தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டம் இன்று ஏகாதிபத்திய நாடுகளின் உலகமயமாதல் ஆக்கிரமிப்பு வலைக்குள் சிக்கி திணறுகின்றது. உலகம் என்பது மையப்படுத்தப்பட்ட அரசியல் பொருளாதார பண்பாட்டு கலாச்சார எல்லைக்குள் வேகமாக தனித்துவங்களை இழந்து வருகின்றது. சுதந்திரமான ஜனநாயகம் என்பது உலகமயமாதலால் எல்லைக்குள் விரிந்த வடிவில் கோரப்படும் போது, இதை மறுப்பது ஜனநாயக விரோதமாகவும், பயங்கரவாதமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. உலகெங்கும் சிதறி பரந்து வாழும் மக்களின் தனித்துவமான பண்பாடுகள், கலாச்சாரங்கள், பொருளாதாரம், அரசியல் என அனைத்தும் இன்று உலகமயமாதலால் அமைதியாகவும், பொருளாதார ஆதிக்கத்தாலும், இராணுவ மிரட்டல் மற்றும் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றது. இதற்கு எதிரான உணர்வுகள் போராட்டமாக மக்களின் வாழ்வியல் பிரச்சனையாக எழுகின்ற வரலாற்றில், தேசியம் முதல் பாட்டாளி வர்க்கப் போராட்டம் வரை உயிர்ப்புள்ள மக்களின் சித்தமாக காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டம் உலகமயமாதலுக்கு எதிரான தேசியமாகவும், வர்க்கப் போராட்டமாகவும் உள்ளடக்கத்தில் இருந்த போதும், இன்று இதை தலைமை தாங்கும் புலிகள் இதை கோட்பாட்டிலும், நடைமுறையிலும் மறுத்து நிற்கின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கும், புலிகளின் தமிழீழத் தாகத்துக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடு, தேசியக் கோரிக்கையின் நியாயமான கோரிக்கைகளை ஏகாதிபத்தியத்திடம் அடகு வைப்பதில் இட்டுச் செல்லுகின்றது.
சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்களின் பண்பாட்டு கலாச்சாரத்தைக் கூட இன அடையாளமாக கொண்டு தாக்கும் அளவுக்கு, தமிழ் மக்கள் மீதான இன வெறுப்பை ஒவ்வொரு தனித் தமிழன் மீதும் கட்டமைத்துள்ளது. தமிழன் என்றால் அவன் பயங்கர வாதி என்ற உணர்வுகளை விதைத்து ஆட்சி அமைக்கும் அதே நேரம், புலிகள் அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராக நடத்தும் எந்த ஒரு தாக்குதலையும் ஏகாதிபத்தியங்கள் தமிழ் மக்களை பயங்கரவாதமாக சித்தரிப்பது நிகழ்கின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை பயங்கரவாதமாக்கி அழிப்பதில் பொதுமைப்படுத்தல் அவசியமாகின்றது. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை, புலிகளின் குறுந்தேசிய வெறிக்குள்ளான இராணுவ நடத்தைக்குள் ஏகாதிபத்தியங்கள் பொதுமைப்படுத்தி, தேசிய சிதைப்பை உலகமயமாக்கின்றது.
விடுதலைப் புலிகளை ஆதரிப்போரும், தமிழ் தேசியம் தொடர்பாக ஆய்வுகள், கட்டுரைகளை வரைபவர்கள் தமிழ் சிங்கள முரண்பாட்டை, சிங்கள இனவாத ஆய்வாளர்கள் போல் மன்னர் காலம் தொட்டு வரலாற்றை இனவாதமாக்கின்றனர். அவர்கள் தமது தமிழ் தேசிய குறுங்குழுவாதத்தைப் பலப்படுத்த, தமிழ் சிங்கள மன்னர்கள் மொழி அடிப்படையில் பிரிந்து போராடியதாக சோடித்துக் காட்டுவதில் அதிகமாக தமது தமிழ் இனவாதத்தை கட்டமைத்து, வரலாற்றை இருட்டடிக்கின்றனர். உலக வரலாற்றில் மன்னர் வரலாறுகளில் என்றுமே மொழி சார்ந்த யுத்தங்கள் நடந்ததில்லை. அதாவது மொழி சார்ந்த யுத்தம் என்பது மன்னர்கள் வரலாற்றில் உலகில் எங்குமே இருந்ததில்லை. மதம் சார்ந்த யுத்தங்களே பொதுவாகவும், பாரம்பரிய மன்னர்கள் சார்ந்து பரம்பரை அமைப்பு சார்ந்த யுத்தங்களே இங்கு அடிப்படையாக இருந்துள்ளது. இவ்யுத்தங்கள் பின்னணியில் வர்க்கத் தன்மையும், சில வர்க்கத்தின் நலன்களும், அதன் அடிப்படையாக இருந்துள்ளது. இன்னொரு மொழியை பேசுகின்றான் என்ற ஒரே காரணத்தால் யுத்தம் நடக்கவில்லை. மொழி சார்ந்த யுத்தம் என்பது மதத்தின் அழிவையும், தேசங்களின் தேசிய பொருளாதார உருவாக்கத்திலும் இருந்தே உயிர்தெழுந்தது. தேசங்கள் விரிந்த பரப்பில் தேசிய பொருளாதாரத்தை கட்டமைத்த போதே, மொழி மீதான வன்முறை அடிப்படையாகியது. இன்று தேசிய விடுதலையை வெறும் மொழி சார்ந்து கட்டமைக்கின்ற போது, அது இனவாதமாக மாறிவிடுகின்றது. தேசியம், தேசிய பொருளாதாரம் சார்ந்தது என்பதை மறுக்கின்ற புலிகள், மொழி சார்ந்து குறுகிய இன தேசிய வெறியர்களாக மாறிவிடுகின்றனர்.
மாவீரர் தின உரைகள் பல குறுகிய இனவாத கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டு, ஆணாதிக்கத்துடன் கூடிய பிற்போக்கு யாழ் உயர் சாதி நிலப்பிரபுத்துவ பண்பாட்டை வெளிப்படுத்துவதை புலிகளால் தடுக்க முடியவில்லை. சர்வதேச ரீதியாக புலிகள் மேலான நிர்ப்பந்தம் மூலம் பேச்சவார்த்தைக்கு உடன்பட வைத்தது, அதையே புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரையில் முக்கியமான விடையமாக்கியது முதல், போர் நிறுத்தம் செய்ய வைத்தது வரை நடந்த ஏகாதிபத்திய ராஜதந்திர நகர்வுகள், அரசை நெருக்கடிக்கு நகர்த்தியுள்ளது. இது புலிகளின் வரலாற்றில் அரசியல் ராஜதந்திர நகர்வில் முதன் முதலாக தற்காலிகமான வெற்றிகரமான ஒரு அரசியல் நடத்தையாக இருந்த போதும், இதை முன்வைத்த முக்கிய உரைகளில் காணப்படும் மற்றைய கூறுகள் பிற்போக்காக காணப்படுகின்றது. இவை எல்லாம் ஒருங்கே பார்க்கின்ற போது, பேச்சுவார்த்தை மற்றும் யுத்த நிறுத்தம் புலிகளின் சொந்த முடிவல்ல (இது பற்றி புலிகளின் மாவீரர் தின உரைகள் உறுதி செய்கின்றன), ஏகாதிபத்திய நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட முடிவைக் காட்டுகின்றது. இன்று வெற்றிகரமான அரசியல் நகர்வாக கருதப்படும் இந்த ராஜதந்திர நடத்தைகளின் பின்னணியில் ஏகாதிபத்தியங்கள் இருப்பதால், ஆபத்தான அடுத்த நெருக்கடியை புலிகளுக்கு எதிராக இதன் பின்னணியில் கொண்டிருப்பது தெளிவானதாகும்.
புலிகளின் மாவீரர் தின உரைகளுக்குள் காணப்படும் தேசிய விரோத கண்ணோட்டங்களை இதன் பின்னணியில் பார்ப்போம். புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையில் "... எமது தேசத்தின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் வாசற்படியை அண்மித்து நிற்கின்றன. யாழ்ப்பாணத்தின் கழுத்தைத் திருகிய படி குடாநாட்டை வன்னி மாநிலத்துடன் துண்டித்து..." என்று தொடர்கின்றார். இது போல் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் யாழ்ப்பாணம் மீதூன புலிகள் தாக்குதல் நடத்த முன்முயற்சி எடுத்ததை அடுத்து, உலக நாடுகளிடம் சிங்கள இனவெறி அரசு கையேந்திய நிகழ்ச்சி பற்றி " யாழ்ப்பாணத்தை பிடித்து தனியரசாக அமையப் போகின்றது" என்ற பேச்சுகள், எதை எமக்கு தேசியம் சார்ந்து சுட்டிக் காட்டுகின்றது. புலிகளின் போராட்டம் யாழ்ப்பாணப் போராட்டமாகவும், புலிகளின் தாகம் யாழ்ப்பாண கணணோட்டமாகவும் வெளிப்படுகின்றது. அதாவது "யாழ்ப்பாணத்தை பிடித்து தனியரசாக அமையப் போகின்றது" என்பது எப்படி அது மட்டும் தனியரசாக இருக்கும்;. தமிழீழம் யாழ்ப்பாணமா! தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் யாழ்ப்பாண மையவாதமாக இருப்பதையும், அதையே தாகமாக பிரகடனம் செய்வது குறுந்தேசிய வாதத்தின் அபாயத்தை மீண்டும் ஒரு முறை எமக்கு காட்டுகின்றது. பாலசிங்கத்தின் லண்டன் மாவீரர்தின உரையில் சிங்கள இனவெறி அரசுக்கு தலைமை தாங்கும் சிங்கள இனவெறி பிரதமர் உரைகள் பற்றி குறிப்பிடும் போது "கிராமப்புரத்தான்" என்றே கிண்டல் அடிக்கின்றார். இதன் மூலம் நகரவாசிகளின் பண்பாடு உயர்ந்தவை என்பதே, புலிகளின் அரசியல் ஆலோசகரின் சமூக கண்ணோட்டமாகும். இவை தான் யாழ்ப்பாணம் பற்றியும், யாழ் மைய வாதத்தையும் வெளிப்படுத்தும் உரைகளாகின்றன.
புலிகளுக்கு அவர்களின் நீண்ட பல போராட்டங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது, புலிகளை பாதுகாத்த கிராமங்கள் பற்றியும், புலிகளை ஆயிரமாயிரமாக ஆயுதபாணியாக்கிய "கிராமப்புரத்தான்" பற்றிய ஒரு சமூக கண்ணோட்டம் இன்றி, "எமது தேசத்தின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் வாசற்படியை அண்மித்து நிற்கின்றன" என்று அவனுக்கு எதிரான யாழ்ப்பாண கலாச்சாரத்தையும், யாழ்ப்பாண தனிநாட்டையும் முன்வைப்பது, எமது தேசத்தின் சுயநிர்ணயத்தை கொச்சைப்படுத்துவதாகும். யாழ்ப்பாண பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த பொருளாதார இலக்குகள் படுபிற்போக்கானவை. யாழ் பொருளாதாரம் பூர்சுவா கண்ணோட்டம் கொண்ட தப்பியோடும் சுயநலத்தை அடிப்படையாக கொண்டது. நிலப்பிரபுத்துவ வக்கிரத்துடன் ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்டதுடன், சாதி ஆதிக்க வக்கிரத்தையும் கொண்டது. கிழக்கு மற்றும் வன்னி மக்கள் பற்றி, யாழ் பண்பாடு கலாச்சார கண்ணோட்டம் இழிவாக மதிப்பிடுகின்றது. எவ்வளவுக்கு மற்றைய பண்பாட்டு கலாச்சாரத்தை இழிவாக வரையறுக்க முடியுமோ அந்தளவுக்கு, யாழ் பண்பாடு அம்மக்களையிட்டு கொச்சைப்படுத்துகின்றது. தமிழ் மக்களின் பண்பாடு என்பது, யாழ் சாதிய ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக்கு எதிரானதாக இருக்க வேண்டும்;. வன்னி மற்றும் கிழக்கின் பண்பாட்டை யாழ் பண்பாட்டுடன் ஒப்பிடும் போது, சாதி மற்றும் ஆணாதிக்கம் குறைந்தளவிலேயே கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் பொதுப் பண்பாடு இந்த மக்கள் சார்ந்தே புரட்சிகரமாக வேண்டும். அதாவது இன்று புலிகளின் பாதுகாப்புக்கும், புலிகளின் இராணுவமயமாக்கலுக்கும் எந்த மக்கள் தியாகத்துடன் துணையாக நிற்கின்றனரோ, எந்த மக்கள் புலிகளின் வெற்றிக்கு துணையாக நிற்கின்றனரோ அவர்கள் சார்ந்து தேசியம் உயர்த்தப்பட வேண்டும்; இன்றைய யாழ் மையவாத குறுந்தேசியத்துக்கு பதில், போராடும் மக்கள் சார்ந்து தேசியம் தனது சுயநிர்ணயத்தை போராடிப் பெற வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் நாம் நிற்கின்றோம். அத்துடன் "யாழ்ப்பணத்தின் கழுத்தைத் திருகியபடி குடாநாட்டை வன்னி மாநிலத்துடன் துண்டித்து.." என்ற வாதம் இந்துமதத்தின் பார்ப்பணிய வருணச்சித சாதிய எல்லைக்குள் வெளிப்படுகின்றது. பார்ப்பான் தலையில் பிறந்ததாக கூறி, அவனின் பண்பாடும், கலாச்சாரமும், பொருளாதார ஆதிக்கமும் உயர்ந்ததாகவும், அனைத்தின் மூலமாகவும் பார்ப்பணியம் உருவாக்கியுள்ளது. இதையே புலிகள் யாழ் பண்பாடு கலாச்சாரத்தை தமிழீழத்தின் உயர் பண்பாடாகவும் காட்டி, யாழ்க்குடாவை தமிழீழத்தின் தலையாக சித்தரித்ததன் மூலம், தமிழ் தேசியம் குடாநாட்டு பொருளாதார பண்பாட்டு கலாச்சாரத்தினை அடிப்படையாக கொண்டு, மற்றையவற்றை அடக்கியாளுகின்றது என்பதற்கு இவ்விளக்கமே மறைமுகமாக போதுமானது. தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை என்ற தேசிய கண்ணோட்டங்கள், எப்போது கைவிடப்பட்டன? மற்றைய கலாச்சாரங்கள் யாழ் கலாச்சாரத்துக்கு கீழ்ப்பட்டவையா? எப்படி? அல்லது யாழ் கலாச்சாரம் எப்படி மற்றையவற்றை விட மேலானவை? யாழ் "கலாச்சார தலைநகரம்" என்பது என்ன?
யாழ் குறுகிய தேசிய கண்ணோட்டத்தில் இருந்தபடி பாலசிங்கம் தனது மாவீரர் தின உரையில் "மோட்டுச் சிங்களவன்" என்று அழைத்த போது தமிழ் மோட்டுப் பெருமைக்கு கரகோசத்தை சபை வழங்கியது. சிங்கள மக்களை "மோடன்" என்று பொதுமைப்படுத்தி மோடனாக்கியது, அரசியலில் சூனியமானது தமிழனின் மோட்டுத்தனமல்லவா! இது ஒரு அரசியல் தலைவரின், ஏன் புலிகளின் முக்கிய அரசியல் ஆலோசகரின் உரைகளில் வெளிப்படும் போது, இது யாழ் குறுந்தேசிய குறுகிய அரசியல் வக்கிரத்தை காட்டுகின்றது. மேலும் அவரின் மாவீரர் தின உரையில் சந்திரிக்கா பற்றி, சென்ற மாவீரர் தின உரையில் பேசியது பற்றி, நோர்வே கேட்டதைப் பற்றி நக்கலடித்த போது "சின்ன சின்ன ஆசைகள் எனக்கு உண்டு" என்று கூறி தனது ஆணாதிக்க பாலியல் வேட்கையூடாக சந்திரிக்காவின் பெண் அடையாளம் ஊடாகவே தேசியத்தை கொச்சைப்படுத்தினார். இது போன்று பல்வேறு முரண்பட்ட இனவாதிகளை குறியீடாக்கி, அவர்களை குறித்து சந்திரிக்கா தனது மடியில் பல்வேறு தேள் மற்றும் கொடுக்கனை கட்டிவைத்துள்ளார் என்றார். அது ஒரு நாளைக்கு கடிக்கக் கூடாத இடத்தில் கடித்துவிடும் என்றார். சந்திரிக்கா பெண் என்ற அடையாளத்தை அடிப்படையாக கொண்டு அவரின் பெண் உறுப்பை குறியீடாக கொண்டு செந்தில் பாணியில் ஆணாதிக்க பகிடி விட்ட போது, கூடியிருந்த கூட்டம் விசிலடித்து கரகோசம் செய்வதை தொலைக் காட்சிப் பதிவுகள் பதிவு செய்து ஜரோப்பிய வான் அலைகளின் ஊடாக நேரடியாக உடனுக்குடன் ஒலிபரப்பத் தவறவில்லை. பெண்ணின் உறுப்புகள் மீது கிண்டல் அடித்தே பல்கலைக்கழக பகிடிவதை என்னும் "ராக்கிங்" என்ற வதையும் சரி, பெண்களை வீதி வதை செய்யும் இளைஞர்கள் சரி, செந்தில் சினிமா ஆணாதிக்க பகிடிகள் சரி எல்லாம் ஒரே வகையில் கட்டமைக்கப்படுகின்றது. இப்படி கிண்டல் செய்வது புலிகளின் யாழ்ப்பாண நிர்வாக முன்னைய சட்டக் கோவைகள் தெளிவாக தடைசெய்து, தண்டனைக்குரிய குற்றமாக தண்டித்தது. ஆனால் அதை சிங்களப் பெண்ணுக்கு புலிகளின் அரசியல் ஆலோசகர் செய்கின்ற போது விசிலடித்து கைதட்டுவது குற்றமற்றுப் போகின்றது. புலிகளின் பெண் விடுதலை பற்றியும், ஆணாதிக்க ஒழிப்பு பற்றிய நம்பிக்கையையும் கொண்டிருப்போர், புலிகளின் முக்கிய அரசியல் ஆலோசகரின் ஆணாதிக்க கிண்டல் மூலம், அரசியல் எதிரிகளை இழிவுபடுத்திய நிகழ்வுகள், தமிழ்ப் பெண்களின் மீதான ஆணாதிக்க விடுதலை என்பது கற்பனை என்பதையே மீளவும் ஒரு முறை பறைசாற்றுகின்றது. அரசியல் எதிரி எவ்வளவு இழிவானவனாக இருந்தாலும், அவனை அரசியல் ரீதியாக அம்பலம் செய்ய வேண்டும்;. அதைவிடுத்து "மோடன்", மற்றும் பெண் உறுப்புகளை சார்ந்து கிண்டல் அடித்து விசில் சத்தத்தில் அரசியல் வளர்க்கும் போது, தமிழ் மக்களின் தேசியமும், தியாகமும் கொச்சைப்படுத்தப்படுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை சந்திரிக்காவின் பெண்மை மீதான, ஆணாதிக்கம் கொண்டு கோரப்படவில்லை. அப்படி அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் கோருவது, கிண்டல் அடிப்பது, தமிழ் தேசியத்தை குறுகிய ஆணாதிக்க யாழ் மையவாத இனவாதத்துக்குள் மேலும் ஆழமாக சிதைப்பதை குறித்து நிற்கின்றது. முன்பு சிங்கள இனவெறி பாசிச அரசு புலிகளின் பெண் போராளிகளை கொன்று சடலங்களை கைப்பற்றிய போது, இறந்த பெண்களின் சடலங்களை நிர்வாணப்படுத்தி, அதை தொலைக் காட்சியில் படமாக்கி ஆணாதிக்க சிங்கள இனவாத யுத்தத்துக்கு ஆள்திரட்டிய போது, இழிந்து போன ஆணாதிக்க மனித நாகரிகத்தை மீண்டும் ஒரு முறை இனம் சார்ந்து நிறுவியது. பாலசிங்கத்தின் பெண்கள் பற்றிய பார்வை இது போன்று இழிவாக இருப்பதும், எமது தேசவிடுதலைப் போராட்டத்தின் பிற்போக்குத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.
மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலப்படுத்தும் வகையில், புலிகளின் தவறுகளை சுயவிமர்சனம் செய்யத் தவறியவற்றைப் பார்ப்பது மேலும் அவசியமாகும்.
1.தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றி புலிகளின் ஊடாக தியாகம் புரிந்த, அண்ணளவாக 18 ஆயிரம் போராளிகள் சரி, புலிகள் உள்ளிட்ட மாற்று இயக்கத்தில் துரோகம் அல்லாத வழியில் உட்கட்சிப் போராட்டம் மற்றும், மாற்று இயக்க படுகொலைகள் ஊடாக தியாகம் புரிந்த சில ஆயிரம் போராளிகள் சரி;, அண்ணளவாக ஒரு லட்சம் மக்களின் இழப்புகள் சரி, பல பத்தாயிரம் விதவைகளை உருவாக்கியும், சில ஆயிரம் குழந்தை அனாதைகளையும், சில பத்தாயிரம் அங்கவீனர்களையும், சில லட்சம் அகதிகளையும், சில ஆயிரம் காணாமல் போயுள்ள நிலையிலும், சில பத்தாயிரம் குழந்தைகள் கல்வியை இழந்தும், சில பத்தாயிரம் மனநோயாளிகளை உற்பத்தி செய்தும், பல ஆயிரம் பேர் உறவுகளை இழந்து தனிமையில் செத்துக் கொண்டும், பல நூறு கோடி சொத்துகளை இழந்த எமது தேசிய விடுதலைப் போராட்டம், இறுதியாக எதை எமக்கு பெற்றுத் தரப் போகின்றது என்பது எமது அடிப்படையான கேள்வியாகும். இங்கு எமது தேசியம் பற்றி நாம் மீள ஒருமுறை சுயவிமர்சன நோக்கில் பார்ப்பது அவசியமானது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு அவசியமானதும் நிபந்தனையானதுமாக இருக்கின்றதோ, அந்தளவுக்கு தேசியத்தின் அடிப்படைக் குறிக்கோள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு தேசத்தின் தேசியம், தனது பொருளாதாரத்தை கட்டவும் பாதுகாக்கவும், அதன் பண்பாட்டுக் கலாச்சாரத்தை உறுதி செய்து மொழியை வளர்த்தெடுக்கவும், சொந்த நிலத் தொடர் மீது தனது தேசிய பொருளாதாரத்தை நிறுவுவதாகும்.
தமிழ் மக்களின் சயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட தேசியத்தின், தேசிய பொருளாதாரத்தை அரசியல் ரீதியாக முன்வைப்பதை திட்டமிட்டே புலிகள் புறக்கணிக்கின்றனர். இதற்கு மாறாக தமிழ் இன அரசு பற்றி மட்டும் பேசுகின்றனர். தமிழ் ஆளும் அரசு பற்றி மட்டும் முன்னிறுத்தி தமிழீழமாக சித்தரிப்பது, தேசியத்தின் அடிப்படைக் கூறை மறைமுகமாக கைவிடுவதாகும்;. தேசியம் என்பது தேசத்தின் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, அதற்கு எதிரான அனைத்து சக்தியையும் எதிர்ப்பதாகும். புலிகளின் அரசியலில் அவைகளை வெறும் சிங்கள அரசு சார்ந்த மொழி சார்ந்ததாக மட்டும் காட்டியதன் மூலம், தேசத்தின் பொருளாதார பண்பாட்டுக் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில், அன்னிய பொருளாதாரமும் பண்பாடும் கலாச்சாரமும் வேகமாக ஊடுருவி பாய்கின்றது. இது தேசத்தின் தேசியத்தை சிதைத்து அரித்து தின்கின்றது. இது தமிழ் மக்களின் தேசிய தியாகங்களை ஆழமாக தனக்கு உரமாக்கின்றது. தேசிய வரையறையை புலிகள் சரியாக முன்வைத்து, எதிரிகளை தனிமைப்படுத்தி போராடாத வரை, தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் தியாகங்களும் சிதைக்கப்பட்டு, வெறும் தமிழ் அரசை கோரும் அடிப்படையைக் கொண்டு, யாழ்குறுந்தேசியமாக மேலும் ஆழமாக சிதைந்து அழிவது தவிர்க்க முடியாது.
2.சர்வதேச ரீதியாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் மீது ஏகாதிபத்திய நேரடி தலையீட்டு அபாயம் நெருங்கியுள்ள நிலையில், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் உரிமையை அங்கீகரிக்கவும், அவர்களுக்கு தமிழ் குறுந்தேசியம் இழைத்த அநீதியை சுயவிமர்சனம் செய்து, அவர்களை தேசியவிடுதலைப் போராட்டத்தின் பால் அணிதிரட்ட தவறியது, தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ் குறுந்தேசிய வெறிக்குள் தொடர்ந்தும் நிலைநிறுத்தி தனிமைப்பட்டு அழிவை கோருவதையே, மீண்டும் ஒருமுறை புலிகளின் அரசியலாக உள்ளது. சிங்கள பாசிச இனவெறி அரசால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட வரலாற்றில், தமிழ் மக்களின் போராட்டம் எவ்வளவு நியாயமானதோ, அதேபோல் சகோதர இனமான முஸ்லிம் சிறுபான்மை மக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ் மக்கள் ஏற்று ஆதரித்து உதவுவதும் தமிழ் தேசியத்தின் வரலாற்றுக் கடமையாகும்;. இது அவர்களின் சொந்த விடுதலையை வென்று எடுக்க உதவுவதுடன், தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை பலப்படுத்தி ஜனநாயகப்படுத்தும்;;. தேசிய விடுதலைப் போராட்டம் மேலும் உயர்ந்த வகையில் வளர்ச்சி பெற, புதிதாக நேரடியாக மிரட்டுகின்ற அன்னிய ஏகாதிபத்திய தலையீட்டு ஆக்கிரமிப்புகளை கூட வெற்றிகரமாக முறியடிக்கும் அடிப்படையாக இவை அமையும்.
2.1. சிங்கள மக்களையும், சிங்கள அரசையும் வேறுபடுத்தி எதிரியை இரண்டு படுத்தப்பட வேண்டிய கடமையை புலிகள் செய்ய மீளவும் தவறினர். சிங்கள அப்பாவி மக்களின் ஆதரவை அனுதாபத்தை பெறும் வகையில், சிங்கள மக்களுக்கும் சிங்கள தேசியத்துக்கும் எதிரான சிங்கள இனவெறி ஏகாதிபத்திய கைக்கூலி அரசை அம்பலம் செய்து, சிங்கள மக்களின் பால், நேசமான உறவை கோரியிருக்க வேண்டும்;. சிங்கள மக்களை தேசியத்தின் எதிரியாக பிரகடனம் செய்யும் புலிகளின் அரசியலை மாற்றுவது, உடனடிக் கடமையாக இன்று உள்ளது. சிங்கள அப்பாவி மக்கள் தமிழ் மக்களின் நெருங்கிய நண்பர்கள் என்பதும், அவர்களை தனது இனவாதத்துக்கு அணிதிரட்டும் சிங்கள அரசின் இனவெறித்தனத்தை அம்பலம் செய்து தனிமைப்படுத்தி, சிங்க மக்களை இனவெறி ஏகாதிபத்திய கைக்கூலி அரசில் இருந்து தனிமைப்படுத்தி நடுநிலைப்படுத்தி வென்றெடுப்பது, இன்றைய நெருகடியான உலகமயமாதல் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கட்டத்தில் உடனடிப் பணியாக புலிகள் முன் காணப்படுகின்றது.
3.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் போராட்டத்தில், தமிழ் மக்களின் ஜனநாயகத்தை அங்கீகரிக்க தவறியது, வரலாற்று ரீதியாக தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதாகும். இது தேசியத்தின் உட்க்கூறுகளை அழித்து நாசப்படுத்துகின்றது. உலக வரலாற்றில் எங்கும் காண முடியாத வகையில், அதுவும் விடுதலைப் போராட்டம் நடக்கின்ற நிலையில், அதிக எதிரிகளை கொண்ட விடுதலைப் போராட்டமாக புலிகளின் தேசியம் காணப்படுகின்றது. உலகில் எந்த விடுதலைப் போராட்டமும் சந்திக்காத வகையில், எதிரிகள் என்ற பெயரில் இவ்வளவு அழித் தொழிப்பை நடத்தியது, இதுவே உலக வரலாற்றில் முதல் தடவையாகும்;. நண்பன், எதிரி பற்றி புலிகளின் குறுகிய கண்ணோட்டம் எதிரிகளை அதிகப்படுத்தியதுடன், அழித்தொழிப்பை தொடர்ச்சியாக அதிகரிக்க வைத்துள்ளது. தன்னையே தேசத்துக்கு தியாகத்துடன் அர்ப்பனிக்கும் சுயநலத்தை துறந்த தனி உயிர்களைக் கூட, தேசத்தின் தியாகத்தின் பெயரில், தனிமனிதர்களைக் கொல்ல தற்கொலை போராளியாக்கி, அர்த்தமற்ற வகையில் தியாகம் செய்யப்படுகின்றது. தனிமனிதர்களை எதிரியாக்கி கண்கணித்து அழிக்க பெரும் தொகை பெருள்வளமும், உயிரும், மனித வளமும் அர்த்தமற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றது. உலக வரலாற்றில் எங்கும் காணமுடியாத வகையில் எதிரியின் பெயரில் புலிகள் நடத்தும் அழித் தொழிப்புகள், மேலும் எதிரியை தோற்றுவித்ததுடன், அது மேலும் மேலும் அகன்று செல்லுகின்றது. கண்மூடித்தனமாக எதிரிகளை வரையறுத்து அழித்தொழிப்பது, எதிரியை மேலும் தோற்றுவிப்பதுடன் அது அதிகரித்து செல்வதை புலிகளின் வரலாறு உலகுக்கு படிப்பினையாக்கியுள்ளது. தமிழ் மக்களின் ஜனநாயகத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் போராட்டம் எதிரியை சரியாக இனம் காணவும், அதை குறைக்கவும் வழிகோலும். ஏகாதிபத்திய உலகமயமாதல் தமிழ் தேசியத்தை சிங்கள இனவெறி அரசின் கைக்கூலித்தனத்துடன் இணைந்து ஒடுக்கும் நிலையில், அதை எதிர்த்து போராடும் அனைத்து சக்திகளின் ஆதரவைப் பெறும் வகையில், தேசிய விடுதலைப் போராட்டம் ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக இல்லாத வரை, எமது தேசியம் என்பது அர்த்தமற்ற தியாகத்தையே விளைவாக்கி சிதைவதை யாரும் தடுக்க முடியாது.
இன்று ஏகாதிபத்தியம் உலகமயமாதலை விரைவாக்கி அதையே பண்பாடாக கலாச்சாரமாக பொருளாதார வடிவமாக்கி நில எல்லை கடந்து, அரசை கைக் கூலிகள் கொண்டு உருவாக்கி வரும் போக்கில் தேசிய அரசுகளின் தேசியம் பொருளாதாரம் சிதைப்பது மட்டுமே, உலகமயமாதலின் அடிப்படையான நிபந்தனையாகும்;. இந்த வகையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிப்பதில் சிங்கள இனவெறி கைக்கூலி அரசுக்கு ஏகாதிபத்தியங்கள் முண்டு கொடுக்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே சமாதானம் என்ற பெயரில் நோர்வே தலைமையில் நடக்கும் பேச்சுவார்த்தைகள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை கோரும் அதன் தேசிய அடிப்படைக் கோரிக்கைகளை, யுத்தமல்லாத வழிகளில் சமாதானப் போர்வையில் அழிப்தொழிப்பதில் உலகமே அணிதிரண்டு நிற்கின்றது. புலிகளின் முதல் யுத்த நிறுத்தத்தை ஏகாதிபத்தியங்கள் தமது உலகமயமாதல் அடிப்படையில் ஏற்படுத்திய போது, அரசு யுத்தத்ததை தொடர்ந்தன்; மூலம், சிங்கள மக்களின் அதிர்ப்திகளை இனவெறி சார்ந்து ஒழித்துக் கட்டி, புதியதொரு கட்டத்தை தயார் செய்தது. இந்த யுத்த தொடர்ச்சியில் உலகமயமாதலின் நிபந்தனையை அடிப்படையாக கொண்டு, இலங்கை நணயத்தை சுதந்திரமான டொலரின் கட்டுப்பாட்டுக்குள் விட்டதன் மூலம், இலங்கையை அமெரிக்காவின் நேரடி காலனியாக மற்றும் புதியதொரு நடவடிக்கையை எடுத்தது. இலங்கையின் பணம் படிப்படியாக ஒழித்துக்கட்டி, டொலரே இலங்கையின் நணயமாக விரைவில் மாற்ற இது வழிகாட்டியுள்ளது. இது ஒரு விரிவான ஆய்வுக்குரிய விடையமாக இருப்பதால் அடுத்த இதழில் பார்ப்போம்;. அத்துடன் பொருட்களின் விலையை தீடிரென அதிகரிக்க வைத்து, இந்த அதிகாரிப்பு யுத்தத்ததை வெற்றிகரமாக நடத்த என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. புலிகளின் ஒருதலைப்பட்சமான இரண்டாவது யுத்த நிறுத்தம் கூட, புலிகளின் முடிவுகளுக்கு உட்பட்டவையாக இருக்கவில்லை. அவை முன் கூட்டியே ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்த முடிவுகளையே, புலிகள் மீளவும் அமுல்படுத்தியதே இங்கு நிகழ்ந்துள்ளது. அடுத்து பேச்சு வார்த்தை, யுத்த நிறுத்தம் என அனைத்தும் இனி புலிகளோ, இலங்கை அரசோ தீர்மானிக்கும் விடையமாக இனியும் இல்லை. அது ஏகாதிபத்தியத்தின் முடிவுகளாகிவிட்டதை காண மறுப்பவர்கள்; ஆரூடம் கூறுவதிலும், ஏகாதிபத்திய தலையீட்டின் முடிவுகளை காணத் தவறி ஆய்வுகள் செய்து வெளிப்படுத்துவது, அரசியல் சூனியத்தின் ஒரு வெளிப்பாடாகும். இது வரப்போகும் அபாயங்களை காணமறுத்து, அதை எதிர் கொள்ள திரணியற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை, தாக்குதலை நிறுத்ததல் என அணைத்தையும் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்துக்கு விடப்பட்டு, அவர்களே தீர்மானிக்கும் இன்றைய நிலையில், புலிகளின் அரசியல் இராணுவ சுயதன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. எதிர்காலம் என்பது இன்றைய கடந்த புலிகளின் சுய நடத்தைக்கு நேர் எதிரானதாகவே இருக்கமுடியும். இனியொரு தேசிய யுத்தம் எனின் ஏகாதிபத்தியங்களின் விரிவான தலையீட்டினைப் பொறுத்து, ஏகாதிபத்திய எதிர்ப்பாக அல்லது புலிகளின் ஒருபகுதியின் துரோகத்தினுடன் தான் நிகழமுடியும் அல்லது முற்றான சரணகதி என்ற பாதையையே இன்றைய நிலைமை சுட்டிக்காட்டுகின்றது.
இந்நிலையில் ஏகாதிபத்தியம் பொருளாதார பண்பாட்டு கலாச்சாரம் சார்ந்து நடத்தும் தேசிய அழிப்பு பற்றி புலிகள் மௌனம் சாதித்து, அதையே தனது பொருளாதார பண்பாட்டு கலாச்சார கொள்கையாகக் கொண்டுள்ள நிலையில், ஏகாதிபத்திய தலையீடு தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையையும், அதன் தியாகத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும் அபாயத்தை தனது அரசியல் ஆணையில், நடத்தையில் கொண்டே இருக்கின்றனர். நோர்வேயின் பின்னணியில் கூட்டாக இயங்கும் ஏகாதிபத்தியங்கள், தனது நேரடி மற்றும் மறைமுக ஆக்கிரமிப்பை உலகமயமாதல் சார்ந்து நடத்த தயார் செய்கின்றன. புலிகளின் கடந்த கால அரசியல் முன்னெடுப்புகள் ராஜதந்திர தன்மையை இழந்து இராணுவ வாதத்துக்குள் குறுகிவிடும் வரலாற்றில், ஏகாதிபத்திய நரித்தனங்களை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் ஆளுமையை புலிகள் அரசியலில் இழந்தே இருக்கின்றனர். பேச்சு வார்த்தையை குறுகிய இராணுவ நோக்கில் அணுகுவதை தவிர்த்து, அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய அமைப்பை அம்பலம் செய்து, சொந்த தேசிய பொருளாதார அமைப்பை உயர்த்தி பாதுகாக்கும் வகையில், சுயநிர்ணயத்தை உயர்த்தும் மக்களின் ஜனநாயகத்தை ஆதாரமாக கொண்டு பேச்சுவார்த்தையை எதிர் கொள்ளவேண்டும்;. திம்புக் கோரிக்கையை மட்டும் கோருவதை விட்டு, அதை விரிவாக அதன் உள்ளடகத்தை ஆராயவேண்டியது இன்றைய அரசியல் அடிப்படையாகின்றது. திம்புக் கோரிக்கையையும், சுயநிர்ணயமும் இன்று எல்லாத் தரப்பினதும் பொதுக் கோரிக்கையாக உள்ள நிலையில், அதன் அரசியல் உள்ளடகத்தை சரியாக உயர்த்தி போராட வேண்டியது, பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான கடமையாக இன்று உள்ளது. இதைக் கைவிட்டு அனைத்து வர்க்கத்தினாலும் கோரப்படும் திம்புக் கோரிக்கைக்கு வால் பிடிப்பது, அரசியல் ரீதியாக வர்க்க சரணாகதியை ஆணையில் வைப்பதாகிவிடுகின்றது. சுயநிர்ணய அடிப்படையில் சுவீடன் நோர்வேயில் இருந்து பிரிந்து கடந்த கால அரசியல் முன்னெடுப்பை அடிப்படையாக கொண்டு, நோர்வே தலையீட்டை தேசியத்தின் பால் அரசியல்படுத்தி ஜனநாயகப்படுத்த வேண்டும்;. தேசிய சுயநிர்ணயக் கோரிக்கையை ஜனநாயகப்படுத்தி, போராடும் மக்களின் ஜனநாயகத்தை முரணற்ற ஜனநாயகத்தில் ஏற்று, உலக மயமாதலுக்கு எதிரான உலக மக்களின் ஆதரவைப் பெறுவது மட்டுமே, தேசிய பாதுகாப்புக்கும் அதன் வெற்றிக்கும் அடிப்படையாகும்;. இதை புலிகளும் சரி அல்லது தமிழ் மக்களும் சரி அடிப்படை அரசியலாக கொள்ளாத வரை, இப்போராட்டம் தேசியத் தன்மை இழந்து ஏகாதிபத்தியததுக்கு சேவை செய்யும், தமிழ்மொழி கைக்கூலிகளை கொண்ட தேசிய பொம்மைகளையே உருவாக்கவே எமது அளப்பெரிய தியாகம் வழிகாட்டும். இதை யாரும் எந்தத் தலைவரும் விரும்பினாலும் விரும்பாவி;ட்டாலும் மாற்ற முடியாது.