"இனத் துரோகி" "தேசத் துரோகி" என்று கூறி தண்டித்த புலிகள் இன்று இல்லை. ஆனால் "தேசத் துரோகி" என்று கூறி தண்டிப்பது மட்டும் தொடருகின்றது. முழத்துக்கு முழம் இராணுவம் உள்ள பிரதேசத்தில், அதுவும் அதிகாலை 1.30 மணிக்கு "தேசத் துரோகி"யாக சித்தரித்து தாக்குதல் நடக்கின்றது. வடக்கில் நடக்கும் சிவில் நிர்வாகத்தின் இலட்சணம் இதுதான். சிறிது காலம் திடீரென வந்து மறைந்த கிறிஸ் பூதங்கள் போல் தான், இதன் பின்புலங்கள் கூட.
புற்றுநோய் மருத்துவரும், யாழ் வைத்திய சங்கத் தலைவருமான ஜெயக்குமாரின் வீட்டின் மீது அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். அத்துடன் "தேசத் துரோகிக்கு இதுதான் தண்டனை" என்ற செய்தியையும் அங்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதன் பின்னணி என்ன? யாழ் மருத்துவமனைப் வைத்தியப் பணிப்பாளர், மருத்துவமனை உடைமைகளை அண்மையில் திருடிச் சென்ற விடயத்தை யாழ் வைத்திய சங்கம் சமூக பொறுப்புடன் அம்பலப்படுத்தி இருந்தது. இதையடுத்து வைத்திய சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் வீடு நள்ளிரவில் தாக்கப்படுகின்றது.
இப்படி இதன் பின்புலம் நன்கு வெளிப்படுகின்றது. யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் போதாக்குறையைத் தவிர்க்க, நடக்கும் இடமாற்றங்கள் இதை கேலிக் கூத்தாகின்றது. யாழ்வைத்தியசாலை மருத்துவர்களாக செயல்படுவது என்பதே சமூக அர்ப்பணிப்பு உணர்வுடன் தான் சாத்தியம் என்ற இன்றைய நிலையில், இந்தக் கூத்து அரங்கேறுகின்றது.
வைத்திய பணிப்பாளரின் ஊழல், இலஞ்சம், திருட்டுக்கு எதிராகப் போராடிய மருத்துவர்கள் மிகத் திட்டமிட்ட வகையில் மிரட்டப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். மிக விரைவாக நடந்தேறுகின்ற எல்லாவிதமான எதிர்தாக்குதலையும் அவதானிக்கும் போது, இதன் பின்னான அரசியல் அதிகாரத்தையும், அதன் செல்வாக்கையும், குற்றக் கும்பலின் தொடர்பையும் மிகத் தெளிவாக காண முடியும்.
பொதுவாக நாட்டிலும், குறிப்பாக வடக்குக் கிழக்கிலும், அதிகார வர்க்கம் அரசியல் செல்வாக்குடன் கூடிய குற்றக் கும்பலாக மாறி செயல்படுகின்றது. இதுதான் இலங்கையின் நிலை. ஊழல், இலஞ்சம், திருட்டு என்பன அரசின் ஆதரவுடன் அரங்கேறுகின்றது. இதை எதிர்ப்பவர்கள் மேல் அரசின் ஆதரவுடன் கூடிய வன்முறை அரங்கேறுகின்றது.
யுத்தப் பின்னணியில் உருவான குற்றக் கும்பல்கள் இன்று நாட்டை ஆளுகின்றது. வடக்குகிழக்கில் இராணுவத்தை குவித்து வைத்துக் கொண்டு இராணுவ ஆட்சியை நடத்தும் அரசு தான், இரவில் அறிவிக்கபடாத ஊரடங்கை அமுல்படுத்துகின்றது. இந்த நிலையில், இதன் பின்புலத்தில் அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதல் திட்டமிட்ட வகையில் முன்னேற்பாட்டுடன் நடக்கின்றது.
"தேசத் துரோகிக்கு இதுதான் தண்டனை" என்ற செய்தி "இனத் துரோகிக்கு தண்டனை" என்ற புலிகளின் பாணியிலானது. இன்று அரசின் எச்சரிக்கைகள் இப்படித்தான் அடிக்கடி வெளிப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி உட்பட அரசியல்வாதிகள் அடிக்கடி "தேசத் துரோகிகள்" பற்றி கூறுகின்ற அரசியல் பின்புலத்தில், "தேசத் துரோகிக்கு இதுதான் தண்டனை" வழங்கப்;படுகின்றது.
இப்படி அரசியல் பின்புலத்தில் தான் இவை நடக்கின்றது. வன்முறை மிகத் தெளிவாகவே, அரசியல் குற்றக் கும்பலுடன் இணைந்து செயல்படுவதையே எடுத்துக் காட்டுகின்றது. இதுவல்லாத ஒன்று என்றால், இந்தப் பின்புலம் கடந்தகால புலி அரசியல் பின்புலத்தில் புரையோடிப்போய் உருவாகியுள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புபட்டு இருப்பதை தான் எடுத்துக்காட்டுகின்றது. அதுவும் கூட அரசின் துணையின்றி அவை செயல்படுவதில்லை. அரசின் பின்புலத்தில் அதையே தொடருகின்ற புலிகள் தான், அரசுடன் முதலில் இணைந்து கொண்டனர்.
வைத்திய பணிப்பாளர் ஒருவர் இந்த வகையில் செயல்படுவது, நாட்டை மட்டுமின்றி வடக்கின் இன்றைய அரசியல் நிலையும் மிக துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.. என்று எங்கும் இதை நாம் காணமுடியும்.
ஊழல், இலஞ்சம், திருட்டு தொடங்கி அரசியல் வரை, அரசு ஆதரவுடன் கூடிய குற்றக்கும்பலின் அதிகாரம் தான் காணப்படுகின்றது. அது பாசிசமாக வெளிப்பட்டு இயங்குகின்றது. இதற்கு எதிரான போராட்டத்தை நோக்கி அணிதிரட்டுவதும், அதை கோரிப் போராடுவதுமே எம்முன்னுள்ள இன்றைய அரசியல் கடமையாக இருக்கின்றது.
பி.இரயாகரன்
15.06.2012