Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திடீர் "தகைமை"யுடனும், "உரிமை"யுடனும், "முன்னேறிய"வர்களும் கூடிக் குலாவ முனையும் பந்சோந்தி அரசியல். விடுதலைப் புலிகள் மக்களைப் "பணயக் கைதிகளாக" வைத்திருந்தனராம்!? புதியேதார் உலகம் நாவல் பற்றி, திரிக்கப்பட்டு புரட்டப்பட்டு புதிதாக பதிவு செய்யப்படுகின்றது. இப்படி திடீர் திடீரென "முன்னேறிய" பிரிவினருடன் கூடி ஆவி இறக்கும் பூசாரியாக, கனடாவில் ஜமுனா ராஜேந்திரன் காட்சியளிக்கின்றார். கனடாவில் தொடர்ச்சியாக அரங்கேறும் அரசியல் "விபச்சார" மேடைகளில், "முன்னேறிய" புத்திஜீவிகளும் கூடி, "மார்க்சியம்" என்னும் அரசியல் பிசாசைக் கலைக்கின்றனர்.

இப்படித் திடீரென மூன்று வருடமாக தான் பிசாசு கலைக்கும் வேஷம் போட்டது உங்களுக்கு தெரியாதோ என்று கேட்கின்றார். "எதை, எப்போது எழுதவேண்டும் என எனக்கு அறிவுரை சொல்வதற்கும் கேள்வி கேட்பதற்குமான தகைமை அல்லது உரிமை எவருக்கும் இல்லை என்பது" என்றதன் மூலம், தன் கடந்தகால பாசிசத்துடன் கூடிய செயல்பாட்டை நியாயப்படுத்துகின்றார். இன்று வரை மக்கள் அரசியலையும் அதன் நடைமுறையையும் மறுத்து, எழுத்தை வியாபாரமாக வாழ்வாகக் கொண்ட ஜமுனா ராஜேந்திரன், புதியதோர் உலகம் நாவலை அரசியலற்ற படைப்பாக பதிவாக காட்ட களமிறங்கி நிற்கின்றார். பாசிசப் புலிகள் இல்லாத வெற்றிடத்தில், புதியேதார் உலகம் முன்வைக்கும் அரசியலை தொடர்ந்து கருவறுக்கும் பூசாரியாக மாறி மேடையேறி கனடாவில் முழங்குகின்றார்.

(ஜமுனா ராஜேந்திரன்)

அப்படி முழங்கிய அவர் "ஈழ அரசியல் நாவல் தொடர்பான விவாதத்தில் விநோதமான ஒரு கேள்வியை சுமதி ரூபனும் அதனைத் தொடர்ந்து கற்சுறாவும் கேட்டார்கள். கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் எழுதப்பட்டு 27 ஆண்டுகளாக நீங்கள் ஏன் அதனைப் பற்றி எழுதவில்லை என்பது அவர்களது கேள்வி. அவர்கள் இருவருக்கும் அப்போதும் இப்போதும் எனது பதில் இதுதான் : இந்த 27 ஆண்டுகளிலும் கோவிந்தனின் புதியேதார் உலகம் நாவல் பற்றி மட்டுமல்ல, பிற எந்த ஈழத்து நாவல்கள் பற்றியும் என்போல் பதிவு செய்தவர், ஈழத்தவர் மற்றும் தமிழகத்தவர் என எவருமில்லை. மேலும் எதை, எப்போது எழுதவேண்டும் என எனக்கு அறிவுரை சொல்வதற்கும் கேள்வி கேட்பதற்குமான தகைமை அல்லது உரிமை எவருக்கும் இல்லை என்பதுதான் எனது பதில்." இப்படிக் கூறி, "தகைமை அல்லது உரிமை" எடுத்துக்கொள்ளும் போக்கிலித்தனத்தை இங்கு காண்கின்றோம். 27 வருடமாக தன்னைப் போன்ற பச்சோந்திகள் தான் அனைவரும் என்கின்றார். புலிப் பாசிசத்துடன் கூடி தன்னைப்போல், "முன்னேறிய" பிரிவும் நக்கியதும் என்ற உண்மைக்கு அப்பால், புதியதோர் உலகம் நாவலையும், அது சார்ந்த அரசியலையும் முன்னிறுத்திய ஒரு அரசியல் போராட்டமே தொடர்ச்சியாக நடந்திருக்கின்றது. இதை மறுப்பது, கொச்சைப்படுத்துவது, தியாகங்களை இழிவுபடுத்துவது, அதே புலியின் தொடர்ச்சியான அரசியல்தான். புலிகள் அன்று செய்ததைத்தான், இன்று ஜமுனா ராஜேந்திரன் செய்கின்றார்.

"ஈழத்து நாவல்கள் பற்றியும் என்போல் பதிவு செய்தவர், ஈழத்தவர் மற்றும் தமிழகத்தவர் என எவருமில்லை" என்று கூறுகின்ற புளிப்பேறிய பாசிசக் கொழுப்பை இங்கு காண்கின்றோம். புதியதோர் உலகம் நாவல் அனாதையாக இருந்ததாகவும், அதை மீட்டு எடுத்துக் கொண்டு வந்ததாக திடீரென புதுப் பாவனை செய்கின்றார். இந்த நூலின் மறுபதிப்பு உட்பட, இந்த நூலும் இந்த நூல் அரசியலையும் முன்னிறுத்திய தொடர் போராட்டத்தை, மக்களுக்கான போராட்ட வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இன்று இதற்கு அவர் ஆதாரம் கேட்கின்றார். இந்த நூல் ஆசிரியர் கேசவன் புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது (பார்க்க "முடிவு எப்போது") தொடக்கம் அவரின் நூலை அவரின் அரசியல் உணர்வுடன் முன்னெடுத்துச் சென்றவர்கள் பலர். இதை மறுத்து அவர்களின் "தகைமை அல்லது உரிமை" பற்றி புலிப் பாசிசத்துடன் கூடிக் குலாவி எழுத்து வியாபாரம் செய்த பொறுக்கி, தனது நக்குண்ணித்தனத்தை "முன்னேறிய" பிரிவின் துணையுடன் மூடிமறைத்துக்கொண்டு கேட்கின்றது.

புதியதோர் உலகத்தை முன்வைத்த அரசியலையும் அதன் தொடர்ச்சியையும் மூடிமறைக்க புறப்பட்டு நிற்கின்ற அரசியல் பின்புலத்தில் தான் இவை எல்லாம் அரங்கேறுகின்றது. புதியதோர் உலகம் நாவல் முதல் "பணயக் கைதிகளாக" புலிகள் மக்களை வைத்திருந்த வரை, திடீரென தமது பச்சோந்திந்தனத்துக்கு அமைவாக அனைத்தையும் திரித்துப் புரட்டிக் காட்டமுனைகின்றது. ஏதோ தாங்கள் தான் இதை முதலில் சொல்வது போலவும், தாங்கள் தான் முதன் முதலில் இதை பதிவு செய்வதாகவும் கூறுகின்ற அரசியல் கேலிக் கூத்து, உண்மையில் அரசியல் இருட்டடிப்பு செய்தலாகும். "மூன்று வருடமாக" பூசாரி வேஷம். குறிப்பாக "பணயக் கைதிகளாக" புலிகள் வைத்திருந்தது முதல் பலியிட்டது வரை, இவருக்கு முன் எவரும் பேசவில்லையாம்!? முள்ளிவாய்க்காலுக்குப் பின், புலிகள் இல்லாத சூழலில், பச்சோந்திகள் நக்கிப்பிழைக்கும் தங்கள் பிழைப்புச் சார்ந்து சொல்வது தான் வரலாற்றுப் பதிவாகின்றதோ! இந்திய நூலக வியாபாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து நீங்கள் நடத்தும் வியாபாரத்தில், பதிவு செய்ததால் தான் வரலாற்றுப் பதிவாகுமோ!! இந்த வியாபார பதிவில் கூட "பணயக் கைதிகளாக" மட்டும் தான், புலியைக் காட்ட முனைகின்றார். இந்த நக்குண்ணி நாய்ப்பிழைப்பு கேவலமாக இல்லை. கூடிக்குலவும் "முன்னேறிய" பிரிவின் சூடுசுரணையற்ற அரசியல் கூத்தடிப்பு, நாளை மக்களை வழிகாட்டுமாம்! நம்புங்கள்!!

இது மட்டுமா! இவை நிகழ்ந்த காலகட்டத்தில் நடந்த போராட்டங்களையும் தியாகங்களையும் கூட இது மறுக்கின்றது. பாசிசப் புலிக்கு நிகராக, இன்று மீண்டும் அதைக் கொல்வதன் மூலம் அந்த அரசியலை கொச்சைப்படுத்தும் இன்னொரு அரசியலைத்தான் இதன் மூலம் இவர்கள் கூடிச் செய்கின்றனர். இதுதான் இவர்களின் நோக்கமாய் பதிவாகின்றது. புதியதோர் உலகம் சொன்ன அரசியலை அரசியல் நீக்கம் செய்தும், இந்த நூல் ஆசிரியரை கொன்றவர்களையும் அவர்களின் அரசியல் நோக்கத்தையும் மூடிமறைத்து, கொன்றவர்களின் அரசியலை பாதுகாத்துக் கொண்டு, புதியதோர் உலகம் நாவலை 27 வருடத்துக்கு பின் திடீரென வேறுவிதமாக காட்டி அறிமுகம் செய்கின்றனர். இந்த வகையில் வேண்டுமென்றால் "புதியதோர் உலகம் நாவல் பற்றி மட்டுமல்ல, பிற எந்த ஈழத்து நாவல்கள் பற்றியும் என்போல் பதிவு செய்தவர், ஈழத்தவர் மற்றும் தமிழகத்தவர் என எவருமில்லை." என்று கூறலாம். இதற்கு மாறாக போராட்டத்துடன் கூடிய தங்கள் தியாகங்ளுடன் இதை வரலாறு பதிவாக்கி இருக்கின்றது.

இவை வெளியாகிய காலம் முதல் சமகால வரலாற்றின் போது எல்லாம், இவர்கள் என்ன செய்தார்கள், எங்கிருந்தார்கள், யாருடன் கூடி நக்கினார்கள் என்பது கூட மக்களுக்கு எதிரான வரலாறுதான். இவர்களின் நேர்மையற்ற அரசியல் பிழைப்புத்தனத்துக்கு அப்பால், இங்கு தியாகத்துடன் கூடிய அரசியல் அர்ப்பணிப்புகள் திட்டமிட்டு இவர்களால் மூடிமறைக்கப்படுகின்றது.

27 வருடம் கழித்து ஏன் இந்த அரசியல் கேலிக் கூத்து, என்ற சுமதி ரூபனினதும் அதைத் தொடர்ந்த கற்சுறாவின் கேள்வியும் இங்கு நியாயமானது. இதைக் கேட்கும் "தகைமை அல்லது உரிமை" கிடையாது என்ற கூறுகின்ற போக்கிலித்தனத்தைத்தான் இங்கு அவரின் பதிலாக காண்கின்றோம். இதை "விநோதமான ஒரு கேள்வி"யாக, "என் மீதான தனிப்பட்ட விமர்சன"மாக என குறிப்பிட்டுக் காட்டுகின்ற கிறுக்குத்தனமாகவே இது வெளிப்படுகின்றது. "27 ஆண்டுகளாக நீங்கள் ஏன் அதனைப் பற்றி எழுதவில்லை" என்று கேட்க "கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது." என்கின்றார். முள்ளிவாய்க்காலின் பின்னான மூன்று வருடத்தில், இனி அங்கு பிழைப்பு நடத்த முடியாது என்ற நிலையில், திடீர் அரசியல் ஞானம் பெற்ற சிலரில் ஜமுனா ராஜேந்திரன் ஒருவர். அதுதான் இப்படி உளற வைக்கின்றது.

இந்த நூல் 27 வருடங்களுக்கு முன்னால் தீப்பொறி என்ற அமைப்பின் கடும் போராட்டத்துடன் அன்று வெளிக்கொண்டுவரப்பட்டது. அன்றும் இன்றும் றோவின் கூலிப்படையான ஈ.என்.டி.எல்.எவ். சார்ந்த நீங்கள் கொச்சைப்படுத்தி எழுதிய "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது உட்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமது சக பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி"யதாக கூறினீர்களே, அவர்கள் தான் இந்த நூலைக் கொண்டு வந்தனர். நீங்கள் இப்படிக் குற்றஞ்சாட்டிய தீப்பொறி தோழர்கள் அனைவரும் கூடி விவாதித்து கொண்டு வந்த நூல் தான் இது. இந்த நூலைக் கொண்டு வர, என்.எல்.எவ்.ரி. அரசியல் அடிப்படையில் நிதியுதவி வழங்கியது மட்டுமின்றி தீப்பொறிக்கான ஆரம்ப பாதுகாப்பையும் வழங்கியது. இந்த நூலை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற பணியில், அர்ப்பணிப்பும் தியாகமும் கடின உழைப்பும் இருந்தது. இந்த நூலை வைத்திருப்பது, படிப்பது கூட நீங்கள் கூடிக் குலாவி நக்கியவர்களால் மரணதண்டனைக்குரிய குற்றமென இருந்த அரசியல் பின்புலத்தில் மக்களிடம் எடுத்துச் சென்றனர். இதன்பின் இந்த நூலின் மறுபதிப்பை அரசியல் உணர்வுடன், ரவி-ரஞ்சி மீளக் கொண்டு வந்தனர். இப்படி இருக்க "தகைமை அல்லது உரிமை" யாருக்கும் கிடையாது என்று சொல்லி, இது தன்னைப் போன்ற பச்சோந்தி பிழைப்புவாத பொறுக்கிகளுக்கே உண்டு என்கின்ற அரசியல் கேலிக்கூத்தை இங்கு காண்கின்றோம்;

கற்சுறா "உங்களைப் பார்க்கப் பயமாக இருக்கிறது" என்று கூறியது தான் உண்மை. உங்களின் இந்த திடீர் அரசியல் பாத்திரம் அதைத்தான் கூறுகின்றது. புலிப்பாசிசத்துடன் கூடி மக்களை ஒடுக்கிய அரசியலின் பின் நின்று அதைப் பலப்படுத்தியபடி, நக்கிப் பிழைத்தவர்கள் தான் நீங்கள். இந்த நிலையில் "உங்களிடமிருந்து வரலாற்று ரீதியிலான, கோட்பாட்டு அடிப்படையிலான அரசியல் விமர்சனமாக ஒரு பத்தியோ அல்லது ஒரு கட்டுரையோ உருப்படியாக இதுவரையிலும் வரவேயில்லை. இனிமேலாவது உருப்படியாக எதனையாவது எழுத முயற்சி செய்யுங்கள். பிறரை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருக்கிற சோம்பல் அரசியல் - சாம்பல் அரசியல் அல்ல - முடிவு பெற்றுவிட்டது என்பதனை ஒரு செய்தியாக உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்." என்கின்றீர்கள். நல்லது உங்களிடம் கேட்கின்றோம் புலிப்பாசிசத்தின் பின் உங்களைப் போன்றவர்கள் "வரலாற்று ரீதியிலான, கோட்பாட்டு" ரீதியாக எப்படி நக்கி வாழ்ந்தீர்கள் என்பதை எழுதுங்கள். சரி "ஒரு பத்தியோ அல்லது ஒரு கட்டுரையோ உருப்படியாக" எதற்காக எழுத வேண்டும். அதையாவது சொல்லுங்கள். நீங்கள் எதற்காக எழுதுகின்றீர்கள், அதையாவது சொல்லுங்கள். "சோம்பல் அரசியல் - சாம்பல் அரசியல் அல்ல - முடிவு பெற்றுவிட்டது என்பதனை ஒரு செய்தியாக உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்." என்பது மட்டும் இங்கு முடிவு பெறவில்லை. உங்களைப் போன்ற அரசியல் செயலற்ற எழுத்து, பச்சோந்தி எழுத்து, பிரமுகர் தன இருப்பு எழுத்து, வியாபார எழுத்து … என்ற அனைத்து மக்கள் விரோத எழுத்தும் முடிவு பெற்றுவிட்டது. அதை நாம் ஒரு அரசியல் போராட்டமாக, அரசியலை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களைப் போன்றவர்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுப்போம். இதுவும் எமது அரசியல் போராட்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாக மாறி உள்ளது.

 

பி.இரயாகரன்

27.05.2012