யாரைக் கொண்டு தான் புரட்சியை நடத்தமுடியும்? சில புரட்சியாளர்களின் புரட்சிக் கோசம், மக்களுக்கு எதிரான சதியாகிவிடும். நாம் ஒடுக்குமினமாக இருந்தால், ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடவேண்டும். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் இனத்துக்குள் தான் நடத்தவேண்டும். இனவொடுக்குமுறையை அந்த இனம் சார்ந்து முன்னெடுப்பதால், அந்த மக்களை அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். சிங்களப் புரட்சியாளர்கள் அதைச் செய்யாது, ஒடுக்கப்பட்ட இனத்தை அணுக முற்படுகின்றனர். ஒரு தவறான அரசியல் பாதை.
ஒடுக்கும் இன மக்களை தம் இனம் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டுவதன் மூலம் தான், ஒடுக்கப்பட்ட இனத்தை வெல்லமுடியும். இதுவல்லாத அரசியல் நடைமுறை தவறானது மட்டுமல்ல, இனவாதத்துடன் சமரசம் செய்துகொண்டு அதை பாதுகாக்கின்றது.
புரட்சியை திணிக்கவும் முடியாது. புரட்சியை ஏற்றுமதி செய்யவும் முடியாது. சரியான கருத்து என்பதாலோ, ஒரு உண்மை என்பதாலோ, அதை மக்கள் ஏற்றுவிடுவார்கள் என்று அர்த்தமல்ல. வரலாற்று ரீதியான காரணங்கள் முதல் தொடரும் முரண்பாடுகளும், இன்னும் பற்பல காரணங்களும் இதைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது. இதனைப் புரிந்து கொண்டுதான் மக்களை அணிதிரட்ட வேண்டும்.
மற்றைய இனத்தின் தப்பபிப்பிராயங்களை நீக்க, சொந்த இனத்துக்குள் நாம் அதற்காக போராடவேண்டும். தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் கூடத்தான் இனவாதத்தில் சிக்கிக் கிடக்கின்றனர். இதை சிங்கள புரட்சியாளர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இந்த இனவாதத்தில் இருந்து தமிழ்மக்கள் விடுபட முடியாமல் இருப்பதற்கு காரணம், தொடர்சியாக அவர்கள் மீது தொடரும் இனவொடுக்குமுறை தான் முக்கியமான பங்கை ஆற்றுகின்றது. சிங்கள மக்களை இந்த இனவாதத்தில் இருந்து விடுவிக்க சிங்கள புரட்சியாளர்கள் போராடும் போது தான், தமிழ்மக்கள் அதில் இருந்து விடுபடுவார்கள். இதுவன்றி தமிழ் மக்களை இனவாதத்தில் இருந்து மீட்டெடுப்பது பற்றிய, சிங்கள புரட்சியாளர்களின் உத்திகள் வெற்றிபெறாது.
மறுதளத்தில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இனவாதம், மேலாதிக்கம் சார்ந்தது, ஒடுக்குமுறை சார்ந்தது. ஆகவே இங்கு இரண்டு இனவாதமும் ஒரே மாதிரியானதல்ல. ஒன்று ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த இனவாதம், மறுதளத்தில் ஒடுக்கும் இனம் சார்ந்த இனவாதம். ஒடுக்கும் இனம் சார்ந்த இனவாதம் இல்லாமல் போனால், ஒடுக்கப்பட்ட இனவாதம் தானாக இல்லாமல் போகும். இதை சிங்களப் புரட்சியாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள் இனவாதத்தில் இருந்து விடுபட்டு அதற்கு எதிராகப் போராடினால், சிறுபான்மையினத்தின் இனவாதத்தின் அடிப்படையே இல்லாமல் போய்விடும்.
இந்த அரசியல் அடிப்படையில் தான் சிங்கள புரட்சிகர சக்திகள் போராடவேண்டும். இந்தவகையில் சரியான கோட்பாட்டை முன்வைப்பது அவசியம். அதை வைப்பதால் மட்டும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் அணிதிரண்டு விட மாட்டார்கள். அதற்காக அந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு விடவும் மாட்டார்கள்.
இதற்கு மாறாக ஒரு சரியான கோட்பாட்டை ஏற்க வைக்கவும், சிங்கள மக்களுடன் தமிழ்மக்களும் அணிதிரள்வதற்கான புரட்சிகரமான அரசியல் வழிமுறை என்பது வெளிப்படையானது.
ஆம் அந்த கோட்பாட்டையும், நடைமுறையையும் சிங்கள மக்கள் முன் வைத்து போராடுவதுதான். இப்படி போராடுவதன் மூலம் தான், சரியான எந்தக் கோட்பாட்டையும் ஏற்க வைக்க முடியும். தமிழ்மக்கள் இதற்கு விதிவிலக்கு கிடையாது. அவர்களை ஒன்றிணைந்து போராட வைக்கமுடியும்.
இப்படி வெளிப்படையான உண்மை இருக்க, இதைவிட்டுவிட்டு தமிழ்மக்களுடன் சென்று போராடுவதால் தமிழ்மக்கள் சிங்கள மக்களுடன் அணிதிரண்டுவிடமாட்டார்கள். ஏனெனின் சிங்கள மக்களின் இனவாதம் அதை தடுக்கின்றது. இனவாதத்துக்கு எதிரான புரட்சிகர சக்திகளின் வெளிப்படையான நடைமுறையும், சிந்தனையும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அதாவது சிங்கள மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டுவதன் மூலம் தான், சிங்கள மக்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தமுடியும்.
இங்கு தமிழ் புரட்சிகர சக்திகளும், சிங்கள புரட்சிகர சக்திகளும் தங்கள் இன மக்கள் மத்தியில் செய்ய வேண்டிய கடமையை புரிந்துகொண்டால் இந்த விடையம் இலகுவானாதாகிவிடும்.
இங்கு ஒரு தரப்பில் புரட்சிகர கூறு இல்லையென்றால் குடி மூழ்கிவிடாது. சொந்த இன மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்வதன் மூலம், மற்றயை இன மக்களை வெல்ல முடியும். இதைத்தான் லெனின் தன் சுயநிர்ணய கோட்பாடு மூலம் முன்வைத்தார். இதை புரிந்து கொள்ளாது இருப்பது தான், இலங்கையில் இன முரண்பாட்டை தடுத்து நிறுத்த முடியாததற்கான அரசியல் அடிப்படையாக தொடர்ந்து நீடிக்கின்றது.
பி.இரயாகரன்
21.06.2012
5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05
6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 06
7. "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07
8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 08
9. இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 09
10. இனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 10
11. தமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா? இல்லை. - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 11