நண்பர்கள் வட்டம், வளையம், ஒன்றியம், மாவட்டம் என்ற பெயர்களில் இறந்தவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுவது ஐரோப்பாவில தொண்ணுறுகளில இருந்து சீவிக்கிறவர்களுக்கு தெரியும். பாரிஸ் இதற்கு பேர்போன நகரம். அதுக்கடுத்ததாக லண்டன்.
அந்த நினைவு தினங்களின் இலக்கியவாதிகள், பெண்ணியவாதிகள் என்று தம்மை தாமேயும் (தனக்கு தானே முதுகு சொறிதல் ) மாறி மாறியும் ( அதாவது நீ எனக்கு முதுகு சொறிந்தால் நான் உனக்கு முதுகு சொறிதல்) பிரகடனப்படுதிக் கொண்டவர்கள் ஒன்று கூடி இறந்தவருக்கு முதுகு சொறிவதும், அவரை இந்திரன் சந்திரன், தமிழ் மக்களுக்காக போராடிய மாபெரும் போராளி, பெண் விடுதலைக்காக போராடிய பெண்ணியவாதி என அவரை புகழ்வதுடன், தாம் எப்படி அவருடன் இணைந்து பிணைந்து கூடிக்கலவிக்குலவி வாழ்ந்ததாக உரை நிகழ்த்துவார்கள்.
இதில் இறந்தவரின் பெயரைச்சொல்லி தமக்கு தாமே பரிவட்டம் கட்டுவதே முக்கிய நோக்கமாகவிருக்கும். இதெல்லாம் உனக்கெப்படி தெரியும் என்று நீங்க கேட்டால், நானும் அந்த நண்பர்கள் வட்டம், வளையம், ஒன்றியம், மாவட்டங்களுடன் கொஞ்சகாலம் குப்பை கொட்டியவன். மற்றவர்களின் முதுகு சொறிந்த பின், நான் எழுதிய கவிதை அவர்கள் புகழ்த்து தள்ளியபின், நானும் ஒரு கவிஞன் என்ற மிதப்பில் நண்பர்கள் வட்டடத்துடன் மதுவில் மிதந்தவன் என்பதை சுய விமர்சனத்துடன் ஏற்றுக்கொள்ளுறன் . இந்த மலரும் நினைவுகள் ஒருபக்கம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் வட்டம் ஒன்று புதிதாக உதித்துள்ளது. கனடாவில் உதித்துள்ள இந்த வட்டம் தன்னை “செல்வியின் நண்பர் குழாம் “ என அழைத்து கொள்கிறது .
இப்போ விளங்கி இருக்குமே நான் என்ன சொல்லவாறன் என்று? ஆமா இந்த குழாம் செல்வியின் நினைவு தினக்கூட்டத்துக்கு எதிராக விட்ட அறிக்கையை பற்றிதான் நான் நீட்டி முடக்கி இங்க சொல்லவாறன் .
இந்த நண்பர்கள் குழாமில் அறிக்கையின் தலைப்பே இந்திய தமிழர்கள் சொல்வது போல “படு காமடி ” . அந்த தலைப்பு என்னவென்றால் :
எச்சரிக்கை! கனடாவில் செல்வியின் பெயரால் கள்வனே கள்வனைத் தேடிய நாடகம்! .
இதில என்ன காமடி என்னது கேட்கிறேங்களா ? இவர்களின் அறிக்கையில் உள்ள மிக முக்கியமான பகுதியை இங்கு ஒட்டுகிறேன் வாசியுங்கோ . அதுக்கு பிறகு நீங்களே அந்த ”காமடியை” விளங்கி கொள்வீர்கள் .
”பாசிச புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, பெண் புலிகளால் மனிதகுலம் வெட்கித் தலைகுனியுமளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு, அந்த ஏழை கிராமப்புற பிள்ளையை நார் நாராகக் கிழித்து படுகொலை செய்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியான செல்வி (செல்வநிதி தியாகராசா) அவர்களுக்கு, கனடாவில் 2011 அக்டோபர் 16ம்திகதி நினைவுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. …அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கு யாரும் நினைவஞ்சலிக் கூட்டம் நடாத்தவில்லை. இப்பொழுது மட்டும் ஏன் இந்தக் கூட்டம் என்பது தெரியவில்லை…
…இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவதற்காகவும், பேசுவதற்காகவும் தமது வாழ்நாளையே பாசிசப்புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் அர்ப்பணித்த சில முக்கியஸ்தர்கள் அணுகப்பட்டார்கள். மிகவும் உரிமையுடனும் ஆக்ரோசமாகவும் கூட அவர்கள் அணுகப்பட்டார்கள்.
..ஆனால் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் மத்தியிலிருந்து கிடைத்த தகவல் மற்றும் தமது சொந்த வளங்கள் மூலம் கிடைத்த விபரங்கள் மூலம் இந்தக்கூட்டம் திட்டமிட்ட ஒரு சதி வேலை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்…….
…பின்னர் கிடைத்த தகவல்களின்படி, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கூட்டத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்ததாகத் தெரிய வருகிறது…
...இதில் ஒரு நல்லதும் மெச்ச வேண்டியதுமான விடயமென்னவெனில், சுமார் 30 பேர் வரையில் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில், எந்தவொரு நல்ல மனிதரும் பங்குபற்றவில்லை. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் என யாருமே பங்குபற்றவில்லை. பங்குபற்றியவர்கள் எல்லோருமே புலிப் பினாமிகள்தான். …
செல்வியை கடத்திச் சென்று படுகொலை செய்த சக்திகளே அவருக்கு நினைவுக்கூட்டம் நடாத்தும் அயோக்கியத்தனம் நடந்துள்ளது. இது போன்ற கபட முயற்சிகளை மற்றைய நாடுகளிலும் புலிகள் அரங்கேற்ற முயற்சிப்பார்கள்……
- செல்வியின் நண்பர் குழாம் – கனடா
இதில ”காமடி” எது என்று இன்னும் விளங்காதவர்களுக்கு சில விளங்கங்கள் :
1 . இந்த அறிக்கையை வெளியிட்ட ஊடகங்கள் கிட்டத்தட்ட பத்து வருசமா புலி எதிர்ப்பு வருத்தத்தால பீடிக்கப்பட்டு இலங்கை அரசின் லங்கா புவத்தாக ஐரோப்பாவில் செயற்படுவன. தேன் எடுத்தவன் கைய நக்குவான் எண்டது போல தமிழ்மக்களின் ஜனனயதுக்காக போராடுவதாக காட்டிக் கொண்டு இலங்கை அரசின் அத்தனை மனித உரிமை மீறலையும் மூடி மறைப்பவை. இவர்களுக்கு மற்றவர்களை கள்ளர் என சொல்ல எந்த தகுதியும் கிடையாது. அரசியல் மலட்டுத்தனம் வாய்ந்த இவங்களெல்லாம் மணி ஆட்டி ஜனநாயக பூசை செய்யும் பூசாரிகளாக தம்மை காட்டுவது முதல் காமடி .
2 . தான் போகக்காணாம் மூஞ்சூறு பூங்கொத்த காவ முயன்றதாம் என்டது போல, புலிகளின் புலனாய்வு செல்வியின் நினைவு தினத்தை கொண்டாடியதாம் என்று காதில பூவைக்க முயல்கிறாங்கள் இந்த கயவர்கள்.
நினைவுதினத்தை கொண்டாடுவதால் புலி பினாமிகளுக்கும் புலனாய்வுக்கும் என்ன லாபம்?
எல்லாம் அந்த மணியனுக்கே வெளிச்சம் ! அதாவது அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணினுக்கே வெளிச்சம். எல்லாம் அவன் செயல் .
3 . மேற்படி அறிக்கையில் உள்ள மூன்றாவது பெரிய காமடி. இந்த வசனம் தான் “இந்தக் கூட்டத்தில், எந்தவொரு நல்ல மனிதரும் பங்குபற்றவில்லை. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் என யாருமே பங்குபற்றவில்லை” .
இந்த வசனத்துக்கு நான் விளக்கவுரை எழுதினால் நான் உங்களை முட்டாள் என உங்களை நினைப்பது போலாகிவிடும். ஆனாலும். செல்வியின் நண்பர் குழாமை சேர்ந்த அறிவுமணிகள் மேற்கூறிய கும்பலை (புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ) நல்லவர்கள் என்று எழுதாமலும், இந்த இலங்கை அரசின் கைகூலிகளையும், மூன்றாம்தர அரசியல் செய்யும் களவாணிகளை புகழ்ந்து, விதந்து இந்த அறிக்கையில் குறிப்பிடாமலும் விட்டிருந்தால் சிலவேளை என்னப் போன்ற சின்னபையன்கள் உண்மையிலேயே புலியின் உளவுப்படை தான் அஞ்சலிக் கூட்டத்தை ஒழுங்கு பண்ணியதென்று நம்பியிருப்போம் . ஆனால் இந்த அறிவுமணிகள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” எண்டது போல, தங்களை தாங்களே காட்டிக்கொடுத்து விட்டார்கள். தாம் இலங்கை அரசின் பிட்டம் ருசிக்கும் ஈனப்பயல்கள் என்று.
இது இப்படி இருக்க. நான் ஆரம்பத்தில் கூறிய ஐரோப்பிய நண்பர்கள் வட்டமும் மேற்படி கனடாவில் நடந்த அஞ்சலி கூட்டம் சம்பந்தமாக திருப்திப்படவில்லயாம். காரணம் ஐரோப்பிய வட்டத்தினர் சிலர் தாம் தான் செல்வியின் அரசியல் வரலாற்றிற்கு பாதுகாவலர்கள் என ”பீல்” பண்ணுகிறார்களாம். கட்டுப்பாடு இல்லாமல் கண்டவன் நிண்டவன் எல்லாம் அஞ்சலி கொண்டாடுகிறது தமது “பாதுகாவலர்கள் ” என்ற பதவிக்கு பங்கம் வரலாம் என்ற பயம்தான் அவர்களின் அதிருப்திக்கு காரணமாம். இதனால் அஞ்சலிக் கூட்டத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அஞ்சலிக் கூட்ட ஏற்பாடாளர்களுக்கு ரகசியமாக சில நிபந்தனைகளை விதித்தார்களாம். அந்த ரகசிய நிபந்தனைகள் பற்றிய விபரம் குறித்துஇனியொரு கட்டுரை யாரவது எழுதினால் தான் தெரியவரும் . அதுவரை அந்த கண்ணபிரனுக்கே வெளிச்சம்.
கார்த்திகேசு கலியுகவரதன்
19.10.2001