சென்ற இதழில் தமிழீழ மக்கள் கட்சியின் பத்திரிகை மூன்றையும் ஆதாரமாக கொண்ட ஒரு விமர்சனத்தை பார்த்தோம். தமிழீழம் நாலாவது இதழ் தற்போது கிடைத்துள்ளதுடன், அவர்களின் கட்சித் திட்டமும் அதில் வெளியாகியுள்ளது.
தமிழ் மண்ணில் ஜனநாயகம் நெருக்கடிக்குள்ளாகி மாற்றுக் கருத்துத்தளம் மற்றும் மாற்று அமைப்புகள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், தமிழீழ மக்கள் கட்சியின் புதிய பிரகடனம் வெளியில் இருந்து வந்த போதிலும், மற்றுக் கருத்து தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாது. பலரின் எதிர் பார்ப்புகள், நம்பிக்கைகளை தூண்டக் கூடிய நிகழ்வாக இது இருக்கின்றது என்பதும் மறுக்க உண்மை.
ஆனால் இதுவே புதிய நம்பிக்கையீனத்தை உருவாக்கவும், அவசரகோலமாக பூர்சுவா மனப்பான்மையில் முன்வைக்கப்பட்ட திட்டம், கடந்த இயக்க வரலாற்றில் வெளிவந்த திட்டங்களை விட மிக மோசமான அரசியலைக் கொண்ட, புதிய அதே இயக்கங்களை உருவாக்க சபதம் பூண்டுள்ளதை கோடிட்டுக் காட்டுகின்றது.
கடந்த போராட்ட இயக்கங்கள் ஏன் தவறு இழைத்தன என்ற எந்த ஆய்வையும் முன்வைக்காது, இயக்கங்கள் பற்றிய மதிப்பீடு முன்வைக்காது, இலங்கையின் தமிழ், சிங்கள வர்க்கங்கள் பற்றிய மதிப்பீடு இன்றி, எதிரியை பொதுவாக சிங்கள அரசாக காட்டி முன்வைத்த திட்டம், மீண்டும் வரலாற்றை பின்நோக்கித் தள்ளும் முயற்சிதான். இந்த இடத்தில் இப்படி ஒரு அமைப்புக்கு பதில, புலிகளே இவர்களின் வர்க்க அரசியலை பிரதிநிதித்துவப் படுத்துவதால், அவர்களே மீண்டும் உருவாக்கும் அவசியம் தான் என்ன?
இனி இதை திட்டத்தில் ஆராய வேண்டியளவுக்கு கடந்த கால இயக்க திட்டங்கள் ஆய்வுக்குள்ளாகவில்லை என்பதால், ஒரு திட்டத்தை பூரணமாக ஆராய்வது அவசியமாகின்றது. இதன் மூலம் தான் இவர்களின் அரசியல் கோரிக்கைகள் எந்த வர்க்கத்துக்காக என்பதும், அதன் எல்லையும் தெளிவாகும். அத்துடன் மக்களுக்கான அரசியல் திட்டம் எதுவென்பதையும் கோடிட்டுக் காட்டும். அவர்களின் திட்டத்தைப் பார்ப்போம்.
"ஈழத் தமிழரது சமூக உருவாக்கத்தைப் பொறுத்தவரை, கொழும்பை மையமாகக் கொண்ட தரகு முதலாளிவர்க்கமும், உயர் அதிகார வர்க்க மேட்டுக்குடி பிரிவினரும் தவிர்ந்த ஏனைணய வர்க்கங்கள், சமூக சக்திகள் அனைத்தும் ஈழத்தமிழரது முழுமையான தேசிய விடுதலையை வேண்டி நிற்க்கின்றன."1 என திட்டம் மதிப்பிடுகின்றது. கொழும்பை மையமாகக் கொள்ளாத தரகு முதலாளித்துவ பிரிவுகளை, தேசியத்தின் நட்ப்புச் சக்கியாக மதிப்பிடும் போக்கு தேசியத்தை ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்டது. இலங்கை சமூக அமைப்பு என்ன என்ற கேள்வியில் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் காணும் அரசியல் தரகு முதலாளித்துவத்துடன் நட்பான நிலப்பிரபுத்துவத்தின் அரசியல், குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவத்துக்கே எதிரானது. தேசிய முதலாளித்துவத்தின் எதிரியாக இருப்பது தரகு முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவமமும் என்ற அரிவரிப் பாடத்தை மறுக்கும், தமிழீழ மக்கள் கட்சி தேசியத்தை ஏகாதிபத்தியத்தின் கால்களில் வைத்துவிட சபதம் ஏற்கின்றனர். இதில் எப்படி பாட்டாளி வர்க்க புரட்சிக்கு வழி அமைக்க முடியும். தேசிய முதலாளித்துவத்தின் எதிரிகளையே அடையாளம் காட்டி போராட முடியாதவர்கள் இம்மியளவுக்கு கூட பாட்டாளி வர்க்க கோரிக்கையை ஒருக்காலும் கோரவோ, பூர்த்தி செய்யவோ முடியாது. வராலாற்று ரீதியாக தேசியம் தேசிய முதலாளித்துவத்தின் பொருளாதார நலன்களை உள்ளடக்கியதே. இந்த அரிவரிப்பாடம் தெரியாத கட்சி பாட்டாளி வர்க்கமும் இதை வேண்டி நிற்க்கின்றது என வேறு பிரகடனம் செய்கின்றனர். பாட்டாளி வர்க்கம் கோருவது சுயநிர்ணயத்தையே ஓழிய முதலாளித்துவ சுரண்டல் தேசங்களை அல்ல. தேசங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில் அதை பூர்த்தி செய்யவும், அடுத்து தனது வர்க்க நலனில் ஊன்றி நிற்க்கவும் கோருகின்றது.
இதை எல்லாம் புறக்கணித்த தமிழீழ மக்கள் கட்சி தேசிய முதலாளித்துவ கோரிக்கையையும், பாட்டாளியின் கோரிக்கையையும் புறக்கணித்து கொழும்பு அல்லாத தரகு முதலாளித்துவத்திடமும், நிலப்பிரபுத்துவத்திடமும் தேசியத்தை தாரைவர்க்க மீண்டும் இயக்கங்கள் போல் அறை கூவுகின்றனர். அத்துடன் கொழும்பு தரகுமுதலாளித்துவப் பிரிவை குறைந்த பட்சம் எதிரியாகக் கூட பிரகடனம் செய்யவில்லை.
"..எமது தேசிய விடுதலையானது சாராம்சத்தில் ஒரு ஜனநாயகப் புரட்சியாகவே இருக்கும்."1 என்கின்றனர். வரலாற்று இயங்கியலின் வர்க்கப் போராட்டத்தை மறுத்த இக் கோரிக்கை எப்படி சாத்தியமாகும். சோவியத் புரட்சிக்கு பிந்திய ஏகாதிபத்திய சகாப்த்தத்தில் ஒரு முதாலாளித்துவ (ஜனநாயகப்) புரட்சி எப்படி வெல்லமுடியும்?, உயிர் வாழமுடியும்? என்பது அல்லவா கேள்வி. ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை ஏகாதிபத்தியம் சார்ந்து தரகு முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவமும் அழித்து ஒழிக்கும் சகாப்தத்தில் நாம் உள்ள போது, ஜனநாயகப் புரட்சியின் சக்திகள் எப்படி எதிர்த்து நிற்க முடியும். ஜனநாயக புரட்சியின் வர்க்க சக்திகள் தனது சொந்த வர்க்க நலன் சார்ந்த ஊசலாட்டத்துடன் தரகு முதலாளித்துவத்திடம் சரணடைவது மட்டுமே நிகழ்கின்றது. இந்த இடத்தில் பாட்டாளி வாக்க நலன்கள் மட்டுமே ஐனநாயக புரட்சின் கடமையை ஏற்றுக் கொள்வதால், தனது தலைமையில் ஊசாலாடும் பிரிவுகளை வென்று எடுத்து ஜனநாயக கடமைகளையும் பூர்த்தி செய்கின்றது.
ஆகவே ஜனநாயக புரட்சியை விரும்பும் பிரிவுக்கு முன்னால் இருப்பது இரண்டு பாதை மட்டுமே. ஒன்று புரட்சியை கைவிட்டு தரகு முதலாளித்துவத்திடம் சரணடைவது அல்லது புரட்சியின் கடமையை நிறைவு செய்ய பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் அணிதிரள்வதாகும். இதன் மூலம் ஜனநாயக கடமையையும் பூர்த்தி செய்வதாகும். இந்த இடத்தில் புலிகளிடம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமே நடத்திய ஒரு விவாதத்தில் இருந்து ஆராய்வது நன்று. இடது சாரிகள் இந்தியா உள்ளிட்ட அனைத்து எதிரிகளின் எதிரியாக இருப்பதால், ஏன் புலிகள் கூட்டு அமைக்க முடியாது எனக் கேட்டார். அப்போது அவர்கள் நாம் உலக வராலாறு அனைத்தும் படித்ததாயும், வலது இடது கூட்டில் இடதுகளே எப்போதும் வென்றதாக கூறி, தமக்கு அவை அவசியம் இல்லை எனக் கூறினர்.
இந்தக் கூற்றின் பின் உலகில் வலது இடது ஐக்கிய முன்னணியில் எப்போதும் வலதுகள் வென்றதையும், விதிவிலக்காக ஒரு சிலவற்றில் மட்டுமே ( நீண்ட போக்கில் இவை தற்காலிகமாக) இடதுகள் வென்றதையும், இன்று வரலாற்றில் இடதுகள் எங்கும் தோற்கடிக்கப்பட்டதையும் காண்கின்றோம். ஐக்கியப்பட்ட போராட்டத்தில் இடதுக்குள்ளேயே வலதும், வலதுக்குள்ளேயே இடதும் காணப்படுவதும், வர்க்கப் போராட்டம் தொடர்வதால் வெற்றி தோல்வி நிரந்தரமாகி விடுவதில்லை.
இங்கு பிரச்சனை வலது இடது என்பதில் தேசியத்தை பாதுகாப்பது எது என்பதே ஓழிய, யார் வெற்றி தோல்வியைச் சந்திக்கின்றனர் என்பது அல்ல. இடது அல்லாத தேசியம் வலது சார்ந்து ஏகாதிபத்தியத்திடம் சரணடைவாகவே இருக்கும். அதாவது நாட்டு எல்லைப் பிரிப்பை தேசியமாக காண்பதும், அதை உலகின் ஏதாவது ஏகாதிபத்திய நலன் சார்ந்து இருத்தலுமே தேசியம் எனப் புரிந்து கொள்ளும் வலது அரசியலின் ஆதிக்கமே, இடதை அழிக்கின்றது. வலதில் உள்ள இடது வெளிப்படில், இடதை அழிப்பதற்க்கு பதில் ஐக்கியத்தை முன்வைக்கும். வலதில் உள்ள வலது தரகு முதலளித்துவத்தையும், வலதில் உள்ள இடது தேசிய முதலாளித்துவத்தையும், எப்போதும் பிரதிபலிக்கும்.
இங்கு தமிழீழ மக்கள் கட்சி வலதில் உள்ள வலதாக உள்ளதால் தான் எதிரியையும், நண்பனையும் அடையாளம் காட்டாது, பொதுவில் ஜனநாயக கோரிக்கையையும், அதேபோல் சோசலிசம் பற்றியும் கூறுகின்றனர். சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் கோருவதாகும். அந்த கோரிக்கையை தமிழீழ மக்கள் கட்சி கோராத நிலையில், போலித்தனத்தில் மக்களை ஏமாற்ற சோசலிச வார்த்தை அவசியமாகின்றது. எதிரியை அடையாளம் காட்டாததும், வர்க்க அரசியலை தெளிவாக்காத ஜனநாயக கடமை, உண்மையில் எல்லைப் பிரிப்புக்கு அப்பால் எதையும் கோராத பிற்போக்கு தேசியமாகும்.
அடுத்த வரிகளை ஆராய்வோம். "..பலநாடுகள் போராடடிப் பெற்ற அரசியல் சுதந்திரம்"1 ஆனது எதார்த்தத்தில் எவ்வித அர்த்தமும் அற்றதாகியுள்ளது"1 என்று இன்றைய நவகாலனித்துவ சூழலை ஓட்டிச் சொல்லுகின்றனர். போராடிப் பெறாத சுதந்திர நாடுகளும், போராடிப் பெற்ற சுத்நிரமான நாடுகளும் அல்லவா உருவானது. இங்கு "அரசியல் சுதந்திரம்"1 என்பது எந்த வர்க்கத்தின் சுதந்திரம். பாட்டாளி வர்க்கத்தினதோ, தேசிய முதலாளித்துவத்தினதோ "அரசியல் சுதந்திரத்தை"1 எந்த அரசுகளும் போராடியோ, அமைதியாகவோ பெற்றது கிடையாது. விதிவிலக்காக கிடைத்தவை அனைத்தும், பாட்டாளி வர்க்க தலைமையில் திட்டவட்டமாக ஒரு உள்நாட்டு யுத்தத்தின் ஊடாக, எதிரியை அடக்கி அதன் மேல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி பெற்றவையாகும். மற்றவை எல்லாம் காலனிய ஏகாதிபத்தியங்களிடம் பேரம் பேசியும், மற்றைய ஏகாதிபத்திய தயவில் ஒரு ஏகாதிபத்தியத்தை சாந்தும் பெற்றதன் ஊடாக, உள்ளடகத்தில் ஏகாதிபத்தியத்தின் நலன்களை பாதுகாக்க பெறப்பட்ட பொம்மை ஆட்சிகளே. இந்த அரசுகள் நிலப்பிரபுத்துவ, தரகு முதலாளித்துவ நலன்களைப் பாதுகாக்கப் பெற்ற "அரசியல் சுதந்திரம்" தரகு அரசுகளே. மக்களின் நலன் சார்ந்து எந்த "அரசியல் சுதந்திரத்தை"1, வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க தலைமையில் வென்று எடுக்காத, எந்த நாடும், உண்மையான சுதந்திரத்தை பெற்றுவிடவில்லை. ஆகவே "அரசியல் சுதந்திரம்"1 என்பது, அரசியல் மோசடியுடன் தாம் போராடப் போகும் தேசிய எதிர்ப்பு (தேசியமுதலாளித்துவ, பாட்டாளி வர்க்க எதிர்ப்பு) அரசியலை நியாயப்படுத்த வைக்கும் எடுகோள்கள் தான். "1948 இல் பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய போது...."1 என்கிற வார்த்தையில் மோசடி மேலும் தெளிவாக்குவதைப் பார்ப்போம். பிரித்தானியர் ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமா! இல்லையே, அவர்கள் காலனித்துவவாதிகள் அல்லவா. இதற்க்கு பின் ஏகாதிபத்திய நலன்கள் இருந்தல்லவா! ஆக்கிரமிப்பாளன் என்பது எதோ ஒரு நோக்கத்தில் வந்து, அதே வேகத்தில் மீண்டது போன்ற விளக்கங்களும் இதற்குள் முன் வைக்கப்படுகின்றது. மாறாக இவர்கள் பல பத்து வருடங்கள் ஆண்டு எம் மண்ணின் வளங்களை கொள்ளையடித்ததுடன், காலனித்துவ கூறுகளையும் பண்பாடு கலாச்சார தளத்திலும் வளர்த்தெடுத்தனர். எந்தப் போராட்டத்தின் ஊடாகவும் காலனித்துவத்தை கைவிட்டுச் செல்லாது, தாம் உருவாக்கிய காலனித்துவ விசுவாசிகளிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறிய போது, என்றும் தமது காலனித்துவ நலன்களை இழந்தது கிடையாது. ஆக்கிரமிப்பாளன் என்பதன் ஊடாக பிரித்தானிய நலன்கள் தொடர்ச்சியாக பாதுகாத்த வரலாற்றை மறுக்கும் மோசடி அபத்தமானது. இதன் தொடாச்சியில் கறுப்பு ஆட்சியை ஓட்டி கூறுவதைப் பாப்போம். "பல இன, மொழி, மத, கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் பிரிவினரை சமத்துவமாக ஒன்றிணைத்து அவர்களை "இலங்கையர்" என்ற ஒரே தேசமாக கட்டமைக்கும் அரசியல் கடமை இத்தலைமைக்கு இருந்தது."1 என்கின்றனர் தமிழீழ மக்கள் கட்சியினர். தாம் அதில் இருந்து இருப்பின் அதை செய்திருப்போம் என்பதையே சொல்வதன் ஊடாக, தமது அரசியல் வழியை நியாயப்படுத்துகின்றனர்.
வெள்ளைக்காரன் கொடுத்த ஆட்சியை பெற்றவர்கள் பாட்டாளி வர்க்கம் அல்லது தேசிய முதலாளித்துவ பிரிவுகள் என்று நினைப்பது அல்லது பெற்றவர்கள் தேசியத் தன்மை கொண்ட தரகு நிலப்பிரபுத்துவ பிரிவுகள் இப்படி ஓன்றுபடுத்தியிருக்க முடியும் என அப்பாவிகள் தான் விளக்கமுடியும். ஆனால் தமிழீழ மக்கள் கட்சி கூறுகின்றது என்றால் அதாவது இனச் சகிப்புத் தன்மையை சுயநிர்ணயம் அல்லாத வழியிலும் தீர்த்து இருக்க முடியும் என கூறுபவர்கள், எப்படி இன்று நடக்கும் யுத்தத்தை புலிகளை விட மேலும் சிறப்பாக செய்யமுடியும். புலிகள் கூட 1948இல் பெற்ற சுதந்திரத்தை, இவர்களை விட சரியாக இல்லாவிட்டாலும் நன்றாக அம்பலப்படுத்துகின்றனர். பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரத்தில் ஆரம்பம் முதலே, அவர்களால் வளர்க்கப்பட்ட தேசியத் தலைவர்களை உள்வாங்கிய படியாலேயே, பிரித்தானியா அவர்கள் கையில் ஆட்சி அதிகாரத்தை அமைதியாக ஒப்படைத்தனர். சந்திரிக்கா ஆட்சியில் வந்தால் தேசிய இனப் பிரச்சனையை தீர்ப்பார் என்று கூறி பெரும் பகுதி சோரம் போனது போல், தமிழீழ மக்கள் கட்சி 1948லேயே சோரம் போக கோட்பாட்டு விளக்கம் கொடுக்கின்றனர். அத்துடன் இவர்கள் "....சிங்கள மக்களை மட்டும் சிங்கள தேசமாக கட்டமைத்தது..."1 என்கின்றனர். இந்த வாதம் தேசங்கள் பற்றிய உண்மையை மறுப்பதாகும். சிங்கள தேசம் ஒன்றைக் கட்டி அமைத்திருப்பின் அதுவே ஏகாதிபத்திய எதிர்ப்பை கொண்டிருக்கும். உண்மையில் சிங்கள தேசம் கட்டியமைக்கப்பட்டுள்ளதா? இல்லையே மாறாக சிங்கள இனவாதமே கட்டமைக்கப்பட்டுள்ளது. சிங்கள தேசம் ஒன்றை கட்டியமைக்க வேண்டும் எனின், அது குறைந்த பட்சம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கத்தை நட்பாக கொண்டு இருக்க வேண்டும். இது இருப்பின் தமிழ் தேசமும் இருக்கவேண்டும். இரண்டில் ஒன்று இன்றி ஒரு தேசமும் இருக்கவும் முடியாது கட்டமைக்கவும் முடியாது. ஒன்று இருப்பின் மற்றது அதன் நிபந்தனையாகும்.
இருப்பது சிங்கள இனவாதமும், இதற்கு எதிரான போராட்டம் தமிழ் இனவாதமா அல்லது தமிழ் தேசியமா என்பதே அடிப்படைக் கேள்வியாகும். புலிகளின் தமிழ் இனவாதம் எப்படி உள்ளதோ, அதற்கு சற்று குறையாத இனவாதம் தான் "சிங்கள தேசம்"1 என்ற வரையறையை வைக்க முடிகின்றது. அதாவது எல்லைப் பிரிப்புகள், ஆட்சியின் இனத்தன்மைகளை கொண்டு ஆட்சி வடிவத்தை, தேசமாக பார்க்கும் போக்கு தமிழ் இனவாதமாகும். தமிழீழம் பத்திரிகை 14 இல் "தேசம் மீட்கப்படுகிறது"3 என்ற ஆணையிரவு தாக்கதலை ஓட்டிய கட்டுரை "தேசத்தின்" உள்ளடகத்தை வெறும் எல்லைப் பிரிப்பாகவே வெளிப்படுத்துகின்றது. தமிழீழம் பத்திரிகை நாலில், ஆட்சியில் இருந்து மண்டேலா விட்டு ஒதுங்கியதை, ஜனநாயகப்பண்பாக காட்டுவது இதன் அரசியல் வழியில்தான். ஜனநாயகம் என்பது எந்த வர்க்கத்துக்கு, எப்படி போராடி, தனது போராட்டத்தை தொடர்வது என்பது மட்டுமே அடிப்படையாகும். இல்லாத எடுகோளை ஜனநாயகமாக காட்டுவதும், சிங்கள தேசம் என்ற வரையறைகளும், மக்களுக்கான அரசியல் வழியில் இருந்து எழுபவை அல்ல.
அடுத்து திட்டத்தில் பார்ப்போம்."..."தமிழீழ ஜனநாயக் குடியரசை" நிறுவுவதே எமது குறைந்தபட்சத் திட்டம் என எமது கட்சி பிரகடனம் செய்கிறது."1 என்கின்றர். ஒரு கட்சி தனது உயர்ந்த பட்சத் திட்டத்தையல்லவா முன்வைக்க வேண்டும். குறைந்த பட்ச திட்டத்தில் அணிதிரளும் மக்கள், ஆட்சி அமைத்தவுடன் அதைத் தாண்ட ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்கள். உடனடியாகவே உள்நாட்டு யுத்தமல்லவா தமிழீழ ஜனநாயக் குடியரசில் ஏற்படும். எப்போதும் கட்சி திட்டம் என்பது உயர்ந்த பட்ச திட்டமாக, அதன் அனைத்துப் பகுதியும் பகிரங்கமாக அணிகளுக்குள்ளும், நிலைமையை பொறுத்து மக்களுக்குள்ளும் இருக்க வேண்டும். இங்கு நிலமை என்பது விதிவிலக்கானது. இந்த விதிவிலக்கு தற்காலிகமானது. திட்டம் எப்போதும் பகிரங்கமாக மக்கள் முன் வைத்து, அதன் அடிப்படையில் அணிதிரட்டியிருக்கவேண்டும். சொந்த அணிக்கே குறைந்த பட்சம் தான் என்றால், அக்கட்சியின் ஜனநாயக மத்தியத்துவம் மறுக்கப்பட்ட சதிக்குழு ஒன்று, திட்டத்துக்குள் உயர்ந்த பட்ச திட்டத்துடன் திட்டமிடுகின்றதா? கட்சி திட்டம் தனது உயர்ந்த பட்ச திட்டத்தால் திட்டவட்டமாக ஜனநாயக மத்தியத்துவத்தை கொண்டிருக்க வேண்டும். இல்லாது மறுக்கப்பட்ட கட்சி, ஜனநாயகத்தை திட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தபடிதான் தன்னை அடையாளம் காட்டுகின்றது. இதில் தமிழீழ மக்கள் கட்சி தனது குறைந்த பட்ச திட்டத்தை அணிகளுக்கு வைப்பதால், உயர்ந்த பட்சத் திட்டம் மூலம் திட்ட அணிகளுககே ஆரம்ப முதல் ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்த, ஐனநாயக விரோத அமைப்பாகும்.
தொடர்ந்து தமிழீழ மக்கள் கட்சி "தேசிய விடுதலையானது தேசிய அடக்கு முறைக்கு முடிவு கட்டுகிறது. விரிவான ஜனநாயகத்தை மக்கள் திரளுக்குப் பெற்றுத் தருகிறது...." என்கின்றனர். தேசிய விடுதலை என்றால் என்ன? தேசிய விடுதலை பெற்ற நாடுகளில் விரிவான ஜனநாயகத்தை மக்கள் திரள் பெற்றதா? தேசிய அடக்குமுறையை கைவிட்டதா? என்ற அடிப்படைக் கேள்விகள் மீது நாம் ஆராய்வோம்.
தேசிய அடக்குமுறையை சிங்கள இன அடக்குமுறையாக பார்ப்பதும், தேச விடுதலையை எல்லை பிரிப்பாக பார்ப்பதும், ஜனநாயகத்தை தமிழ் ஆட்சியூடாக பார்ப்பதில் இருந்து "தமிழீழ மக்கள் கட்சி" தன்னை அடையாளம் காட்டி நிற்கும் போது, இத் தேசியம் ஏகாதிபத்திய தரகு தேசியத்தை நோக்கி காலெடுத்து வைக்கின்றனர். தேசம் என்பது தேசத்தின் சொந்த பொருளாதார, பண்பாட்டு, கலாச்சாரம் மீது கட்டமைப்பதாகும். இதை, மறுத்த, பார்க்க மறுத்த எந்த வாதங்களும், போராட்டங்களும் தேசியமாக இருப்பதில்லை. இது தேசத்தை உருவாக்குவதில்லை. இந்த அரிவரிப் பாடத்தை கைவிட்ட யாரும் தேசியவாதியாக கூட இருப்பதில்லை. மாறாக ஏகாதிபத்திய கைக்கூலிகளாக இருக்கின்றனர். தமிழீழம் பிரிகின்ற ஒரு நிலையில், தமிழர் ஆளுகின்ற ஒரு ஆட்சியில் தேசியம் இருக்க முடியுமா? இருக்க முடியும் எனின் எப்படி? இல்லை எனின் எப்படி? என்ற அடிப்படையான கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழர் ஆள்கின்ற பிரிந்த தமிழீழம் எப்படி தேச பொருளாதாரத்தை கட்டமைக்கும்? உலகில் உலகமயமாதல் அனைத்தையும் விழுங்கி செரித்து ஏப்பமிட்டு பிரமாண்டமான சக்தியாக வளர்ச்சி பெற்று வரும் உலக வரலாற்றில், தேசம் எப்படி சுயேட்சையாக இருக்கும். ஏகாதிபத்திய உதவி, தயவில் வாழும் ஒரு நாட்டில், கட்டமைக்கப்படும் எந்த பொருளாதார வடிவமும், தேசியத் தன்மை கொண்டவையல்ல. ஏகாதிபத்திய உதவி, ஏகாதிபத்திய மூலதனம் தேசத்தின் மீது கொள்ளையடித்துச் செல்லும் ஒரே நோக்கில் தேசத்தை சூறையாடவே செய்கின்றது. சூறையாடுவதை ஏற்றுக் கொள்ளும், எல்லைப்பிரிப்பை அடிப்படையாக கொண்ட தமிழர் ஆட்சி உள்ளகத்தில் தேசமாக, தேசியமாக இருப்பதில்லை. அது தரகு முதலாளித்துவமாக, ஏகாதிபத்திய கைக்கூலி தேசிய எதிர்ப்பு அரசியலாக இருக்கின்றது. இது சொந்த நாட்டு தேசியத்தை எதிர்த்து நசுக்குகின்றது. இது பொருளாதார துறையிலும், அதை முன்வைத்து போராடும் தேசிய முதலாளித்துவ, பாட்டாளி வர்க்க சக்திகளை ஒட்ட நசுக்கி ஒடுக்குகின்றது.
இங்கு "விரிவான ஜனநாயகம்" என்பது ஏகாதிபத்திய கைக்கூலிக்கே ஒழிய, சொந்த தேசிய மற்றும் பாட்டாளி வர்க்கத்துக்கு அல்ல என்பது தெட்டத்தெளிவானது. அத்துடன் ஜனநாயகம் என்பது உள்ளக்கத்தில் மறுப்பை அடிப்படையாக கொண்டது. மறுக்கப்படும் ஒரு பிரிவு உள்ளவரை தான் ஜனநாயகம் இருப்பது யதார்த்த இயங்கியலாகும். "விரிவான ஜனநாயகம்" யாருக்கு மறுப்பது என்பது, அரசியல் ரீதியாக பாட்டாளி மற்றும் தேசிய முதலாளித்துவ பிரிவுக்கேயாகும். அனைவருக்கும் ஜனநாயகம் என்றதன் அரசியல் உள்ளடக்கம் இது தான்.
சிங்கள இனவாதத்தில் இருந்து விடுதலை என்பது, "தேசிய அடக்குமுறைக்கு முடிவு"1 கட்டுவதில்லை. மாறாக தேசிய ஒடுக்குமுறை நேரடியாக ஏகாதிபத்தியம் சார்ந்து நிலவுவதே எஞ்சும். இங்கு "விரிவான ஜனநாயகத்தை மக்கள் திரளுக்குப் பெற்றுத் தருகிறது" என்பது உண்மையில் தரகு முதலாளித்துவத்துக்கு மட்டுமே சாத்தியமானது. கிடைக்கும் விடுதலை சுரண்டலை ஒழிப்பதில்லை. ஏகாதிபத்திய தரகுதனத்தை அடிப்படையாக கொண்டே தேசம் நிர்மாணிக்கப்படுகின்றது. கொழும்பை மையமாக கொண்ட தரகு முதலாளிகளை மட்டும் எதிரியாக பிரகடனம் செய்யும் போதே, கொழும்பு அல்லாத பிரிவுகளின் தரகு தனத்தை அடிப்படையாக கொண்டே தேசம் கட்டமைக்கப்படும் என்பதையே தெளிவாக்கின்றனர்.
கட்சி பற்றிய விளக்கத்தை பார்ப்போம். ".. "புரட்சிகரக் கட்சி" என்பது, வரலாற்றில் மிகவும் முன்னேறிய கோட்பாடாகிய மார்க்சியத்தால் வழிநடத்தப்படுகின்றது, அடக்கப்படுகின்ற மற்றும் விளிம்புநிலை மக்களது நலன்களை முதன்மையாகக் கொண்டதும், அடக்கப்படும் - விளிம்புநிலை - ஜனநாயக மக்கட் பிரிவினால் தலைமை தாங்கப்படுவதுமான கட்சி என்றே அர்த்தம்."1 என்ற விளக்கம் மார்க்சியத்தினை திரித்து, தமது தரகுதனத்தக்கு இசைவாக விளக்குவதாகும்.
கட்சி என்பது மார்க்சியத்தால் வழிநடத்தப்படுவதில்லை. பாட்டாளி வர்க்கத்தால் வழிநடத்தப்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் தலைமை, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை நிறுவவும், வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் நடைமுறைப் போராட்டத்தில் உருவாகின்றது. இந்த பாட்டாளி வர்க்கத்துக்கு, மார்க்சியம் நடைமுறை ரீதியாக வழிகாட்டும் ஒரு கோட்பாடாகுமே ஒழிய, வழிநடத்தும் வழிகாட்டியல்ல. வழிகாட்டி பாட்டாளி வர்க்கத் தலைமையேயாகும். இங்கு மார்க்சியம் முன்னேறிய கோட்பாடாகி விடவில்லை. மாறாக மார்க்சியம் சமூக விஞ்ஞானமாக சமுதாயத்தை முரணின்றி விளக்குகின்றது. அதாவது பலமுன்னேறிய கோட்பாடுகளில் மார்க்சியம் ஒன்று அல்ல. மாறாக மார்க்சியம் சமூக இயக்கத்தை முரணின்றி விளக்கும் ஒரு இயற்கை இயங்கியலாக, பாட்டாளி வர்க்கத்துக்கு நடைமுறை ரீதியாக வழிகாட்டும் தத்துவமாகும். இங்கு பாட்டாளி வர்க்கத் தலைமை மார்க்சியத்தை திரித்து விளக்குவது போல் "அடக்கப்படுகின்ற மற்றும் விளிம்புநிலை மக்களது நலன்களை முதன்மையாகக் கொண்டதும், அடக்கப்படும் - விளிம்புநிலை - ஜனநாயக மக்கட்பிரிவினால் தலைமை தாங்கப்படுவதுமான" அல்ல. அடக்கப்பட்ட, விளிம்பு நிலை மற்றும் ஜனநாயகப் பிரிவுகள் வர்க்கத் தன்மை கொண்டவர்கள். மார்க்சியம் வர்க்கம் கடந்து தனது கோட்பாட்டை உருவாக்கியதில்லை. பாட்டாளி வர்க்கம் வர்க்கம் கடந்து தன்னை உருவாக்கியதில்லை. மார்க்சியத்தினதும், பாட்டாளி வர்க்கத்தினதும் அடிப்படை அரசியல் உள்ளடக்கம் வர்க்கமாகும். சமுதாய ரீதியாக வர்க்க முரண்பாட்டில் சிக்கி திணறும் பல்வேறு வர்க்கப்பிரிவுகளின், தலைமையாக பாட்டாளி வர்க்கமோ அதன் கட்சியோ இருப்பதில்லை. பாட்டாளி வர்க்கத்தின் கட்சி எப்போதும் தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி மட்டுமே. இதைத் தான் மார்க்ஸ் தனது பெயரில் நிறுவிய மார்க்சியத்தின் சாராம்சமாக முன்வைத்தார். வர்க்கம் கடந்த கோட்பாட்டு விளக்கமோ, அணிதிரட்டலோ, தலைமையோ அடிப்படையில் இன்று ஏகாதிபத்திய தொங்கு சதைகள் தான். பல்வேறு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் பிரிவின் மீது மார்க்சியம் ஜனநாயக உள்ளடக்கத்தில் முன்னெடுத்துப் போராடுவதுடன், நடைபெறும் போராட்டங்களை ஆதரித்து நிற்க்கின்றது. அதற்காக அந்த பிரிவுகளில் உள்ள பல்வேறு வர்க்கங்களின் கதம்பமாக தனது கட்சியை சீரழித்துவிடுவதில்லை.
அடக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலையில் இன்று கணிசமான தமிழ் தரகு முதலாளிகள், நிலப்பிரபுகள், மதப் பிரிவுகள் என்ற எண்ணற்ற வர்க்கப் பிரிவுகள் இனவாதத்தை முகம் கொள்வதால், கட்சியில் அவர்களின் தலைமையையும் ஏற்றுக் கொள்ள, மார்க்சியத்தை திரித்து விளக்குவதன் நோக்கம், அவர்களுக்கான தரகு அரசியல் தான்.
சமுதாயத்தில் வேறுபட்ட வர்க்கங்கள், வேறுபட்ட சமுதாய குறிக்கோளுடன் போராடுகின்ற போது, சில நோக்கத்தை வந்தடைய ஐக்கிய முன்னணி சாத்தியமானதே. இந்த ஐக்கிய முன்னணி கூட பல வடிவங்களில் ஏற்படக் கூடியவை. ஆனால் இது ஒரு பாட்டாளி வர்க்க கட்சியினுள் சாத்தியமில்லை. கட்சி என்பது எப்போதும் ஒரு வர்க்கத்தின் கட்சி மட்டும் தான். பல வர்க்கத்தின் கட்சி என்பது உலகில் என்றும் உருவானதில்லை, உருவாகப் போவதில்லை. அடக்கப்பட்ட, விளிம்பு நிலை மற்றும் முற்போக்குகள் ஒன்றிணைந்து மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டால், அதன் வர்க்கத் தன்மை என்ன? நிச்சயமாக பாட்டாளி வர்க்கத்தின் கட்சியாக இருக்கமாட்டாது. பாட்டாளி அல்லாத சுரண்டும் வர்க்க கட்சியாகவே இருக்கும். உலகில் சுரண்டலுக்கு எதிராக போராடும் ஒரேயொரு வர்க்க கட்சி பாட்டாளி வர்க்கம் மட்டுமேயாகும். இதற்குள் விளிம்பு, அடக்கப்பட்ட மற்றும் முற்போக்கு எல்லாம் இணைந்தால், அது சுரண்டலை ஏற்றுக் கொள்ளும் ஒரு முதலாளித்துவ கட்சியாகும்.
அடுத்து ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, போராட்ட கடமையை பெண்களிடம் கைவிட்டுச் செல்லும் பிதற்றலைப் பார்ப்போம். ".. ஆணாதிக்க முறைமையின் குறிப்பான போராட்டங்களை பெண்களே தலைமை தாங்கி நடாத்த வேண்டும்."1 என்கின்றனர். பெண்களை அடிமைப்படுத்தியது ஆண்களா?, ஆணாதிக்கமா? இந்தியாவின் சாதிக் கொடுமையையும், மத அடக்குமுறையையும் ஒழிக்க யாரை எதிர்த்துப் போராட வேண்டும் பார்ப்பானனையா? அல்லது பார்ப்பனியத் தத்துவத்தையா? ஒரு சமூக போக்கினை மாற்ற தனி மனிதர்கள், ஒரு பிரிவு மக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது ஒரு தனி மனிதன், ஒரு பிரிவு மக்கள் கூட்டம் போராடுவதன் மூலம் மாற்றிவிட முடியும் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. அதாவது மனிதர்களை மாற்றுவது என்ற அரசியல், கருத்துமுதல் வாதமாகும். தனிமனிதர்கள் மாறுவதால் சமூகம் மாறிவிடுவதில்லை. இது போல் தனி மனிதன் போராடுவதால் சமூகம் மாறிவிடுவதில்லை. தனி மனிதர்கள் சமூக இயக்கத்தில் பங்களிப்பு வழங்குபவர்களாகவே இருக்கின்றனர். சமூக இயக்கம் தான் சமூகத்தை மாற்றுகின்றது. இங்கு தனிமனிதர்கள் பங்களிக்கின்றனர்.
சமூக இயக்கமும் அதன் பிரதிபலிப்பும் பொருளாதார அடிக்கட்டுமானம் மீது உருவாகின்றது. ஆணாதிக்கத்தை எடுப்பின் அது தனிச் சொத்துரிமை அமைப்பின் ஒட்டுண்ணியாகும். இதை பெண்கள் வர்க்கம் கடந்து போராடுவதன் மூலம் ஒழித்து விடமுடியாது. அதுபோல் பெண்கள் தனித்து, வர்க்கத் தன்மை கொண்டும் ஒழித்துவிட முடியாது. சமுதாயம் என்பது பெண்களை மட்டும் கொண்டவையல்ல. அது போல் ஆணாதிக்கம் பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயேற்ட்சையானது அல்ல. ஆணாதிக்கம் ஆண்கள் மற்றும் சமூக பொருளாதார விளைவுகளில் இருந்து தனித்துவமானவையோ, சுயேட்சையானவையோ அல்ல. சுயேட்சையற்ற ஆணாதிக்க இயக்கம் எதனுடன் பின்னிப் பிணைந்துள்ளதோ, அவற்றுடன் இணைத்தே, ஆணாதிக்கத்தை வேர் அறுக்க முடியும். அடிமைப்படுத்திய வடிவங்களில் இருந்து தனித்துவமாக, அதற்கு புறம்பாக கோரும் மாற்றங்கள், உண்மையில் ஆணாதிக்கத்துக்கு நிகரான வகையில், பெண் ஆணாதிக்க தன்மையை அடைவதாகும். ஆணாதிக்கத்துக்கு எதிரான குறிப்பான போராட்டத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முன்னெடுக்க முடியும். இதை பெண்களுக்கு குத்தகைக்கு வழங்குவது என்பது, வழங்குபவர்களும், வழங்க விளக்குபவர்களும், கோருபவர்களும் தமது ஆணாதிக்க வடிவத்தை பாதுகாத்துக் கொள்ளவே செய்கின்றனர். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராட முடியும். அது போல் ஆண்கள் மட்டும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதில்லை பெண்களும் வெளிப்படுத்துகின்றனர். எனவே போராட்டம் ஆணாதிக்கத்தை எதிர்த்து, பால் வேறுபாடு கடந்து போராட வேண்டும். பெண்கள் தனித்துவமாக தமக்கு மீதான ஒடுக்குமுறையை விவாதிப்பது, போராடுவது எல்லாம், பாட்டாளி வர்க்கத் தலைமையில் (இங்கு பாட்டாளி வர்க்க தலைமை என்பது, ஆண் பெண் வேற்றுமையைக் கடந்தது) போராட்டத்தை விரிவாக்கி, பரந்த தளத்துக்கு எடுத்துச் சென்று வெகுசன நடைமுறை அரசியல் வழகாட்டலுக்காகவே ஒழிய, ஆணில் இருந்தும் சமூக பொருளாதார விளைவுகளில் இருந்தும் விலகியிருக்கவல்ல.
சிங்கள மக்கள் பற்றி தமிழ் இனவாதிகள் கூறுவதைப் பார்ப்போம் "சிங்கள உழைக்கும் மற்றும் விளிம்புநிலை மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த சிங்களப் பேரினவாத சித்தாந்தத்திற்கு பலியாகி இருக்கின்றனர்."1 யார் கூறுகின்றனர் "தமிழீழம்" என்ற பெயரில் பத்திரிகையில் "தமிழீழ மக்கள் கட்சி"யின் பெயரில் கூறுகின்றனர். ஏன் சிங்கள மக்களை மட்டும் கூறுவதன் உள் நோக்கம் என்ன? சொந்த இனவாததை பூச்சு இடத்தான். தமிழ் மக்கள் கூட தமிழ் இனவாதத்தின் சித்தாந்தத்துக்கு பலியாகவில்லையா? சிங்கள இனவாத அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பில், தமிழ் மக்கள் அதை எதிர்த்து போராடும் போது மற்றைய இனம் மீது ஜனநாயக பூர்வமான அணுகுமுறையை கையாண்டது இல்லை. சிங்கள இனவாத இராணுவம் எதை செய்ததோ, அதையே தமிழ் இனவாத போராட்டக் குழுக்கள் செய்தன. சிங்கள இனவாத நடத்தைகளை ஆதரித்த சிங்கள மக்கள் போல், தமிழ் மக்களும் தமிழ் இனவாதத்தை ஆதரித்தனர், ஆதரிக்கின்றனர். குறிப்பாக தமிழ் இனவாதம் நடத்திய அத்து மீறல்கள் தான், சிங்கள மக்களை சிங்கள இனவாதத்துக்குள் தள்ளிச் சென்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதை மூடி மறைக்க சிங்கள மக்களை குற்றம் சாட்டுவது கேவலமானது. இது அப்பாவி சிங்கள மக்களுக்கு செய்த அட்டூளியங்களை நியாயப்படுத்துவதாகும். சிங்கள மக்களை நட்பு சக்தியாக அணுகி, அவர்களின் ஆதாரவைப் பெற்று யார் போராடினர்! மாறாக, எதிரியாக காட்டி போராடி சிதைந்த வராலாற்றை மூடிமறைத்தபடி, அவர்கள் இனவாதத்துக்கு பலியாகிப் போனார்கள் என்பது அரைவேட்டுத்தனமாகும்.
"முழு உலகையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்ட வர முனையும் ஏகாதிபத்திய மற்றும் நவகொலனித்துவ சக்திகளுக்கும் தென்னாசியாவின் பிராந்திய வல்லரசான இந்திய அரசுக்கும் இடையில் நடைபெறும் பலப் பரீட்சை எமது அரசியலில் கலப்பதே புவிசார் அரசியல் சாராம்சமாகும். இவ் ஆதிக்க சக்திகளுக்கு இடையே குறிப்பான முரண்பாடுகள் நிலவினாலும், இப்பிராந்தியத்தில் புதிய தமிழீழ அரசு ஒன்று அமைந்துவிடக் கூடாது என்பதில் இத் தரப்புகளுக்கு பொதுநலன் இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்."1 முரண்பாடு எப்படி ஐக்கியமான முடிவை எடுக்கின்றது. அதென்ன குறிப்பான முரண்பாடு? ஏகாதிபத்தியமல்லாத நாடுகளுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் உலகமயமாதல் நிறுவும் போக்கில் முரண்பாடு இருப்பதில்லை. முரண்பாடு ஏகாதிபத்தியத்துக்கு இடையில் உலகை யார் அதிகம் சுரண்டுவதில் தங்கியுள்ளது. உலகமயமாதல் உருவாக்கத்தில் தடைகள் அனைத்தையும் கடப்பதில் உலகளாவிய ரீதியில் பொதுக் கருத்துண்டு. இலங்கை இரண்டு அரசாக உருவாகுவது, உலகமயமாதல் கட்டமைப்பில் அவசியமற்றது. உலகமே ஒரே அரசாகின்ற போது, தனிநாடுகள் அதற்குள் இடைஞ்சலான முள்ளுகள் தான். இதில் இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியத்துக்கு பொதுக் கருத்துண்டு. இந்தியாவுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் உலகமயமாதல் உருவாக்கத்தில் முரண்பாடு இருப்பதில்லை. எலும்புகள் அதிகம் கிடைக்கும் என்ற நப்பாசையில் குலைத்துப் பார்ப்பதற்கு அப்பால், நாயாக வாலாட்டுவதில் விசுவாசமாக இருப்பதிலும், இந்திய அரசு சாதனை புரிகின்றது.
அடுத்த அரசியல் விபச்சாரத்தைப் பார்ப்போம். "இன்று, அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம்கள் மற்றும் ஜப்பானிய நவகொலனித்துவ முகாம்கள் உலகில் நிலவுகின்றன."1 என்று ஏகாதிபத்திய அமைப்பையே திரித்து புரட்டுகின்றனர். ஏகாதிபத்தியம் பற்றிய மார்க்சிய வரையறை என்ன எனப் பார்ப்போம். ".. ஏகாதிபத்தியமானது 1.ஏகபோக முதலாளித்துவமாகும். 2.புல்லுருவித்தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும். 3.அத்திமக்கால முதலாளித்துவமாகும்.... அதன் சாரப் பொருள்... 1.கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகள் - முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்கு பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுகிறது. 2.பெரிய வங்கிகளின் ஏகபோகநிலை.... 3.மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களை முதலாளித்துவ டிரஸ்டுகளும் நிதி ஆதிக்கக் கும்பலும் கைப்பற்றிக் கொண்டுவிடுகின்றன... 4.சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே கூறுபோட்டுப் பாகப் பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது.... 5.உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.... ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழில்த்துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல, நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும்."2 என்றார் லெனின். இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகள் முதலாம் உலக யுத்தத்தை ஆதரித்து ஏகாதிபத்தியத்தை திரித்துக் காட்டிய போது, ஏகாதிபத்தியத்தை வரையறுத்த லெனின் கோட்பாட்டில் ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை அம்பலம் செய்தார்.
தமிழீழ மக்கள் கட்சிக்காரர்கள் அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் ஏகாதிபத்திய முகாமாக காட்டியவர்கள், யப்பாiனை நவகாலனி முகாமாக காட்டுவது ஏன்? இதையே தமிழீழ புதிய ஜனநாயக கட்சியும் மீளக் கூறுவது ஏன்? நவகாலனியின் அரசியல் உள்ளடக்கம் என்ன? அமெரிக்கா, ஐரோப்பா நவகாலனிகளை வைத்திருக்கவில்லையா? யப்பான் ஏகாதிபத்தியமில்லையா. ஏன்? ஏகாதிபத்தியத்தை அலங்கோலப்படுத்திக் காட்டுவதன் மூலம் ஏகாதிபத்திய வரையறை மற்றும் எதிர்ப்பு போராட்டத்தை திசை திருப்பி சிதைப்பதாகும். இதில் தாம் தேசிய விடுதலைக்கு போராட முனைவதாக பிதற்றுகின்ற போதே, ஏகாதிபத்திய வரையறை பற்றி திசை விலகல் தேசியத்தின் உள்ளடக்கத்தை ஏகாதிபத்தியமயமாக்குவதாகும். ஏகாதிபத்திய உலகமயமாதலை பின்நவீனத்துவமாக காட்டி அதன் ஆதரவாளராக முற்போக்குகள் பிரகடனம் செய்த போது, ஏகாதிபத்தியத்தை மூடிமறைத்து சாயம் பூசுவது அவசியமாக இருந்தது. யப்பானை நவகாலனித்துவ அரசாக காட்டும் போது, யப்பான் எந்த நாடுகளின் நவகாலனியாக இருக்கின்றது. உலகில் இரண்டாவது மிகப் பெரிய வருமானத்தை சுரண்டிக் கொள்ளும் யப்பான், உலகின் தேசங் கடந்த உலகில் பல முன்னணி மூலதனத்தை கொண்டிருப்பதுடன், பாரிய நிதி வங்கிகளையும் கொண்டுள்ளது. (பார்க்க இதே சமரில் உள்ள கட்டுரை ஒன்றில்) இதன் பலத்தின் உலகில் பெருமளவு பன்நாட்டு மூலதனத்தையும், நிதிப் பலத்தையும் கொண்டு உலகை கைப்பற்றுவதில் அமெரிக்கா, ஐரோப்பாவுடன் போட்டி போடுகின்றது. இரண்டாம் உலக யுத்தம் முதல் உலகை பங்கிட, பலமுறை இந்த நூற்றாண்டில் யுத்தத்தில் ஈடுபட்டது. இந்த யப்பான் ஒரு ஏகாதிபத்தியமாக இருக்கின்றது. இது போன்று அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த நிலையில் தான் காணப்படுகின்றது. இது போல் ருசியாவும் இருக்கின்றது. ஏகாதிபத்தியம் தான் நவகாலனிகளை, காலனிகளை, மறுகாலனிகளை, அரை காலனிகளை உருவாக்கின்றன.
இதை மறுத்த தமிழ் மக்கள் கட்சிக் காரர்கள் தமது சொந்த ஏகாதிபத்தியமயமாதலுக்காக "ஏகாதிபத்திய மற்றும் நவகொலனித்துவ போட்டா போட்டிகளில் இருந்து எமது தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில், அவற்றிற்கிடையேயான முரண்பாடுகளை எமது கட்சி பயன்படுத்தும். எமது தேசிய நலன்களுக்கு குந்தகம் ஏற்படாத வகையில், பிராந்திய, அரசியல், பொருளாதாரக் கூட்டமைப்புகளில் எமது தேசம் பங்குபற்றும்."1 இப்படிச் சொன்னபடி இந்தியாவை பயன்படுத்தியவர்கள், அதன் கைக்கூலியானர்கள். இந்தியாவின் செல்லப்பிள்ளையாகி, இறுதியில் இலங்கையின் கூலிப்பட்டாளமாகிய அரசியல் வரலாற்றை, காலில் போட்டு மிதித்தபடி தான் இவர்கள் ஏகாதிபத்திய முரண்பாடுகளை பயன்படுத்தப் போகின்றார்களாம். மிகப் பெரிய நாடுகளை பயன்படுத்த முடியாத வகையில் உலகமயமாதல் உலகையே தனக்குள் பங்கிட்டபடி, பயன்பாட்டை ஏகாதிபத்தியமாக்கியுள்ளது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் உலகை யார் சுரண்டுவது என்பதே ஒழிய, தேசங்களின் முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதில் அல்ல. உலகை ஆள்வதில் ஒருமித்த உள்ளடக்கம், தேசியத்தின் நலனை நசுக்குவதில் முரண்பாட்டைக் காட்டுவதில்லை. இன்று உலகமயமாதலில் தேசங் கடந்த பன்நாட்டு நிறுவனங்கள், தேசம் சார்ந்த ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் மறுத்து வளர்ச்சி பெறுவதால், தேசியத்தை அழிப்பதில் ஈவிரக்கம் காட்டுவதில்லை. உலகமயமாதல் வீச்சு பெறும் வகையில் உலகின் அனைத்து அரசுகளும், அனைத்து வளங்களும் ஒரே வேகத்தில் ஈவிரக்கமின்றி ஒடுக்கியே வளர்ச்சி பெறுகின்றன. கியூபா, வடகொரியா போன்ற நாடுகளும் கூட, என்ன தான் முனகினாலும், உலகமயமாதல் எல்லைக்கு தாளம் போட்டே செல்லுகின்றன. இங்கு பயன்படுத்தல் விபச்சாரத்தக்கு தயாராவதை பிரகடனம் செய்வதாகும். இங்கு பயன்படுத்துவதல்ல, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும் ஒரே ஒரு மார்க்கம் மட்டுமே தேசியத்தை பாதுகாக்கும். இது மட்டும் தான் தேசியத்தின் சர்வவியல்பமான ஒரேயொரு உள்ளடக்கமாகும். இந்த உள்ளடக்கத்தை மறுத்த தேசியம் ஏகாதிபத்திய உலகமயமாதலின் ஒரு பாகம் மட்டுமேயாகும். தேசம் என்றால் என்ன என்ற வரையறையையே, விளக்கமுடியாதவர்கள் தான், தேசத்தின், தேசியத்தின் போராட்ட வீரர்களாக இருப்பது, இன்றைய இலங்கை அரசியல் நிலமையாகும். இதை அனுசரித்தே தேசிய விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதுபோன்று "பிராந்திய, அரசியல், பொருளாதாரக் கூட்டமைப்புகளில் எமது தேசம் பங்குபற்றும்"1 என்கின்றனர். பிராந்தியம் அனைத்தும், உலகமயமாதலின் ஆதிக்க வடிவத்தின் வீச்சை விரிபடுத்துவதாக இருக்கின்ற போது, அதற்குள் எப்படி கூட்டமைப்புகள் உருவாக முடியும். உலகமயமாதல் பின்நோக்கி ஒருக்காலும் செல்ல முடியாத பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டவை. இதற்கு எதிராக ஒரு உலகளாவிய புரட்சியை பாட்டாளி வர்க்கம் நடத்துவதன் மூலமே, அதன் மீது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவுவதன் மூலமே உலகமயமாதலை முறியடித்து மக்கள் ஆட்சியை நிறுவமுடியும். இதை மறுத்த கூட்டுக்கு ஏகாதிபத்தியத்துடன் செல்வது வெட்கக்கேடான அரசியல் விபச்சாரமாகும். உலகளாவிய கூட்டு என்பது பாட்டாளி வர்க்க அரசுகள், குழுக்கள், மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுக்கும், தேசிய முதலாளித்துவ பிரிவுகளுடன் மட்டுமே இருக்கமுடியும். ஒரு புரட்சியை வென்ற நாடு ஏகாதிபத்தியத்துக்கும், காலனிய நாடுகளுக்குமிடையே வேறுபட்ட உறவை கையாளும். ஆனால் இது இன்று உலகமயமாதலில் உலகம் ஒன்றாகின்ற போது, காலனிய அரசுவடிங்வகளின் குறைந்த பட்ச சுயேட்சையும் மறைந்து விடும் போது, உறவு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலையில் தான் இருக்கும். உறவு என்பது மக்களைச் சார்ந்ததாகவே இது உலகளாவியலானதாக இருக்கும். இருக்கின்ற ஏகாதிபத்தியம் அல்லாத அரசுகள் பாசிசமாகவும், தேசிய இருப்பை அழித்துவரும் போக்கில், இவ்வரசுகள் ஏகாதிபத்தியத்தின் வெறும் மாநில, மாகாண வடிவங்களாக அதிகாரம் இழந்து, அடக்குமுறையை செய்யும் இராணுவப் பொம்மைகள் ஆகிவருகின்றன. இவர்களுடன் கூட்டுக் போக அழைப்பது ஏன்? இதற்குப் பின் உள்ள வர்க்க நலன்கள் மட்டுமே தான்.
இனி சொந்த நாட்டில் நட்பு எதிரி பற்றி வரையறுப்பதைப் பார்ப்போம். "இக்குடியரசின் ஆட்சிக் குழுவமாக அடக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, விளிம்புநிலை மக்களும், ஜனநாயகப் பிரிவினரும் அமைவர்."1 கேடுகெட்ட வகையில் மக்கள் தியாகத்தை விபச்சாரம் செய்வதாகும். இன்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஏதோ ஒரு வகையில், இதற்கு உட்பட்ட ஒரு பிரிவின் தலைமையாகவல்லவா இருக்கின்றார்கள். அப்படியாயின் இந்த புலிகளுடன், மற்றவர்களையும் இணைத்தால் எல்லாம் சரியாகி விடுமல்லவா! அதனால் தான் நீங்கள் களமிறங்கி புறப்பட்டுள்ளீர்களோ! ஒரு சமுதாயத்தில் ஏன் அடக்கப்பட்ட பிரிவுகள் வாழ்கின்றனர்? எப்படி உருவானார்கள் என்ற கேள்வியின்றி, அவர்களை அப்படியே ஆட்சியில் இணைப்பதாக பிரகடனம் செய்யும் அரசியல் உள்ளடக்கம், உண்மையில் இருக்கின்ற அமைப்புக்கு, சேதம் ஏற்படாத அரசியல் பாதையாகும். உதாரணமாக பார்ப்பனியத்தால் எதோ ஒரு விதத்தில் ஒடுக்கப்படும் வெள்ளான் வெள்ளானனாக இருப்பதால் ஆட்சியில் இணைக்கப்படுவான். ஆணாதிக்கத்தில் ஏகாதிபத்திய பெண்ணியத்தை கோரும் பெண் ஆட்சியல் இணைக்கப்டுவாள். பாட்டாளி வர்க்கம் சுரண்டும் வர்க்கத்தை நசுக்கி சர்வாதிகாரத்தை நிறுவுவதால், பாட்டாளியால் அடக்கப்பட்ட அவனையும் ஆட்சியில் இணைப்பார்கள். இவர்கள் சமுதாய ரீதியாக ஏதோ ஒருவிதத்தில் அடக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, விளிம்பு நிலைமக்களும், ஜனநாயகப் பிரிவினருமவர் அல்லவா! இதை வரையறுக்க முடியாத கோட்பாட்டு விளக்கம் கொண்டவை. சமுதாயத்தின் வேறுபட்ட அடக்குமுறைகள் இயற்கையானவையல்ல. மாறாக செயற்கையானவை. இது தனிச் சொத்துரிமை விளைவுகளாகும். சாதி கடந்த, இனம் கடந்த, மொழி கடந்த, மதம் கடந்த, பால் கடந்த நிறம் கடந்த சமூக ஒன்றிணைவு அனைத்தையும் விட முற்போக்கானது. இதைவிட மனித பிளவுகளை கடந்து செல்ல மாற்று வழி கிடையாது. இது மட்டுமே மனிதனை மனிதன் பேதம் காட்டுவதில்லை. இதையே பாட்டாளி வர்க்கம் முன்வைக்கின்றது. இங்கு வர்க்க வேறுபாட்டை வைப்பதன் மூலம், சுரண்டலை ஒழித்து அதிலும் பேதத்தை அகற்றுகின்றது. இதன் தலைமை மட்டும் தான், சமூக அவலங்களை இதன் போக்கில் ஒழித்துக் கட்டுகின்றது. இதை மறுத்த அனைத்து அணிதிரட்டல்களும், ஆட்சிகளின் பின்பும் இந்த வேறுபாடு உள்ளடக்கத்தில் கோரப்படுவதுடன், அதை மேலும் ஜனநாயகத்தின் பேரில் பிளவை விரிவாக்கி சுதந்திரமாக்கப்படுகின்றது. தமிழீழ மக்கள் கட்சிக்காரர்கள் மனித பேதம் கடந்து அணிதிரள்வதை மறுத்து, விளிம்பு மற்றும் அடக்கப்பட்ட ஜனநாயகத்தின் பின்பு பிளவை கட்டிக்காக்கின்றனர். இப்படி அடங்கி நசிந்து இருந்தவர்கள் இருந்த படி அணிதிரட்டி ஆட்சியில் ஏற்றுவதன் அரசியல் உள்ளடக்கம் இவை தான்.
இதன் தொடர்ச்சியில் இந்த அரசியல் உள்ளடக்கத்தை பாதுகாக்க "இக்குடியரசை அமைக்கப் போராடிய தமிழ்த் தேசத்தின் சகல வர்க்கங்களும் தமது நலன்களை அடைந்து கொள்வது அரசியல் யாப்பு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் உத்தாவாதப்படுத்தப்படும்"1 எப்படி? போராடும் சகல வர்க்கத்தின் நலன்களும் எப்படி உத்தரவாதம் செய்ய முடியும் பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஊடாக மற்றைய வர்க்க சுரண்டல் நலன்களை ஒடுக்க போராடுகின்ற போது, எப்படி இதன் நலனை அரசியல் யாப்பு உத்தரவாதம் செய்யும். உண்மையில் யாப்பு உத்தரவாதம் என்பது, பாட்டாளி வர்க்கத்தை சுரண்டவும், ஏகாதிபத்திய அமைப்பு அமைதியாக விழுங்கி ஏப்பவிடுவதை அமைதி வழியில் உத்தரவாதம் செய்வதே அரசியல் யாப்பின் உள்ளடக்கமாகும். அனைத்து வர்க்க நலன்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடானவை மட்டும் இன்றி, சுரண்டியபடி இறுதியில் சுரண்டும் வர்க்கப் பிரிவை விட்டபடிதான் வர்க்கங்கள் இருக்கின்றன. அனைத்து வர்க்கங்களின் நலன்கள் உள்ளடக்கத்தில் சுரண்டும், சுரண்டப்படும் நலன்கள் தான். அதாவது இருக்கின்ற சுரண்டல் அமைப்பை அவர்களின் நலன்களுடன் உத்தரவாதம் செய்வதையே, தேசியத்தின் பின் தெளிவாக பிரகடனம் செய்கின்றனர்.
அடுத்து "தமிழீழ ஜனநாயக குடியரசின் அரசியல் யாப்பானது, ஜனநாயகம், சமூகநீதி, மனிதஉரிமைகள் என்பவற்றை அடிநாதமாகக் கொண்டிருக்கும்."1 இந்த அடிநாதம் எந்த வர்க்கம் சார்ந்து பிரகடனம் செய்யப்படுகின்றது. சகல வர்க்கத்தின் நலன்களையும், சமூகப் பிரிவினதும் நலனை உத்தரவாதம் செய்யும் ஜனநாயகம், சமூக நீதி, மனித உரிமை என்ன? அது எப்படி எல்லா வர்க்கத்தையும் திருத்திப் செய்யும். உண்மையில் சுரண்டும் இயல்பான நடைமுறை மட்டுமே, இவர்களின் ஜனநாயகம், சமூகநீதி, மனிதஉரிமைகளின் எல்லையாகின்றன. இவர்களின் ஜனநாயகம் பற்றி, உதாரணமாக மண்டேலாவின் துரோகத்துடன் கூடிய ஆட்சி மாற்றத்தை (ராஜினாமாவை) ஜனநாயகமாக காட்டியவர்கள் இவர்கள். ஜனநாயகம் பற்றி ஏகாதிபத்திய விளக்கத்தை கொண்டிருப்பவர்கள், அதே ஜனநாயகத்தையே எமக்கு பூச்சூட்டி அடிமையாக வைத்திருப்பர். இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மேலும் "இனம், சாதி, பாலினம், பாலுறவுத் தேர்வு, வயது, மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் சமத்துவமாக நடாத்தப்படுவதும், இதுவரை காலமும் அடக்கப்பட்டு வந்துள்ள சமூகப் பிரிவுகள் தம்மைப் பலப்படுத்தும் விதத்தில் "நேர்மறையான பாகுபாட்டை" ஏற்படுத்துவதும் அரசியல் யாப்பின் மூலமும் நடைமுறை ரீதியிலும் உறுதிப்படுத்தப்படும்."1 எப்படி?, எந்த வர்க்கப் போராட்டத்தின் ஊடாக இதை ஏற்படுத்த முடியும்? இங்கு சமத்துவமாக நடத்தப்படுவர்கள் என்கின்ற போதே, பிளவை பாதுகாத்து அதை சமத்துவப்படுத்துவதை குறிக்கோளாக்கின்றது. இடைவெளியை வர்க்கப் போராட்டத்தின் ஊடாக ஒழிக்க போராட பிரகடனம் செய்யவில்லை, பிளவை நிரந்தரமாக்கி அதை சமத்துவமாக்க சட்டம் போட வாக்குப் போடுகின்றனர். இதை சமப்படுத்த தம்மை பலப்படுத்தும் விதத்தில் "நேர்மையான பாகுபாட்டை" உறுதி செய்ய பிளவை, சட்டம் மூலம் நிரந்தரமாக்க உறுதி கூறுகின்றனர். பாட்டாளி வர்க்கம் இவற்றை கடந்து அணிதிரட்டி இதை தனது வர்க்க சர்வாதிகாரத்தில் ஒழித்துக்கட்ட பிரகடனம் செய்யும் போது, இவர்கள் இதை சமப்படுத்தி நிரந்தரமாக்கி பிளவை உறுதி செய்ய வாக்களிக்கின்றனர். இந்த இடத்தில் வர்க்கங்களின் ஜனநாயகத்தை அங்கீகரிப்போம் என்று கூறுவது முரண்பாடாக இருப்பதில்லை. ஏனெனின் உள்ளடக்கத்தில் ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பின் விளக்கம் சுத்தி வளைத்து இப்படித் தான் இருக்கும். ஏகாதிபத்திய திட்டம் கூட உள்ளடக்கத்தில் இதை ஏற்றுக் கொள்கின்றது. முதலாளித்துவ நாடுகளில் இதையே பிரகடனம் செய்கின்றது. அந் நாட்டுச் சட்டங்கள். ஏகாதிபத்திய ஒழுக்கம், சட்டம், பண்பாடு இதைக் கோருவதுடன், இதையே நடைமுறைப்படுத்துகின்றது. இதை மறுக்க முடியாது. விதிவிலக்கு பொதுவாகி விடாது அல்லவா?
மேலும் இத் திட்டத்தில் "புரட்சியினதும், குடியரசினதும் நலன்களுக்கு விரோதமாகப் போகாத வரையில், சகல தேச பக்த வர்க்கங்கள் மற்றும் சமூகப் பிரிவுகளின் சமூக பொருளாதார அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்படும்."1 நலன்கள் என்ன? தேச நலனுக்கு எதிராக போகும் ஒரே ஒரு அடிப்படை, ஏகாதிபத்திய கைக் கூலித் தனமாகும். அதை அடையாளப்படுத்தாது பொதுவாக விரோதம் பற்றி ஆரூடம் கூறும் உள்ளடக்கம் என்ன? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்காக போராடுவது தேச நலனுக்கானதா அல்லது விரோதமானதா? அதாவது மொழி கடந்து, இனம் கடந்து, சாதி கடந்து, பால் கடந்து... பாட்டாளி வர்க்கம் போராடி, அதை சமுதாய ரீதியாக ஒழித்துக்கட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவும் வர்க்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அது உங்கள் திட்டப் படி தேசவிரோதமானது. ஏனெனின் நீங்கள் இவைகளை சமப்படுத்தவே விரும்பும் போது, நாங்கள் இதை ஒழிக்க விரும்புகின்றோம். நீங்கள் எல்லா வர்க்கத்தின் ஆட்சியை நிறுவ விரும்பும் போது, நங்கள் அதன் மேல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ விரும்புகின்றோம். இது தேசவிரோதமாக உங்கள் உள்ளடக்கம் விளக்குகின்றது. இதைத் தான் கடந்த கால தேச விடுதலை இயக்கங்கள் செய்தன, செய்கின்றன. இதையே கட்சியின் பெயரில் நீங்கள் பிரகடனம் செய்வது மட்டுமே, உள்ளடக்கத்தில் இங்கு வேறுபாடாகும்.
அடுத்த ஏகாதிபத்திய கைக் கூலித்தனத்தைப் பார்ப்போம். "தமிழீழ ஜனநாயகக் குடியரசு மற்றும் தேசத்தின் நலன்களுக்கு ஆதரவான அரசு சார்பற்ற அமைப்புகள் தமிழீழத்தில் செயற்படுவதற்கு அங்கீகரிக்கப்படும்."1 ஏகாதிபத்திய கைக்கூலி தரகு அமைப்புகளான தன்னார்வக் குழுக்களை அங்கீகரிக்கும் தேசியம், உள்ளடக்கத்தில் ஏகாதிபத்திய திட்டமாகும். அரசு சாராத அமைப்புகள் வானத்தில் இருந்து குதித்து எழுகின்றனவா! அவை எங்கிருந்து யாரால் உருவாக்கப்படுகின்றன. அரசு சாராத என்பதன் பின்னால், ஏகாதிபத்தியம் சார்ந்தல்லவா இயங்குகின்றது. ஏகாதிபத்திய அமைப்புகளின் நேரடி கட்டளையில் இயங்கும் தொண்டர் அமைப்புகளான அரசு சார்பற்ற அமைப்புகளின், நிதி மற்றும் உதவிகள் எதற்கு பயன்படுத்தப்படுகின்றது. ஏகாதிபத்திய உலக மயமாதலை வேகப்படுத்தவும், சமூக கொந்தளிப்பை மட்டுப்படுத்தவும் இவை துணைபுரிகின்றன. மனிதாபிமான செயல் தளங்கள் மூலம், மக்களின் மனதை அறியாமையில் நிலை நிறுத்துவதன் மூலம், தேசத்தின் தேசியத்தை கொள்ளையிட்டுச் செல்வதை பூச்சு இடுவதாகும். இந்த பணிகளின் எச்சில் எலும்புகளில் ஒட்டிக் கொள்ளும் அற்ப நாய்களின் துரோகத்தை, எதிர்த்து போராடி தடை செய்வதற்கு பதில், அங்கீகரிப்பதன் நோக்கம் துரோகத்தை கம்பளம் விரித்து வரவேற்பதாகும். இவை ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக வாலாட்டும் நாய்களின் திட்டமாகும்.
அடுத்த கூறுகின்றார்கள் உளுத்துப் போன "உள்ளுராட்சி"1 வடிவங்கள் உருவாக்கப்படும் என்கின்றனர். புரட்சியில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவதுக்கு பதிலாக, ஏகாதிபத்திய ஜனநாயக அமைப்புகளின் இழிந்து சிதைந்து போன உள்ளுராட்சி அமைப்புகளை மக்கள் அதிகாரத்துக்கு பதில் வைக்கின்றனர். பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில் நிறுவும் மக்கள் அமைப்புகள், தொடர்சியான வர்க்கப் போராட்டத்தை நிபந்தனையாக்கின்றன. ஆனால் உள்ளுராட்சி மன்றங்கள் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கும, அரசின் ஏவல் நாய்கள் ஆகின்றன. புலிகள் இது போன்ற அமைப்புகளை உருவாக்கியதுடன், அதைக் கொண்டே தனது ஜனநாயக விரோதத்தை கட்டமைத்தனர். இதையே மீள முன்வைப்பதன் மூலம், இன்னுமொரு புலியாக கூறாமல் களம் இறங்குகின்றனர். "முற்றிலும், சுதந்திரமாக இயங்கக் கூடிய நீதித்துறை உருவாக்கப்படும்."1 எதில் இருந்து சதந்திரமாக நீதி? வர்க்கத்தை கடந்து சதந்திரமாக நீதி என்பது கற்பனையான மாயை அல்லவா? நீதி வர்க்க அடிப்படையைக் கொண்டதல்லவா? பாட்டாளி வர்க்க நீதி தெளிவாக வர்க்க அடிப்படையைக் கொண்டது. அது சுரண்டலை, ஆணாதிக்கத்தை, இனவாதத்தை, மதவாதத்தை, நிறவாதத்தை.. ஒழிப்பதில் தனது நீதியை நிலைநாட்டுகின்றது இங்கு அனைத்து வர்க்கத்தின் நீதியை திட்டவட்டமாக மறுக்கின்றது. ஜனநாயகம், நீதி, சுதந்திரம் போன்றன வர்க்க சமுதாயத்தில், ஒரு வர்க்கத்தின் கருவியாகவே எப்போதும் இருக்கின்றது. அனைத்துக்கும் சமத்துவமான நீதி என்பது, சுரண்டல் சமுதாயத்தின் பொது கண்ணோட்டமாகும். சமத்துவமாக எல்லா வர்க்கத்தையும் நடத்தவும், நீதி பெற்றுக் கொடுப்பது என்பது உள்ளடக்கத்தில் எதுவுமற்ற பிதற்றலாகும்.
அடுத்து புரட்சிகரமான சமுதாயத்தை படைக்கப் போவதாக பிதற்றும் இவர்கள், அதை எப்படி கைவிட பிரகடனம் செய்கின்றனர் எனப் பார்ப்போம். "மக்கள் அனைவரும் கூட்டங் கூடவும் கருத்தை வெளிப்படுத்தவும், புரட்சிகர நியதிகளின் அடிப்படையில் தம்மை ஆயுதபாணிகளாக்கவும் உரிமைகள் உடையவராக இருப்பர்."1 என்று கூறும் இவர்கள், "போராடிய தமிழ்த் தேசத்தின் சகல வர்க்கங்களும் தமது நலன்களை அடைந்து கொள்வது அரசியல் யாப்பு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் உத்தரவாதப்படுத்தப்படும்"1 என்ற நிபந்தனைக்கு இது முரண்பாடல்லவா? ஆயுதபாணியாகும் உரிமை முதலாளித்துவ உள்ளடக்கத்திலும் புரையோடிப்போயுள்ளது. அனைத்து வர்க்கத்தின் நலன்கள் உறுதி செய்யும் போது, இங்கு அவற்றுக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் உரிமை "சகல தேசபக்த வர்க்கங்கள் மற்றும் சமூகப் பிரிவுகளின் சமூக, பொருளாதார அரசியல் உரிமையை அங்கீகரி"1 க்கும் உள்ளடக்கத்துக்கு எதிரானது அல்லவா? ஆயுதம் எதை நோக்கி ஏந்த முடியும்? எந்த குறிக்கோளை நோக்கி? இதை ஆளும் எந்த அமைப்பு, எதன் அடிப்படையில் ஏற்றுக் கொள்கின்றது. இங்கு அரச அமைப்பில் இருக்கும் பிரிவே, ஆயுதம் எந்தும் உரிமையை அங்கீகரிப்பது விசித்திரமானது. ஆயுதம் எந்துவது சொந்த வர்க்க ஆட்சியை கைப்பற்றவல்லவா? அப்படியாயின் இந்த உரிமையை அங்கீகரித்து முன்வைத்த வேலைத்திட்ட புரட்சிகர அரசை அல்லவா, ஒடுக்க ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு அரசை உருவாக்கும் போது அதன் வர்க்கத் தன்மை என்ன? இந்த அரசை கைப்பற்ற ஆயுதம் ஏந்த முடியும் என்று ஏற்றுக் கொள்ளும் பிரிவின் வர்க்கத் தன்மை என்ன? சம்பந்தமில்லாமல் புலம்புவதும், கற்பனையான பிதற்றல்களும் கனவுகளாக வடிக்கப்படுகின்றன. வர்க்கமற்ற அரசு என்பது எப்படி கற்பனையானதோ, அதைவிட ஆயுதம் எந்தும் உரிமையை அங்கீகரிப்பது அதைவிட கேலிக்குரிய கற்பனையாகும். அதாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேசிய புரட்சிக்குப் பின், அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் புரட்சியூடாக நடத்த முடியும் என்று நம்பிக்கையூட்டி, பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றும் மோசடிகள் தான் இவை. அது வரை பாட்டாளி வர்க்க, வர்க்கப் புரட்சியை ஒத்திப் போடவும், அங்கீகரிக்கப்பட்ட மோசடி கனவுகளுடன் பொறுத்திருக்கக் கோருவதாகும். அதாவது தேசியப் புரட்சியை தரகு முதலாளிகளின் தலைமையில், சகல வர்க்க உள்ளடக்கத்துடன் மூட்டை கட்டி ஏமாற்றி ஏகாதிபத்திய காலடியில் இட்டுச் செல்லும் நனவை மட்டுமே இத் திட்டம் கொண்டுள்ளது.
அடுத்து "அரசு மதச் சார்பற்றதாக இருக்கும். அரசிலிருந்து மதமும், மத நிறுவனங்களிருந்து பாடாசாலைகளும் விடுவிக்கப்படும். மதமானது முற்றிலும் ஒருவரது தனிப்பட்ட விடயமாகக் கருதப்படும். மனச்சாட்சி சுதந்திரம் பேணப்படும்."1 ஏகாதிபத்திய நாடுகளின் பொதுவான மாதிரியை அப்படியே முன்வைக்கின்றனர். மனச்சாட்சி வனத்தில் இருந்து குதித்தா எழுகின்றது? மதம் தனிப்பட்ட கற்பனையான உருவமா? மத நிறுவனங்கள் வர்க்க கண்ணோட்டம் அற்றவையா? நீங்கள் நிறுவும் அரசடன் முரண்பாடு அற்றதா? மதத்துக்கும், அதன் கருத்து முதல்வாதத்துக்கும், அதன் வர்க்க தன்மைக்கும் எதிராக போராட மறுக்கும் இவர்கள், அதை கம்பளம் விரித்து அங்கீகரிக்கின்றனர். மனச்சாட்சி சுதந்திரம் உலகில் எதையும் சாதித்ததில்லை. மாறாக அதுவே மனித அவலத்தின் ஊற்று மூலமாக உள்ளது. மனச்சாட்சி சுதந்திரம் எந்த வர்க்கம் சார்ந்து வெளிப்படுகின்றது. மனித அவலங்கள் மீது மனச்சாட்சி புரட்சி செய்து விடவில்லை.
தனிப்பட்ட மனிதன் சொந்த வாழ்க்கையில் சந்திக்கும் அவலத்துக்கான காரணத்தை திசைதிருப்பி காட்டிய பாதையே மதமும், மதச் சுதந்திரமும். தனிப்பட்ட மனிதன் தனது சொந்த அவலத்தை சமுதாய போராட்டத்தின் ஊடாக தீர்க்க முயலும் பாதை தெரியாத வரை, அவன் வழிபாடு ஆறுதலைத் தருகின்றது. இதை சமுதாயப் புரட்சி தீர்க்கின்ற போது, கடவுளை விட்டு ஒழிக்கின்றான். அதுவரை வழிபாடு சொந்த மனித அவலத்தை சொல்லி புலம்ப, உணர்ச்சியை வெளிப்படுத்தாத உருவங்கள் முன்பு, தன்னையே திறந்து வெளிப்படுத்தும் ஊடகமாக கண்ணீரை விட்டு புலம்பி துயரத்தை போக்க முயலும் வடிவமாக வழிபாடு உள்ளது. இதை சமுதாயப் புரட்சியில் உள்ளவர்கள் மிக நிதானமாக உள்வாங்கியபடி தான், மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். தனிப்பட்ட மனிதனின் விடுதலையை சமுதாயப் புரட்சியூடாக அடையும் போது மதத்துடன் உள்ள உறவும் முடிந்து விடுகின்றது. ஆனால் மத நிறுவனங்கள் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவை சமுதாயத்தின் ஒட்டுண்ணி அமைப்பாகும். அவலப்பட்ட மனிதனின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் பண்ட மாற்றாக, அவன் உழைப்பை சுரண்டி வாழும் நாய்களிலும் கீழ்லானவர்கள். இவர்களின் ஒட்டுண்ணி வாழ்க்கையை எல்லாத் தளத்திலும் ஒழித்துக் கட்டுவதற்கு பதில், தமிழீழ மக்கள் கட்சி ஒட்டி உறவாடி அங்கீகரிப்பதன் உள்ளடக்கம் ஆதிக்க கண்ணோட்டம் கொண்டவையாகும். இந்து மதத்தை எடுத்தால், சாதியை ஒழிப்பதாயின் இந்து மதத்தையே ஒழிக்கவேண்டும். இதை மறுத்து அங்கீகரிக்கும் இவர்கள் எப்படி சாதியை ஒழிப்பர். இது போல் ஆணாதிக்கமும் என்று, பல துறை சார்ந்து கேள்வி எழுப்ப முடியும்.
அடுத்து "வங்கித்துறை, பொதுப்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுகாதாரம், கல்வி, சர்வதேசத் தொடர்பு போன்ற துறைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதிப்படுத்தப்படும். ஏனைய துறைகளில் தனியார் முதலீடு"1 செய்ய அனுமதிக்கப்படும். இதை விட இலங்கை அரசு முன்னேற்றகரமான வகையில் இருக்கின்றது. ஏன் தனியார் முதலீட்டை அனுமதிக்க வேண்டும்? உற்பத்தி எப்படி தனியார் மயமாக முடியும்.? தனியார் சொத்துரிமையை ஜனநாயகமாக கருதுகின்றீர்களா? தனியார் மயம் சுரண்டலை செய்கின்ற போது, எப்படி தொழிலாளார் வர்க்கத்தின் உரிமை பாதுகாக்கப்படும். பாட்டாளி வர்க்கம் சொந்த வர்க்க சர்வாதிகாரத்தை கோரும் போது, தனியார் மூலதனத்தை மறுக்கின்றது. அதை தேச சொத்துரிமையாக்கின்றது. தனியார் எப்படி மூலதனத்தின் தந்தையானார்கள். அதை ஒழிப்பதை எதிர்ப்பீர்களா?, ஏற்பீர்களா? தனியார் சொத்துரிமையில் அன்னிய முதலீடுகளை எப்படி பார்க்கின்றீர்கள்? இன்று உலகமயமாதல் தேசிய மூலதனத்தை சிதைத்து மூலதனத் திரட்சியை அற்றதாக்கி வருகின்றது. அப்படி இருக்கும் போது தேசிய முதலாளிகள் எங்கிருந்து மூலதனத்தை திரட்ட முடியும்! நீங்களாக பணம் கொடுப்பீர்களோ! ஏன் அதை நீங்கள் (அரசு) முதலிட முடியாது? சுரண்டும் வர்க்கத்துடன் என்ன வர்க்கப் பாசம்! கேடுகெட்ட ஏகாதிபத்திய தேசியவாதங்கள் நாட்டையே விற்றுவிடும் பொறுக்கித்தனமாகும்.
அடுத்து "பொருத்தமான நிலச்சீர்திருத்தம் மூலமாகவும் பாவனையில் இல்லாத நிலங்களை அரசு பொருத்தமான முறையில் மீள்பங்கீடு செய்வதன் மூலமாகவும், புதிய விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் மூலமாகவும் நிலமில்லாப் பிரச்சினைக்கான தீர்வு உறுதிப்படுத்தப்படும்"1 நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை தேசிய சக்தியாக மதிப்பிடுவதும், அவர்களிடம் நிலத்தை பறிமுதல் செய்ய மறுப்பதும் தெளிவாக்கப்படுகின்றது. தேசிய புரட்சி என்பது என்ன? தேசிய முதலாளித்துவ புரட்சியை ஏற்படுத்துவதும், அதற்கு எதிரான சக்திகளை அழிப்பதுமாகும். தேசிய முதலாளித்துவ புரட்சிக்கு தடையான சக்திகள் இன்று நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாகும். இதற்கு எதிரான போராட்டத்தில் இதன் சொத்துகள் அனைத்தையும் நிபந்தனையின்றி பறிமுதல் செய்வதே தேசிய புரட்சியின் அரசியல் உள்ளடக்கமாகும். இதை மறுத்து நிலத்தை கண்டு பிடித்து பகிர்வது, நிலப்பிரபுத்துவ ஆதரவு கொண்ட ஏகாதிபத்திய தரகு ஆட்சியை நிறுவுவதாகும்.
இதை அவர்கள் "தேசத்தின் பொருளாதார சுதந்திரம், சுயசார்பு என்பவை பாதிக்கப்படாத விதத்தில் அந்நிய மூலதனம் குறிப்பிட்ட சில துறைகளில் அனுமதிக்கப்படும்"1 சுதந்திரத்தையும், சுயசார்பையும் மீறாத அன்னிய முதலிடு உலகில் எதையும் காட்ட முடியுமா? உலகமயமாதல் குவிந்த மையமாகி, அதுவே மூலதனத்தில் போக்காக உள்ள நிலையில் இதைத் தாண்டி, முதலிடு எப்படி சாத்தியம். உலகமயமாதல் நோக்கத்தை கைவிட்ட முதலிடு என்பது, ஏமாற்ற முன் வைப்பவைதான். உலகமயமாதல் போக்கில் மூலதனம் புகுகின்ற போது, அது சுதந்திரத்தையும், சுயசார்பையும் கடைப்பிடிக்கும் என்று கூறுவது, காதுக்கு பூ வைப்பது ஒன்று தான். இதைப் போல்தான் தன்னார்வக் குழுக்கள் பற்றியும் பிதற்றினர். அன்னிய முதலீடுகளின் நோக்கம் உலகச் சந்தையை முழுமையாக கைப்பற்றுவதே. இந்த அரிவரிப் பாடம் தெரியாதவர்கள் வைக்கும் அரசியல், உள்ளடக்கத்தில் ஏகாதிபத்தியத்துக்கு தொழுது சேவை செய்வதாகும். இது சாதரணமான மூன்றாம் உலக நாடுகள் வரிசையில் தனது அரசியலை, நடத்தையை தெளிவாகவே பிரகடனம் செய்கின்றது. இங்கு சிங்களவன் ஆள்வதற்கு பதில் தமிழன் ஆள்வதை அடிப்படை நோக்கமாக மட்டும் கொள்கின்றது.
"தேசியம், ஜனநாயகம், சோசலிசம் ஆகியவை ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாத அம்சங்களாகும்."1 ஒன்றுக்கு ஒன்று முரண்பாடானவைகளை பிரிக்க முடியாதவைகளாக காட்டும் மோசடி, ஏகாதிபத்திய நாடுகளில் மெய்ப்பிக்கும் நடைமுறையாகும். ஜனநாயகம் உள்ள வரை சோசலிசம் சாத்தியமில்லை. ஜனநாயகம் என்பது ஒருவனுக்கு மறுப்பதில் அல்லவா உயிர் வாழ்கின்றது. தேசியம் சர்வதேசியத்தை மறுப்பதில் உயிர் வாழ்கின்றது. சோசலிசம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் உயிர் வாழ்கின்றது. இவை அனைத்தும் பிரிக்க முடியாத ஐக்கியத்தில் உயிர் வாழ்வதில்லை. இவை எதிர் எதிர் தளத்தில் உயிர் வாழ்கின்றன. ஜனநாயகம் நீடிக்கும் வரை பாட்டாளி வர்க்கத்துக்கு ஜனநாயகம் இருப்பதில்லை. தேசியம் இருக்கும் வரை சுரண்டப்படும் வர்க்கம் அடிமைப்பட்டே இருக்கின்றது. இங்கு சுரண்டப்பட்ட மக்களின் வர்க்க சர்வாதிகார சோசலிசம் இருப்பதில்லை. வர்க்கப் போராட்டம், சர்வதேசிய கண்ணோட்டத்தில் ஜனநாயகத்தை, சுரண்டும் வர்க்கம் மற்றும் அதன் அனைத்து சமூக மேல் கட்டுமானத்துக்கும் மறுத்தே உருவாக்கப்படுகின்றது. இது தான் தேசியத்தின் அரசியல் உள்ளடக்கமாகும்.
இந்த திட்டம் இது போன்ற பல்வேறு அரசியல் சோரத்தை கொண்டுள்ளது. இது போல் பலவிடயத்தை மௌனமாக பதிலளிக்காது, திட்டம் காதுக்கு பூவைத்தும் செல்லுகின்றனர். மீண்டும் வரலாற்றை ஏகாதிபத்திய நுகத்தடிக்குள் தியாகம் செய்ய அழைக்கின்றது. இதை இனம் கண்டு கொள்வது இன்றைய வரலாற்றுக் கடமையாக உள்ளது.
1.தமிழீழம் -4
2.திருத்தல்வாதம் எதிர்ப்போம், மார்க்சியம் காப்போம். - லெனின்
3.தமிழீழம் -14