பெரும்பான்மை இன மத மக்களை, அரச பாசிசம் தன் பின் அணிதிரட்ட முனைகின்றது. அவர்களைக் கொண்டு சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான பொதுத் தாக்குதலை நடத்துவதன் மூலம் தன்னை விரிவாக்கி வருகின்றது. மக்களை இன மதங்கள் ஊடாகப் பிளந்து அவர்களைப் பாசிசமயமாக்கி, அவர்கள் மூலம் வன்முறையை நடத்தத் தொடங்கியிருக்கின்றது. 1930 களில் ஜெர்மனியில் நாசிக் கட்சி நடத்திய அதேயொத்த அரசியல் நடைமுறை, இன்று இலங்கை அரசின் பொதுக் கொள்கையாகிவிட்டது. இலங்கையில் சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான ஒடுக்குமுறையும் வன்முறையும், இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வண்ணம் இனிவரும் காலத்தில் மேலும் கூர்மையாகி வெளிப்படும்.
இதன் மூலம் மகிந்தாவின் குடும்ப சர்வாதிகார அரசைத் தக்கவைக்கவும், அதை அரசியல் மயப்படுத்தவும் முனைகின்றது. பெரும்பான்மை மதம், இனம் என்ற இரண்டையும் தன் ஆயுதமாகக் கொண்டு, அரசு வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கியிருக்கின்றது. இந்த அரசியல் பின்னணியில், பேரினவாத பாசிச ஆட்சி அமைப்பு, பௌத்த அடிப்படைவாதத்தை கொண்ட பாசிசமாகவும் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இலங்கையில் சிங்கள பௌத்தம் அல்லாத அனைத்துக்கும் இனி இடமில்லை, இது தான் அரசின் கொள்கை.
இந்த அரசியல் பின்னணியில் அரசின் வழிகாட்டலில் நடந்தது தான் தம்புல்ல பள்ளிவாசல் மீது மதவாதத் தாக்குதல். இதன் பின் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவது பற்றி, பாசிச அரசு பேசுகின்றது. அண்மையில் அனுராதபுரத்தில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட முஸ்லீம் தர்க்கா ஒன்றின் பின், இதேபோன்று பௌத்த பேரினவாத அரசுதான் செயல்பட்டது. இது போன்று இந்து - கிறிஸ்துவ வழிபாட்டு உரிமை மீது, சட்டத்துக்கு புறம்பான பல்வேறு வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
இன்று வடக்கு கிழக்கில் எழுகின்ற திடீர் புத்த சிலைகள், இராணுவத்தின் துணையுடன் அரசு முன்னின்று நிறுவிவருகின்றது. ஆக இலங்கையில் சிறுபான்மை இனங்கள் மீதான ஒடுக்குமுறை, இன்று மத சிறுபான்மை மீதான தாக்குதலாகவும் விசுவரூபம் எடுத்து வருகின்றது.
மக்களின் இயல்பான தங்கள் வாழ்வியல் போக்கில் இணக்கமாக உருவான வணக்க மையங்கள், அந்தப் பிரதேசத்தின் மத, இன நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது. அதை அரசு தகர்க்கின்றது.
1.இன்று மத வணக்க ஸ்தலங்கள் தகர்ப்படுவதன் மூலம், இன மத நல்லிணக்கத்துடன் கூடிய வாழ்வு எங்கும் தகர்க்கப்படுகின்றது.
2.அரசு பலாத்காரமாக நிறுவும் பெரும்பான்மை சார்ந்து நிறுவும் மதவழிபாட்டு தலங்கள், மத இன நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்கின்றது.
இவ்விரண்டையும் அரசு நேரெதிராக திணித்து வருகின்றது. இந்த வகையில் பெரும்பான்மை இன மத பிரதேசத்தில் சிறுபான்மை அடையாளங்களைத் தகர்க்கின்றது. சிறுபான்மை இன மற்றும் மதங்கள் வாழும் மண்ணில், பெரும்பான்மை பௌத்த அடையாளங்களை இராணுவத்தின் துணையுடன் நிறுவி வருகின்றது. இதுவே இன்று அரசின் கொள்கையாகிவிட்டது.
இப்படி அரசு தன் பாசிச கட்டமைப்புக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்ட, சிறுபான்மை இன மத வெறுப்பை ஊட்டி வளர்க்கின்றது. இப்படி மக்களை அணிதிரட்டி அவர்களைக் கொண்டு சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான தாக்குதல் நடத்துதல் படிப்படியாக இன்று அதிகாரித்து வருகின்றது.
மற்றொருபுறத்தில் சிறுபான்மை இன மற்றும் மதங்களுக்கு இடையில் மோதலை திட்டமிட்டு தூண்டி விடுகின்றது. கிழக்கில் முதலமைச்சர் ஏன் ஒரு முஸ்லீமாக இருக்கக் கூடாது என்று கேட்டு, தமிழ் முஸ்லீம் பிளவை தூண்டிவிட்டு இருக்கின்றது. அதே நேரம் எலும்பைக் கடித்து வாலாட்டும் முஸ்லீம் அமைச்சர் ஒருவர், கிழக்கில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறியுள்ளது. இப்படி எண்ணையை ஊற்றி கிழக்கில் தன் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகின்றது.
கிழக்கில் முறையற்ற தன் தேர்தல் நடைமுறை மூலம், முதலமைச்சராக்கிய பிள்ளையானின் பொம்மை ஆட்சியை இனி அதே வழியில் அரசால் நிறுவமுடியாது. இந்த அரசியல் எதார்த்தம், கிழக்கில் தமிழருக்கு எதிரான முஸ்லீம் - சிங்கள இனக் கூட்டை ஏற்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற அரசு முனைகின்றது. இந்த அரசியல் பின்னணியில், ஏன் முஸ்லீம் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்ற வக்கிரத்தை, தமிழ் முஸ்லீம் மக்களைப் பிளந்து மோத வைக்கும் வண்ணம் அரசு திட்டமிட்டு திணித்து இருக்கின்றது.
இப்படி பலமுனையில் இலங்கையில் இன மதங்களைப் பிளக்கும் அரசியல் பாசிசமயமாகி, அது கூர்மையாகி வருகின்றது. மக்களை மோத வைப்பதன் மூலம், மக்களின்; பொது ஐக்கியத்தை சிதைப்பதன் மூலம், நாட்டை அடக்கியாள முனைகின்றது. இந்த வகையில் தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக இனங்களுக்கு இடையில் இனப் பிளவையும், பௌத்த - கிறஸ்துவ - இந்து - முஸ்லீம் மதங்களுக்கு இடையில் மத மோதலையும் தூண்டி, மகிந்த குடும்ப சர்வாதிகார பாசிச இராணுவ அரசை தக்கவைக்க முனைகின்றது. மகிந்த சிந்தனை என்பது பாசிசம். அது மக்களின் பொது ஐக்கியத்தையும் சகிப்புத் தன்மையையும் தகர்க்கின்றது. அது மக்களை இன மத ரீதியாக பிளந்து மோதவிடுவதன் மூலம், மக்களை ஒடுக்கியாள முனைகின்றது.
இன மத ஐக்கியத்தை தக்க வைப்பதும், இதற்கு எதிரான அனைத்தையும் ஈவிரக்கமின்றி எதிர்த்து போராடுவதன் மூலம் இதை இன்றே முடியடிக்காவிட்டால் பாசிசம் நிறுவனமயமாகிவிடும். புலிப்பாசிசம் எப்படி இனவொடுக்குமுறையைக் காட்டியபடி, தான் அல்லாத அனைத்து மீதும் ஒடுக்குமுறையை ஏவி படிப்படியாக தன்னை நிறுவனமாக்கியதோ, அதே பாதையில் அரச பாசிசமும் தன்னை நிறுவனப்படுத்த முனைகின்றது. அது இன மத பெரும்பான்மையைச் சார்ந்து, தான் அல்லாத அனைத்து மீதுமான தாக்குதல் மூலம் பாசிசமயமாக்கலை நிறுவனப்படுத்த முனைகின்றது. இன்று இன மத ஐக்கியம் மீது, பாசிசம் சவால் விடுகின்றது. இதை எதிர்கொள்வதும், இதை எதிர்த்துப் போராடுவது சவால்மிக்க ஒன்றாக எம்முன் மாறி உள்ளது.
பி.இரயாகரன்
21.04.2012