மக்களின் விடுதலைக்கு போராடும் மார்க்சியத்துக்கு எதிராக ஏகாதிபத்திய கோட்பாடளர்கள் பின்நவீனத்துவத்தை முன்வைக்கின்றனர். ஏகாதிபத்திய விரிவாக்கத்தை இலகுபடுத்த அதன் எதிரான மார்க்சியத்தை செயலற்றதாக்க, முன்வைக்கப்படுவதே பின்நவீனத்துவம். அதன் தாத்துவார்த்த உள்ளடகத்தை பின்நவீனத்துவ கோட்பாடுகள் மீதான எனது தனியான நூல் ஒன்றின் மூலம், மிக விரைவில் அதை கழுவேற்றுவது அரங்கேறும். அதற்கு முன்பு பின்நவீனத்துவ கோட்பாட்டளார்கள் எப்படி கடந்த கால பாசித்தின் தூண்களாக இருந்தனர் என்பதை இக் கட்டுரை அம்பலம் செய்கின்றது. யூத எதிர்ப்புடன் கம்யூனிச எதிர்ப்பை ஒருங்கிணைந்த வகையில், பாசிசத்தை கட்டமைத்த பின்நவீனத்துவ தத்துவவியலார்களின் ஜனநாயக முகமூடியை இக் கட்டுரை நிர்வணப்படுத்துகின்றது. இன்று மீண்டும் ஜனநாயக அரசின் மறைமுகமான ஆதாரவுடன் செழிப்புற்று வளர்ச்சி பெற்று வரும் பாசிசம், தனது தத்தவத்தை பின்நவீனத்துவ தத்துவ வழிகாட்டலில் இருந்து பெறுவதை, இக்கட்டுரை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றது. அந்தவகையில் பாசிசத்தையும், பின்நவீனத்துவத்தையும் ஒருசேர புரிந்து கொள்ள இக்கட்டுரை உங்களுக்கு உதவிசெய்கின்றது. மனுவிடம் இருந்து நீட்சே ஆரிய மேன்மையை பெற்றது போன்ற தரவுகளை ஒப்பிட்டு தன்மையிலும், நீட்சேயின் தத்துவார்த்த கோட்பாட்டு அடிப்படைகள் மீது, இக் கட்டுரை முழுமையான விமர்சனத் தரவுகளை தரத்தவறிவிட்டது. டார்வின் விளக்கிய, வலிமை உள்ளவை உயிர் வாழும் உலகில் நீடிக்கும் என்பதை, நீட்சே பயன்படுத்தினர் என்பதன் ஊடாக, அக் கோட்பாட்டின் சரியான விளக்கம் நிராகரிக்கப்படுகின்றது. டார்வின் கோட்பாட்டை ஒரு உயிரிணத்துக்குள் திரித்து புகுத்தியதையே நீட்சே போன்ற நாசிகள் செய்தனர். அத்தடன் வலிமை என்பதை சுரண்டி வாழும் பொருளாதார ஆதிக்க இழி தன்மைக்குள் விரிவாக்கியே இது திரிக்கப்படுகின்றது. இது போன்றவற்றை பொதுமைப் படுத்துவதில் கட்டுரை தவறு இழைத்த போதும், பின்நவீனத்துவ நாசிசத்தை இது அம்பலம் செய்கின்றது.
சமர்
"நான் மனிதன் அல்ல நான் வெடிகுண்டு. " "ICH BIN KEIN MENSCH ICH BIN DYNAMIT"
" இது நீட்சேயின் வாக்குமூலம். சமூக உணர்வோடு ஒட்டாத சாகசத்தன்மை வாய்ந்த அன்னியப்பட்டு நிற்கும் தனிமனித வாதத்தின் குரல். தனிமனிதனை மையமாய் கொண்ட சிந்தனைகட்கும், அவன் சார்ந்த வர்க்கக் கோட்பாடுகட்கும் இது சாட்சியம். சமூகத்துக்கும் தனிமனிதருக்குமான மனித அகத்துக்கும் புறத்துக்குமான உறவுகளை விளக்காத சுயம் சார்ந்த பரபரப்பூட்டும் தான் கவனிக்கப்படுவதில் நாட்டமுள்ள தன்னைமட்டுமே முன்னிலைப்படுத்தும் மையப்படுத்தும் சிந்தனைப் போக்கே இது. "என்னைச் சொல்ல வார்த்தைகள் வேண்டும். பலவீனத்தின் எல்லா வடிவங்களும் தன்னில் ஒலிப்பதாய்" நீட்சே மறுபுறம் முறையிட்டான். எங்கும் எதிலும் நிறைவுறாத கட்டுப்பாடற்ற சுதந்திரம் பற்றிய கனவுகள் எதிர்காலம் மீது நம்பிக்கையின்மை மனிதவாழ்வுமீதான அவநம்பிக்கை மனிதர்களின் பொதுவான நலன்கள் இலட்சியங்கள் இவைகளை நிராகரித்த தனிமனித அகஅம்சங்கட்டு முதன்மையளிக்கும் போக்கு நீட்சேயிடம் ஆளுமை செலுத்தியது. அவனது சொந்த குட்டிமுதலாளியப் பின்புலங்கள் சமூகத்தில் முதன்மைப் பாத்திரம் வகிக்க முடியவில்லை என்ற மனோவியலுடன் இனைந்த பொறுமையற்ற போக்குகளை, நாம் விசாரிக்க வேண்டும். அவனது கிறிஸ்தவ சமயம் சார்ந்த குழந்தைப் பருவ சமயக் கட்டொழுங்குகள் நசுக்கப்ட்ட பாலியல் உணர்வுகள், நண்பர்களற்ற தனிமை என்பன அவனது பிற்கால எழுத்துக்களில் விரக்தி, மற்றும், தோல்விமனவாதப் புலம்பலாயும் நடப்பில் காணக்கிட்டாத மாமனிதனைப் படைக்கும் அதீதத்துக்கும் துரத்திவிட்டது. பல்வகை முரண்பாடுகளின் தொகுதியாகியது.
1870 இல் ஜெர்மனிய ஐக்கியம் சாதிக்கப்பட்டு nஐர்மனியின் பல்வேறுபிரிவு மக்களின் வித்தியாசமான குறுகிய அடையாளங்கள் என்பன அழிந்து பரந்தகன்ற தேசியம் கட்டியமைக்கப்பட்டது. இது விரைவான தொழில்வளர்ச்சிக்கும் பெரும் மூலதனத்திரட்சியையும் நோக்கி வேகமாய் இட்டுச் சென்றது. nஐர்மனியானது பிரான்ஸ், பிரிட்டனுக்கும் போட்டியாக கொலனிகளை கொள்ளையிடும் போக்கில் வளர்ந்தது. சமூக ரீதியாக ஜெர்மனியுள் விவசாய சமூக மதிப்பீடுகள் அழிக்கப்பட்டு குடும்பஅமைப்புகளின், சொந்தம், அன்பு, உறவுகள் தகரத்தொடங்கின. பொருள் வழிபாடும், பணவழிபாடும் மூர்க்கமாய் எழுந்தன. இக்காலகட்டத்திலேயே நீட்சே வாழ்ந்தான். தொழில் வளர்ச்சிப் பெருக்கம் நகரங்களில் மக்கள் தொகையைப் பெருக்கியது, பல்வேறு பிரதேச அடையாளங்களை உடைய மக்கள் தொழிலாளர்களாக நகரங்களில் குடியேறி பொதுவான சமூக மற்றும் வர்க்க அடையாளங்களைப் பெறுவது விரைவுபட்டது. புதிய முதலாளியக் கலாச்சாரம் மக்களின் பழைய கலாச்சாரத்தின் பெரும் பகுதியை வழிவிடக்கோரியது. மறுபுறம் பழமையின் பெருமைகளையும் புதிய விஞஞான அறிவியலின் வளர்ச்சியையும் உள்வாங்கிக் கொண்ட தேசியவெறி மற்றும் பாசிச அடிப்படைகளும் கருக் கொள்ளத் தொடங்கின. இங்கு நீட்சே சார்ந்திருந்த குட்டிமுதலாளிய வர்க்கம், பெருவீத உற்பத்தி முன்பு தன் முன்னேற்றமற்ற சறுவீத உற்பத்தியை காக்க அதன் அழிவைத்தடுக்க மரணப் போராட்டம் நடாத்திக் கொண்டு இருந்தது. குட்டிமுதலாளிய வார்க்கம் தப்பிப் பிழைக்க நடத்திய போராட்டத்தின் விளைவுகளை இலக்கிய மட்டத்தில் பிரதிபலிக்கும் வேலையை நீட்சே செய்யமுனைந்தான். அதற்காக உதிரிவர்க்க சிந்தனையாளர்களை தம் வர்க்கத்தின் பக்கமாய் அணிகட்டும் பிரயத்தனமே அவன் எழுத்து, எனினும் தவிர்க்க முடியமால் சுயமுரண்பாடுகள் குழப்பங்களின் குவியலாயும், சுய அழுகையாயும் வெளிப்படுகின்றது. நீட்சேயின் எழுத்துக்கள் உயர் தத்துவமட்டமற்ற இரண்டாம் தரச் சிந்தனையாளர்களிடம் கைடேக்கர் முதல் கிட்லர் வரையும் மற்றும் லக்கான், காமு போன்றவர்களிடமும் ஒட்டிக் கொண்டது. தன் உதிரி வர்க்க ஒடுகாலிச் சிந்தனைக் கேற்ப அடையாளங்களை தேடிக் கொண்டது.
நீட்சே என்ற மனிதனைக் கட்டமைத்த தேர்தெடுத்த சமூகச்சூழலும் வர்க்க விருப்பங்களும் கவத்துக்குரியது. அவன் பகுத்தறிவையும் அறிவொளிக்காலச் சிந்தனையையும் எதிர்த்துக் கொண்டே அதன் பல பிரிவுகளை தன்னுள்ளே உள்வாங்கிக் கொண்டான். அன்றைய ஜெர்மனியின் விரைவான இயந்திரமயமாக்கலையும் உற்பத்தியில் இருந்தம் சமூக உறவுகளிருந்தும், அன்னியமாக்கப்பட்ட மனிதர்களின் சமூக நிலைகளையும் கண்டு அஞ்சி அவை எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்ள முடியமால் ஆதியான இயற்கையான ஜெர்மனிய பொற்காலத்துக்குத் தப்பியோட முயன்றான். நீட்சே பிரான்சின் தத்துவவியலானன் ஆனரூசோவின் "மனிதாகளின் இழந்து போய்விட்ட தொன்மையான இயற்கைவாழ்வு" புருத்தோனின் (JOSEPH PROUDHON) ||zurück zur natur|| "இயற்கைக்கு திரும்புதல்" என்னும் கோசம் ஜெர்மனிய மக்ஸ் ஸ்ரேனரின் ((MAX STIRNER) தன்னிச்சை வாதப் போக்குகள், டார்வினின் "வலியது தப்பிப் பிழைக்கும்" என்ற கோட்பாடு இவைகளின் கலவையாகவும் நீட்சே விளங்கினான். அகவயமான தனிமனித மன உழைச்சலுக்கு ஆட்பட்ட அதீத சிந்தனைகளிலும் வரலாற்று வளர்ச்சிகளை மறுத்த போக்கிலும் இவைகள் வெளிப்பட்டன. முதலாளிய அமைப்பின் முரண்களை நோய்க்கூறுகளை தம் வர்க்க நிலைக்கேற்ப வெளியிட்டதோடு தீர்வாக பாசிசத்துக்கு அடிப்படையான ஜெர்மனிய பொற்காலத்துக்கு வழிகாட்டும் கருத்துகளை கட்டமைத்தான்.
நீட்சே மக்ஸ் ஸ்ரேனரின் சிந்தனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தான். "நான்", "எனதுசுயம்" என்பது போன்ற தனிமனிதவாதக் கருத்துக்களை இவர் உருவாக்கினார். தன்னலமே முதன்மையானது, தனிமனிதர்களது சுயமே பிரதானமானது, கட்சிகள், அமைப்புகள், அரசுகள் தனிமனிதர்களது சுயத்தை ஆர்வங்களை அரித்து அழித்துவிடும், அடையாளமற்றதாக்கிவிடும் எனவே இவைகளை நிராகரிக்க வேண்டும் என்றார். மக்ஸ் ஸ்ரேனரை வாசித்தவர்கட்கு நீட்சேயின் சிந்தனைகள் வியப்பூட்டமாட்டா. புருத்தோனியம் மற்றும் மக்ஸ் ஸ்ரேனரின் கருத்துகளின் திரட்டலாய் பக்கூனியச் சிந்தனை பிற்காலத்தில் எழுந்தது. இக் கருத்துக்களின் ஆக்கிரப்புக்குட்பட்டதோடு நீட்சே மறுபறம் ஜெர்மனியப் பாசிச மூலங்கட்கு அடிப்படையான ஜெர்மனிய தேசியவாத தொல்பெருமைகட்டும் ஆட்பட்டு இருந்ததை கவனிக்கமுடியும். நீட்சேயின் ஆக்கத்தில் பெரும் பாதிப்பு எற்படுத்திய ரிச்சர்ட் வாக்னர் (1813-1883) உடன் 30 வயதிலேயே நீட்சே தொடர்பு கொண்டு இருந்தான். றிச்சர்ட் வாக்னர் இசையுடன் மட்டும் நின்றவரல்ல. 1870 முன்பான மற்றும் பின்பான ஜெர்மனிய தேசிய வாதத்தை பலமூட்டி வளர்த்தெடுத்ததிலும் பெரும் பங்குடையவர். "ஜெர்மானியம்" அமைப்பை நிறுவியவர். பழைய புரதான ஜெர்மானிய வாழ்வின் மீது வரலாற்றுக்கு அப்பாலான கருத்தியல் பெருமைகள் சுமத்தப்பட்டன.இந்தப் பெருமையின் மீதான ஆரவாரங்களில் யூத மற்றும் சிந்தி, ரோமா மக்கள் மேலான அடக்கு முறைகள் இழிவுகள் மறைக்கப்ட்டன. ரிட்சர்ட் வாக்கனர் வெளிப்டையாகவே யூதவிரோதம் கொண்டவர். "யூதர்கள் எம்மொழியைப் பேசுகின்றனர். ஆனால் எம்மவர்களாக இல்லை. யூதர்களின் பணபலத்தை பறித்து விட்டால் அவர்கள் அதிகாரம் இழந்துவிடுவர்." என்றார்.அவர் பெரும் நிதி மூலதனத்தைக் கொண்டிருந்த ஜெர்மனிய உயர் வர்க்கங்களின் பணத்தைப் பறிப்பது பற்றிப் பேசியது இல்லை. இவரையும் ஜெர்மனியப் பெருமை தாங்கிகளையும் நீட்சே "ஜெர்மனிய வீரர்கள்" என்று பாராட்டினான். 1870 இல் ஜெர்மனி பிரான்சுடன் நடத்திய யுத்தத்திலும் நீட்சே கலந்துகொண்டு தன் பிஸ்மார்க் அரசுக்கு ஆதரவாய் போராடினான்.
ஜெர்மனியில் கிறிஸ்தவர்கள், யூதர்களை கிறிஸ்துவைக் கொன்றவர்களாக, சர்வதேச யூதர்களாக பழித்தனர். இதே சமயம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் "உருளைக்கிழங்கு தின்னிகள்" என்று பழிக்கப்பட்டனர். ஜெர்மனிய ஐக்கியத்துக்கு பின்பான (1870) காலகட்டத்தில் கிறிஸ்தவத்தை நிராகரித்த ஜெர்மனிய கலாச்சாரத்தை பழைய ஜெர்மனிய இயற்கை வாழ்வு தொன்மைக் கடவுளர் இவைகளுடன் இணைத்து அடையாளம் காட்டும் தேசியவாதம் வளர்க்கப்பட்டு வந்தது. இது தொழிலாளர்களையும் அவர்களின் இயக்கங்களையும் மட்டுமல்ல யூதர்களையும் எதிர்க்கும் கூறுபோடும் போக்கில் உசுப்பிவிடப்பட்டு இருந்தன. தொழிலாளர் இயக்கங்களில் யூதர்கள் அதிகமாய் இருந்ததோடு தலைமைப் பாத்திரத்தையும் எற்று இருந்தபடியால் சோசலிசம் யூதர்களின் "உலகச் சதி" என்ற ஜெர்மனிய ஏகாதிபத்திய பிரச்சாரம் தீவிரமாய் செயற்பட்டது. ஆரியர், ஜெர்மனிய இரத்தம், பெருமை மிகுந்த இனம், பெருமை கொண்ட ஆரிய இனம், டொச்ச ஜெர்மனியக் கலாச்சாரம் என்ற சிந்தனைகள், வீரியமாய் பேசப்பட்டன. இவை கிறிஸ்தவ மற்றும் அன்னிய இனங்களின் கலாச்சாரத்தால் பாதிக்கப்படாத ஆதி ஜெர்மனிய வாழ்வு அதன் பெருமையுடன் இணைத்துப் பேசப்பட்டன.
1894 இல் DIE DEUTSCHERASSISTISCHEN WAGNER GOBINEAU என்ற அமைப்பு ரிச்சர்ட் வாக்கரின் மருமகனானசம்பர்லைன் ஆல் தொடங்கப்பட்டது. இது ரிட்சர்ட் வாக்கன்னரின் ஜெர்மனியப் பெருமைக் கருத்தியல்களைப் பிரச்சாரம் செய்தது. ஜெர்மனிய மன்னனான கெய்சல் வில்கெம் -1 ஜெர்மனிய பழைய இனக் குழுத்தலைவனான "கெர்மான்" பெயரில் "கெர்மான் நினைவிடம்" அமைத்ததோடு, "கெருஸ்கார்" இனக் குழுத்தலைவான ஆர்மினியுஸ் போன்றோரும் நினைவுகூரப்பட்டனர். ஜெர்மனிய பழம் யுத்தக் கடவுளான "ஓடின்" மின்னற் கடவுளான "தோர்", சூரியக் கடவுளான "பிறைர்", பெண் காதற் கடவுளான "பிறையா", நீதிக் கடவுளான "போர்செர்ரி", இறப்புக்கான பெண் கடவுளான "கெல்", குளிர்ர்காலத்துக்கான கடவுள் ஆன "கேடர்"பொன்னிறக் கூந்தலையுடைய பெண் கடவுள் "சிவ்" போன்றவை மறு கண்டுபிடிப்புச் செய்யபட்டு கிறிஸ்தவத்தை விலத்திய நாத்திகவாதம் கலந்த பல போக்குகள் எழுந்தன. எனினும் வர்க்கப் போராட்டம் கூர்மையடைய ஜெர்மனியப் பாசிசம் தோன்ற ஏதுவான இரண்டு போக்குகள் அதாவது பழைய ஜெர்மனியம் இயற்கை வாழ்வு இவைகளை அடிப்படையாய் கொண்ட போக்கும், ஜெர்மனிய கிறிஸ்தவப் பாரம் பரியத்துடன் இயங்கிய மறுபோக்கும் ஒன்றுடன் ஒன்று இனைந்து முரண்பட்டும் இயங்கிவந்தன. இவைகள் இரண்டு போக்கும் கொம்யூனிசம், யூதர்கள் இரண்டையும் எதிர்க்கும் அழிக்கும் போக்கில் ஜக்கியப்பட்ட நிலையைக் கொண்டு இருந்தன. இவை யூத எதிர்பின் பழைய மூர்க்கத்தை அழியாமல் பாதுகாக்க கடுமையாய் முயன்றன.
1878 இல் "கிறிஸ்தவ சமூக தொழிலாளர் கட்சி" புரட்டஸ்தாந்து மதகுருவான அடோல்வ் ஸ்டோக்கர் தலைமையில் தொடங்கப்பட்டு ஜெர்மன் தொழிலாளர்களிடையே யூத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து, யூத அரசு உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்றும் அது யூத ஆக்கிரமிப்புக்கு வழிவகுப்பதாய் குற்றம்சாட்டியது. 1881 இல் பலநூறு ஆயிரம் கையெழுத்துக்கள் யூதர் அல்லாத ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு உத்தியோகத்தர்கள், அரசியல் வாதிகள் மற்றும் ஜெர்மனிய தேசியவெறியர்களிடம் சேர்க்கப்ட்டு அரசு மற்றும் பொதுத்துறைகளில் இருந்த யூதர்களை விலக்கவேண்டும். அவர்களின் உரிமைகளைப் பறிக்கவேண்டும்.என்று ஜெர்மனிய அரசனுக்கு விண்ணப்பிக்கப்ட்டது. 1880-1881 களில் யூத எதிர்ப்பு உச்சக்கட்டத்தையடைந்தது. பெர்லின் உட்படப் பலபகுதிகளில் யூத வழிபாட்டிடமான சினகோகன்கள், யூதர்கட்கு சொந்தமான விடுதிகள், கடைகள் தாக்கப்ட்டன, கொள்ளையிடப்பட்டன. யூதர்கள் மேல் தெருக்களிலும் தாக்குதல்கள் நடத்தும் பாசிசப் போக்கிலான குழுக்கள் உருவாகியிருந்தன. 1882 இல் டிரேஸ்டன் நகரிலும், 1883 இல் செமினிற்ஸ் நகரிலும் சர்வதேச யூத எதிர்ப்பு மகாநாடுகள் நடைபெற்றன.
1888 இல் ரூடோல்வ் ஸ்டைனர் என்ற மானுடவியலாளன் ஜெர்மனிய உயர் இனம் என்ற கோட்பாட்டை மானுடவியல் ரீதியில் நிறுவமுயன்றான். ஜெர்மனியானது சீனா, ஆபிரிக்கா உட்பட பல நாடுகளில் நுழைந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலகட்டத்துக்கு ஏற்ற உயர் இனம் கோட்பாட்டுக்கு உதவியாயும் இருந்தது. இவன் "ஆரியர்", "ஆரியரல்லாதோர்" பற்றிய சிந்தனைகளையும் ஜெர்மனிய உயர் இனம் பற்றிய கோட்பாடுகளையும் உருவாக்கினான். ஆரியர்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தினான். ஆபிரிக்க மக்களை கொழுத்த உதடுகள் கொண்ட வளர்ச்சிகுன்றிய குழந்தை நிலையில் உள்ள இனங்களாக வரையறுத்தான். "கீழ்நிலை மனிதன்" "மிருகத்துக்குச் சமமான மனிதாகள்" அநாகரீகர்கள் போன்ற பகுப்பாய்வுகள் செய்யப்ட்டன. நேக (கறுப்பின மக்களை சுட்டும் பழிப்புச் சொல்), பாபிகன் என்பன முக்கியமாக ஆபிரிக்க கறுப்பின மக்களை சுட்ட கொலனிகளை அடிமைப் படுத்திய காலத்தில் எழுந்தன. இங்கு "கீழ்நிலை மனிதன்" என்ற பாசிசக் கருத்தியலை நீட்சே ரூடோல்வ் ஸ்டைனருக்கு சமமாய் பாவிப்பதை நாம் காணமுடியும். சீன ஆக்கிரமிப்பை ஜெர்மனி நடத்திக் கொண்டிருந்தபோது "மஞ்சள் அபாயம்" பற்றியும் அதற்கு எதிராக ஐரோப்பிய மக்கள் கலாச்சாரம், வெள்ளையினப் பெருமைகள் ஜெர்மனியில் பேசப்பட்டன. சீனாவை பங்கிடுவது பற்றி "பெரும் சீனக் கேக்கை வெட்டிப்பிரிப்பது" பற்றியும் பேசப்பட்டது.
ரூடோல்வ் ஸ்டைனர் யூதர்களை சமஉரிமை வழங்கப்படமுடியாத ஒட்டுண்ணி இனங்களில் ஒன்று என வகைப்படுத்தினான். யூதர்களின் சியோனிச் கொள்கையே செமிட்டிக் எதிர்ப்புச்சிந்தனைக்கு மூலகாரணமே தவிர ஜெர்மனியர்கள்அல்ல என்று விளக்கமளித்தான். கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து மதம் சார்ந்தவர்கட்கு யூதக்கடவுளான கிறிஸ்துவையும் யூத நம்பிக்கைளையும் பின்பற்றுபவர்கட்டு யூ+தர்களை எதிர்க்க உரிமைகிடையாது. கிறிஸ்தவத்தை துறந்த பழம்பெரும் ஜெர்மனிய மரபைத் தொடர்பவர்கட்கே ஜெர்மனிய இனப்பெருமை காக்கும் பொறுப்பு விடப்பட்டுள்ளது. அவர்களே யூதர்களை எதிர்க்க உரிமை பெற்றவர்கள். யூதச் சிந்தனைகளால் களங்கப்படாதவர்கள் என்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஜெர்மனிய உயர்இனம், இனத்தை தூய்மையாய் வைத்திருத்தல், இனத்தூய்மை, யூத இரத்த நஞ்சூட்டல் , அன்னியரும் அடுத்தவர்களும், அன்னியக் குழுக்கள் என்ற கருத்தப் போக்குகள் ஆட்சிக்கு வந்தன. ஜெர்மனியர்கள் அல்லாத சகல போக்கும் எதிர்க்கப்பட்டதோடு தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டன.
ரிட்சர்ட் வாக்கனரின் மருமகனான சம்பர்வைன் கைசர் வில்கெம் 2 நெருக்கமாயிருந்தவன் 1905 இல் ரஸ்யாவில் யூதர்கள் அழிப்பிலிருந்து தப்பி ஜெர்மனியுள் புகுந்த போது கைசர் வில்கெம் 2 அம்மக்களை பன்றிகள் ஊத்தை யூதர்கள என்று திட்டினான். "யூதர்கள் எனது அரசின் ஒட்டுண்ணிகள் என்று தூற்றினான்" "யூதர்கள் எம் அதிஸ்டமின்மைக்கு பொறுப்பானவர்கள்" என்று கருதப்படும் சொற்றொடர் நாசிகாலத்தில் பிரபலமானது. ஆனால் இது நீட்சே காலத்துக்குரியது. நீட்சேயை அவன் எழுத்தை பரிசீலிக்கு முன்பு அவன் வாழ்ந்த காலகட்டத்தைய ஜெர்மனிய அரசியல் சமூக கருத்தியல்களையும் வளர்த்து பலம் பெற்றுவந்த பாசிசத்துக்கு அடிப்படையான பொருளாதார சக்திகளையும் கவனிக்கவேண்டும். அப்போது மட்டுமே ஜெர்மனிய ஏகாதிபத்தியப் பொருளாதார ஆர்வங்களோடும் தொழிலாள வர்க்க இயக்கங்களை சிதைத்தழிக்கும் போக்கோடும் இணைந்த வளர்ந்த பாசிச மூலக் கூறுகளையும் அதன் நேசசக்தியான நீட்சேயையம் விளங்கிக் கொள்ளமுடியும். நீட்சே அன்றைய ஜெர்மனியின் பாசிச வளர்ச்சிப் போக்கை சிந்தனை வடிவில் திரட்டி புதுவடிவம் வழங்கினான்.
- கிறிஸ்துவ எதிர்ப்பு - யூத எதிர்பின் ஜெர்மனிய பாசிசவடிவம் -
நீட்சே பிளாட்டோவை உயர்மனித வரிசையில் இருத்தினான். அன்றைய கிறிசில் பிளாட்டோவை ஒத்த மாமனிதர்களே ஆட்சி செய்தனர் என்றான். போப்பை சிறை பிடித்த நெப்போலியனைப் பாராட்டி தன் முன்னோடி என்று கொண்டாடுகின்றான் நீட்சே. நீட்சேயின் கிறிஸ்துவ மறுப்பு மனித அறவுணர்வின் அடிப்படையில் மனிதகுலத்து விடுதலையின் பாலான அக்கறை மீது எழுந்தல்ல. மாறாக ஜெர்மனிய பழம் பெருமையுடன் கூடிய இயற்கை வாழ்வு மற்றும் தேசிய வெறி, பாசிசப் போக்குகட்கு அடிப்படையான யூத எதிர்ப்பின் மீது எழுந்ததே. நீட்சேயின் னநச யுவெiஉhசளைவ "கிறிஸ்தவ எதிர்ப்பு" நூல் வெளிவந்த காலகட்டம் ஜெர்மனியில்மிகப் பெரும் யூத எதிர்ப்பும், கிறிஸ்தவம் யூதச் சிந்தனை என்ற வாதாட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமாகும். கிறிஸ்தவம் தன்னுடைய "மரணஎதிரி" என்ற நீட்சே பிரகடனப்படுத்தியதை இந்த அடிப்படையிலேயே பார்க்கவேண்டும். "கடவுள் இறந்து விட்டான்" என்று கிறிஸ்தவ கடவுளைச் சபித்துவிட்டு நீட்சே ஜரோப்பிய நாகரீகத்துக்கு அடிப்படையாகக் கருதப்படும் கிறீசின் டியோனிசோஸ் என்ற கடவுளிடம் செல்கின்ற முரணையும் நாம் ஜெர்மனியப் பழம் பெருமையில் கிறிஸ்துவ யூதச்சிந்தனையை துறந்து விட்ட ஜெர்மனியப் பாசிசக் கூறின் வடிவமாயே காணவேண்டும். கி.மு 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெர்சிய மதத் தலைவரான சாராதூஸ்ட்ராவில் அக்கரை காட்டுகின்றான். இவர் நல்ல கடவுள், தீய கடவுள் கோட்பாட்டுக்கு சகலரிலும் முன்னோடி ஆவர். இவரின் மூலக்கருத்துக்களைத் தேடி சீனாவின் யூனான் பகுதிக்கும் நீட்சே போய்வந்தான். ஆனால் சீன மக்கள் மேலான ஜரோப்பியரின் ஒடுக்குமுறையையோ சுரண்டலைப்பற்றியோ அவன் பேசமால் போனமையை அவனது பாசிச மூலங்களின் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். ஜெர்மனி நீட்சே காலத்தில் சீனாவைக் கொள்ளையிட்டு சீன மக்களை அழிக்க தொடங்கியதையிட்டு ஆபிரிக்க நாடுகளை சூறையாடத் தொடங்கியதையிட்டு நீட்சே ஒருவரி கூடப் பேசவில்லை எதிர்க்கவில்லை என்பதையும் இவனுக்கு முன்பு வாழ்ந்த மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தொடக்கம் கொம்யூனிஸ்டுகள் சகல ஐரோப்பிய ஆக்கிரமிப்புகளை கீழைத்தேச மக்கள் மீதான படுகொலைகளை எதிர்த்து போராடி வந்தனர் என்ற உண்மை ஒன்றே நீட்சேயின் பாசிச இலக்கியத்தை அம்பலப்படுத்தப் போதுமான ஒன்றாகும்.
அ.மாhக்ஸ் போன்றோர் நீட்சேயின் "கடவுள் இறந்து விட்டான்" என்பதற்கும் கிறிஸ்தவ மறுப்புக்கும் பின்புறமுள்ள யூதவிரோதத்தை பாசிசத்தைக் கண்டு வேண்டுமென்றே மறைத்தனர். மேலும் முதலாளிய மறுமலர்ச்சிக் காலத்தில் கடவுளர், மத மறுப்பு என்பது சாதாரணமானதாகும். கடவுள் மறுப்பை பிரதானப்படுத்திய ஜெர்மனியச் சிந்தனையாளர்கள் நிறைய இருக்க நீட்சேயை மட்டும் தூக்கிப்பிடிக்கும் சூட்சமங்களை அரசியலில் தேடவேண்டும். ஜெர்மனியக் கவிஞர் சில்லர் கடவுள் மறுப்பை பிரதானப் படுத்தியவர். கைன்றிச்கைன "அறிவின் வெற்றி மதநம்பிக்கைகள் மீதான வெற்றி" என்றதோடு கடவுளை வெறுத்து தேவாலயத்தை தூசித்தார். அதிகாரமும் பணமும் மதங்களின் சொத்தாகிவிட்டது என்று சொன்னார். இவரின் கடவுளர் மறுப்புக்காக இவரது நூல்கள் போப் கிறிகோர் 16 ஆல் தடை செய்யப்பட்டது. அப்படியான நிலை எதும் நீட்சேக்கு ஏற்படவில்லை. நீட்சேக்கு முன்பே மார்க்ஸ் "மதம் மக்களுக்கு அபினி என்றார்." "எல்லாவற்றையும் சந்தேகி" என்ற மார்க்சின் குரல் இன்றி "எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீடு செய்" என்ற நீட்சேயின் குரல் எழுந்திருக்கவே முடியாது.
- நீட்சேயின் பாசிசக் கூறுகள் -
மாக்சியம் புதிய மனிதனைப் பற்றி, மக்களின் வரலாற்று பங்களிப்பை பற்றி பேசியது. அந்தப் புதிய மக்கள் முன்னேறிய அரசியல் பொருளாதார சமூக நிலைகளில் வளர்ச்சியில் படைக்கப்படுவர்கள். ஆனால் நீட்சேயின் கருத்துகள் அதிகாரத்துக்குக்கும் புனிதங்கட்கும் எதிராய் குரல் கொடுத்துக் கொண்டே மரபுகளை மறுத்துக் கொண்டே மனித இயல்புக்கு அப்பாற்பட்ட "மாமனிதர்களை", "உயர்மனிதர்களை" மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட நிலையில் ஆதிக்க கதாநாயகர்களைப் பற்றி பேசியது. புதிய மரபுகளை புதிய புனிதங்களை, பதிய அதிகாரத்தை படைக்கும் முரணுக்குப் போய்ச் சேர்கின்றது. "மாமனிதத்தரம், மாமனிதசக்தி, மாமனிதன், உயர்ந்த மற்றும் தாழ்நிலை மனிதன்" பற்றிய கருத்தியல்களை நீட்சே பேசினானன். இது மக்களை பிளக்கும் பாசிசக் கூறாகும். இதில்தான் கிட்லர் உருவானன். கிறிஸ்துவைஇறக்கிவிட்டு அவர் சாவை அறிவித்து விட்டு கடவுளின் இடத்தில் மாமனிதர்களை மக்களுக்கு மேலாக படைத்து விடப்பட்டனர். இந்த மாமனிதர்களே பாசிசத்தின் கருத்தியலுக்கும் இனப்பெருமைச் சிந்தாந்தத்தை உருவாக்க வலுச் சேர்த்தவர்கள். நீட்சேயின் "பூமியின் உயர்வானவன்", "மனித மாதிரிகள்" பற்றிய கருத்தியல்கள் வளர்ந்து வந்த பாசிசத்துக்கு மாதிரியாகத் திகழ்ந்தன. அடிக்கட்டுமானத்தில் எழுந்த வர்க்கப் போராட்த்தை ஜெர்மனிய தொழிலாள வர்க்க எழுச்சிகளை நசுக்க தேவையான பாசிசத் தயாரிப்புகளை செய்து கொடுத்தான்.
நீட்சேயின் மாமனிதர் கோட்பாடுகளின் மூலம் இந்திய மனுதர்ம சாஸ்திரத்திடமும், மனுவிடமும் இருந்து எடுக்கப்பட்டதாகும். ஆரியர் உயர் இனம், உலகை ஆளப் பிறந்த இனம் என்ற கருத்துக்கள் ஆய்வுகள் இந்தியாவில் ஆரியத்தின் தொடர்புகளை தேடிச் செல்வதில் முடிந்தது. கேகல், மக்ஸ்முல்லர், கும்போல்ட் உட்படப் பலர் இந்தப் போக்கின் பிரதிநிதிகளாய் இருந்தனர். இந்த வழியில் நீட்சே ஆரியரைத் தேடிப் புறப்பட்டு மனுவைக் கண்டு கொள்கின்றான். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரனையும் நால்வருனப் பாகுபாட்டையும் ஆதி ஆரியனின் தர்மமாய் காண்கின்றான். ஒடுக்கப்பட்ட இழிவுபடுத்தப்பட்ட தாழ்நிலையிலுள்ள மனிதர்களின் சமூகநீதிக்கான வரலாற்றுப் போராட்டங்களை அவன் அடையாளம் காணவோ அனுதாபப்படவோ இல்லை. மாறாக பிராமணர்கள் சார்ந்த உயர் வர்க்க கருத்தியல்களை தனதாக்கிக் கொண்டான்.
அவனின் மாமனிதச் சிந்தனை மில்லியன் கணக்கான மக்களை இழிவுபடுத்தவும் அடிமைப்படுத்தவும், படுகொலை செய்யவும் படுகொலை முகாங்களை அவுஸ்விட்ஸ் ((AUSWITZ)) களை உருவாக்கவும் காரணமாயிற்று. நீட்சேயிடம் இருந்த அதிகாரவிருப்பு, வன்முறை வெறி, யுத்தத்துக்கு விருப்பு, மனிதர்களின் ஆத்மீக மதிப்புகளை நிராகரித்தல் என்பன மக்களின் வரலாற்றுப் போக்கை மதிக்காத பாசிச ஆளும் வர்க்க நலன் சார்ந்த அதிகார வர்க்கத்து கருத்துப் போக்கே. சராசரி மனிதத் தன்மை கடந்த மாமனிதனே அவனது பேசு பொருள். அவனது கனவு, புதிய அதிகாரம் கொண்ட தனிமனிதனை சமூகத்தின் ஆற்றலை மனித முன் முயற்சிகளை கடந்து அவன் படைக்க முயன்றான். அதுவே கிட்லராய் பாசிசத்துக்குக் கிடைத்தது. கிட்லர் நீட்சேயால், அவன் கோட்பாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டான். அவனின் "எனது போராட்டம்" நூல் அதற்குச் சாட்சியம். நீட்சேயினுடைய கையெழுத்துப் பிரதிகளை தன் சொந்த ஆவணக் காப்பகத்தில் வைத்து கிட்லர் பாதுகாத்தான். நீட்சேயின் அரசியலில் பாசிச பக்கத்தை மறைத்துவிட்டு அ.மார்க்ஸ் போன்றோர் அரசியல் கரடி விடுவதை அம்பலப்படுத்தவேண்டும்.
- முதலாம் உலக யுத்தத்தில் நீட்சேயிசம் -
நீட்சே 1900 ஆண்டில் மரணமடைந்தான் ஜெர்மனியின் இலக்கிய விமர்சகரான பிரான்ஸ் மேரிங் நீட்சேயின் ஜெர்மனியப் பெரும் தேசியவாதக் கூறுகளை விமர்சித்தார். 1905 இல் லெனின் சுவிஸ்சர்லாந்தில் இருந்த காலத்தில் நீட்சேயைக் கற்று இருந்தார் என்று தெரிகின்றது. 1916 இல் லைபிசிக் நகரைச் சேர்ந்த குரோனர் (DIE NATIONEN UND IHRE PHILOSOPHIE, EIN KAPITAL ZUM WELTKRIEG) வெளியிட்ட புத்தகத்தில் உலக யுத்தத்தில் நீட்சேயின் கருத்துக்களின் பங்கை ஆராய்ந்தார். பிரிட்டனைச் சேர்ந்த தோமஸ் கார்டி, ரெமாயின் ரோலாண்ட் போன்றோர் முதலாம் உலகயுத்தத்தில் நீட்சேயிசத்தில் பெறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தனர். அதை "EURO NIETZSCHEN WAR" என்று மதிப்பீடும் செய்னார். முதலாம் உலக யுத்தத்தில் கென்றி லூயிஸ் மென்கன் என்பவர் அமெரிக்காவில் வெளியிட்ட நீட்சே பற்றிய புத்தகம் ஜெர்மனிய விரிவாக்க கருத்தியல் என்று தடை செய்யப்பட்டது. வில்லியம் ஆர்கர் யுத்தம் மீதான நீட்சேயிச கருத்துகளின் செல்வாக்கை கண்டறிய முயன்றார். முதலாம் உலக யுத்த முடிவில் நீட்சேயிசம் பரவிய நாடுகளில் முக்கியமானது இத்தாலியாகும். முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள் நீட்சேயைப் போற்றினர். இத்தாலியப் பாசிசம் பிற்காலத்தில் ஜெர்மனியப் பாசிசத்தோடு மிகவும் நெருக்கமாகியது. முதலாம் உலகப் போரின் தோல்விக்குப் பின்னர் நீட்சேயிசம் ஜெர்மனியில் பின்தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டது. ஜெர்மனியக் பெரும் கவிஞர்களான கோத்தே, சில்லர், கேர்டர் ஆகியோர் வைமர் குடியரசு காலத்தில் முன்னே வந்தனர். மாபெரும் அரசியல் இலக்கிய எழுச்சிக் காலமாய் அது இருந்தது. மீண்டும் ஜெர்மனியப் பாசிசத்தின் எழுச்சிவரை நீட்சேயிசத்தின் மறுபிறப்பு வரை அவை நீடித்தன.
- மாக்சியம் பற்றி நீட்சேயிசம் -
யூதவிரோதமும் தூய ஜெர்மனிய இயற்கைச் சிந்தனை என்ற கருத்தாக்கமும் கொண்டிருந்த நீட்சே மாக்சியத்தை கிறிஸ்தவ மற்றும் யூதா ஆதிக்கக் கருத்தியல்களின் தொடர்ச்சி அதன் மனோபாவம் என்று கருதினான். சோசலிசத்தின் அடிப்படையான மனித சமத்துவத்தை (இங்கு சமத்துவம் என்பது ஏற்றத் தாழ்வை கடத்தலைக் குறிக்கின்றது.) நிராகரித்து, மனித சமத்துவம் என்பது கற்பனையானது என்றான். சோசலிசம் மனித உரிமைகளை வழங்காது மாறாக புதிய அதிகாரத்தை நிலவும் வன்முறைகளையே தொடரும் என்றதோடு மனித உரிமைகள் சாத்தியப் படாதவை என்றான். சோசலிசம் என்பது அரசியலைத் திணித்து இயற்கைக்கு முரணான கட்டமைப்பை மனிதர்கள் மேல் சுமத்தி விடும் என்றான். இதன் மூலம் ஜெர்மனிய ஆளும்வர்க்க கனவுகளை நிறைவாக கொண்ட கோட்பாட்டை விரிவாக்கினான். நீட்சே சமூகத்தில் நடைபெறும் மாறுதல் வளர்ச்சி போன்றவைகளை புறநிலை யதார்த்தத்தில் செயற்படும் பல்வேறு விதிகளையும் புரிந்து கொள்ள மறுத்தான். தோற்றத்துக்கும் நிகழ்வுக்கும் இடையிலான தொடர்புகளை சமூகப் போக்கை சரித்திர ரீதியில் விளங்கிக் கொள்ளும் இயங்கியல் இன்மை மார்க்சியத்துக்கு எதிராக நிற்க கோரியது. சோசலிசத்தை கிறிஸ்தவக் கற்பனாவாத்தின் கடைசி வடிவம் என்று கருதியமை, சோசலிசத்தின் அடிப்படையான மனித சமத்தவத்தை நிராகரிப்பதும், அவனுள் காணப்பட்ட ஜெர்மனியப் பன்னெடுங் கால யூதவிரோதம், ஜெர்மனிய உயர் இனம், மாமனிதன் கோட்பாடுகள் இவைகளின் தொடர்ச்சியே. நீட்சேக்கு முன்பும் பின்பும் நாசிகளின் கால கட்டத்திலும் கொம்யூனிசம், சோசலிசம் என்பவை உலக ஆதிக்கம் பெற முனையும் யூதர்களின் சதியாகவே பார்க்கப்பட்டது என்ற வரலாற்ற உண்மையூடாக இவற்றை நாம் விளங்க வேண்டும். நீட்சேயின் காலம் தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் முழுமூச்சோடு வளர்ந்து கொண்டு இருந்தகாலம் என்பதும் ஜெர்மனிய மேலாதிக்கக் கனவுகளின் மூடுதிரையான ஜெர்மனிய உயர் இனம் என்ற கருத்துக்கு எதிராக இருந்த கருத்து மாக்சியத்திடமிருந்தே வந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். நீட்சேயின் சிந்தனைப் போக்கு அப்போதை புலப்படும். தொழிலாளர்களை இயந்திரங்களின் அடிமைகள் என்றதோடு சுயமாய் செயற்படமுடியதவர்களாயும் கருதிய போக்கு வழக்கமான வரம்பு மீறாத முதலாளியப் பார்வையே. மனிதர்களின் சமமற்ற நிலையில் நீட்சே நம்பிக்கை கொள்வது அவனது மாமனிதக் கனவுகளின் அடிப்படையிலானதாகும். மனித ஏற்றத்தாழ்வுகள் இயற்கையானவை என்று அவன் கருதினான். இச்சிந்தனை பின்பு நாசிகள், யூதர்களையும், சிந்தி, ரோமா, ஆபிரிக்க ஐரோப்பிய கலப்பின மக்கள், கச நோயாளர்கள், அங்கவீனர்கள் போன்றோரை அழிக்கவும் வலிமை பொருந்திய ஆரிய மனிதனைப் படைக்கும் போக்கிலும் வளர்ந்தது. "வாழ்த் தகுதியற்றவைகளை அழித்தல்" என்ற சிந்தனை கிட்லரின் வரலாறு காணாத மனித அழிப்புக்கு வழிவிட்டது. நீட்சேயின் எல்லாப் போக்கிலும் தலையிடும் அவனது அவ நம்பிக்கை உலகை "கிறுக்கர்களின் இல்லம்" என்ற போது, மனிதர்களின் மீது தொழிலாளர்களின் உலகை மாற்றி அமைக்கும் சக்தி மீது நம்பிக்கை கொண்ட மாக்சோ "உலகை இயற்கையின் எழில்மிகுந்த கொடை" என்ற கருதினார்.
பாசிசம் நிலவிய காலத்தில் விமசர்சகரான கானஸ் குன்தர் 1930 களின் நடுப் பகுதியில் பாசிசத்துக்கும் நீட்சேயின் சிந்தனைக்குமுள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். புதிய காண்டியப் போக்குகள், டார்வினிய சிந்தனைகள் இணைத்து நீட்சேயின் சமூகம், பொருளாதாரம் பற்றிய அறிவின்மையோடு பாசிசத்துக்கு தொண்டு செய்வதை நிரூபிக்கின்றார். "வாழுவதற்கான" அல்லது "இருப்புக்குக்கான" போராட்டம் என்ற கருத்துகள் முதலில் சோப்பன்கோவரிடமிருந்தும் மற்றைய சிந்தனையாளர்களிடமிருந்து நீட்சேயிடம் வந்து சேர்ந்தமையையும் இது சாதாரண மனிதர்களை ஜெர்மனியப் பொதுமக்களையும் தவிர்த்து பலமான உயர் மனிதர்கட்கே நாசிகள் சித்தரிக்கும் அதிஉயர் இனக் கோட்பாட்டுக்கே உரியது என்று காட்டுகின்றார். இது நாசிகள் இனப் போராட்த்தை வர்க்கப்போராட்த்துக்கு எதிராய் நிறுத்த உதவியது. நீட்சே சாதாரண முதலாளிய ஜனநாயக உரிமைகளைக் கூட மதிப்பிடாமை அவனின் பழம் கிறீசின் அரிஸ்டோட்டலின் சிந்தனை எச்சங்கள். இவைகளை ஆய்வுக்குட்படுத்தினார். 1954 இல் லூக்காக்ஸ் பாசிசத்தையும் நீட்சேயையும் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
- பெண்கள் பற்றி நீட்சே -
"நீ பெண்களிடம் போகும் போது சவுக்கை எடுத்துச் செல்ல மறந்த விடாதே"("னர பநாளவ னர கசயரநn? எநசபளைள னநை pநளைஉhந niஉhவ") இது நீட்சேயின் புகழ்பெற்ற பெண்கள் பற்றிய கருத்துரை. நீட்சே தன் தாய் பிரான்சிஸ் காவையும் சகோதாரியான எலிசபெத்தையும் தவிர எல்லாப் பெண்களையும் வெறுத்துக் கொட்டினான் நம்பத்தகாதவர்கள் என்றான். பெண்களை சூனியக்காரிகள், பாம்புகள் என்று அழைத்தான். இவைகளையே இந்து மனு தர்மமும் பெண்ணுக்கு கொடுத்த அடைமொழிகளாகும். ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பெண்களிடம் தம்மைப் பறி கொடுத்து விடக் கூடாது. குழந்தை பெறுவது மட்டுமே பெண்களின் வேலை. நீட்சேயின் "உயர் மனிதர்கள்" "மாமனிதர்கள்" வரிசை ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. பெண்களுக்கு அங்கு இடம் கிடையாது. இதையே நாசிகால பெண்களின் நிலை தெளிவுபடுத்தியது. பெண்களை ஆணின் கண்காணிப்பில் அடக்கி வைத்திருக்கப்பட வேண்டியவாகளாய் நீட்சே கருதிய காலத்தில், ஜெர்மனியில் கிளாரா செட்கின் போன்ற பெண் மார்க்சியவாதிகள் பெண் விடுதலையைப் பற்றி பேசத் தொடங்கிவிட்ட காலமாகும். பெண்கள் குடும்பப் பெண்களாக புனிதமாக மற்றய இனத் தொடர்பு இன்றி இருக்க வேண்டும் என்ற நாசி காலப் பெண் சிந்தனைகள் நீட்சேயின் பிற்போக்குதனத்தின் தொடர்ச்சியே. மாக்சியம் பெண்களின் பிரச்சனையை போதியளவு பேசவில்லை என்று துள்ளியடிக்கும் பின் நவீனத்துவங்கள் தம் குருவானவர்களின் ஒருவரான நீட்சேயின் காட்டுமிராண்டித்தனமான பெண்கள் மேலான வன்முறைச் சிந்தனை பற்றி பேச்சு மூச்சுக் காட்டுவதில்லை. இந்த இரட்டை வேடம் எந்த வர்க்க நலனுக்காக?
- நீட்சேயின் தத்துவவிசுவாசிகள் -
நீட்சேயின் பாசிசக் கருத்தியல்களைத் தொடர்ந்து பந்தம் பிடித்தவர்களில் மார்டின் கைடேக்கர்(1889-1976), ரோபேட் மூசில்(1880-1942), ஏர்ன்ஸ்ட் யுங்க(1895-1998), பூகோ(1926-1984) போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் முக்கிய பாசிஸ்ட் கைடேக்கர் இன்றைய பின் நவீனத்துவ தத்தவ விடலைகளாலும் தூக்கிப் பிடிக்கப்படுபவன் என்பதால் இவனை பார்ப்போம். அ.மார்க்ஸ் போன்ற தமிழ் நாட்டின் பின்நவீனத்துவ மேதைகள் நீட்சேயை மட்டுமல்ல கைடேக்கரையும் வர்க்க இடம் வலம் தெரியாமல் காவித் திரிவது இன்று நாம் காணும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
கைடேக்கர் 1916 "சரித்திர விஞ்ஞானங்களின் காலம் பற்றிய கருத்து" என்ற நூலையும், 1927இல் "காலமும் இருத்தலும்" என்ற நூலையும் வெளியிட்டான். "மனித எதிர் காலம் அவர்களையே சார்ந்தது மனிதனின் ஒவ்வொரு அடியும் அவனைக் கட்டுப்படுத்துகிறது" என்று நவீன கருத்துமுதல்வாதம் இங்கு புதுப்பிக்கப்படுகின்றது. சமூகத்தின் வர்க்க கட்டமைப்புகள் மனிதர்களின் வித்தியாசம் வித்தியாசமான செயற்பாடுகளில் இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டு இருப்பதை மதிப்பிடாமல் மனிதர்கள் தனித்தனியே செயற்படுவர்களாக சுதந்திரமாக இயங்க வாய்ப்புடையவர்களாக புனைந்து மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். "எல்லாப் பொருட்களும் கருவிகளே" என்ற கைடோக்கர் நடப்பின் அனுபவத்தை வரலாற்றுப் படிப்பினைகளை விட்டு நிகழ்ச்சிகட்கும் புறத்தோற்றத்துக்கும் இடம் வழங்கினான். இவைக்கு புறத்தே நிலவும் உண்மைகள் காரணிகள் ஆராயப்படவில்லை. கைடோக்கர் ஆரம்பம் முதற் கொண்டே பாசிச அமைப்புகளோடு தொடர்பு கொண்டு இயங்கினான். யூதர்கட்கும், கொம்யூனிஸ்கட்கும் எதிராய் இயங்கிய "இரத்தத்தையும் நிலத்தையும்" காக்கும் அமைப்பு பிறைபூகர் நகரில் இயங்கிய போது, அதில் பிற்போக்கான அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து இயங்கினான். நாசிகளின் கட்சியான NSDAP உருவாகி வளர்த்த போது ஏனைய பாசிசக் குழுக்களை உள்வாங்கியது அல்லது அழித்தது. பெர்லினில் இயங்கிய "|STRASSER BRUDER|| உட்பட பல பாசிச அமைப்புகட்கும் இக்கதியே நேர்ந்தது. 1933 கைடேக்கர் வெளிப்படையாக நாசிகளின் NSDAP இல் இணைந்து கொண்டதோடு, சகல சிந்தனையாளர்களையும் நாசிகளுடன் சேர்ந்து கொள்ளளும் படி அழைப்புவிட்டான். பிறைபூகர் பல்கலைக்கழகத்தில் கைடேக்கரின் மாணவப் பருவத்தில் முக்கிய விரிவுரையாளராக இருந்த யூத அடியைச் சேர்ந்த எட்முண்ட் குஸ்சவ் என்பவரை நாசிகளிடம் காட்டிக் கொடுத்துவிட்டு, அவரின் பதவியை தானே பறித்தவன். அதன் பின்பு பிறைபூகர் பல்கலைக்கழகத்தில் தலைமையான பாசிஸ்ட்டாக, கொலைகாரனாக இயங்கியவன்.
இவன் கிட்லரை "தலைவர்" என்ற அழைத்ததோடு நாசிகளால் "தேசியப் புரட்சியாளன்" என்று அழைக்கப்ட்டான். கிட்லர், ரோசன்பேர்க் போன்ற தலைமைப் பாசிஸ்டுகளுக்கு நெருக்கமாயிருந்தான். 1934 இல் நாசிகளோடு தனிப்பட்ட காரணங்கட்காக முரண்பட்டுக் கொண்டு இத்தாலிய பாசிஸ்ட் முசோலினிக்கு மிகவும் நெருக்கமான தத்துவவாதி ஆனான். இவனே 1927 இல் நீட்சேயின் வெளியீடுகளை மறுபதிப்புச் செய்து வெளியிட்டான். தன்னை நீட்சேயின் தொடர்ச்சி என்று வெளிப்படுத்திக் கொண்டான். நீட்சேயை ஜெர்மனிய இத்தாலியப் பாசிஸ்டுகளின் வேதப் புத்தகமாக்கியதில் கைடேக்கருக்கு பெரும்பங்குண்டு.
சோவியத்யூனியனையும் கொம்யூனிஸ்டுகளையும் சத்துராதியாய் கருதிய கைடேக்கர் ஒக்டோபர் புரட்சி காட்டுத்தனமானது, நாகரிகத்தின் அழிவு, மனித இயற்கை மேலான லன்முறை என்றான். நீட்சேயை "தொழில் நுட்ப உலகின் தூதன்" என்று புகழ்ந்து ஜெர்மனிய, இத்தாலிய பாசிஸ்ட்டுகளை கைடேக்கர் ஆதரித்துக் கொண்டு இருந்த சமயம் 1935 இல் ஜெர்மனியின் சிறந்த இலக்கியவாதியும் சிந்தனையாளருமான பெர்டேல் பெறெஸ்ட் பரிஸ் நகரில் முதலாவது உலக எழுத்தாளர் மாநாட்டைக் கூட்டி பாசிச எதிர்ப்பு முழு மனிதகுலத்தினதும் கடமையாகும் என்று பிரகடனப்படுத்தினார்.
இரண்டாம் உலகயுத்தம் முடிந்து ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கைடேக்கர் தம் பழைய பாசிச நிறத்தை மேற்கு ஜெர்மனியின் பிரதான ஜனநாயக சித்தாந்தவாதி என்ற கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டான். பெரும் நவீன தொழில்மயமாக்கலையும் இராணுவப் பெருக்கத்தையும் ஒப்புக்குக் கண்டித்த கைடேக்கர் கடைசிவரை கொம்யூனிச மற்றும் யூத விரோதியாகவே இருந்தான். தன் பாசிசக் கடந்தகாலம் யூதமக்களை அழிப்பதில் பங்கெடுத்தமை பற்றி ஒரு வார்த்தையோ ஒரு சிறு சுயவிமர்சனமோ, விமர்சனமோ செய்ததில்லை. மேற்கு ஜெர்மனிய ஏகாதிபத்தியதால் அவன் பெருமை கொண்ட ஜனநாயகச் சிந்தனையாளன். கொம்யூனிச சர்வாதிகாரத்துக்கு எதிரான பழம் பெரும் சித்தாந்தவாதி என உளமார உபசரிக்கப்ட்டான். கொம்யூனிஸ்ட்கட்சி தடை செய்யப்பட்ட நிலையிலும் கொம்யூனிஸ்டுகள் மேற்கு ஜெர்மனியில் அரசால் வேட்டை கொள்ளப்பட்ட நிலையிலும் கொம்யூனிஸ்டுகள் மட்டுமே கைடேக்கரையும் அவனின் பாசிசச் சிந்தனைகளையும் எதிர்த்து அம்பலப் படுத்திப் போராடினர். புதிய நாசிப் போக்குகள் கிட்லர், ரோசன் பேர்க் போன்றவர்களை மட்டுமல்ல தலைமை பாசிசச் சித்தாந்த மட்டங்களில் நீட்சே, கைடேக்கர் போன்றவர்களையும், தமது கோட்பாட்டு விரிவாக்க ஆசானாகவும் இன்றும் மதித்து வருவதையும், இரண்டாம் உலக யுத்தமுடிவின் பின்பான நியூரென்பேர்க் யுத்தக் குற்றவாளிகளின் மேலான விசாரணைகளின் போது பாசிசக் கருத்துக்களுக்கும் நீட்சேக்குமான தொடர்புகள் ஆராயப்பட்டு தீர்ப்புகளில் குறிக்கப்பட்டுள்ளமையும் அ.மார்க்ஸ் சார்ந்த பின்நவீனத்தவ கும்பல் மறைத்தே நீட்சேயை முன்னிலைப் படுத்துகின்றனர். பின்நவீனத்துவவாதிகளால் முன்னிலைப்படுத்தி பேசப்படும் சார்த்தர் கூட நாசிகளிடம் போர்க்கைதியாக இருந்த சமயம், நாசிகள் தம் சிந்தனைவியலாளர் என்ற அறிமுகத்துடன் கைடேக்கரையும் படிக்க அனுமதித்தனர். அதன் பின்பே கைடேக்கரில் சார்தருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
அ.மார்க்ஸ் அண்மைக் காலமாக நீட்சேயால் வாலாயம் செய்யப்ட்டுள்ளார். "நீட்சேயைப் படியுங்கள். விளங்குங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து கற்க முயலலாம்" என்று போதனை செய்யத் தொடங்கியுள்ளார். தன் வர்க்கங் கடந்த அரசியல் துறவற நிலைக்கு ஏற்ப நடுத்தர வர்க்க அரசியல் பறந்தடிப்புக்கு ஏற்ப சித்தாந்தப் பிச்சையிடுபவர்களை தேடியலைகின்றார். நீட்சே, கைடேக்கரின் பாசிசப் போக்குகளை மறைத்தும், திரித்தும், பேசாப் பொருளாக்கியும், எச்சரிக்கையாய் நகர்கின்றார். கட்டுடைப்புக்காகவே தாம் அவதரித்திருப்பதை ஈரேழுபதினான்கு உலகுக்கும் அறியத் தந்த இவர்கள், நீட்சே, கைடேக்கர் போன்றோரை புனிதப் படுத்தி சிம்மாசனம் தருவதும் தனிநபர் வழிபாட்டுக்கு நிகராக அவர்களை நினைந்து நினைந்து உருகி நிற்பதும் காணக் கிடைக்கிறது. இவர்கள் விமர்ச மற்றும் புகழாரம் சூட்டும் அம்பேத்கார் பிராமணியத்தின் நால்வருணப்பாகுபாட்டையும் மனுவையும் நீட்சேயின் மாமனித சிந்தனைக்கு சமமாக வைத்து விமர்சித்திருப்பதை பற்றி இவர்கள் பேச்சு மூச்சுக் காட்டியதில்லை. இந்தியப் பிராமணியத்தின் உயிர் மூச்சிலிருந்து பிறந்த நீட்சேயின் மாமனிதக் கருத்தியலின் பாசிச மூலத்தின் துணை கொண்டு இவர்கள் தலித்துகட்காவும் விளிம்பு மனிதர்கட்காகவும் போராடப் போகின்றார்களாம். அனைத்து அறிவுள்ள ஜீவராசிகளும் நம்பக்கடவீராக!
தத்துவத்துறையில் மிகவும் மோசமாய்ப் புரிந்து கொள்ளப்பட்ட தவறாக விளக்கம் கொடுக்கபட்டவராக நீட்சேயை கண்டு அ.மார்க்ஸ் வர்க்க பாசத்துடன் கண்கலங்கி நிற்கின்றார். வெளிப்படையான பாசிச ஆதரவுக் கருத்துக்காக நீட்சேயை நாசிகள் நீட்சேயின் சகோதரி எலிசபெத் ஊடாக சிலமாற்றங்கள் செய்தனர் என்பது உண்மை எனினும், பாசிசத்தின் பிறப்புக்குத் தேவையான தத்துவ அடிப்படையிலான கருத்தியல்களை நீட்சே பூரணமாய் உருவாக்கியிருந்தான். நீட்சேயை பாசிஸ்டுகள் திரித்து விட்டனர், தவறாக பயன்படுத்தி விட்டனர் என்ற ஓலம் அரை நூற்றாண்டுப் பழசு என்பதும், 1970களில் தோற்றம் பெற்ற மார்க்சியத்தில் இருந்து விலகிச் சென்ற இடதுசாரி சார்பு கொண்ட பூக்கோ, சர்த்தர் போன்றோரது நீட்சேயிச் சாய்வுகளும் அக்காலகட்டத்திய தொழிலாள வர்க்கமல்லாத உதிரி வர்க்க அரசியல் சாகசங்கட்கு பணி செய்து விட்டு மறைந்துவிட்டன. பலதளப் பார்வைக்கு போரிடுபவர்கள் இவ்வாறாக நீட்சேயை தமக்கு ஏற்ற விதத்தில் ஒற்றை வாசிப்புச் செய்து என்றென்றைக்குமான அகவயப்பட்ட ஆனந்தங்களை அடையவிரும்புகின்றனர். "எல்லாவற்றையும் பிரதியாகவே பார்க்க வேண்டும். எழுதியவனின் உள் நோக்கம் என்னவென்று ஆராய்ச்சி செய்யக் கூடாது" இது அ.மார்க்சின் அடுத்த அறிவியல் உலகமே பொறிந்து கொட்டத்தக்க கட்டுடைப்பு அப்படியாயின் கிட்லரின் "என்னுடைய போராட்டம் (அநin மயஅpக) என்ற பாசிச எழுத்தை ஆசிரியர் இறந்துவிட்டார் என்று கிட்லரைத் தப்பவிட்டுவிட்டு அவனின் பிரதியை தற்போது நிலவும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டவாசிப்பு முறைiயை நிராகரித்துவிட்டு புத்தம் புதிதாய் எம் சுயங்கட்கு ஏற்ப வாசித்துக் கொள்ள முடியுமா? கிட்லரை, பாசிசத்தை, மனித அழிவுகளை, இப்படி எற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபுகளை நம்பிக்கைகளை கட்டுடைத்துக் காடாத்தி விட்டு எம் சுயங்களை நிறைவு செய்து பிறவிப் பெரும் பயனை அடையலாமா? பின்பு பாசிசம் எமக்கு நீட்சே வழியில் பழக்கப்பட்டுவிடும். இந்திய மனுதர்மசாஸ்திரத்தையும் மனுவையும் மன்னித்து மறந்துவிட்டு நீட்சேயின் வாசிப்பைப் பின் தொடர்ந்து அவன் அதை வாசித்துக் காட்டிய வழியில் பிராமணனை மாமனிதனாக உயர் பிறப்பாய் தொன்று தொட்டு கனவு கண்டு வந்த இந்திய உத்தமனாய் கண்டுகளிக்கலாம். அ.மார்க்ஸ் நீட்சேயை பாதுகாப்பற்குத் தொடங்கினால் அவர் வந்துசேரும் இடம் பாசிசமாகவே இருக்கும்.
நீட்சேயின் குருவானவர்களில் ஒருவரான சோப்பன் கோவர் "எல்லாத் தீமைகட்கும் துயரங்கட்கும் விருப்புறுதியே காரணம்" என்ற சொன்னதை பழைய கருத்துமுதல்வாதச் சக்கையை எம்மைப் போன்ற யாருமற்ற அரசியல் அநாதைகட்கு ஊட்டிவிட அ.மார்க்ஸ் விடாக் கண்டானாக முயல்கின்றார். இதையே இந்தியாவில் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடத்திற்க்கு முன்பாக புத்தர் "ஆசையே சகல துக்கங்கட்கும் காரணம்" என்று சொல்லிருக்கிறார். தம் சொந்த தேசத்தின் கருத்துகளை அதன் வளர்ச்சிகளை பிராமணிய மரபுகட்கு வெளியே காணத் தெரியாதவர். ஐரோப்பாவில் சொல்லப்ட்டால் மட்டும், ஆங்கில மொழியூடாகப் புகுந்து வந்தால் மட்டும் அதை பக்தியொடு இவர்கள் பஜனை செய்வதற்குப் பெயர்தான் ஐரோப்பிய மையவாதம். மாக்சியத்திலே ஐரோப்பிய மையவாதத்தின் தாக்கம் உண்டு என்று ஐரோப்பிய சீர்திருத்தவாத இலக்கியங்களைப் படித்து விட்டு புறணியளந்தவர்கள் தாமே சுயமாய் சொந்தமாய்ப் ஐரோப்பிய மையவாதத்தின் பிடியில் ஆங்கில அதிகார மொழியின் வழி நடத்தலினுள் சிறைப்பட்டுள்ள பரிதாபத்தை காண கண்கள் போதவில்லை.
வரலாற்றின் புரட்சி எழுச்சிகளின் காலகட்டத்துக்கு ஏற்ற இறங்கட்கும், படிப்பினைக்கும் காத்திருக்க இந்த நடுத்தர வர்க்க ஏகாதிபத்திய கோட்பாட்டு நாட்டான் மைக்காறருக்கு பொழுது கிடையாது. சோசலிசம் இவர்கள் விரும்பிய வேகத்தில் எதிர்பார்த்த திசையில் இருந்து வரவில்லை. எனவே மார்க்சியத்தை விட்டோடி தம் உண்மையான வர்க்க இருப்பை காட்டிவிட்டார்கள். பின்நவீனத்தவத்தின் திரட்டல் வாதப் போக்குகளை வைத்தக் கொண்டு கனகாலத்துக்கு அரசியலற்ற தத்துவவித்தை காட்டமுடியாது என்பது இப்போது தெளிவாகிவிட்டது. எனவே இவர்கள் நீட்சே, கைடேக்கர், தலித்தியம், பெரியாரியம், அம்பேத்காரியம், மரணதண்டனை எதிர்ப்பு என அடிக்கடி கூடுவிட்டுக் கூடு பாயத் தொடங்கிவிட்டனர். இவர்களிடம் தரிசிக்க எதுவும் இல்லை. இருப்புத் தீர்ந்து விட்டது என்ற எண்ணம் புகலிடத்தின் பின் நவீனத்துவ சிறார்கள் மட்டத்தில் கூட எட்டத் தொடங்கிவிட்து.
இது எழுத உதவிய நூல்கள்
1.வருங்காலச் சமுதாயம்
2.அம்பேத்கார் தொகுதி -6
3.AUFBRECHEN -MAI- NR-4.2000
4.WELT AM SONNTAG (6.8.2000)
5.NEUES DEUTSCHLAND (24.8.2000)
6.ALICE MILLER DER GEMIEDENE SCHIISSEL -1988
7.SCHWARZ BUCH KAPITALISMUS -1999 ROBERT KURZ
தமிழரசன்- பெர்லின்
26.8.2000