபடுத்தி ஒரு பயங்கரவாத குழுவாக காட்ட இடைவிடாத தீவிர முயற்சியில் வெற்றிகளைச் சந்தித்து வருகின்றது. இதை புரிந்து கொள்ளலும் , ஏற்றுக்கொள்வதின் மூலம் தான் , வந்த பாதையை மீளவும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி சரியான வகையில் தேசியப் போரை முன் தள்ள முடியும்.
இன்று பேரினவாத பாசிச தரகு அரசு, புலிகளைத் தனிமைப்படுத்த ஒரு பயங்கரவாத இயக்கமாக சர்வதேசஅரசுகளுக்க முன் மட்டுமல்ல, சர்வதேச மக்கள் முன் தன் கடையை திறந்து வியாபாரம் அமோகமாகி உள்ளது. எந்த உப்புச் சப்பும் அற்ற என்ன எனத் தெரியாத ஒரு கற்பனை தீர்வுபொதியை முன் வைத்து தாம் தீர்வு வழங்க தாயார் ஆனால் புலிகள் தயார் இல்லை என்ற பிரச்சாரம் சரியான முறையில் எதிர்ப்பிரச்சாரம் இன்றி புலிகளை தனிமை படுத்தியுள்ளது. இராணுவ தாக்குதலுக்கும் இராணுவவாதமாகவும் போராட்டம் சித்தரிக்கப்பட்டபின் இந்த பொதியை அம்பலப்படுத்தி அதை வேரறுக்கும் அளவுக்கு புலிகளின் அரசியல் ஆளுமையை இழந்துபோய் உள்ளமை வழமை போல் மாற்றுக்கருத்தை எதிர்கொள்ள திராணியற்று வன்முறையில் ஈடுபடுவது போல், அரசுபொதிமீது அதை செய்யமுடியாது என்ற நிலையில் பொதி பற்றிய மாயையை தமிழ் பேசும் மக்களுக்கு அல்ல சர்வதேசமக்கள் முன் ஏற்படுத்தி உள்ளது. இது சிங்களமக்களுக்கு முன் விதிவிலக்கு அல்ல.
வடக்கை இராணுவம் கைப்பற்றிய பின் ஐனநாயகம் மீளவும் மீட்கப்பட்டுவிட்டது என்ற மாயையை ஏற்படுத்தியதன் மூலம் புலிகளை ஐனநாயக விரோதிகளாக அரசு உலகளவில் நிறுவியுள்ளது. இதற்கு புலிகளின் ஐனநாயக விரோத நடவடிக்கைகள் தான் அடிப்படையானதும் ஆதாரமானதுமாக இருந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் துரோகிகளைக் கொண்டு நடத்திய போலி ஐனநாயக தேர்தல் நாடகம் அரசுக்கு மேலும் இதை நிறுவ வாய்ப்பை அளித்துள்ளது. புலிகள் இத்தேர்தலில் அதிகம் தலையிடாத போக்கை காட்டினர். ஐனநாயகம், மனிதஉரிமை பற்றயி புலிகளின் சரியான நியாயமான நிலைப்பாடு இல்லாத போக்கு என்பது அரசின் கபடத்தையும் உலகளாவிய பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்த முடியாத வகையில் போராட்டம் பலவீனம் அடைகிறது .
தலதாமாளிகை மீதான தாக்குதல் என்பது மொத்த சிங்களமக்களுக்கு எதிராக நடத்தப்பட்டதே. தலதா மாளிகை பௌத்தர்களின் நம்பிக்கையின் இடமாக உள்ள நிலையில் சிங்களபேரினவாதம் பௌத்தமதத்தைக்கொண்டு கட்டியமைக்கப்பட்டு உள்ள நிலையில், இது போன்ற தாக்குதல்கள் சிங்கள இனவாதத்துக்க சிங்களமக்களை நிபந்தனையின்றிய ஆதரவை வழங்க இத்தாக்குதல் ஊக்குவிக்கின்றது.
தமிழ் மக்களின் மிக பழைமை வாய்ந்த கோயில்கள் உட்பட பல நூறு கோயில்கள் தாக்குதல்களுக்கு உட்பட்டன உட்படுகின்றன என்ற போதிலும், புலிகள் இயக்கம் இந்து மதத்தின் ஊடாக கட்டியமைக்கப்பட்ட ஒரு இயக்கமல்ல. அதன் தன்மை பகுதியானளவில் இருந்த போதும் புலிகளின் போராட்டம,; தமிழ்மக்களின் போராட்டம் இந்து மதத்துக்குள் கட்டியமைக்கப்பட்டது அல்ல. ஆனால் சிங்கள பேரினவாதம் புத்தமதத்தின் ஊடாக கட்டியமைக்கப்பட்டது. புத்தபிக்குகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அரசுதான் இன்று உள்ளது. ஆனால் புலிகள் சைவ தலைவர்களின் தலைமைக்குள் இல்லை.
இந்நிலையில் ஒரு புனிததலம் என மக்கள் நம்பும் இடத்தின் மீதான தாக்குதல்,¨ நம்புகின்ற மக்கள் தாக்குதல்காரர்களுக்கு எதிராக அணிதிரட்டுகின்றது. இந்நிலையில் ஒரு மதசார்பு இடத்தில் நடக்கும் ஒரு சுதந்திரதின விழா அத்துடன் கூடிய ஒரு இராணுவமுகாம் என்ற அளவில் கூட இத்தாக்குதல் போராட்ட யுத்ததந்திரத்தில் பாதகமானவை. எப்போதும் போராட்டம் மேலும் ஒரு படி வளர்க்கும் வகையில் தாக்குதல்கள் அமைய வேண்டும். எதிரியை தனிமைப்படுத்தும் வகையில் தாக்குதல் திட்டமிடப்படவேண்டும.; இந்த வகையில் முற்றுமுழுதாக இராணுவம் சம்மந்தபட்ட இடங்கள் மற்றும் இராணுவ பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல் தெரிவு மட்டும்தான் ஒரே ஒரு சரியான பாதையாகும். இவ்விடங்களில் மக்கள் சம்மந்தப்பட்டு இருப்பின் அவைதிட்டவட்டமாக தவிர்க்க வேண்டும் .
இன்று உலகில் புலிகள் மீதான தடை மற்றும் அவர்களின் உறுப்பினர்கள் நாடுகடத்தும் முயற்சி, மற்றும் அவர்கள் மீதான நிர்ப்பந்தங்கள் அழுத்தங்கள் இன்று ஏற்பட புலிகளே காரணமாக இருந்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் மீதான புலிகளின் வன்முறைகளும் புலிகளின் அரசியல் தோல்வியும் தான் மிகமுக்கிய அடிப்படையாகும.; இலங்கை பேரினவாத அரசின் புத்திசாலிதனமான புலிகளை தனிமைபடுத்தும் அரசியல் காய்நகர்த்தலின் முன் புலிகளின் சுத்த இராணுவவாதத்தை செயலற்றதன்மைக்குள் முடக்கிவிடுகின்றது. புலிகள் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து இருக்க தவறிய நிலை என்பது இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தை பேரினவாத அரசு ஏகாதிபத்தியதுணையுடன் நசுக்கிவிடுமளவிற்கும,; புலிகளை ஒரு கெரில்லா குழுவாக மட்டும் நீடிக்கமுடியும் என்ற நிலைக்குள் நகர்த்தியுள்ளது. இது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பாகும். இதில் இருந்து மீள்வது ஆயின் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் போராடுவது அவசியமாகும் இது மட்டும்தான் இன்று இலங்கையில் ஒரு ஆரோக்கியமான புரட்சிகரமான பாதையாகும்.