புலி அரசியலும், அரசியல் நடத்தைகளும் தவறானதல்ல. ஏனெனில் அது வலதுசாரிய அரசியல் நடைமுறையாகும். இந்த வகையில் புலிகளின் "தவறு" பற்றிய கூற்றுகள் கூட, அடிப்படையில் மக்கள் விரோதத்தன்மை கொண்ட வலதுசாரியமாகும். "பொதுவாக" தவறு பற்றிப் பேசுவது வேறு, போராட்டத்தின் வழி பற்றியும், அதன் மீதான விமர்சனம் சுயவிமர்சனத்தில் "தவறு" பற்றி பேசும் போது அது திரிபாக வெளிப்படுகின்றது. இங்கு "தவறு" பற்றிய பிரபாகரனின் நிலை, இதற்கு மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் பதில் தருகின்றது. "கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்றும் பிரபாகரன் கூறுகிறார். அவை தவறானால் தான் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்கிறார்." இதுதான் எதார்த்த உண்மை. இதைக் கடந்து இதற்கு விளக்கம் கிடையாது. இது பிரபாகரனின் சரியானதும், துல்லியமானதுமான விளக்கம் மட்டுமின்றி எதிர் விவாதமுமாகும். இந்த வகையில் உண்மையில் தன் அரசியலை, மிகப் சரியாகப் புரிந்து கொண்டவர் பிரபாகரன். இதை "தவறு" என்றவர்கள், இன்றும் "தவறு" பற்றி கூறுகின்றவர்கள் இந்த அரசியலை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது இந்த அரசியலை பாதுகாக்க "தவறு" பற்றி கூறி அதைப் பாதுகாக்க முனைகின்றனர். இதுவொரு வலதுசாரிய அரசியல் என்பதையும், இதைவிட இந்த அரசியலுக்கு வேறு வடிவம் எதுவும் கிடையாது என்பதை, அதன் வர்க்க அரசியலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆக இது தவறு அல்ல, இதுவொரு அரசியல் வழிமுறை. இதை "தவறு" என்று கூறுகின்றவர்கள், அந்த அரசியல் வழிமுறையை மீண்டும் முன்னிறுத்துகின்றனர்.
இந்த இடத்தில் தான் ஐயர் தகவல் குறிப்புகள், மிக நுட்பமாக திரிக்கப்படுகின்றது. பிரபாகரனுடனான ஐயர்pன் போராட்டம் இதற்கு நேர்மாறானது. ஐயர் முதலில் தான் தவறாக கருதிய நிலையை படிப்படியாக கைவிட்டு, இதற்கு நேரெதிரான மற்றொரு அரசியல் வழிமுறையை தேர்ந்தெடுக்கின்றார். இதை வெறும் தவறாகக் கருதிய தன் நிலையை அவர் மாற்றுகின்றார். இந்த அரசியல் வழிமுறைக்கு பதில், முற்றிலும் முரணான மற்றொரு அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுக்கின்றார். ஐயரின் குறிப்புகளை இந்த அரசியல் அடிப்படையில் தான் வரலாறாக்கியிருக்க வேண்டும்;. மாறாக புலிக்குப் பின்னால் தன் அரசியலைக் கொண்ட ஒருவர், இன்றும் அதையே சரியாகக் கருதும் ஒருவர் தான், ஐயரின் குறிப்பைக் கொண்டு இந்த நூலை தொகுக்கின்றார். இந்த வகையில் புலிகளின் "தவறுகள்" பற்றி கொள்கையளவில் கருத்துக் கொண்ட அவரின் அரசியல் நிலைக்கு ஏற்ப, ஐயரின் அரசியலை வெறும் "தவறாக" இந்த நூல் மூலம் சித்தரித்துக் காட்டுகின்றனர். ஐயரின் எதார்த்தம் சார்ந்த நேர்மையால், இந்த நுட்பமாக திரிபைப் புரிந்துகொள்ள முடியாததற்கு அப்பால் ஐயர்pன் நூலாகவே இது உள்ளது.
இப்படி புலியின் "தவறை" இனம் காண்பதன் மூலம் புலியையும், புலி அரசியலையும் சரியாக்கிக் காட்ட முனைகின்றனர். இந்தத் "தவறை" திருத்துவதன் மூலம், மீள புலிப்போராட்டத்தை தொடங்க முடியும் என்று காட்டமுனைகின்றனர். ஐயரின் நூலில் இந்த "தவறு" பற்றி, மிக நுட்பமாகவே புகுத்தப்பட்டு இருக்கின்றது. ஆரம்பத்தில் புலியைத் தவறாக கருதிய ஐயர், இறுதியில் இதை அதன் அரசியல் வழிமுறையாகக் கண்டு இதற்கு எதிர்மறையான மற்றொரு அரசியலை தேர்ந்தெடுக்கின்றனர். ஐயர் அப்படித்தான் இதை அணுகுகின்றார். இதை இந்த நூல் அவ்வாறு காட்டவில்லை. அதை வெறும் தவறாகவே காட்டுகின்றது.
ஐயரின் கூற்று "என்ன செய்வது எமது ஆரம்ப அரசியல் தவறுகள் கொலைகளை அங்கீகரிக்கும் வரை எம்மை நகர்த்தி வந்திருக்கிறது என்பதை பிற்காலங்களில் சுயவிமர்சன அடிப்படையில் பார்த்திருந்தாலும், அவ்வேளையில் எமக்கு அது நியாயமாகத் தான் தெரிந்தது." என்கின்றார். இது வெறும் "எமது ஆரம்ப அரசியல் தவறுகள்" என்ற தர்க்கம் எதார்த்தத்தில் தவறானது. இதுதான் முள்ளிவாய்க்கால் வரை நீடித்தது. அதன் பின் இந்த அரசியல் தான் நீடிக்கின்றது. இதை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இதுவொரு வலதுசாரிய அரசியல் வழிமுறை. இது திருத்தக் கூடிய தவறல்ல. இந்த வழிமுறையே நிராகரிக்கப்பட வேண்டும். "சுயவிமர்சன அடிப்படையில்" இந்த அரசியல் வழியை தவறாகக் கருதியதன் அடிப்படையில் மட்டும் தான், இது சுயவிமர்சனமாகின்றது, விமர்சனமாகின்றது. இதை இந்த நூலில் காண முடியாது. இந்த நூல் புலிகளிள் அரசியல் வழியை கேள்விக்குள்ளாக்காமல் இருப்பதும் இந்த அடிப்படையில்தான். இதனால் இந்த நூலை புலிகள் தங்கள் கருத்து சார்ந்து, இந்த நூலைக் கொண்டே நூல் வெளியீட்டில் தமக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்த நூல் வெளியீட்டுக்கு இலண்டன் மறறும் பாரிசில் தலைமைதாங்கிய தமிழ் பாசிட் ஒருவர் கூறினார் "ஜயர்" ஜயராக பிறப்பில் இருப்பதால் கொலைக்கு எதிரான அவரின் "கருணை" உள்ளம்தான் இவற்றையெல்லாம் "தவறு" என்று கூறி வெளியேறக் காரணமென்றார். இது ஐயரின் தவறே ஒழிய, இந்த வழியின் தவறல்ல என்றார். ஐயர் இதை ஒரு அரசியல் வழியின் தவறாக உணர்ந்து நிராகரித்த தன்சொந்த நடைமுறை எதார்த்த அரசியலை சார்ந்து, தன் சுயவிமர்சனத்தினை முன்வைக்காமல் வெறும் "தவறாக" சித்தரித்த போது, அதற்கு வலதுசாரிய பாசிட்டுகள் "பார்ப்பனியக் கருணை" சார்ந்த ஒன்றாக இதற்கு இன்று விளக்கம் கொடுக்கின்றனர்.
தொடரும்
பி.இரயாகரன்
23.05.2012
1. எதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது? – "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 01