Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

(தமிழ்) பிரிவினைவாதத்துக்கு எதிரான (பேரினவாத) அரசு எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிப்பது எப்படி? சிங்கள மக்களும், சிங்களப் பாட்டாளி வர்க்கமும் பதிலளிக்க வேண்டிய முக்கிய புள்ளி இதுதான். அரசின் பிரச்சாரத்துடன் சேர்ந்து பயணிப்பதா, அல்லது எதிர்த்துப் பயணிப்பதா? எதிர்த்து என்றால் எப்படி? சேர்ந்து என்றால் எப்படி? "பிரிவினைவாதம்" பிரிவினை வாதிகளின் கோசம் மட்டுமல்ல, பிரிவினைவாதத்துக்கு எதிரான அரசின் கோசமாகவும் இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் தான் பிரிவினைவாதத்துக்கு எதிரான பேரினவாதக் கோசத்துடன் "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவாக வெளிவந்திருக்கின்றது. சிங்கள மக்கள் இதற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும். சிங்கள மக்களை இனவாதியாகக் காட்ட முனைகின்றது. இனவாதியாக்கவும் முனைகின்றது. "கோத்தாவின் யுத்தம்" என்ற நூலும், யுத்த "வெற்றி கொண்டாட்டங்களை" எதிர்த்து வெற்றி கொள்வதே, சிங்கள மக்கள் முன்னுள்ள அரசியல் பணி. சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள அரசியல் சவால்.

"கோத்தாவின் யுத்தம்", "வெற்றிக் கொண்டாட்டங்கள்" தமிழ் மக்களை மீண்டும் ஏறி மிதித்து புண்படுத்திவிடுகின்றது. சுய தற்பெருமை பேசுகின்றது. இதன் மூலம் சிங்கள மக்கள் அனைவரையும், தங்கள் பெருமையாக பீற்றிக்கொள்ளக் கோருகின்றது. இதுதான், இதன் பின்னுள்ள அரசியல் நோக்கம்.

இதன் மூலம் சிங்களப் பேரினவாதம், இலங்கையின் முதன்மையான அரசியல் கூறாக, தான் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதை சிங்களப் பாட்டாளி வர்க்கம் தடுத்து நிறுத்தத் தவறுகின்ற தொடர்ச்சியான அரசியல் போக்குத்தான், தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தைத் தூண்டுகின்றது. சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் தெளிவற்ற கொள்கையால், தமிழ் பாட்டாளி வர்க்கம் பிரிவினைவாதிகளால் தனிமைப்படுத்தப் படுகின்றனர். பிரிவினை வாதத்துக்கு எதிரான தமிழ் பாட்டாளி வர்க்கத்தை பலப்படுத்தும் கொள்கைக்கு, சிங்களப் பாட்டாளி வர்க்கம் அரசியல் ரீதியாக இன்னும் வந்தடையவில்லை. இந்த வகையில் தமிழ் பாட்டாளி வர்க்கம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மறுபக்கத்தில் இந்த நூல் மூலம், முதல் குற்றவாளி நானே என்று சுய தற்பெருமை பேசுகின்றது. புலிகளின் பக்கத் துணையுடன் அரங்கேற்றிய மனிதப் படுகொலைகளை, தன் "வெற்றி"யாக அது பிரகடனம் செய்திருக்கின்றது. புலிகளை தமிழ்மக்கள் தான் தோற்கடித்தனர் என்ற உண்மை இது மறுதலிக்கின்றது. மக்கள் தோற்கடித்த புலியை வென்ற கோழைகள், சுய தற்பெருமை பேசியபடி வெற்றிக் பிரகடனம் செய்கின்றனர். புலிகளை தமிழ்மக்கள் தோற்கடித்த அரசியல் பின்புலத்தில் தான், இந்தியாவும் மற்றைய நாடுகளும் பேரினவாதம் வெற்றிகொள்ளும் வண்ணம் உதவியது.

இப்படி உண்மையிருக்க சுயபெருமையும் தற்பெருமையும் கொப்பளிக்க, கொலைகாரர்கள் இதை சிங்கள இனத்தின் தனிப்பெரும் வெற்றியாக காட்ட முனைகின்றனர். தமிழனின் இரத்தத்தின் மேல் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துகின்றனர். மனித இனத்துக்கு அவமானம். புலியின் பெயரில் பல பத்தாயிரம் தமிழ்மக்களை கொன்று குவித்ததை, சிங்களவனின் பெருமைக்குரிய ஒன்றாக காட்ட முனைகின்றனர் போர்க்குற்றவாளிகள். இதை சிங்கள மக்களின் சொந்த சிந்தனையாக, அரசியலாக்க முனைகின்றனர்.

அதேநேரம் 1980 களில் இலங்கை மீதான இந்தியாவின் தலையீட்டை, சுய பெருமை பேசும் இந்த அரசியல் பின்புலத்தில் மூடிமறைத்தபடி அம்பலப்படுத்த முனைகின்றனர். இந்த வகையில் இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி பல விடையத்தை மூடிமறைத்து, அதையும் பேரினவாதமாக்க முனைகின்றது. இந்த வகையில்

1.1980 களில் இந்தியத் தலையீடு இலங்கைப் பேரினவாதம் சார்ந்த முரண்பாடுகள் சார்ந்துதான் தலையீட்டை நடத்தியது என்பதை இதன் மூலம் மறுதலிக்கின்றனர். இந்தியத் தலையீடு இதை உருவாக்கியதல்ல. மாறாக அதை வீங்க வைத்து வெம்பி அழுகும் வண்ணம், தன் நலனுடன் தலையிட்டது.

2.இந்த இந்தியத் தலையீட்டின் நோக்கம், பேரினவாதத்தை எதிர்ப்பதற்கு அல்ல. தமிழ் மக்களுக்கு நியாயத்தையோ, உரிமையையோ பெற்றுக் கொடுப்பதற்கல்ல. மாறாக அன்றைய தனது தென்னாசியப் பிராந்திய நலன் சார்ந்து இதில் தலையிட்டது. அதே நேரம் போராட்டத்தை தமிழ் மக்களில் இருந்து அன்னியமாக்கி அதை தனிமைப்படுத்தியது.

3.இந்த வகையில் தமிழ் மக்களின் போராட்டத்தை, அன்றே தோற்கடித்தவர்கள் இந்தியா. இந்த மக்கள் விரோத அரசியல்; பின்னணியில், தமிழ் மக்களும் புலிகளை தம் பங்குக்கு தோற்கடித்தனர். தமிழ் மக்கள் தோற்கடித்த புலியை, இந்தியாவின் துணையின்றி இலங்கை வென்றிருக்க முடியாது. இந்த வெற்றிக்கு இந்தியா உதவியது என்பது கூட, தன் தென்னாசிய நலன் சார்ந்து தான். இதுதான் "கோத்தாவின் யுத்தம்" என்றும், "வெற்றி" என்றும் கூறும் சுய தற்பெருமை பேசும் அரசியல் பின்புலத்தில் உள்ள, உண்மை.

4.தென்னாசியாவில் இந்தியாவின் பிராந்திய நலனை அனுசரிக்காத இலங்கையின் தொடர் செயல்பாடு, மீண்டும் இந்தியாயின் தலையீட்டுடன் கூடிய யுத்தத்துக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு உள்ளது. இம் முறை அது இந்திய-அமெரிக்கா நலன் சார்ந்த ஒன்றாக அது மேலெழுந்து வருகின்றது. இது சார்ந்து பிரிவினைவாத அரசியல், தன்னை மீள முன்னிறுத்துகின்றது.

5.இனவழிப்பு சார்ந்த இனவொடுக்குமுறையால் இன முரண்பாடு மேலும் கூர்மையாகி வருகின்றது. சிங்களப் பாட்டாளி வர்க்கம் பேரினவாதத்துக்கு எதிரான தெளிவற்ற கொள்கையால் தடுமாறுகின்றது. இந்திய-அமெரிக்க தலையீடு எந்த வடிவிலும், மீண்டும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை பயன்படுத்தி சிதைக்கும் அபாயம் முதன்மை பெற்றுக் காணப்படுகின்றது.

இப்படி பேரினவாதம் மீண்டும் இந்திய-அமெரிக்க தலையீட்டுக்குரிய அனைத்து அரசியல் நிகழ்தகவுகளையும் தகவமைத்து வருகின்றது. மீண்டும் பிரிவினைவாதம் முதன்மையான ஒரு அரசியல் கூறாக மேலெழுந்து வருகின்றது.

இதைத் தடுத்து நிறுத்துவது சிங்களப் பாட்டாளிவர்க்கத்தின் கையில் இருக்கின்றது. சிங்களப் பாட்டாளி வர்க்கம் அரசின் பேரினவாத வெற்றிக் கொள்கையை எதிர்த்து, நேரெதிராக அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதன் மூலம் தான், இலங்கையில் இனவாதத்துக்கு எதிரான ஒரு புரட்சிகரமான அரசியல் சூழலை உருவாக்க முடியும். அரசியல் ரீதியாக தடுமாறுவதன் மூலமோ, இனவாதத்துடனான ஒரு இணக்கமான சூழல் மூலமோ, சிங்கள மக்களை இனவாதிகளின் பின் தக்கவைத்துக் கொண்டு, ஒரு நாளும் புரட்சியை நடத்த முடியாது.

சிங்கள மக்கள் பேரினவாத இனவழிப்புக்கு எதிராகப் போராடுவதன் மூலம் தான், தமிழ் மக்கள் பிரிவினைவாதத்தை முறியடிக்க முடியும். தமிழ் பிரிவினைவாதத்தை முறியடித்து சிங்கள மக்களுடன் தமிழ்மக்கள் ஜக்கியப்பட, சிங்கள மக்கள் பேரினவாதத்தை முறியடிக்க வேண்டும். பேரினவாதத்தை முன்தள்ளும் பிரிவினைவாத எதிர்பிரச்சாரத்தை முறியடிக்க, பிரிந்து செல்லும் உரிமையை முன்னிறுத்த வேண்டும். அதாவது பிரிவினைவாதத்துக்கு எதிராக, தமிழ்மக்கள் பிரிந்து செல்லும் உரிமையாக்க வேண்டும். பிரிவினை வேறு, பிரிந்து செல்லும் உரிமை வேறு என்பதை, அரசியல் மயப்படுத்தவேண்டும். அதை சிங்கள மக்களின் முன் அரசியல் ரீதியாக கொண்டு செல்ல வேண்டும். தமிழ் பாட்டாளி வர்க்கம் பிரிவினைவாதத்தை முறியடிக்கவும், சிங்கள மக்களுடன் ஐக்கியப்படவும், பிரிவினைவாதத்துக்கு எதிரான அரசின் பிரச்சாரத்தை சிங்களப் பாட்டாளி வர்க்கம் முறியடிப்பது அவசியமானது. இதைத் தான் மார்க்சியம் தன் வர்க்கப் போராட்டம் ஊடாக கோருகின்றது.

பி.இரயாகரன்

16.05.2012

1. இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01

2. தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03

4. புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04

5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05

6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 06