எந்தளவுக்கு மதம், இனம் .. என்று பிரிந்து நிற்கின்றோமோ, அந்தளவுக்கு எம் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும். அரசு என்பது மக்களைப் பிரித்து ஒடுக்குவது தான். அதே பிரிவினையையும், பிளவையும் நாங்களும் வரிந்துகொள்வது, எம்மீதான ஒடுக்குமுறையை வரைமுறையற்றதாக்குவது தான். அரசு மட்டும் ஒடுக்குவதல்ல, ஒடுக்கப்பட்ட மக்களும் தமக்குள் தாம் மோதிக்கொள்கின்ற நிலையை உருவாக்குகின்றது. அரச பாசிசம் இன்று இதைச் சார்ந்து மேலும் தூண்டி விடுகின்றது.
முஸ்லீம் மக்கள் மதம் இனமாக பிரிந்து நிற்பதன் மூலமோ, இன்றைய முஸ்லீம் தலைமையை நம்புவதன் மூலமோ, தங்கள் மீது பேரினவாத மத இனத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது. இன்று பேரினவாத அரசு, மத இனம் சார்ந்த அரசியல் மூலம், தன் பாசிசமயமாக்கலைக் கூர்மையாக்கி வருகின்றது. சிறுபான்மை இனங்கள் மீதும், சிறுபான்மை மதங்களின் மீதானதுமான, அதன் எதிர்ப்பு அரசியல் மூலம் தான், சிங்கள மக்களை தன் பின் அணிதிரட்டுகின்றது. இதைத் தவிர மகிந்தவின் பாசிச அரசியலுக்கு, வேறு மாற்று அரசியல் கிடையாது.
இன்றைய இந்த மத இன பாசிச அரசியலை எதிர்கொள்வது என்பது, அரசின் நோக்கத்துக்கு ஏற்ப தனித்து நிற்பதல்ல. தமிழ் குறுந்தேசிய அரசியல் போல், வன்முறையை தெரிவு செய்வதோ, பாராளுமன்றம் மூலம் பேரம் பேசும் பிழைப்புவாதம் மூலமோ, இந்தப் பாசிச அரச வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது. இன்று இலங்கை அரச பாசிசம் உலக ஒழுங்கில் முரண்பட்டுக் கொண்டு, தன்னை தனிமைப்படுத்தியபடி வீரியமடைகின்றது.
இதை எதிர்கொள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் இனம் மதம் கடந்து, தங்களை தாங்கள் அணிதிரட்டிக்கொள்வதன் மூலம் தான், பெரும்பான்மை சார்ந்து உருவாகும் அரச பாசிசத்தை எதிர் கொள்ளமுடியும். பெரும்பான்மையைச் சார்ந்து நிற்க முனையும் போக்கை உடைத்தெறியும் வண்ணம், பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணைய வேண்டும். அதற்காக நாம் எம் குறுகிய அடையாளங்களை கைவிட்டு, முன்னின்று போராட வேண்டும்.
குறுகிய இன மத அடையாளம் மூலம் எதிர்கொள்வது என்பது, தங்களைத் தாங்கள் தனிமைப்படுத்தி ஒடுக்க உதவி செய்வது தான். அரசு ஒடுக்கும் வர்க்கம் சார்ந்து நின்று, மக்களைப் பிரித்து ஒடுக்குகின்றது. இதே அரசியலை ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களும் தமக்குள் பிரிந்து நின்று கையாள முடியாது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஐக்கியத்தை நோக்கி நாம் சிந்திக்கவும், செயலாற்றவும் வேண்டும்.
இருக்கின்ற முஸ்லீம் தலைமைகள் என்ன செய்தன, என்ன செய்கின்றன. தமிழ் இனத்திற்கும் அரசுக்கும் இடையிலான தொடர்ச்சியான முரண்பாடுகள், ஒரு தீர்வு நோக்கிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்ற போது அதில் ஓட்டுண்ணி அரசியல் நடத்த முனைகின்றது. அரசுடன் தீர்வு பற்றிய விவாதம் நடைபெறுகின்ற எல்லா நிலையிலும், அதற்குள் புகுந்து ஒட்டுண்ணி அரசியல் நடத்த முனைகின்றது. இதுதான் முஸ்லீம் தலைமையின் அரசியல் பாத்திரம். அரசுடன் ஓட்டுண்ணியாக சேர்ந்து நின்று ஒடுக்க உதவுவதும், விரிசல்களில் புகுந்து கொண்டு வாழ்வதுமாக முஸ்லீம் மக்களை அரசியல் அனாதையாக்குகின்றது. இலங்கை முஸ்லீம் மக்களை போராடத் தகுதியற்ற சமூகமாக, அண்டி வாழும் சமூகமாக இதன் மூலம் வழிநடத்துகின்றது.
சுதந்திரமாக, சுயாதீனமாக மற்றைய இனத்துடன் இணைந்து போராடி வாழும் சமூகமாக, மூஸ்லீம் மக்கள் வாழ்வதை இந்த ஒட்டுண்ணி பாராளுமன்ற தலைமைகள் விரும்பவில்லை. இதுதான் இதில் உள்ள உண்மை. தாங்கள் பாராளுமன்ற ஓட்டுண்ணி அரசியலை நடத்த, முஸ்லீம் மக்களை மத இன ரீதியாக பிரித்து வைத்திருக்கவே முனைப்புடன் அது செயல்படுகின்றது.
பேரினவாதம் போல், அதை மத இன ஆயுதத்தைக்கொண்டு, முஸ்லீம் மக்களை தனிமைப்படுத்துகின்றது. இதைபோல் தான் தமிழ் தலைமைகளும் செய்கின்றது.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களை இனம் மதம் .. கடந்து ஐக்கியப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பதில்லை. அதை முறியடிக்கும் அரசியல் புள்ளியில் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.
இதற்கு மாறாக அனைத்து ஒடுக்கபட்ட மக்களும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு மதம், இனம் … எவையும், தடையாக இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களாக உணருகின்ற புள்ளியில் ஒருங்கிணைந்து, ஒடுக்குமுறையை எதிர்த்து செயலாற்ற வேண்டும். இந்த வகையில் முஸ்லீம் மக்களும் சிந்திக்க, செயலாற்ற வேண்டும். இது இன்று இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் உடனடிக் கடமை. எம் குறுகிய இன, மத .. அடையாளங்களை கடந்து ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுகின்றோம்.
பி.இரயாகரன்
24.04.2012