Language Selection

புதிய ஜனநாயகம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்குரைஞர் மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டுமென்றும் வாதாடினார். இது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் "தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்' என்று ஒரு தீர்மானத்தை ஆகஸ்டு 30ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முன் மொழிந்த ஜெயலலிவின் அரசு, தற்போது அதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறது. "கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றிவிடவில்லை' என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கருணை மனுவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்திருக்கிறது. எந்தத் தமிழ் மக்களின் பெயரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்  பட்டதோ, "அந்த மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை' என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசின் மனு.

 

 

ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானத்தின் பின்புலத்தில் இருந்திருக்கக் கூடிய காரணிகளை விளக்கி, "இது அமைச்சரவை முடிவல்ல... இது இடுக்கண் களைவதற்காக நீண்ட கரமல்ல... இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காகவே நீண்டிருக்கும் கரம். அதிலும் கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே' என்றும், இதுவும் கூட மக்கள் போராட்டம் தோற்றுவித்த நிர்ப்பந்தத்தின் விளைவு  என்றும் புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் குறிப்பிட்டோம்.

ஆனால் மூவர் தூக்கினை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோர் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள்; அம்மாவையும் "தம்பி'யையும் அக்கம்பக்கமாகப் போட்டு சுவரொட்டி அடித்து பாராட்டு விழா நடத்தினார்கள். சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பழிவாங்கத்தான் பெங்களூரு வழக்கு முடுக்கி விடப்படுகிறது என்பன போன்ற அரிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு அரணாக இருப்போம் என்று சத்தியம் செய்தார்கள். நாப்புண்ணாகிப் புழுத்து நாறுமளவுக்கு அம்மாவின் புகழ் பாடினார்கள். இப்போது?

"முன்னுக்குப் பின் முரண்', "அதிர்ச்சி', "துரோகம்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, ""சட்டப்பிரிவு 161இன் கீழ் கருணை மனுவை அங்கீகரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது'' என்று ஜெயலலிதாவுக்கு ஆலோசனையும் கூறுகிறார்கள். அரசியல் சட்டப்படி அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதா இப்போது பிரச்சினை? அரசியல் சட்டமாவது, வெங்காயமாவது? காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் அதிகாரம் அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென்று தெளிந்ததனால்தான் கர்நாடக, கேரள அரசுகள் தீர்ப்பை மீறி செயல்படுகிறார்களா? கருணை மனுவை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடியாமல் சட்டம்தான் ஜெயலலிதாவின் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதா?

தற்போது தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மூவரும் தொடுத்துள்ள வழக்கில்,  தீர்ப்பு வழங்கப்போவது உயர் நீதிமன்றம்தான். மாநில அரசு தெரிவிப்பது வெறும் கருத்து மட்டுமே. எனினும், மனுவைக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கருத்து தெரிவிப்பதற்குக் கூட ஜெ. அரசு தயாராக இல்லை. தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறப்பட்டுள்ளதுதான் ஜெயலலிதாவின் உண்மையான கருத்து. இந்தக் கருத்துக்கு மாறாக, சட்டமன்றத்தில் அன்று நிறை வேற்றிய தீர்மானம்தான் முரண். அந்த வகையில் "பின்னதற்கு முன்னது முரண்' என்பதே உண்மை. 20 ஆண்டுகளாக புலி எதிர்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு என்பதையே தனது அரசியலாகக் கொண்டு, தமிழ்தமிழின உரிமை என்று பேசுவோரையெல்லாம் ஒடுக்கிவரும் ஒரு பாசிஸ்டு, திடீரென்று சட்டமன்றத்தில் அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றியதுதான் அதிர்ச்சிக்குரியதேயன்றி, தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுஅல்ல. இந்த சட்டமன்றத் தீர்மானமாக இருக்கட்டும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஈழம் வாங்கித்தருவதாக அம்மா தந்த வாக்குறுதியாக இருக்கட்டும், இவையனைத்துமே "சும்மா' என்பதை சு.சாமியும் "சோ'வுமே தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

"ஜெயலலிதாவே தமிழினத்தின் மீட்பர்'  என்று உடுக்கடித்துத் தமிழக மக்களை நம்பவைத்ததும், சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியவுடனே விழா எடுத்து புகழ்பாடியதும் தமிழின உணர்வாளர்கள் எனப்படுவோர்தான். இப்படியெல்லாம் தமிழ் மக்களை நம்பவைத்த பூசாரிகள் என்ற முறையில்தான், நெடுமாறன், சீமான், வைகோ, பெரியார் தி.க உள்ளிட்டோர், இப்போது ஜெ அரசின் கருத்தைக் கேட்டு அதிர் ச் சியடைந்தவர் கள் போல முகத்தை வைத்துக் கொள்கிறார்களேயன்றி, ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது பூசாரிகள் அறியாத உண்மையல்ல. "கேழ்வரகில் நெய் வடியும்' என்று தெரிந்தேதான் இவர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். கேட்டால், "ஜெயலலிதாவைப் பற்றி எங்களுக்கும் தெரியும். சும்மா கொள்கை பேசிக்கொண்டிருந்தால் மூன்று உயிர்களைக் காப்பாற்ற முடியாது' என்று ஏகடியம் பேசுவார்கள். விமரிசிப்பவர்களே காரியத்தைக் கெடுப்பவர்கள் என்று ஏசுவார்கள்.

ஜெயலலிதாவை அண்டியும், ஒண்டியும் அரசியல் நடத்தி, அதையே மாவீரமென்று சித்தரித்து வாய்ப்பந்தல் போட்டு, தமிழ் சினிமாவின் குத்தாட்டத்துக்கு இணையான ரசிக அனுபவத்தை வழங்கும் மேடைக் கச்சேரிகளை நடத்தி வந்தவர்களுக்கு அரசியல் பேசும் வாய்ப்பை அம்மா வழங்கியிருக்கிறார். மனிதாபிமானம், மரணதண்டனை ஒழிப்பு போன்ற அரசியலற்ற சொற்றொடர்களுக்குள் ஒளிந்து கொண்டு அம்மாவின் கருணைக்கு மன்றாடி இனிப் பயனில்லை. மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அரசியல் நியாயத்தை இனி பேசலாம். இனியாவது பேசுவார்களா என்று பார்க்கலாம்.