ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் அமெரிக்காவின் தலைமையில் மேற்கின் ஆதரவுடன் உலகை, உலகமயமாதலை நோக்கி வழிநடத்திச் செல்லும் மக்கள் விரோத சர்வதேச குற்றவாளியாக பரிணமித்துள்ளது. 1990 களில் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் வரைமுறையற்று அழித்தொழிக்கும் ஆக்கிரமிப்பின் போதும், யூக்கோசிலாவியா மீதான ஆக்கிரமிப்பின் போதும் நடத்திய தாக்குதல்கள் மிலேச்சச்தனமானவை. அணுகுண்டுக்கு பாவித்த யூரேனியக் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட யூரேனியக் குண்டுகள், இந்த நாட்டு மக்கள் மீது வரைமுறையற்ற வகையில் வரலாறு காணாத வகையில் வெடிக்க வைக்கப்பட்டது. உலக ஜனநாயக வாதிகள் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அறிவுஜீவிகளின் போராட்டமற்ற மௌனம் சாதிக்கும் சர்வதேச முற்போக்கு ஆய்வுகளிலும், மறுவாசிப்பிலும், தேடுதலின் பின்பு தான், இவை ஐக்கிய நாடுகளின் ஜனநாயக சுதந்திர ஆயுதமாக நீடிக்கின்றது.
இக்குண்டுகளை மக்கள் மீது வீசக் காவிச் சென்ற விமானம் மற்றும் இதனுடன் தொடர்புபட்டு ஜனநாயகம் பாதுகாக்கச் சென்ற சுதந்திர ஜனநாயக வீரர்கள் பரிதாபகரமாக மேற்கில் இறந்தும், நோய்வாய்ப்பட்டும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் யூரேனிய கதிர் வீச்சில் அவலமாக வக்கரித்து பிறக்கின்ற நிலையிலும்;, சொந்த மனைவியே இதில் இருந்து தப்பித்துச் செல்லும் பரிதாபகரமான நிலையில், ~~சுதந்திரமான வீரனின்|| நடைப்பிணமான அவலத்தின் மூலமே, இந்த மனித விரோதம் மீண்டும் ஒரு முறை ஜனநாயகத்துக்கு எதிராக அம்பலமாவது அதிகரித்துள்ளது. இதை ஆராய முனையும் விசாரணைக் கமிசன்கள் முதல் அனைத்தும், உலகமயமாதல் ஜனநாயகத்தை பாதுகாத்த வீரர்கள் சார்ந்து, விசாரணையின் பின்பு மூடிமைறைப்பு என்ற நாடகம் அரங்கேறுகின்றது. பாதிக்கப்பட்ட உலகமயமாதல் ஜனநாயக வீரர்களின் மருத்துவம், இதை தடுப்பதற்கான வழிவகைகள், இதற்கு எதிரான மருந்துகளின் உற்பத்தி என்று, இந்த யூரேனிய ஆயுதத்தை தொடர்ந்து பாதுகாப்பாக உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு எதிரான மக்கள் மீது எப்படி பயன்படுத்துவது என்றே விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டுச் சபை இந்த யூரேனிய குண்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள்களை மறுத்து, தனது சர்வதேச குற்றத்தை தொடர சபதம் ஏற்று நிற்கின்றது.
ஈராக்கில் ஜனநாயக சுதந்திர ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ், கடந்த பத்து வருடத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளையும், பெண்களையும் ஈவு இரக்கமின்றி அதிகமாக காவு கொண்ட, இந்த யூரேனிய சுதந்திர யுத்தத்தின் விளைவுகளை, ஜனநாயக சுதந்திர செய்தி ஊடகங்கள் மூடி மறைத்து இருண்ட திரையிடுகின்றனர். சமூகத்தை ஆய்வு செய்து தேடிக் கொண்டிருப்போரின் மலட்டு விபச்சாரத்தில், இந்த சர்வதேச குற்றம் கள்ளக் குழந்தையாக மூடி மறைக்கப்படுகின்றது. மெதுவாக கசிந்து வரும் தகவல்கள் சர்வதேச தலையாய மக்கள் விரோத குற்றவாளிகளை, மீண்டும் ஒரு முறை உலகுக்கு பறைசாற்றுகின்றது. யூக்கோசிலாவியா மக்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் அயல்நாட்டு தூதரகங்களைக் கூட இலக்கு தவறாது அழித்த போது, அந்த மக்களின் மீதான யூரேனிய பாதிப்பு, இன்னமும் திட்டமிட்டே சுதந்திர செய்தி மற்றும் ஆய்வுகளால் இருட்டடிக்கப்படுகின்றது. ஜனநாயகம், உலகமயமாதல் மூலதனத்தை விரிவாக்குவதில் சுதந்திரமாக உள்ள போது, சர்வதேச குற்றவாளிகள் தான் அதன் நீதிபதிகளாக இருப்பது இயற்கையாகும். பத்து லட்சக்கணக்கில் ஐக்கிய நாட்டுச்சபையின் தலைமையில் மக்களை கொன்று போடும் சுதந்திர உலகமயமாதல் யுத்த வெறிக்கு எதிரான மக்களின் தீர்ப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார நீதி மன்றங்களில் மட்டும் தான் தண்டனைக்குள்ளாகும்;. பாட்டாளி வர்க்க நீதிமன்றங்களில் இந்த சுதந்திரமான ஜனநாயக குற்றவாளிகளை நிறுத்தும் போராட்டத்தை நோக்கி போராடுவதன் ஊடாகவே, குற்றவாளிகளை தனிமைப்படுத்தி, சர்வதேசிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது எம்முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்;.