Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சிங்கள மக்கள் மட்டுமல்ல, மலையக முஸ்லீம் மக்களுடன் கூட இணங்கி ஐக்கியமாக வாழ இன முரண்பாடு தடையாக இருக்கின்றது. இன்று இதை மேலும் தூண்டும் வண்ணம், இதற்குள் மத முரண்பாடுகளை இனவாதிகள் புகுத்துகின்றனர். இவை அண்மைய நிகழ்வுகள். மக்கள் குறுகிய மத இன உணர்வு பெற்று இதைத் தூண்டவில்லை. மக்கள் தமக்குள் ஐக்கியமாக வாழ்வதைத்தான், தங்கள் தெரிவாக, வாழ்வாகக் கொண்டிருக்கின்றனர். இதை நாம் புரிந்தாக வேண்டும்.

எப்படி இன மத குறுகிய உணர்வுகளை தூண்டுகின்றனரோ, அதற்கு எதிராக நாமும் அந்த மக்களுடன் நின்று போராட வேண்டும். குறுகிய இன மத உணர்வுகளை எதிர்த்து நீச்சல் அடிக்க கற்றுக்கொள்ளவேண்டும்;. இந்த குறுகிய இன மத உணர்வுகளை எதிர்த்தால் நாம் அன்னியமாகி விடுவோம் என்று கூறி, அதில் இருந்து விலகிச் செல்வது அதே இனவாதமும் மதவாதத்துக்கும் உடந்தையானதாகும். சொந்த இன மத குறுகிய வாதங்களை எதிர்த்து போராடாது, மற்றைய இன மத மக்கள் முன் நின்று இதற்காக குரல் கொடுப்பது தவறானது. இது சொந்த மக்களின் குறுகிய இன மதம் சார்ந்த உணர்வில் இருந்து அன்னியமாகி விடாது, தன் சொந்த குறுகிய இன மத உணர்வுக்கு உடந்தையாகும்.

இரண்டு மனிதர்கள் இணைந்து வாழ்வது தவறா? இதற்கு நிறம், பால், இனம், மதம், சாதி … எதுவும் தடையாக இருக்கக் கூடாது. இப்படி நாம் சிந்திக்கவும், செயல்படவும் தடையாக இது இருக்கும் என்றால், அது குறைபாடு கொண்ட ஒன்றாகும்;. முதலில் நாம் இணைந்து வாழ்வதற்கு, எப்போதும் எங்கும் முயலவேண்டும். இதில் இருந்து தான், இதற்கான தடைகளை இனம் கண்டு களைய வேண்டும்.

இந்த வகையில் தடைக்குரிய காரணங்கள் இருதரப்பிலும் இருக்கும், முதலில் நாம் அதைக் களைய வேண்டும்;. மற்றத் தரப்பை இதற்கு தடையாக இருப்பதாக கூறுவதன் மூலம், நாம் இதற்கு தடையாக இருக்க முடியாது. நாம் இணைந்து வாழ்வதற்குரிய தயார் நிலையில் நின்று தான், அதற்கு தடையான மறுதரப்புக் காரணத்தை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். இதன் போதும் இணங்கி வாழவே அவர்களிடம் கோரவேண்டும்.

இந்த வகையில் தான், இணங்கி வாழும் இன ஐக்கியத்தை மக்களுக்கு இடையில் நாம் கோருகின்றோம்;. அதுவும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இதைக் கோருகிறோம். அதற்காக நாம் முன்னின்று போராடுகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை நாங்கள் நிபந்தனை இன்றி முன்வைக்கவில்லை. அவர்கள் தாமாக இணங்கி வாழும் ஐக்கியத்தையே, நாம் நிபந்தனையாக முன் வைக்கின்றோம்.

இந்த வகையில் இணங்கி வாழும் சூழ்நிலையையும், பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டியது, ஒடுக்கப்பட்ட மக்களின் பரஸ்பர கடமையாகும். இந்த வகையில் பரஸ்பரம் இதற்கு தடையான காரணங்களை நாம் கண்டறிதல் அவசியமாகும்;.

இனவொடுக்குமுறை ஒரு இனம் சார்ந்து நடத்தும் போது, இனவொடுக்குமுறைக்கு உள்ளாகும் இனம் என்ற பிளவு ஏற்படுகின்றது. இது இணங்கி வாழும் பொது ஐக்கியத்துக்குத் தடையாக இருக்கின்றது. இனம் சார்ந்த இந்தப் பிளவை யார் உருவாக்குகின்றனர்? இரு இன மக்களா? இல்லை. மாறாக இனம் சார்ந்த சிலர் தான், அதை உருவாக்கினர், உருவாக்குகின்றனர். எங்களுக்குள் உள்ள அனைத்து தப்பபிராயங்களும், இப்படி எம்மீது திணிக்கப்பட்டது தான். இப்படி எம்மை பிளந்து மோத வைத்தவர்கள், ஏன் இதைச் செய்தார்கள்? செய்கின்றனர்? மக்களை இனரீதியான பிரிப்பதாலும், பிரித்து ஒடுக்குவதாலும் அவர்கள் அடைவது எதை? இதை ஒடுக்குவன் மட்டும் செய்யவில்லை, அதற்கு எதிராக போராடுபவனும் செய்கின்ற போது, இணங்கி வாழும் ஐக்கியத்துக்கு இடமிருப்பதில்லை. இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ளாத வரை, அவர்களின் கூலிப்படையாகவும் மந்தைகளாகவும் நாங்கள் மட்டுமல்ல மக்களும் அப்படித்தான் இருக்க முடியும்.

இதற்கு பதில் இணங்கி வாழ்வதை தெரிவாக கொள்வது அவசியம். பலாத்காரமாக இணங்க வைப்பதையும், பலாத்காரமாக பிரிந்து போவதையும் நாம் வெறுக்க வேண்டும். பலாத்காரமாக இணைப்பதற்கு எதிராக, பிரிந்து இருக்கும் உரிமையை முன்வைத்து போராட வேண்டும். பலாத்காரமாக பிரிந்து செல்வதை எதிர்த்து இணங்கி வாழும் சுயநிர்ணய உரிமைக்காக போராட வேண்டும். இதுதான் இணங்கி வாழ்வதற்கான அடிப்படையும், நிபந்தனையுமாகும்.

இன்று இலங்கையில் சிங்கள – தமிழ் இன முரண்பாடு மட்டுமின்றி, தமிழ் - முஸ்லிம் இன முரண்பாடும் காணப்படுகின்றது. இதில் சிங்கள – தமிழ் இன முரண்பாடு பிரதான முரண்பாடாக உள்ளது. தமிழ் - முஸ்லிம் மற்றும் சிங்கள - முஸ்லிம் இன முரண்பாடுகள் முதல் மலையக மக்களின் இனமுரண்பாடுகள் பிரதான முரண்பாட்டுக்கு வெளியில் அக்கம்பக்கமாக இயங்குகின்றது. இன ஐக்கியத்தைப் பொறுத்தவரை பிரதான முரண்பாட்டை மட்டும் மையப்படுத்தி நிற்பது குறுகிய தன்மை கொண்டது.

மாறாக இலங்கையில் நான்கு முரண்பட்ட இனங்கள் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கு இடையில் இணங்கி வாழும் ஐக்கியத்தை நாம் உருவாக்க வேண்டும். குறிப்பாக சிங்கள – தமிழ் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சரி, தமிழ் - முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சரி, இன்று இலங்கையில் ஓரேவிதமான இன முரண்பாடுகளும் தப்பபிப்பிராயங்களும் காணப்படுகின்றது. தமிழ் மக்களை சிங்கள மக்கள் புரிந்து கொள்வது மட்டுமல்ல, தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களைப் புரிந்து கொள்ளவேண்டும்;. இதுபோல் சிங்கள மக்களை தமிழ் மக்கள் புரிந்துகொள்வதும், தமிழ் மக்களை முஸ்லீம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி மக்கள் அனைவரும் பரஸ்பரம் புரிந்து கொள்ளும் வண்ணம், இணங்கி வாழும் வண்ணம், எமது போராட்டம் அமைய வேண்டும்.

பி.இரயாகரன்

18.06.2012

1. இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01

2. தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03

4. புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04

5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05

6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 06

7. "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07

8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 08

9. இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 09