"ஒடுக்குபவர்" அடையாள அரசியலை முன்தள்ளும் போது, அந்தப் பிளவுவாதத்தை "ஒடுக்கப்படுபவர்" அரசியல்ரீதியாக எதிர்க்க வேண்டும். மாறாக பிளவுவாத "அடையாள அரசியலை" முன்னெடுத்தால், "ஒடுக்குபவரின்" வர்க்க அரசியல் நோக்கத்தின் அரசியல் பிரதியாகி விடுகின்றது.
இங்கு "ஒடுக்கப்படுபவர்" என்று "தரவரிசைப்படுத்துவது" அல்லது சமாந்தரப்படுத்துவது என்பது சாராம்சத்தில் பல "ஒடுக்குபவரை" உள்ளடக்கி அதையும் சமாந்தரப்படுத்தக் கோருவதுதான். இதன்படி ஒன்றுக்கு மேற்பட்ட "ஒடுக்குபவரை"யும், "ஒடுக்கப்படுபவரை"யும் அங்குமிங்குமாக சமாந்தரமாக முன்னிறுத்துவது, இதற்குள் அங்குமிங்குமாக "ஐக்கிய முன்னணியை" கட்டுவது எதிர்ப்பதும், இந்த சமூக அமைப்பின் அரசாலான மூடிமறைத்த மற்றொரு பிரதிதான்.
இந்த வர்க்க சமூக அமைப்பில் "ஒடுக்கப்படுபவர்"ராக இருக்கின்ற நிலையில், தன் மீதான ஒடுக்குமுறையை அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான முரணற்ற கண்ணோட்டமாக மாற்றாத வரை, அதுவும் ஒடுக்குமுறையைச் சார்ந்த கண்ணோட்டமாகும். இங்கு சமாந்திரம் என்பது, தனக்குள்ளான தனது ஒடுக்குமுறையை தக்கவைக்கும் அடிப்படையை முன்வைக்கின்றது. புலிகள் முதல் மார்க்சியமல்லாத அனைத்துக் கோட்பாடுகளும், இதன் நடைமுறைகளும் இதைத்தான் முன்வைக்கின்றது. மார்க்சியம் மட்டும்தான், முரணற்ற வகையில் அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்து நிற்கின்றது.
"நாம் ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தும் போதும், தரவரிசைப்படுத்தும் போதும் நிச்சயமாக ஒடுக்கப்படுபவர்கள் என்ற திரட்சியையும் - ஒடுக்கப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் இழந்துவிடுவோம். இனரீதியான ஒடுக்குமுறையோ - மதரீதியான ஒடுக்குமுறையோ - சாதியரீதியான ஒடுக்குமுறையோ - வர்க்கரீதியான ஒடுக்குமுறையோ - பால்ரீதியான ஒடுக்குமுறையோ - அனைத்து ஒடுக்குமுறைகளும் சமாந்தரமாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை. அதைத்தான் அடையாள அரசியல் எமக்குக் கற்றுத் தந்துள்ளது." என்கின்றார் சசீவன்.
இங்கு இவரின் "அடையாள அரசியல்" என்பது வர்க்கமற்ற ஒடுக்குமுறையாக தன்னைக் காட்டிக்கொள்ளும், இந்த சமூக அமைப்பின் இயல்பான வர்க்க அரசியலாகும். மனிதனை மனிதன் ஒடுக்கும் "ஒடுக்குமுறை" ஏன் எங்கிருந்து தோன்றுகின்றது? ஒரு அடையாளம் சார்ந்து எழும் ஒடுக்குமுறை, தனித்து சுயாதீனமாக இயங்குவது கிடையாது. எந்தச் சமூகக் கூறும் தனித்து இயங்குவது கிடையாது. ஒன்றையொன்று சார்ந்தும் விலகியும் தான் இயங்குகின்றது.
மனித இனம் வர்க்கரீதியாக எங்கும் பிளவுபட்டு இருக்கின்ற அரசியல் அடித்தளத்தில், அதை மூடிமறைக்கவே ஜனநாயகம் முதல் அடையாள அரசியல் வரை இயங்குகின்றது. அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் அர்த்தமிழந்துவிடும். அது போல்தான் அடையாள அரசியலும். அடையாள அரசியல் குறுகியது. முரணாது.
இந்த சமூக அமைப்பில் "அடையாளம்" என்பது குறுகிய பிளவுவாத அரசியல். மக்களைப் பிளக்கும் இந்தக் குறுகிய "அடையாள அரசிய"லை பலவாக அங்கீகரித்து, அதை சமாந்தரமாக தொடர்ந்து தக்கவைக்கும் கோட்பாடு மனித இனத்தில் பிளக்கும் சுரண்டும் வர்க்க கோட்பாடு. சுரண்டும் வர்க்கத்தை எதிர்க்கும் மார்க்சிய கோட்பாடு அடையாளம் சார்ந்த பிளவை மறுதலிக்கின்றது. சமூக முரண்பாடுகளை "தரவரிசைப்படுத்துவதையோ" சமாந்தரப்படுத்துவதையோ" மறுத்து, அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒரு புள்ளியிலான அணித்திரட்சியைக் கோருகின்றது. முரணற்ற வகையில் அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்க்காத, பிளவாத குறுகிய "அடையாள அரசியல்" ஆளும் வர்க்கத்தின் மூடிமறைத்த கோட்பாடாகும்.
மக்களைப் பிளக்காத, அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான அரசியலுக்குப் பதில், "அடையாள அரசியல்" மக்களை தன் பங்குக்கு பிளக்கக் கோருகின்றது. எமது மண்ணில் தமிழன் - சிங்களவன் - முஸ்லிம் - மலையக மக்கள் என்று பிளந்த "அடையாள அரசியல்" குறுகிய அடையாளத்தை சமாந்தர ஒடுக்குமுறையைக் கோருகின்றது. இப்படி சாதி, பால், இனம், மொழி, மதம், நிறம், பிரதேசம், … என்று அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட, "அடையாள அரசியல்" படுபிற்போக்கானது. "ஒடுக்குவோர்" மட்டும் இதை முன்வைப்பதில்லை. அவர்களின் நோக்கத்திற்கு அமைவாக "ஒடுக்கப்பட்டவர்கள்" கூட முன்வைக்கின்ற அரசியல்தான் "அடையாள அரசியல்" கோட்பாடாகும். "அடையாள அரசியல்" வர்க்கமற்ற ஒன்றாகக் காட்டி, "ஒடுக்கப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயத்"தின் பெயரில், தாம் தமக்குள் ஒடுக்குவதையும், மற்றைய மனிதனை எதிரியாக காட்டி பிளப்பதையும் அங்கீகரிக்கக் கோருகின்றது.
தொடரும்
பி.இரயாகரன்
28.03.2012
1.வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01
2.வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02