Language Selection

சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கலை இலக்கியம் யார்ருக்காக எதற்க்காக படைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி, இன்று சமூகத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படாமல் உள்ளது. படைப்புகள் படைக்கப்பட்ட பின் அதன் கலை அம்சம் மட்டும், புகழுக்குரிய சிறந்த படைப்புகளாகி விடுகின்றன. படைப்பின் உள்ளடக்கம் அதை ஒட்டிய சமூகப் பார்வை என்பது விவாத்துக்குரியதாக பார்பது என்பது, கலை இலக்கியவாதிகள் மீதான சட்டாம்பித்தனமானது என சேறு அடிக்கும் நிலையில்,படைப்புகள் பற்றிய துல்லியமான ஒரு விவாதம் அவசியமாகின்றது.

 

 

ஒரு படைப்பு மனிதன் முன் கற்பனையாக திடீர்ரென வருவதோ, இதற்கென உருவாகியுள்ள படைப்பாளிகள் முன் விழுந்து விடுவது இல்லை. மாறாக சமூகத்தில் ஒரு பொருளாக மறைமுகமாகவோ நேரடியாகவோ உள்ளது. படைப்பு என்பது மனிதனின் ஜந்து அறிவான பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுணர்ச்சி என்ற மனித அறிவுக்கு அப்பால் ஒருக்காலும் ஒரு படைப்பை யராலும் தரமுடியாது. இதில் ஒன்று அல்லது பல சேர்ந்த நிலையில் தான் மனித சிந்தனை தோன்றுவதுடன் அதில் தான் படைப்பு உருவாகின்றது. பொருளை ஜந்து புலன் அறிவுக்கு உட்படுத்திய செய்திதான் படைப்பாகின்றது.இது அனைத்துக்கும் பொருந்தும்.

பொருளை மறுப்பவர்கள், இலக்கியத்தில் பொருள் இல்லை என்பவர்கள், இந்த ஜந்து புலனுனர்வுக்கு வெளியில் ஒன்றை படைக்க முடியும் என்பவர்கள் கருத்து முதல்வாதத்தை முன்தள்ளுகின்றனர். பொருள் இன்றி உலகில் எதுவும் இருக்க முடியாது. வாய் பேச முடியாத காது கேட்க்க முடியாத ஒருவன், காது மூலம் கேட்டோ வாய் மூலம் விவாதித்தோ ஒன்றை உருவாக்க முடியாது. மிகுதி மூன்று மூலமும் தான், அதே நேரம் கைப்பாஷை மூலமும் தான் முடியும். கண் தெரியாத ஒருவன் ஒன்றைப் பார்த்து படைக்க முடியாது. படைப்பு என்பது பொருளை  புலனுணர்ச்சிக்கு உட்பட்டுத்திதான் உருவாகின்றது.

படைப்பு என்பது பொருள் மீதான புணர்ச்சிக்கு உட்பட்டது என்பதும், அது இல்லாத எந்தப் படைப்பையும் உருவாக்கமுடியாது. இந் நிலையில் படைப்பின் கலை அம்சம் உள்ளடக்கம் என அனைத்தும் இந்த புலனுணர்ச்சிக்கு உட்பட்டதுதான். இதற்கு வெளியில் கற்பனையில் ஒருக்காலும் முடியாது. இந்நிலையில் உள்ளடக்கத்தை எடுப்பின் ஒருமனிதன் முன் எது ஒரு பொருளாக உள்ளதோ அது மட்டும்தான் படைப்பாகின்றது. ஒரு பொருளை, ஒரு கருவை ஒரு மனிதன் எப்படி அறிந்து தெரிந்து கொண்டு உள்ளான் என்பது மட்டும்தான், அதன் மீதான படைப்பு மட்டுமின்றி அவனின் அறிவாகவும் உள்ளது.

ஆகவே மனிதனுக்கும் அப்பொருளுக்கும் உள்ள உறவு, அது என்ன உறவாக உள்ளதோ அதைத்தான் படைக்கின்றான். அதைத் தாண்டி ஒருக்காலும் அவனால் வேறு ஒரு படைப்பை உருவாக்கமுடியாது.

ஒரு பொருள் மனிதர்களின் முன் அவனின் பயன்பாட்டுடன் பலவிதமாக காட்சியளிக்கின்றது. ஒரு கல்லை எடுத்தால் வேட்டைக்காரன் முன் வேட்டை ஆயுதமாகவும், ஒரு ஆய்வாளன் முன் ஆய்வுக்குரிய பொருளாகவும், கட்டிடக் கலைஞன் முன் அது கட்டிடக்கலை பொருளாகவும் தேவையை ஒட்டியும் அதன் பயன்பாட்டையொட்டியும் விளக்கம் கொடுக்கமுனைகின்றனர். ஆணால் அது எல்லோர் முன்னும் ஒரு கல்லாக, தனக்கேயுரிய குறித்த சேர்க்கைகளை கொண்ட பொருளாகவுள்ளது. ஆணால் பொருள் எப்போதும் மாறுவது இல்லை. அதாவது இங்கு வேறுபாடு என்பது மனிதனின் பயன்பாட்டுடன், பொருளுக்கு உள்ள தொடர்புடன், அவனின் நிலையுடன் தொடர்புடைய விடையமாக உள்ளது.

ஒரு ஏழை ஒருபணக்காரன் முன் அருவருப்புக்குரிய எளிய பிறப்பாகவும், சுரண்டும் முதலாளி முன் அடிமை நாயாகவும், மத்தியதரவர்க்கத்துக்கு முன் பரிதாபத்துக்குரிய ஜீவனாகவும் பல்வேறுபட்ட மக்களின்  சமூகப் பார்வைக்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் பார்க்கப்படுகின்றன். இது எல்லாப் பொருளிலும் மனிதனின் மாறுபட்ட சமூகநிலையுடன் மாறுபட்டுப் பார்க்கப்படுவதுடன் அதற்க்கு ஏற்ப் மாறுபட்ட விளக்கமும் கொடுக்கப்படுகின்றது.

உலகில் உள்ள ஒரு பொருள் சுயமாக ஒருக்காலும் இயங்க முடியாது. மாறாக ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட படிதான் எல்லாம் இயங்குகின்றது. படைப்பில் சமூக நிகழ்வுகள் சரி, இயற்க்கை சரி ஒன்றுக்குள் ஒன்றாக இனைந்தே இயங்குகின்றது. படைப்பு சமூக ஏற்ற இறக்கங்களை புறக்கணிக்க முடியாத வகையிலும், இயற்க்கையும் சேர்க்கையும் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டே இயங்குகின்றது. இதை மீறி யாரும் ஒன்றிலும் தொடர்பு அற்ற படைப்பை படைக்க முடியாது. இந்த வர்க்க சமுதாயத்தின் ஏற்ற இறக்கத்தை மீறி ஒரு படைப்பை தரமுடியாது. சாதாரண இயற்க்கை கூட பயன் பாட்டில் பிளவுபட்டுள்ளது. எனவே படைப்பு என்பது வர்க்க எல்லைக்கு உட்பட்டது என்பதும், படைப்பு தனக்குள் தானே வர்க்க முத்திரையை குத்திக் கொண்டுள்ளது.   இயற்க்கையும் சேர்க்கையும் உள்ளடக்கிய கலை இலக்கியப் படைப்புகளை மேலும் ஆராய்வோம்.

மனிதன் பிளவுண்ட வாழ்நிலையும், அதையொட்டி பொருளின் பயன்பாடும் முழுமையற்ற நிலையில் உலகில் காணப்படுகின்றது. இதனால் பொருளை முழுமையாக பார்க்க முடியாத நிலை அல்லது முழுமையாக பார்த்தலை மறுத்து பொருளை பகுதியில் காண்பதன் மூலம், அரைகுறை விளக்கத்தை கொடுப்பதன் மூலம், பொருளை அவர்களை மீறி மறுக்கின்றனர்.

இது இன்று எல்லாப் படைப்புகளிலும் விதிவிலக்கின்றி விரவிப்போய்யுள்ளது. பொருளை முழமையாக பார்க்க மறுக்கும் போக்கும், பகுதியாக பார்த்து அதற்க்கு விளக்கம் கொடுப்பதும், படைப்பிலக்கியத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட அறையப்பட்ட விடையமாக இன்றுள்ளது.

ஒரு சமூகத்தில் ஒரு படைப்பின் உள்ளடக்கம் கலையம்சம் வேறுபட்ட மக்கள் முன் எப்படி இன்று உள்ளது எனப் பார்ப்பதும், அது முழுமையில் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்பதும் மறுக்கப்படுகின்றது. இன்று முன்னேறிய படைப்பாளிகளாக கூறிக் கொள்ளும் அனைவரும் இந்த சாபாக்கேடான நிலையில் உள்ளனர். இது களையப்பட வேண்டும். இது மட்டும்தான் உயிர்யோட்டமுள்ள சமூகத்தை உருவாக்க முன்நிபந்தனையாக உள்ளது.

சமூகத்தில் உள்ள பிரதான முரண்பாடும், அதற்க்கு அடுத்த முரண்பாடுகளையும் கவனத்தில் எடுக்காத எல்லாப் படைப்புகளும் சமூகம் இருக்கும் நிலையில் சீர்திருத்தைக் கோருவனவாகவே உள்ளது. அதாவது பிரதான முரண்பாட்டுடன் இணைந்து படைப்பை பார்க்க மறுக்கும் போது, இருக்கும் சமூகத்துக்குள் சுற்றிச்சுற்றி நிலைநிறுத்த எத்தனிப்பதாகும். சமூகம் இன்று முரண்பாடுகளால் சூழ்ந்துள்ளது. எனவே பஞ்சமில்லா முரண்பாடுகளில் ஒன்றை படைப்பில் உள்ளடக்கி விட்டால், அவை எல்லாம் முற்போக்குப் படைப்பாகிவிடுமா? இல்லை நிச்சயமாக ஒருக்காலும் இல்லை. மாறாக அவ்முரண்பாட்டுக்கும் பிரதானமுரண்பாட்டுக்கும் என்ன உறவைக் கொண்டு உள்ளன எனப் பார்க்க படைப்பு மறுப்பதோ அல்லது கொண்டு இருக்காத வரை, அப்படைப்பு சமூகத்தின் வெறும் சீர்திருத்த எல்லைக்குள் சமூகத்தை முடக்க கோருவதோ அல்லது மனிதாபிமானம் பேசும் விடையமாக சீர்ரழிகின்றது.

இங்கு ஒரு கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். ஒருபடைப்பாளி சமூகத்தை முழமையாக பார்க்கக் கோருவது தவறானது என்கின்றனர். இது அரசியல் வாதியின் வேலை என்கின்றனர். படைப்பாளி அரசியல் வாதியாக இருக்க வேண்டியது இல்லை என்கின்றனர். படைப்பு சமூகத்தை ஆராய்ந்து படைப்பதில்லை என வாதிடவும் பின் நிற்க்காத நிலையில், இக் கேள்வி இச்சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாய்யுள்ளது.

மனிதன் இச்சமூகத்துக்கு வெளியில் சுயமாக இருக்க முடியாது என்பதும், சமூகத்தை தாண்டிய படைப்பை சமூகத்துக்கு வெளியில் கொண்டு வரமுடியாது. இச் சமூகம் பிளவுபட்ட மனிதர்களின் சேர்க்கையாகவும், போராட்டக் களமாகவும் உள்ளது. இப் போராட்டமானது அரசியல் தளத்தில் நின்றபடி எல்லாத் துறைகளிலும் நடக்கின்றது. இது ஏற்ற இறக்கம் கொண்ட நிலையில் மீளமீள அமைதியற்ற நிலையில்தான் எல்லா நேரமும், இந்த வர்க்கசமூகம் நீடிக்கின்றது.

ஒரு மனிதன் நேரடியாக அரசியலில் ஈடுபட்டாலும் சரி ஈடுபடாவிட்டாலும் சரி, அவன் ஒரு அரசியல் பிராணியாக அவனை அறியாமலே இருக்க, இதுபோல் எல்லா மனிதர்களும் இருக்கின்றனர். இந்த அரசியலில் இருந்து அந்நியப்பட்டு எந்தசெயலும், ஏன் சுவாசிக்கும் காற்றும் இருக்க முடியாத வகையில், இந்த வர்க்க சமூக கொந்தழிப்புக்குள்ளும், அதன் பாதிப்புக்குள்ளும் மனிதன் சிறைப்பட்டு, ஒரு திறந்த சிறைக்கூடத்துக்குள் வாழநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான். ஒவ்வொரு விடையம் மீதும் தீவிரமாக மாறுபட்ட அபிப்பிராயத்தை நிச்சயமாக கொண்ட, இரு பாரிய பிளவுக்குள் ஒவ்வொரு மனிதனும் கூட்டாகவும் பகை நட்பு கொண்ட சமூகமாக உலகம் உள்ளது.

இந்நிலையில் இதற்க்கு வெளியில் ஒருக்காலும் இருக்க முடியாத ஒரு படைப்பாளி, ஒரு கருவையும் அதைச் சுற்றிய நிகழ்வுகளையும் அவதானத்துக்கு உட்படுத்தி, இச் சமூகத்தில் அதை விமர்சனக் கண்கொண்டு பகுத்து ஆய்வு செய்து கருவின் (பொருளின்) உள் வெளி செயல்பாடு இவ் வர்க்க சமூதாயத்தில் வௌவேறு நிலைகளில் எப்படி என ஆராய்ந்து அதன் முழுமையில் பார்க்காதவரை, அப்படைப்பு அரை குறையான சமரசத்துக்கு இட்டுச் சென்று சீரழிக்கின்றது.

முதலில் பொருளை முழுமையாக பார்க்க வேண்டுமாயின், முதலில் அப்படைப்பாளி சமூகத்தை ஆராய்யும் கோட்பாட்டை முரன்நிலையின்றி கண்டறியவேண்டும். இதற்க்கு யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடிப்படையானதும் அவசியமானதுமான தத்துவமாக மார்க்சியம் உள்ளதால், அதை முரண்நிலையின்றி புரிந்து கொள்வதும், அதன் உண்மையான உண்மையை முரண்நிலையின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும். அதாவது ஒரு நல்ல படைப்பை படைக்க வேண்டுமாயின் மார்க்சியம்யின்றி சாத்தியமில்லை. இது மட்டும் தான் பொருளை முரண்நிலையின்றி ஆராய்கின்றது.

புரட்சிகர சிந்தனை நடைமுறை  இல்லாத வரை புரட்சிகர படைப்பு உருவாக முடியாது. இது போல் மார்க்சியத்தை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளாதவரை மக்களுக்கான சிறந்த படைப்பையும் கொண்டு வரமுடியாது.

இதற்கு வெளியில் கருவின் (பொருளின்) பகுதிக்குள் அரைகுறை பிரவச பூஷ்சுவா படைப்புகள் தான் வெளிவர முடியும். இந்த வகையில் இன்று வருடம் வருடம் இலங்கை புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவரும் 700 முதல் 1000 சிறுகதைகள் இதைத்தாண்டி வெளிவர முடியாத நிலையில், இப் படைப்புகள் முதலாளித்துவ முரண்நிலையில்லாத தூய ஜனநாயகத்தை கோருவதை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளையும், சீர்திருத்தங்களையும் முன்வைத்த படைப்புகளாக விதிவிலக்குயின்றி வெளிவருகின்றது.

இரண்டாவது இப்படைப்பாளர்கள் பெரும்பாலனோரின் கதைக்குரிய கருவின் தெரிவுகள் பெரும்பாலும் பூர்ஷ்சுவா வர்க்க பிரிவுகளில் ஏற்படும் மன உழைச்சல்களை அடிப்படையாக கொண்டவையாக உள்ளது. பூர்ஷ்சுவா வர்க்கத்தின் துன்பம் துயரத்தில் வெளிப்படும் கருக்கள், அதற்க்கேயுரிய ஊசலாட்டத்துடன் சீர்திருத்தத்தை முன் வைக்கின்றன. இன்னுமொரு பக்கத்தில் இரண்டு வர்க்கத்தில் இருந்தும் இருகருவை எடுத்து அதன் முரண்பாடுகளில் மனிதாபிமானம் பேசினால் போதும், அதுபுரடசிகரப் படைப்பாக சிலர் பார்க்கும் பூர்ஷ்சுவாத்தனமும் இன்று அதிகரித்துள்ளது.

பொதுவாக இந்தியா சினிமாவை எடுத்தால் இதேபோன்ற கருக்கள் நிறையவே அங்கு இருப்பதை காணமுடியும். சிறுகதைகள் வெளிப்படுத்தும் ஓட்டு மொத்த விளைவுக்கும், சினிமா வெளிப்படுத்தும் விளைவுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஊடகத்திலும் மசாலத்தனத்திலும் மட்டும்தான் உள்ளது. மசாலைத்தனம் அற்ற இந்திய சினிமா கலைப்படைப்பும், வெளிவரும் படைப்புகளும் ஓரே அச்சில் வார்த்தவையாக முரண்பாடு இன்றி உள்ளது.

சமூகத்தின் முன் முரண்பாடுகள் உள்ளதால் அங்கு கருவுக்கு பஞ்சமில்லை. அதை எடுத்து எழுத, கலை அம்சத்தை இனைக்க தெரிந்த எல்லாப் படைப்புகளும் முற்போக்காக மாறிவிடுமா நிச்சயமாக இல்லை. முரண்பாடுகளின் அடிப்படை, அதன் போக்கு, அதன் வளர்ச்சி, அதன் தீர்வு என்பன ஒட்டிய முழுமையான கண்ணோட்டம் அற்ற, அதை பார்க்க மறுத்த படைப்புகள், வெற்று அனுதாபங்களும் மனிதாபிமான சோகங்களையும் மட்டும் பேசுவதால், அப்படைபுகள் சீர்திருத்தத்தை மட்டும் கோருபனவாக இச் சமூக எல்லைக்குள் முடக்குவனவாக இருக்கின்றன.

இந்த இடத்தில் தீர்வு தொடர்பான விவாதங்கள் எழுகின்றன. இதை மறுக்கும் தொடர்ச்சியில் தான் தீர்வை முன் வைக்க கோருகின்றனர் என எதிர் குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சனையை திசை திருப்புகின்றனர். படைப்பாளியின்  படைப்பில் கைவைக்கும் முயற்ச்சி எனவும், படைப்பாளியின் கலைத்திறனை அழிக்கும் முயற்சி எனவும், படைப்பாளியின் சுதந்திரத்தை தடுக்கும் சர்வாதிகாரம் என முத்திரை குத்துகின்றனர். தீர்வு என்பது கலையைமறுத்த பிரச்சாரப் படைப்பைக் கோரும் ஒரு அவலட்சணமான சர்வாதிகாரம் என்று கூறி திசை திருப்ப படாதபாடுபடுகின்றனர்.

இதை நியாயப்படுத்த மார்க்சியத்துக்கு எதிராக கோட்பாட்டளவில் செயல்படும் பிண்டங்களின் கோட்பாடுகளில் இருந்து ஆங்கு ஆங்கே பொறுக்கி முன்வைக்கின்றனர்.

மார்க்சியவாதிகள் தீர்வை பிரச்சாரத்தைக் கோருகின்றனரா! நிச்சயமாக இல்லை. மாறாக ஒரு படைப்பு தனக்குள் தானே தீர்வையும், அதை ஒட்டி திட்டவட்டமான பிரச்சாரத்தையும் கொண்டுள்ளது என்ற பேர் உண்மையை மறுக்கும், இந்த நரித்தனமான மார்க்சிய எதிர்ப்பு பிரச்சாரம், உண்மையில் தமது தீர்வை அதன் பிரச்சரத்தை விமர்சிக்கும் உரிமையை மறுக்கும் போக்கில், சேறுயடித்து முத்திரை குத்தி தப்பிச் செல்ல முயல்கின்றனர்.

ஒரு படைப்பாளி சமூகம் பற்றிய தனது வர்க்க கண்ணோட்டத்துடன், பொருளை பார்க்கும் பகுதிக்குள் படைப்பை வெளிப்படுத்தும் போது, அது அவ்வர்க்க அடிப்படையில் தனக்கான தீர்வையும் பிரச்சாரத்தையும் செய்கின்றது. இது வாசகன் இடம் செல்லும் போது தனது வர்க்க கண்ணோட்டத்துடன் அதை ஏற்பதும் எதிர்ப்பதும் விமர்சிப்பதும் நடக்கின்றது. இதன் மூலம் படைப்பு வாசகன் மீது தீர்வையும் பிரச்சாரத்தையும் யார் விரும்பாவிட்டாலும் அவனுக்கு கொடுக்கின்றது.

ஒரு சமூதாயத்தின் நீடித்தலும், அதை கட்டி பாதுகாத்தல் என்பதும் இன்று இது போன்ற படைப்புகளால் தான் நீடிக்கின்றது. இது நேரடி வன்முறைக்கு பதிலாக மறைமுகமான வன்முறைக்கு ஊடாக மக்களின் துன்பதுயரங்களை  திசை திருப்பி அதன் மீது சவாரி செய்கின்றன. இன்று மனிதன் எதைத் தெரிந்து கொள்கிறான் என்பது மட்டும்தான், இந்த சமூக அமைப்பு நீடிக்கும் தன்மையை தீர்மானிக்கிறது.

இந்த வகையில் ஒவ்வொரு படைப்பும் தீர்வையும் பிரச்சாரத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றது.

இன்று நக்கீரன், ஜீனியர்விகடன்................. போன்ற பத்திரிகைகள் லட்சக்கணக்கில் மக்கள் முன் எப்படி விற்பனையை எட்டுகின்றது எனின், அங்கு சமூகத்தில் உள்ள முரண்பாடுகள் மீதான அபிப்பிராயத்தில் தான் என்பதை மறுக்கமுடியாது. ஏதாவது ஒரு பிரச்சைனை எடுத்து அதற்க்காக அங்கு சென்று, நீதி கோரும் இவ் இதழ்களின் உயிர்மூச்சு, மனிதர்களின் இயல்பான நீதியின் பாலான நியாயப்படுத்தல்கள் மீது உயிர் வாழ்கின்றன. சமூகத்தில் உள்ள பிரதான முரண்பாடுகளை இனம் காட்டுவதற்க்குப் பதில், எடுக்கும் பிரச்சனையை முழுமையில் ஆராய்வதற்க்குப் பதில், மனிதர்களை சிறுபிரச்சனைக்குள் அழுத்தி அதற்க்குள் முடக்கி, மனிதர்களின் நீதியின்பாலான இயல்பான உணர்ச்சியை விழுங்கி ஏப்பமிடவும், அதை சாந்தப்படுத்திவிட முயலும் முயற்ச்சியின் தொடர்ச்சியில் தான் இப்பத்திரிகைகள் இயங்குவதுடன், மக்களை முட்டாள் ஆக்க முயல்கின்றன.

இதையே இன்று படைப்பாக்கலில் ஈடுபடும் படைப்பாளிகளும் எடுக்கும் கரு பூர்சுவா வர்க்கத்துக்குள் தெரிவதுடன், அதற்க்கு வெளியில் அக் கரு எப்படி மொத்த சமூகத்தில் உள்ளது என, ஏன் எப்படி என ஆராய்யாத படைப்புகள் இருக்கும் சமூகத்துக்குள் முடக்கும் கோட்பாட்டை, தீர்வை,  பிரச்சாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைக்கின்றது.

இந்நிலையில் மார்க்சியம் தீர்வையும் பிரச்சாரத்தையும் படைப்புகளில் ஒருக்காலும் கோரவில்லை. விமர்சனம் வைக்கும் போது கோருகின்றது என்பது பொய்யானது. மாறாக மார்க்சியம் வைத்து இருக்கும் தீர்வையும் பிரச்சாரத்தையும் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கண்கொண்டு விமர்சிக்கின்றது. இதை மட்டும் தான் மார்க்சியம் மக்களின் விடுதலைக்காக மீண்டும்மீண்டும் கோருவதுடன் வேறு ஒன்றும்அல்ல. படைப்பு கொண்டு உள்ள தீர்வையும், அதன் பிரச்சாரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதுடன, படைப்பின் பொருளை முழமையாக ஆராய்யக் கோருகின்றது.

இதைப் படைப்பாளி மறுப்பதும், சேறுயடிப்பது மட்டும்தான் எதிர்தரப்பின் ஒரே நியதியாக உள்ளது. இதற்கு கோட்பாட்டுத் தேவையை மார்க்சிய விரோதிகள் தலைமை கொடுத்து வழங்க, மத்தியதரவர்க்க எழுத்தளர்கள் தனக்கே உரிய வர்க்க ஊசலாட்டத்துடன் இதில் அங்கொன்று இங்கொன்று எடுத்து வைத்து மார்க்சிய விமர்சனத்துக்கு எதிராக போராடமுனைகின்றனர்.

இதன் தொடர்ச்சியில் படைப்பில் தீர்வா! அப்படி ஒன்றும் அதில் இல்லை. இது கற்பனையானது. படைப்பில் கரு என்று ஒன்று கிடையாது. படைப்பு மனிதனின் கற்பனையான இயல்பான எந்த விதமான நிர்ப்பந்ததுக்கு வெளியில் மட்டும்தான் உருவாகின்றது. இன்னும் சிலர் அதற்க்கு மேல் சென்று இதற்க்கு என உருவாகியுள்ள மனிதர்களின் சுதந்திர வேட்கையின் வெளிப்பாடு என்கின்றனர். இதற்க்குள் பொருள் கரு தீர்வு பிரச்சாரமாவது மண்ணாங் கட்டியாவது இவை எல்லாம் அபத்தமானது மட்டும் இன்றி படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது என்கின்றனர். எல்லாவற்றையும் பகுத்தாராய்ந்து படைப்பது என்பது வரட்டுவாதம் என்கின்றனர். படைப்பில் கலை அம்சம் தான் முதன்மையானது உள்ளடக்கம் பற்றி அலட்டிக் கொள்வது தேவையற்றது எனப் பலப்பலவாக விமர்சனங்களுக்கு எதிராக அணிதிரட்டி படைப்பாளிகளும் அது சார்ந்த வாசகர்களும் முன்வைக்கும் வாதங்களாக உள்ளது.

படைப்பு எதுவும் அற்ற கலை அம்சங்களின் தொகுப்பா அதற்க்குள் பொருளின் பிரதிபலிப்பு கிடையாதா சமூகத்தில் உள்ள மனிதர்களினதும், மனிதன் இயற்க்கையை பயன்படுத்தும் பிரதிபலிப்புகளின் வெளிப்பாடாக படைப்புகள் உருவாகுவது இல்லையா இதை ஆராய்வோம்.

மக்கள் பொருளைப் முதலில் பார்த்து அதற்க்கு பெயரிட்ட பின்தான் மொழியலில் அதற்க்கு ஒத்த சொல் உச்சரிப்பு எல்லா மொழியலிலும் எற்ப்பட்டது. நாம் மொழியியலில் ஒவ்வொரு எழுத்தை எடுப்பின் அது பொருட்க்களை அடையாளப்படுத்த பொருளில் இருந்து உருவாக்கப்பட்டதே. ஒரு சொல்லை எடுத்தால் ஒரு பொருளையோ ஒரு பொருளைக் குறித்து பேசும் கருத்தாகவோ பொருளுக்கு உரிய வகையில் அர்த்ததைப் பிரதிபலிக்கும். பொருளுக்கு வெளியில் சொற்கள் கற்பனையில் உருவாகுவது இல்லை. அப்படி உருவாக்கப்படும் சொற்கள் கற்பனையானதாக மாயையானதாக இருக்கின்றது. இது சொல்லில் கருத்துமுதல்வாதத்தை முன்தள்கின்றது. அதாவது மூளை என்ற பொருளுக்கு வெளியில் எந்த ஒரு சொல்லோ, ஒரு படைப்போ உருவாக முடியாது. அதுபோல் உலகில் பொருட்க்கள் இன்றிய உலகில் ஒரு சொல்லோ படைப்போ உருவாக முடியாது. மொழியலலில் பொருள் செயல் காலத்தால் மறைந்துவிடும் போது அதற்க்குரிய சொல்லும் மறைந்துவிடுகின்றது. புதிதாக பொருள் செயல் உருவாகும் போது புதிய சொல் உருவாகின்றது. இதற்க்கு வெளியில் கற்பனையாக உருவாக்க நினைப்பவை கருத்துமுதல்வாத சொல்லாக மட்டும் பொய்யாக இட்டுக்கட்டப்படுகின்றது.

ஒரு வசனத்தை எடுத்தால் சொல்லில் இருந்து வேறுபட்டு ஒரு செயலையோ, பொருளின் வேறுபட்ட பண்பு குறித்தோ, பொருளின் வேறுபட்ட இயங்கள் குறித்தோ பொருளைப் பற்றி மட்டும்தான் வசனம் பேசுகின்றது.

இப்படி சொல்லில் இருந்து வசனங்களில் இருந்து உருவாகும் ஒரு பந்தி, பல பந்தி என நீடிக்கும் ஒரு தொடர்ச்சி இறுதியில் பல பொருளில் இருந்து ஒரு பொது பொருளைப் பற்றிய வெளிப்பாடாக மொழியியல் உள்ளது.

அதாவது மொழி என்பது மனிதர்கள் பொருளைப்பற்றி பேசிக் கொள்ளமட்டும் உருவானது என்பதும், எது மனிதன் முன் தெரியாத பொருளாக உள்ளதோ அது தெரியாதவையாக உள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய படைப்பாளிகளுக்கு படைப்பு என்ற பொருள் தெரிந்துள்ளதால் மட்டும் படைப்பை படைக்க முடிகின்றது. படைப்பையும் படைப்பு என்ற பொருளையும் தெரிந்து கொள்ள முடியாத ஒருவருக்கு படைப்பை படைக்க முடியாது. ஆனால் அவன் முன் ஓவ்வொரு சம்பவமும் படைப்பு என்ற பொருள் தெரியாத சிறுகதையாக நாளாந்த நடவடிக்கையாக பரிமாறும் விடையமாக உள்ளது.

எழுத்து மூலம் செய்தி பரவமுன், வாய் மூலம் காலம் காலமாக மக்களால் பரிமாற தெரிந்த செய்தி என்ற பொருள், இன்று எழுத்தில் முன்வைக்க முடியாத சூனியமான நிலையில் பொருளை அடையாளம் தெரியாத இன்றைய நிலையில் மட்டும்தான், எல்லோராலும் படைக்க முடியாது உள்ளனர். எல்லோரும் உடல் உழைப்பில் ஈடுபட்டு வாழ வேண்டி இருந்த சமுதாயத்தில் எல்லோரும் படைப்பாளிகளாக இருந்தனர். அவர்கள் எல்லோர்ரும் கலையனாக படைப்பாளியாக எல்லாமாகவும் இருந்தனர்.

நாம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் வெறும்வடிவத்தால், கலை அம்சத்தால் அல்ல தனியான சிறப்பான உள்ளடக்கத்தால் தான் தெளிவாக வேறுபடுகின்றது. ஓரே வடிவம் உள்ள வேறுபட்ட பொருட்கள் அதன் சிறப்பான உள்ளடகத்தால் தெளிவாக வேறுபடுகின்றது. அதன் மேல் உள்ள கலை அம்சம் அழகியல் சிறப்பான வேறுபட்ட உள்ளடக்கத்தை மெருகு ஊற்றுகின்றனவே ஓழிய, பொருளை உள்ளடக்கத்தில் வேறுபடுத்தி காட்டுவனவாக இருப்பது இல்லை. வடிவத்தில் மட்டும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.

மாம்பழத்தை எடுத்தால் அதன் வடிவம், அழகியல், கலை அம்சம் என்பன அதன் வேறுபட்ட தன்மையை, அதன் உள்ளடக்கத்துடன் வேறுபடுத்தி விடுவதில்லை. மாறாக வடிவத்தால் மட்டும் வேறுபடுத்த முடியும். வேறுபட்ட உள்ளடக்கத்தை ருசியை ருசிக்காத ஒருவனால் வேறுபடுத்த முடியாது. ருசித்த ஒருவனால் தான் பார்த்த மாத்திரத்தில் வேறுபாட்டை செய்ய முடியும்.

வடிவத்தில், அழகியலில், கலையில் ஓரே மாதிரியான பலாப்பழத்தை  ஒருக்காலும் பார்த்த மாத்திரத்தில் கலை அழகியல் கூட வேறுபடுத்த முடியாது. இங்கு உள்ளடக்கம் மிக தெளிவானதாக மயக்கம் இன்றி அப் பொருளை வேறுபடுத்தி இனம் காட்டுகின்றது.

இது எல்லாப் பொருளுக்கும் விதிவிலக்கு இன்றி பொருந்தும். பொருட்களின் சேர்க்கையும், அதன் மீதான தொழில்பாடுகளையும் பேசும் ஒரு படைப்பு இந்த விதிக்கு உட்பட்டதுதான். ஒரு படைப்பு மாம்பழம் பலாப்பழம் போல் தனக்கான உள்ளடக்கத்தை, அதை ஒட்டிய ஓரு தீர்வை, அதை ஓட்டிய அபிப்பிராயத்தை (பிரச்சாரத்தை) கொண்டுதான் எப்போதும் உள்ளது. இதை யார்ராலும் மறுத்து நிறுவமுடியாது.

இன்று ஆண் பெண் திருமனங்களில் என்ன நிகழ்கிறதோ அது படைப்பில் விதிவிலக்கு இன்றி ஒரே கண்ணோட்டம் கொண்டதாக அப்படியே உள்ளது. ஆண் பெண் வெளிஅழகு, கவர்ச்சி, பணம், அந்தஸ்து.......... போன்றவற்றில் நடக்கும் திருமனங்கள் உள்ளடக்கத்தில் தேர்வு மறுக்கப்படுகின்றது.

இதுபோல் இன்று இலங்கை - புலம்பெயர் நாடுகளில் வெளிவரும் படைப்புகளில் சிறு சஞ்சிகையில் முற்போக்கு என்ற முகாந்திரத்தின் கீழ் வெளிவரும் படைப்புகள், நடைமுறை ஒன்று இல்லாதால், படைப்பாளிக்கு உள்ள செல்வாக்கைப் பொறுத்தும், தொடர்பைப் பொறுத்து முற்போக்கு என்ற அடையாளத்தை ஈட்டிவிடுகின்றனர். இதன் மூலம் மற்றைய படைப்பாளிகளில் இருந்து வேறுபடுவதாக ஒரு மாயையை எற்படுத்த முனைகின்றனர். உண்மையில் இப் படைப்புகளில் உள்ளடக்கத்தில் வேறுபாடு இருப்பதில்லை. இப் படைப்புகளின் உள்ளடக்கம் மீதான முற்போக்கு கேள்விக்கு உள்ளாக்க முடியாத விடையமாக, இதை ஓட்டிய கொள்கை வகுப்பார்க்கு வெளியில், யார்ரும் படைக்க முடியாது எனப்பிரகடனம் செய்கின்றனர். இவை ஒடுக்கப்பட்ட மக்களின் -இலக்கியமாக இருப்பது இல்லை என்பதும், அவை படைக்கப்பட முடியும் என்ற உண்மை ஒருபுறம் இருக்க இன்று வெளிவந்து கொண்டு இருக்கும் இன்னுமொரு வகைப் படைப்பு முற்றாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இப் படைப்பு புலிகளின் அரசியல் சார்பானதாக வெளிவருவதாகும்.

வாசிக்கப்படாமலும், முத்திரை குத்தப்பட்டு போய் உள்ள இப்படைப்புகள், புலிகளின் மக்கள் விரோத அரசியலால் கறைபடிந்து போய் உள்ளதால், இப்படைப்புகள் அரசியல் ரீதியில் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றது. ஆணால் இன்று இப்படைப்புகள் புலிகளின்  அரசியல் உள்ளடக்கத்துக்கு வெளியில், பொதுஉள்ளடக்கத்தையும் கலையையும் இனைப்பதில்  மற்றையபடைப்புகளை விட ஒப்பிட்டுடளவில்  தரம் வாய்தவையாக உள்ளது.

தமிழ் பேசும் மக்களின் தேசிய இன பிரச்சனையை கையில் எடுத்து அதை புலிகளின் குறும்தேசிய அரசியல் உடன் இனைத்து சிறந்த கலை அம்சத்துடன் இப்படைப்புகள் வெளிவருகின்றன. இங்கு இவர்களின் அரசியல் தான் இப்படைப்பை சிறுமைப்படுத்துகின்றது. இப் படைப்புகள் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சனையை, மேல்மட்ட பூர்ஷ்சுவா உள்ளடக்கத்துடன் இனைத்து மிக நேர்த்தியாக, இன்று முற்போக்கு எனக் கூறிப் படைப்பவர்களை விட, சிறந்த  படைப்புகளை புலிகளின் அரசியலுக்குள் படைக்கின்றனர். இதை அவர்களின் சினிமா, முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளதை இலகுவாக பார்த்த மாத்திரத்தில்   புலிகளின் அரசியலுக்கு வெளியில் வைத்து பார்க்க முடியும். இது போன்று அவர்களின் அநேக படைப்புகள் இருக்கின்றன. படைப்புகள் எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதை புலிகளின் அரசியலுக்கு வெளியில் இன்றைய படைப்பாளிகள் எனறு கூறிக் கொள்வோர், அங்கு  உள்ளடக்கம் தொடர்பான படைப்பை எப்படி படைத்தல் என்பதை காண முடியும்.

ஒரு உள்ளடக்கத்தை பொதுவான சமூக முரண்பாட்டுடன் இனைத்து ஒரு கலை அம்சத்துடன் கூடிய படைப்பை எப்படி படைக்க வேண்டும் என்பதற்க்கு, புலிகளின் அரசியலுக்கு வெளியில் புலிகளின் படைப்புகள் நல்ல உதாரணமாக உள்ளது.

முற்போக்கு என புலிகளின் அரசியலில் இருந்து தம்மை வேறுபடுத்தி காட்டுபவர்கள், தம் அரசியலுக்குள் நின்று எடுக்கும் கருவை பொதுவான சமூக முரண்பாட்டுடன் இனைக்கும் கலை வளராதவரை, தமிழ் சமூகம் இருண்ட நுகத்தடிக்குள் இருத்தல் தொடர்வது தவிர்க்க முடியாது.

இன்று வருடம் அண்ணளவாக வெளிவரும் 1000 கதைகளில் இருந்து வேறுபட்ட வகையில் ஒரு படைப்பை படைக்கும் தேவை, கருவுக்கும் பொது முரண்பாட்டுக்கும் இடையில் உள்ள உறவை குறிப்பாக வர்க்க, அதன் மீதான விமர்சனக் கண் கொண்ட உணர்ச்சியின் மீதான கலை அம்சம்தான் அவசியமானதும் அடிப்படையானதுமாகும். இது மட்டும் தான் மக்களின் உண்மையான பிரச்சனையை பேசுவனவாகவும் பூசி மொழுகாததுமாகும். இது மட்டும் தான் மக்களின் படைப்புகளாக இருக்கும் இருக்கவும் முடியும்.

இனி நாம் சதாரணமாக படைக்கப்படும் படைப்புகளை பார்ப்போம். இன்று வெளிவரும் படைப்புகள் விதிவிலக்கு இன்றி யதார்த்த படைப்புகளாக உள்ளது. யதார்த்த படைப்புகளாக முன்வைக்கப்படும் படைப்புகள்  எல்லாம் முற்போக்கானதாக நம்பும் ஒரு மரபை, இலங்கை முற்போக்கு எழுத்தாளார் சங்கம் கடந்த கால இலக்கிய விவாதங்கள் ஊடாக ஏற்படுத்தியுள்ளனர்.

உண்மையில் இவர்கள் சோவியத்யூனியனின் சோசலிச யதார்த்தை எடுத்தவர்கள், ஒன்றுக்கு ஒன்று எதிரான  வேறுபட்ட பொருளாதார எல்லைக்குள் பார்க்க மறுத்து தமது பொதுவான பூர்ஷ்சுவாதனத்துக்குள்  பொதுமைப் படுத்தியதின் விளைவு யதார்த்தம் எல்லாம் முற்போக்கானதாக காட்டியதனால், சிறந்த படைப்பாளிகளை உருவாக்க தடையாகயிருந்தது. இந்த போக்கு மக்களின் போராட்டத்தை திசைதிருப்பி தடுக்கவும், சோவியத்தின் முதாளித்துவ மீட்சியை மூகமூடியிட்டு மறைத்த தொடர்ச்சியில்தான், சாதாரணமாக அவர்களின் வர்க்க அடிப்படைக்கு தேவையாக இருந்த பூர்ஷ்சுவா  யதார்த்த படைப்புகளை முற்போக்கு படைப்புகளாக மகுடம் சூட்டி யதார்த்தின் புரட்சிகரத் தன்மையை மழுங்கடித்து, புரட்சிகரத் தன்மை அற்ற கோட்பாட்டை வளர்த்து எடுத்து அதை மரபாக மாற்றி முற்போக்கு முத்திரை குத்தி சீரழித்தனர். மார்க்சிய லேபல் இருந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு நிலையை எற்படுத்தி அதை மரபு ஆக்கினர். அதாவது சிவப்புக் கொடியை ஆட்டி முதாளித்துவ மீட்சியை சோசலிச மாற்றமாக காட்டியதையே இவர் இலக்கியத்தில் கலையில் எந்த வெட்கமும் இன்றி மார்க்சிய மூலாம் இட்டு செய்தனர். இதையே இன்று பல படைப்பாளிகள் மார்க்சிய அடையாளம் இட்டோ, முற்போக்கு மூகமூடி போட்டோ எழுதி நியாயப்படுத்தி விடுகின்றனர். ஆனால் இதை உள்ளடக்கத்தில் செய்ய முடியாது வரண்டுபோய் உள்ளனர்.

யதார்த்தம் என்பது சோசலிசம் அல்லாத சமூகங்களில் பிற்போக்கானவை. சீர்திருத்தத்தைக் கோரும் அமைதிக் கால யதார்த்தம் இச் சமூக எல்லையை தாண்ட அதிர்ப்தியை வெளிப்படுத்தி இச் சமூக எல்லைக்குள் இருக்க கோருவதே. சீர்திருத்தைக் கோரும் யதார்த்தம் புரட்சிகர எழுச்சிகளின் போது சமூக மாற்றத்தை தொட்டும் முற்போக்கான பாத்திரத்தை வகிக்கின்றது. விமர்சனம் கொண்ட இந்த சமூக கருவின் விளைவை புதிய  சமூக மாற்றத்தை ஒட்டி கருமாறுவதை கோரும் யதார்த்தம் மட்டும் தான் முற்போக்கானவை.

பொதுவான யதார்த்தம் பூர்ஷ்சுவா கண்ணோட்டம் கொண்டவை. சாதாரண மனித நிகழ்வுகள் எல்லாம் இந்த முதலாளித்துவ எல்லைக்குட்பட்ட பூர்ஷ்சுவா நிகழ்வாக உள்ளதால், அவை படைப்பாகும் போது பூர்ஷசுவா கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும்.

இதே போன்று சாதாரண நிகழ்வுகளில் ஏற்படும் முரண்பாடுகளை எடுத்து, அதில் அதிருப்தி தெரிவித்த, எதிர்ப்பு தெரிவித்த படைப்புகள், பூர்ஷ்சுவா சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்காத சீர்திருத்தத்தை முன் வைப்பனவாக இருக்கின்றது.

இதைவிட மேல் மட்ட மக்களின் யதார்த்தம் என்பது சுரண்டும் நிலையை நியாயப்படுத்தும் யதார்த்தமாக உள்ளது.

ஆகவே யதார்த்தப் படைப்பு என்பது சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்கி அதில் பிரச்சனைகளை ஆராய்யும் படைப்பு தான் புரட்சிகர யதார்த்தமாக இருக்கின்றது. ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு காரணமும், ஒவ்வொரு நிகழ்வும் ஒட்டு மொத்த சமூகத்தில் இருந்து விலக முடியாதவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

ஆபிரிக்காவில் ஒரு குடிசையில் நடந்தாலும் அது இன்று உலகப் பொது நிலைக்கு வெளியில் சுயமாக செயல் பட முடியாது. அமெரிக்காவில் நடந்தாலும் அது இலங்கையில் உள்ள ஒரு வீட்டுக்கு புறம்பாக சுயாதீனமாக நடப்பது இல்லை. இந் நிகழ்வுகள் பொது நிலைக்கு உட்பட்டு குறிப்பான நிலைகளில் மட்டும் தான் வேறு படுகின்றன. எனவே ஒவ்வொரு நிகழ்வும் குறித்த சமூகத்தில் இருந்தும், ஒட்டு மொத்த சமூகத்தில் இருந்தும் விலக முடியாதவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒவ்வொரு சம்பவமும் முழு உலகுடன் தொடர்புடையதாக முழு இயற்க்கையுடன் தொடர்புடையதாக உள்ளது.

ஆகவே ஒரு பிரச்சனையை முழுமையில் வைத்து குறிப்பானதில் ஆராய்யும் படைப்புத்தான், மக்களின் பிரச்சனையை முழுமையாக பார்ப்பதுடன், அது மட்டும் தான் புரட்ச்சிகரப் படைப்புகளாக இருக்கின்றன. இப்படைப்புகள் புகழுக்குரிய படைப்புகளாக காலத்தால் அழியாத வகையில் நீடிக்கும் தன்மை கொண்டவையாக நீடிக்கும். இன்று சாதாரண படைப்புகள் அவர் அவரின் தனிப்பட்ட செல்வாக்கை பொறுத்தும், அவரின் தொடர்பைப் பொறுத்தும், கடந்த காலத்தில் இது போன்ற படைப்பாளிகளுக்கு நடந்தது எதுவோ, அதைப் போல் அவர் அவர்களின் எல்லைக்குள் தமக்குள் தாம் பேசிக் கொள்வதற்குள் முடிந்துவிடும்.

இன்று சாதாரண பூர்ஷ்சுவா யதார்த்ததில் சமூக பொருளாதார கலாச்சார பண்பாடுகளின் ஏற்ற தாழ்வுகளில், மறுக்கப்படும் ஒரு நிகழ்வை படைப்பு முன்னெடுக்கும் போது, அது முற்போக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணால் பலர் முற்போக்கு என கற்பனை செய்கின்றனர்.

ஏற்ற தாழ்வான சமூகத்தில் மறுக்கப்படும் நிகழ்வு என்பது அதற்குள் நடக்கும் பாய்ச்சலில் தான் தோன்றுகின்றது. இவை ஒரு ஜனநாயக கோரிக்கையாக இல்லாத அனைத்து மறுப்புகளும் பிற்போக்கானவையாக செயல் படுகின்றது. ஏற்ற இறக்கத்துக்கு வெளியில் எதிர் நிலை மாற்றத்தைக் கோரி மறுக்கப்படும் போது, அதை உயர்த்தி பிடிக்கும் போது அவை முற்போக்காக இருக்கின்றது. எனவே ஒரு விடையத்தை பாட்டாளி வர்க்க மற்றும் முதலாளித்துவ சமூக கண்ணோட்டத்தின் தொடர்ச்சியில் அதற்குள்ளன வர்க்க கண்ணோட்டத்தில் ஆராய்யப்பட வேண்டும்.

ஏன் எனின் முதலாளித்துவம் கூட தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை மறுக்கும் தன்மை கொண்டது. ஏன் எனின் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்ற தாழ்வான வளர்ச்சியைக் கொண்டதால், இங்கு ஏற்படும் முரண்பாடுகள் அதில் மறுக்கப்படும் போது அது முற்போக்காக இருப்பதில்லை.

இன்று தேசிய பொருளாதாரம் மறுக்கப் படுவதையும், உலக பொருளாதாரம் கோரப்படும் முரண்பாட்டில் இரு யதார்த்தமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது. இது போன்று ஒரினச் சேர்க்கை கோரும் ஆணாதிக்க

(ஏகாதிபத்திய பண்பாடாக இது இன்று உள்ளது.) யதார்த்தமும் பெண் விடுதலையைக் கோரும் பாட்டாளி வர்க்க யதார்த்தமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது. மாறுபட்ட யதார்த்தை கொண்ட வேறுபட்ட சமூக யதார்த்தத்தை வர்க்க கண்கொண்டு நுணுகிப் பார்க்க வேண்டும்.

யதார்த்தம் என்பது சமூக்கதில் உள்ள போராட்ட முரண்பாடுகள் உடன் மாறுபட்ட வகையில் இந்த வர்க்க சமூதாயத்தில் நீடிக்கின்றது. இதில் முற்போக்கு பிற்போக்கு என்பது சமுதாய போராட்டத்துடன் ஆராய்யப்பட வேண்டும். இதை விடுத்து மாறாத யதார்த்தத்தை நியாயப்படுத்தக் கூடாது.

அடுத்து படைப்களில் புலம்புவது நடக்கின்றது. ஜயோ எல்லாம் மாயை எல்லாம் கற்பனை எனக் கூக்குரல் இட்டு, நம்பிக்கையினத்தை விதைத்து அதில் பிழைத்துக் கொண்டு வம்பளப்பது நடக்கின்றது. மனிதர்களின் இயல்பான போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க, தம்மைப் போல் சூடுசுரனையின்றி இருக்க புலம்புவதை முன்தள்ளுகின்றனர். இவர்களின் ஒரே நோக்கம் மக்கள் அணிதிரண்டு போராடக் கூடாது. அதற்க்கு படைப்பில் ஒப்பாரி வைத்து புலம்புவதும் கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றோம் என்ற பொயரில் அதைக் கோட்பாடாக முன்நிறுத்தி, அதில் நின்றபடி மக்கள் அணிதிரண்டு போராட தத்துவம் இல்லை என்று கூறுவதன் மூலம் மக்களை திட்டமிட்டு ஒடுக்கு முறைக்குள் அளுத்திவைத்திருக்க திட்டமிட்டே புலம்புகின்றனர்.

அடுத்து இன்றைய உலகப் பொது நிலையின் கீழ் இலங்கையின் புரட்சிகரப் போக்கு அழிந்து செல்லும் நிலையில் படைப்பாளிகள் தமது பச்சோந்தித் தனத்துக்குள் எந்த வெட்கமுமின்றி, கடந்த காலத்தில் எதை எதிர்த்து கருத்துரைத்தனரோ அதற்க்குள் தாவி விடுகின்றனர். இது இலங்கையில் தொடங்கி மேற்க்கு நாடுகள் வரை தொடர்கதையாக உள்ளது. படைப்பாளிகள் மக்களுக்காக சேவை செய்வதைவிட, சொந்த புகழ் மற்றும் இலகுவான சொகுசு உழைப்புக்கு ஆசைப்பட்டு தமது வர்க்க நிலைக்கு ஏற்ப மக்களை விட்டுச் செல்கின்றனர்.

மிகமோசமான ஒடுக்குமுறையை செய்யும், பத்திரிகை செய்தி அமைப்பு முதல் நிலப்பிரபுத்துவ பண்பாட்டை உயர்த்து பத்திரிகை செய்தி அமைப்பு ஈறாக இவர்கள் அதற்க்கு முண்டு கொடுக்க பலர் விலை பேசப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கடந்தகாலத்தில் எந்தமக்களின் விடுதலை பற்றி பேசினார்களோ அந்த மக்களுக்கு துரோகத்தை செய்ய முன்வைக்கும் வாதங்களைப் பார்ப்போம்.

 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குறிப்பாக கைலாசபதி சிவத்தம்பி போன்றோர் சாதாரன எல்லா செய்திப் பத்திரிகையிலும் எழுதினர். அப்படியாயின் ஏன் நாம் எழுதக் கூடாது.

 தொழிலாக சம்பளம் பெற்றுத்தான் இதைச் செய்கின்றோம்.

 அப்பத்திரிகைகளில் முற்போக்கான சில விடையங்கள் வெளிவருகின்றன. நாம்சென்றால் அதை மேலும் செழுமைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யமுடியும்.

 மறுபக்கம் (அதாவது புரட்சிகரப் பக்கம்) எதுவுமற்ற சிறு குழுக்களாக இருப்பதுடன் மற்றப் பக்கம் (சீரழிவுப் பக்கம்) நடக்கும் மாற்றத்தை பார்க்க மறுக்கின்றனர்.

இதற்கான வேர் எல்லாச் சமூகத்தைப் போல் அதன் வர்க்க அடிப்படையில் தொடர்கின்றது. போராட்டம் தணிகின்ற போது, எதிர்புரட்சி சக்திகள் வன்முறையை கையாளும் போது, புகழுக்குரிய பக்கம் புரட்சிகர பக்கமாக இல்லாத போது மக்கள் பற்றிய வாய் சவாடல்கள் தேவையற்றதாக மாறிவிடுகின்றது.

 

இங்கு எந்தக் கருத்து மேலோங்கியிருக்கிறதோ அதைப் பொறுத்து அவன் செயல்பாடும், எந்தக் கருத்து வெல்கிறதோ அதைப் பொறுத்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மனிக்கின்றனர்.

இதற்கு ஆதாரமாக பழைய வரலாற்றில் இருந்து தரவுகளை எடுத்து முன்வைக்கின்றனர். இதில் முக்கியமாக "இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க" நடவடிக்கைகளை எடுத்து வைக்கின்றனர். முற்போக்கு எழுத்தாளர்களின் கடந்தகால நடவடிக்கை இந்த வகையில் திரும்பி பார்க்க வேண்டிய முக்கிய விடையமாக உள்ளது.

முற்போக்கு எழுத்தாளர்கள் மார்க்சிய எழுத்தாளர் அல்ல. மாறாக புத்தக படிப்பறை அரைகுறை பூர்ஷ்சுவா மார்க்சியவாதிகளால் சோசலிச சாயம் பூசியே கருத்துக்களை முன் தள்ளியதுடன் புரட்சி செய்யாத படைப்பை கோரினர். அதாவது சோவியத் முதலாளித்துவவாதி குருசேவ் எதை வைத்தார்ரோ அதேபோல் இவர்கள் சமாதான சகவாழ்க்கு ஏற்ப, இலக்கியம் புரட்சி செய்யாததாக சிர்திருத்த பூர்ஷ்சுவா   எல்லைக்குள் வரையறுக்கப்பட்டது.

இது இலங்கையின் அனறைய புதிய சூழலுக்கு ஏற்ப தேவையாக இருந்தது. இலங்கையின் பாரம்பரியமிக்க நிலப்பிரபுத்துவ மதப்பண்பாடும் அதையொட்டிய படைப்பு இலக்கியமும் சமூக மாற்றத்துக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து மாறிவிடவில்லை. மேற்க்குநாடுகின் காலனியாதிக்கத்தின் பிந்திய காலத்தில் முதலாளித்துவ புரட்சியின்றி அவை சமூகத்துக்குள் புகுந்துகொண்டது. இந்த மாற்றத்துடன் படைப்பு இலக்கியம் முன்னேறவில்லை. மாறாக பழைமைவாத நிலப்பிரபுத்துவ மதவாத இலக்கியம் மட்டும் படைப்பாக எற்க்கப்பட்டது.

இந்நிலையில் புதிய முதலாளித்துவ கருத்துகளில் கவரப்பட்டவர்கள், இரண்டம் உலகயுத்தத்தின் பின் சோவியத்தின்பால் கவரப்பட்டவர்கள் உட்பட்ட பிரிவு புதிய இலக்கியத்தை முன்வைக்க புறப்பட்டனர். இவர்கள் சமூகபுரட்சிக்கு பதில் சமுக்த்தின் மற்றத்துக்கு ஏற்ப இலக்கியத்தைக் கோருவதில் தமது வர்க்க இருப்புக்கு எற்ப கவனமாக இருந்தனர். இவர்கள் படைப்புகள் பழையதை மறுத்து பூர்ஷ்சுவா சிந்தனைக்கு வடிவம் கொடுப்பதில் சமூக இயல்பான பூஷ்சுவா மாற்றத்துக்கு ஏற்ப இலகுவில் சாத்தியமானது. இதற்க்கு இவர்களின் புத்தக மார்க்சியம் பெரும் அளவில் பயன்பட்டது. இதை வேறு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.

இந்த பூஷ்சுவா இலக்கியக் கோட்பாட்டாளர்கள் தமது கோட்பாட்டுக்கு ஏற்ப சமூகத்தின் எதிரிநன்பன் முரன்பாடுயின்றி எல்லாவற்றிலும் கூடிக்குலாவி எழுதினர். கோட்பாட்டுரீதியாக எதிரியை அடையளப்படுத்தாது மட்டுமின்றி நடைமுறையில் படுகேவலமாக இயங்கினர். மார்க்சிய மற்றும் மக்களின் போராட்டங்களில் நடுநிலை வேடத்தை எடுத்துக் கொண்டு திட்டமிட்ட முறையில் போரட்டங்களை நசுக்கினர்.

இந்த வரலாற்று நயாகர்கள் இலங்கை புரட்சிகர வரலற்றில் எதிர்நிலைப்பாத்திரத்தை வகித்தனர். மாறாக இவர்கள் சமய மற்றும் நிலப்பிரபுத்துவ நிலையில் இருந்து படைப்பை மீட்ட அடுத்தகணமே பூஷ்சுவா எல்லைக்குள் சிதைத்த நிலையில், அதற்கே உரிய ஊசலாட்டத்துடன் பண்பாடு கலாச்சாரம் பொருளாதார நடைமுறையில் எதிரியுடன் கூடி இலக்கியம் படைக்க பின்நிற்க்கவில்லை.

இவர்கள் வர்க்க எதிரியின் பத்திரிகைக்கு எழுதிய வரலாறு புரட்சியின் வழியில்லை. மக்களுக்கு வழிகாட்டுவதற்கு பதில் மக்களின் முதுகில் பழையவர்களுக்குப் பதில் புதியவர்கள் ஏறிக் குந்திக் கொண்டனர்.

எந்தப் படைப்பாளியும் தனது படைப்பு எந்த மக்களுக்காக என்பதை தெளிவாக வரையறைத்துக் கொள்ளும் போது, படைப்பு எந்தகோட்பாட்டை எதிர்த்து எழுதுகின்றார்ரோ, அக்கோட்பாட்டுக்கு சாமாந்தரமாக இருக்கும் எந்த நிறுவனத்திலும் இயங்கமுயல்வது மோசடியுடன் கூடிய இரட்டைவேடமாகும்.

ஓருபத்திரிகை ஒருமக்கள் தொடர்பு சாதனம் சமூகத்துக்கு பொதுவாக எதைப் பிரச்சாரம் செய்கின்றதோ, அதையொட்டி அதன் வர்க்க நோக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

அதைவிடுத்து அதில் ஏதாவது ஒன்றை காட்டியோ, தனது தொழிலாக காட்டியோ மக்களுக்கு பொய்யை முழுமையிலும் பகுதியிலும் பிரச்சாரம் செய்ய உதவுவது, மக்களை ஏமாற்றி அதில்கிடைக்கும் அற்ப சொகுசு வாழ்வுக்கும், அற்ப புகழுக்கும் சோரம்போகும் பச்சோந்திதனமாகும்.

அடுத்து "யதார்த்தம்  பாசிசம் பயங்கரப்படுத்தல்" என யமுனாராஜேந்தரன் அம்மா 5இல் எழுதியதுடன் "'யதார்த்தம்" என்கிற சொல்லோ 'எங்கள் பார்வை' என்கிற சொல்லோ கருத்தியல் வரையறை கொண்டவைதான். விளிம்பு நிலை மக்களை, மாற்றுக் கலாச்சரங்களை, சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை நிராகரித்த கலைக்கொள்கையாக 'யதார்த்தம்' இன்று விமர்சனத்துக்குள்ளாகின்றது" என தனது வர்க்க நிலையை தெளிவாக்குவதுடன் யதார்த்தம்பற்றிய பிரச்சனையை எடுப்பதால் நாம் இதைப் பார்ப்போம்.

யதார்த்தம் வர்க்க சமுதாயத்தில் இருவகைப்பட்டது. யதார்த்தம் உண்மைக்கும் பொய்க்கும் இடையில் இருவகைப்பட்டது. யதார்த்தம் கருத்துக்கும் பொருளுக்கும் இடையில் இருவகைப்பட்டது. யதார்த்தம் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையில் இருவகைப்பட்டது. இப்படி எல்லாவற்றிலும் யதார்த்தம் இருவகைப்பட்டுள்ளது.

யமுனா என்ன செய்கின்றார் எனின் சிறுபான்மை மக்களின் பெயரில் சிறுபான்மை ஒடுக்கும் வர்க்கத்தின் யதார்த்துக்காக புலம்புகின்றார். பெரும்பான்மை யதார்த்தம் வன்முறை கொண்டது எனவும், பயங்கரவாதம் கொண்டதெனவும் கூறுவதன் மூலம் சிறுபான்மை யதார்த்தை பாதுகாத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை சேறுயடிக்கின்றர். இந்த உலக சிறுபான்மை ஜனநாயக யதார்த்தை கேள்விக்கு உள்ளாக்காதே என மறைமுகமாக பிரகடனம் செய்கின்றார். இவர் சிறுபான்மை யதார்த்தை பாதுகாக்க கோருவதன் மூலம் பெரும்பான்மை யதார்த்தை நிராகரிக்கின்றர். பெரும்பான்மை யதார்த்தம் வர்க்க சமூதாயத்தில் வெளிவர முடியாதவகையில் சிறுபான்மை யதார்த்தம் ஒடுக்குமுறையை கையாள்கின்றது. சிறுபான்மை யதார்த்தம் பாதுகாக்க கோருவதன் மூலம் சிறுபான்மை சுரன்டலை பெருபான்மை யதார்த்தம் அம்பலப்படுத்துவதை "பாசிசம் பயங்கரவாதம்"  எனக்கூறி மக்களின் துன்பம் துயரங்களை மூடிமறைக்க கோருகின்றர்.

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தில் சுரண்டும் வர்க்கம்தான் சிறுபான்மை. இந்திய சாதிய ஓடுக்கு முறையில் பார்ப்பானியம்தான் சிறு பான்மை. ஆண் ஆதிக்க சமூகத்தில் ஆண் ஆதிக்க சக்திகள் தான் சிறுபான்மை.    இதுஎங்கும் எதிலும் உள்ளது. விதிவிலக்காக பெரும்பான்மை இனம், மதம் போன்றவற்றுக்கு வெளியில் எப்போதும் சிறுபான்மை யதார்த்தம் ஒடுக்கும் தன்மை கொண்டவை. இதன் பண்பாடு கலாச்சாரம் பெரும்பான்மை யதார்த்ததுக்கு எதிரானது. அதாவது யதார்த்தம் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது. மக்களின் பொது யதார்த்தை வந்தடைய சிறுபான்மை யதார்த்தம் தடையாக உள்ளது. இதில் இருந்நு சிறுபான்மை யதார்த்தம் பெரும் பான்மை யதார்த்தை மறுக்கின்றது.  ஆகவே மக்களின் யதார்த்தம் ஒன்றாக மாற்றப்படவேண்டும். இது பெரும் பான்மை யதார்த்த வன்முறையின் ஊடாகமட்டும்தான்  அடையப்படமுடியும்.  மனிதப் பிளவுகள் சிறுபான்மையின் பெயரில் பாதுகாக்கும் எல்லாக் கோட்பாடுகளும் மொத்த மக்களுக்கு எதிரான சுரண்டும் வார்க்கம் சார்பானவை.  இன மத மோதல்களில் சிறுபான்மை யதார்த்தம் மற்றைய பிரிவைவிட அதிகம் கோராத வரை முற்போக்கானது. இங்கும் அப்போராட்டம் யதார்த்த இடைவெளியை கடக்கும் எல்லைக்கு உட்பட்டவையே.

பெரும்பான்மை யதார்ததத்தினை எதிர்க்கும் யமுனாவின் அரசியல் நேர்மைக்கு விலை என்ன? சிறுபான்மை யதார்த்த பார்ப்பானிய சினிமாக்களையும், ஏகாதிபத்திய பண்பாட்டு சினிமாக்களையும் காய்யடித்து முற்போக்காக இலங்கைப் பத்திரிகைகளில் எழுதிக் குவிக்கும் யமுனா, ஏகாதிபத்திய பண்பாட்டு நயாகி டயானா முதல் எல்லா மார்க்சிய எதிர்ப்பாளர்களைப் பற்றியும் அவர் கோட்பாடுகளை போற்றி எழுதிக் குவிக்கும் யமுனா வசதியாக  மறந்துபோய்விட்ட பெரும்பான்மை யதார்த்ததைப் பார்ப்போம். அண்மையில் இந்தியாவில் சினிமா பெரும்பான்மை தொழிலாளர்கள் இவர் புகழ்ந்து தள்ளும் சிறுபான்மை கலைப்படைப்பாளிகளை எதிர்த்து போராடியதும் மட்டுமின்றி, அண்ணளவாக பத்துப்பேர் இவர்களின் சுரண்டலின் கொடுமையைத் தாங்கமுடியாது  இறந்து போனார்கள். இந்தப் பெரும்பான்மை யதார்த்தம், கலைப்படைப்பாளின் சிறுபான்மை யதார்த்தை அம்பலப்படுத்தியது. யமுனா தனது பிழைப்வாத சகதியுடன் சிறுபான்மை யதார்த்தம் கேள்விக்குள்ளாக்கினால் அது பாசிசம் பயங்கரவாதமாக இருக்கும் எனக் கூறியபடி சிறுபான்மை ஒடுக்கு முறைக்குசார்பாக மௌனம் சாதித்ததன் மூலம் சினிமா சாக்கடைக்கு வேறு கேடுகெட்ட வகையில் சிறுபான்மைக்காக தனது வர்க்க கூட்டுடன் கூட்டிக் கொடுத்துள்ளார்.

மக்களின் பெரும்பான்மை யதார்த்தத்தைப் பேசாதவன் முதலாளித்துவ காட்டுமிரர்ண்டிகள் மட்டும்தான். அந்த சிறுபான்மை நாய்கள் மட்டும் தான் மக்களையிட்டு கவலைப்பாடத சூறையாடலை யதார்த்தத்தை மீறி செய்யமுடிகின்றது. மக்களின் பெரும்பான்மை யதார்த்தத்தை மூடிமறைக்க கோரும் யார்ரும் சிறுபான்மை முதலாளித்துவத்தின் ஏடபிடிகளால் மட்டும்தான் சொல்லமுடியும்.

மேலும் யமுனா கூறுவதைப் பார்ப்போம். " இலக்கியத்திக்கு மிகமிக அடிப்படையானது திரை போடாத நேர்மை" எனத் தலைப்பிட்டு " இலக்கியம் என்ன செய்கின்றது? பிற மனிதனைப் பரிவுடன் புரிந்து கொள்ள உதவுகின்றது. என்னை சுயதரிசனம் செய்து கொள்ள தூண்டுகிறது. இலக்கியத்தின் குணம் கோபம் கொள்வது அல்ல என்று தோன்றுகின்றது. இலக்கியவாதி மனிதர்கிளிடையில் வன்மத்தை விதைக்கத் தேவையில்லை. நொருங்கிக் கிடக்கும் உலகில் மனிதர்களிடையில் மனித இயல்பான அன்பையும் சுதந்திரத்தையும் புரிதலையும் ஒத்திசைவையும் விதைக்கவே அவன்தேவை." ஏன்று கூறுவதன் மூலம் பாட்டாளிவர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, குறைந்த பட்சம்  மௌனம் சாதிக்க படைப்பாளிகளைக் கோருகின்றர்.

உலகம் வர்க்கத்தாலும், சாதியாலும், ஆண்ஆதிக்கத்தாலும், இனஒடுக்குமுறையாலும், நிற ஓடுக்குமுறையாலும் ............... பிளவுண்டு உள்ளது. இதை மூடிமறைப்பதே  இன்றுள்ளபணியாகும் என விசுவாசமாக கூறுவதன் மூலம், வர்க்கப் போராட்டத்தைத் தடுக்க கோட்பாட்டு விளக்கம் கொடுக்கின்றர். இலக்கியவாதி மதவாதி போல் முரண்பாட்டைத் தணிக்க எண்ணை வார்க்கவேண்டும், போரட்டத்தை முறியடிக்க இலக்கியவாதி காந்தி போல் அகிம்சை பேசி போரட்டத்தை தனிக்க காவடி எடுக்கவேண்டும் என்கிறர். ஓடுக்கப்பட்ட மக்கள் தம்மை சூறையாடுபவர்களை எதிர்த்து வன்முறையில் ஈடுபடாது தடுக்க படைப்பு உபயோகப்படவேண்டும் என்கிறர். அதவாது இருக்கும் ஒடுக்குமுறை கொண்ட சுரண்டல் சமுதாயத்தைப சுபிட்சமாக பேன, வன்முறையை மறுத்த அகிம்சை இலக்கியமே படைப்பாக வேண்டும் என்கிறர்.

முதலாளிய சுரண்டல், பார்பாணிய ஒடுக்குமுறை போன்ற அனைத்தையும் பரிவுடன் புரிந்து கொண்டு, அதற்க்கு எதிராக மக்கள் அனிதிரளாது தடுக்க முன் எச்சரிக்கையாக கந்தியத்தை உபதேசம் செய்யும் வகையில் படைப்பு உருவாகவேண்டும் என்கிறார். இலக்கியம் ஒடுக்கு முறையைக் கண்டு கோபம் கொள்ளாது பூசிமொழுக வேண்டும் என்கிறார்.

நூறு கோடி மக்கள் அடுத்த நேர உணவு இன்றி இருப்பதைப் பற்றியோ, ஜம்பது கோடிச் சிறுவர்கள் உழைப்பில் ஈடுபடுத்தி சுரண்டுவது பற்றியோ, பல பத்துக்கோடி மக்கள் குடிக்க நீர்ரின்றி இருப்பது பற்றியோ, இருபத்திஜந்து கோடி மக்கள் பார்ப்பானிய சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பது பற்றியோ இது போன்றவைகளை கண்டு கோபம் கொள்ளாத படைப்பு தேவை என்கிறார். ஆடு மாடுகள் போல் பெண்கள் கொழும்பில் சுதந்திரவர்த்தக வலயத்தில் கொத்தடிமைகளாக மாற்றுவதுமட்டும்மின்றி விபச்சாரப் பட்டத்துடன் பலாக்காரத்தைச் செய்வதைக் கண்டோ, மூன்றாம் உலக மனிதர்கள் வேலைதேடி உலக விமானநிலையங்களில் நாயாக அலைவதைப் பார்த்தோ, ஆபிரிக்க மனிதத் தடிக்குச்சிகளைப் பார்த்தோ கோபம் கொள்ளல் ஆகாது பாப்பா என உபதேசிக்கின்றார். ஏகாதிபத்திய அரசியல்வாதிகள், முதலாளிகள்,  அதிகாரவர்க்கங்கள், நடிகர் நடிகைள் என எண்னற்ற பன்றிகள் உழைப்பவனைச் சுரண்டி மிதம்மிஞ்சி தின்று கூத்தடிக்கும் ஆபாசக் கூத்துக்களை கண்டு கோபம் கொள்ளக்கூடாது. அதை பரிவுடன் அணுகி சுரண்டப்படுபவர்கள் இடம் கோபம் வராது பார்த்துக் கொள்ளவேண்டும் எனப் பார்ப்பான் மாதிரி உபதேசம் செய்கின்றார்.

இங்கு மக்கள் பற்றிய கரிசனை உடையவன்போன்று நடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சுp.என.என் (ஊ.N.N) தலைவர் மக்களுக்கு என நூறு கோடி டொலர் கொடுத்ததைப் போற்றி  கதைக்க வேண்டும். டயானச் சீமாட்டியார் ஏழையை தொட்டுப் பேசியதை போற்றவேண்டும். இப்படி உள்ளவைகளை எடுத்துக் காட்டுவதன் மூலம் வன்முறையற்ற வகையில் பிளவை தடுப்பதும் நடக்கும், மக்களை அதன்பின் (கோபத்தைத்தடுத்து) அணிதிரட்டுவதும் நடக்கும் என்கிறார். மக்கள் பிரச்சனையை உண்மையின் பேசுவது கோபத்துக்கு உட்பட்டது, எனவே பொய்மையின் மீது படைப்புகள் மக்கள் கோபம் கொளளாதவாறு இருக்க, இச்சமூதாயத்தைக் காட்டிக் காக்க படைப்பு உருவாகவேண்டும் என முதலாளிக்காக அக்கோட்பாட்டை முன்வைத்து, இதில் தனது சொந்த வாழ்வுப் பிழைப்பை நடத்திய படி தனது அருவடித்தனத்தை தொடர்கின்றார்.

அடுத்து  பலர் நல்ல கதை பற்றிக் கூறி அதிகம் அலட்டிக் கொள்கின்றனர். நல்ல கதை என்றால் என்ன எனக் கேட்டால் முழி பிதுங்குகின்றனர்.

வடிவம், மொழி, கலை, அழகியல்........... போன்றன சிறப்பாக அமைந்தால், அது ஒருவருக்கு ஏதோ ஒரு காராணத்தால் பிடித்து விட்டால் நல்ல படைப்பாகி விடுமா? இல்லை, மாறாக மக்களைப் பற்றியும் அதில் சேர்க்கை இயற்க்கையைப் பற்றி படைப்பு என்ன நினைக்கின்றது, என்ன சொல்கின்றது எதைப் பதிலீடாக முன்வைக்கின்றது எனப்பார்ப்பதும், எதிரியை எப்படி பார்க்கின்றது, என்ன செய்யக் கோருகின்றது என்ற நீண்ட விடையங்களை உள்ளடக்கிய வகையில், அதன் உள்ளடக்கத்தை பார்த்து தான் நல்ல படைப்பை வகைப்படுத்த முடியும். அதவாது என்ன உள்ளடக்கம் என்பது மட்டும் தான் ஒரு படைப்பின் தீர்க்கமான விடையமாக உள்ளதுடன், அதுமட்டும் தான் நல்ல படைப்பை தீர்மானிக்கின்றது. ஒரு படைப்பின் மற்றைய விடையங்கள் இதற்க்கு மேலும் மெருகூட்ட முடியுமே ஒழிய, அவை தீர்க்கமானவையல்ல.

நல்ல படைப்பு என்பது வர்க்க எல்லைக்கு உட்பட்டதே. இது வர்க்க எல்லையை தகர்ப்பைக் கோரி அதை முன்நிறுத்துவதாக, இருக்கும் சமூக அமைப்பை எதிர்த்து தகர்ப்பதாக படைப்பு ஒவ்வொரு விடையத்திலும் சோடை போகாதவையாக இருக்க வேண்டும். இது மட்டும் தான் நல்ல படைப்பாக இருக்கின்றது.

சிலர் "மனிதம் பற்றியும், அதன் உணர்ச்சி பற்றி.......... " பேசுவதே படைப்பு என்கின்றனர். இதில் என்ன வர்க்கம், போராட்டம், சமூகம் என எழுப்புகின்றர்கள். இது படைப்பு பற்றிய புரிதல் இன்றி கூறுவதே எனப் பலவகையாக விதம் விதமாக முன்வைக்கின்றனார்.

மனித உணர்ச்சிகள் கற்பனையான சுயாதீனமானவையா? இல்லை, ஒருக்காலும் இல்லை. ஜரோப்பியன் சமையல் அறையில் கழுபுவனினதும் சமையல் செய்பவனினதும், அவனின் முதலாளிக்கும் இடையிலான உணர்ச்சி ஒன்று அல்ல. இந்தியாவில் தீப்பெட்டி தொழில் சாலையில் வேலை செய்யும் இயந்திர கொத்தடிமைகளின் உணர்ச்சியும், இந்தியாவின் மத்தியதர மக்களின் உணர்ச்சியும், பணக்காரின் உணர்ச்சியும் ஒருக்காலும் ஒன்றாக இருப்பது இல்லை. உணர்ச்சிகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. வேறுபட்ட பொருளாதார இருப்புக்கு ஏற்ப்ப ஏற்ற தாழ்வான சமூக அமைப்புக்கு ஏற்ப, அதை ஒட்டிய காரணகாரியங்களில் இருந்து தான் உணர்ச்சி பிரதிபலிக்கின்றதே ஒழிய கற்பனையில் உதிர்ப்பானல்ல. அதாவது உணர்ச்சி வர்க்க சமூதாய பிளவுக்குள் வேறுபட்டு உள்ளது. இந்த எல்லைக்குள் தான் படைப்பு நின்று விடுகின்றனவே ஒழிய, இரண்டையும் கடந்த படைப்பு உருவாக்க முடியாது.

படைப்பில் எதை நாம் மீளமீள ஆராய்கின்றோம். படைப்பு ஒரு குறித்த மைய கரு மீதான படைப்பு முழமையில் உண்மையானதா, பொய்யானதா என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டும். இந்த கேள்விக்குள்ளாக்கும் விடயமும் அதன் தொழில்பாடும் மேம்போக்காக கருவை குறித்து சுற்றியிருக்காது, அதனை முழுமையில் குறித்த கருவைத் தேடி அதன் ஒளியில் படைப்பு வெளிவர வேண்டும்.

இதே நேரம் ஒரு பிரதான கருவை சுற்றியுள்ள வௌவேறு  கருக்கள் பொதுவாக முன்வைக்கும் மாற்று சமூக நிலைக்கு முரணாக இருக்க கூடாது. உதாரணமாக பெண் ஒடுக்கு முறையை பேசும் படைப்பு சாதி ஒடுக்கு முறையை நியாயப்படுத்த முடியாது. அதவாது இது மிக குறுகிய சிறிய சிறு விடையங்களுக்கும் விதிவிலக்கு இன்றி ஆழமாகப் பொருந்தும்.

இங்கு ஒருபடைப்பாளியின் சமூகப் பார்வை ஒரு சீராக முரண்நிலையின்றி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும். அதவாது சமூகப் பார்வை என்பது ஒரு தெளிவான வர்க்க அரசியல் பார்வையால் ஒருங்கு இனைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அடுத்து படைப்பு அனைத்தையும் மறுபேச்சு இன்றி அங்கீகரிக்கவும் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். இந்தவகையில் முன்னால் சோஷலிச நாடுகளில் தடை செய்யப்பட்டது, ஜனநாயகத்துக்கு விரோதம் என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்திய எச்சில்களை நக்கி பேந்த படி பாரட்டுவது மறுபிரசுரம் செய்வது தொடர்வதுடன் மார்க்சியம் மீது தாக்குதலை நடத்துகின்றனர்.

இன்று ஜரோப்பாவில் கிட்லரை போற்றும், நாசிசத்தை உயர்த்தும், பாசிச இன வெறியை உயர்த்தும் படைப்புகள் தடை செய்யப்படுகின்றது. இதை யாரும் (நாசிகளுக்கு வெளியில்) ஜனநாயக விரோதம் என கூறுவது இல்லை. இத் தடை படைப்பாளியின் சுதந்திரத்தை பறிப்பதாக யாரும்  புலம்புவது இல்லை. இந்த மாதிரி எழுதுபவர்கள் மனித குலத்தை பிளந்து அதில் குளிர் காய்பவர்கள். இது போன்று சோஷலிச சமூகத்தில் மாறிச் செல்லும் பொருளாதார நிலைக்கு ஏற்ப்ப சுரண்டல், ஆணாதிக்கம், சாதியத்தை போற்றும் .......... அனைத்துப் படைப்புகளும் விமர்சனம் செய்யப் பட்டு தடை செய்யப்படும். இங்கு மனிதனை சுரண்ட பிளக்கும் அனைத்து படைப்புகளும் நியாயப்படுத்தும் நேரடி மறைமுகப் படைப்புக்கள் எல்லாம் தடை செய்யப்படும்.

இறுதியாக படைப்பு என்பது மனிதனின் கற்பனையோ பொருள் அற்ற சூட்சகமோ அல்ல. மாறாக  சமூகத்தின் பிரதிபலிப்புதான் படைப்பாகின்றது. சமூகம் என்பது இரண்டு பட்டுள்ள நிலையில் படைப்பும் இரண்டாகின்றது. இதனால் படைப்பு வர்க்க எல்லைக்குள் உட்படுகின்றது. எனவே படைப்பாளி சமூகத்தை முன்னோக்கி பார்க்க வேண்டும். சமூகம் என்பது ஒவ்வொரு தலைமுறையும் ஏன் ஒவ்வொரு செக்கனும் முன்னோக்கி செல்கின்றனவே ஒழிய அதே நிலையிலோ பின் நோக்கியோ செல்வது இல்லை. முன்னையது மறுக்கப்படுகின்றது பின்னையது வரவேற்க்கப்படுகின்றது. ஒரு படைப்பாளி இதில் இருந்து மேலும் ஒருபடி தாண்டி ஒட்டு மொத்த மக்களின் நலன்களில் இருந்து பாய்ச்சல் நிலையில் சமூகத்தை காண வேண்டும். அதை விடுத்து பழையதைக் கோருவதோ, இருப்பதை பாதுகாக்க கோருவதோ, ஒட்டு மொத்த சமூகத்துக்கு எதிராக தனிநபர்களை நோக்கி படைக்கும் படைப்புகள் பிற்போக்கானவையாகும். இவை தடை செய்யக் கூடியவை மட்டும் இன்றி தண்டனைக்கு உரியனவாகவும் இருக்க கூடியவை.  ஒட்டு மொத்த மக்களின் நலன்களில் இருந்த படைப்புகளை, அம் மக்களின் விடுதலை மீதான சமூக கண்ணோட்டத்தில் நின்று படைக்க முன்வர வேண்டும். இது மட்டும் தான் மக்களுக்கான படைப்புகளாக இருக்கும் நீடிக்கும்.

 

15.05.1998