மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்
கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.
உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்குண்டு. ஆனால் மீன்பிடித்தொழில் ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை உயர்த்துவது போலல்ல. மீன்வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியை கூடவோ அல்லது குறைக்கவோ முடியும்.
சந்தை நிலவரத்திற்கேற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மீன்வளம் அப்படி அல்ல. மீன்வளத்தின் உருவாக்கம் பல ஆண்டுகளைக் கொண்ட இயற்கைசார் உற்பத்திப் பொருள். மீன்வளத்தின் உருவாக்கம் கடலின் ஆழம், அதன் அடித்தளத் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடலின் நீரோட்டம், மற்றும் கடலின் வெப்ப தட்ப நிலையில் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு கடற்பரப்பில் மேற்கூறிய மீன்வளர்சிக்கான சூழலியல் காரணிகள் மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மீன்கள் தான் உருவாகும். மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் சில வருடங்களில் மிக மிக சாதகமானதாகவுள்ள போது அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து 00,2 – 00,5 சதவீதத்துக்கு கூடுதலாக உருவாகலாம். ஆனால் இந்த காரணிகளில் ஏதாவது ஒன்று பாதகமானதாக அமையும்போது மீன் வளர்ச்சியின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீத வீழ்ச்சியை அடையலாம்.
இதனடிப்படையில், இயற்கையுடன் இணைந்து அதற்கு பங்கமேற்படாது மீன்பிடித்தொழில் செய்வதானது, மீன்வளர்ச்சிக்கான மேற்கூறிய சூழலியல் காரணிகளை பாதிக்காமலும், மீன்வளத்தில் கூடியது மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிடிப்பதுவாகும். அதேவேளை குறைந்தது மீன்வளத்தில் மூன்றில் ஓன்று பங்காவது இருந்தால் தான் அதன் மறுஉற்பத்திக்கு வசதியாகவிருக்கும். அத்துடன் அந்த மீன்களில் குறைந்தது 75 சதவீதம் மீன்கள் மறுஉற்பத்திக்கு தயாராகவுள்ள பெண் மீன்களாகவும் இருக்கவேண்டும். அதாவது இனப்பெருக்கத்தை செய்யக் கூடியனவாக, முட்டையிடக் கூடியனவாக இருக்க வேண்டுமென கடல்வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கொள்ளை இலாபத்தில் குறி கொண்டியங்கும் போது, இருக்கின்ற மீன்வளம் அனைத்தையும் தமதாக்கி கொள்ளும் போட்டி எழும். அதற்காக மீன்களை கடலிலிருந்து பெயர்த்;தெடுக்கும் பாரிய உற்பத்தி உபகரணங்களை, அவர்கள் பெரும் முதலீட்டில் வாங்கிக் குவித்து மீன்பிடியின் அளவை அதிகரிக்கும் போட்டி அவர்களிடையே வளர்ந்து கொண்டு போகும். ஆனால் அதேவேகத்தில் மீன்வகைளின் மறுஉற்பத்தி நடைபெறுவதானது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத, கடற்சூழல் மற்றும் தட்ப வெட்பக் காரணிகள் பலவற்றில் தங்கியிருக்கின்றது. அதனால் மீன்களின் மறுஉற்பத்திக்கு அதி அத்தியாவசியமான சினைப்படும் திறனுடைய மீன்கள் இவ்வகை கட்டுப்பாடற்ற நாசகார மீன்பிடியால் அருகிவிடும். இதனால் மீன் வகைகளின் மறுஉற்பத்தி படுபாதாள வேகத்தில் குறையும். மீன்கள் இறுதியில் கடலில் முற்றாக அருகி மீன்வளம் இல்லாத கடல்களாக அவை மாறிவிடும்.
மெதுமெதுவாக தண்ணீர் ஊறும் கிணற்றில் இராட்சத நீரிறைக்கும் இயந்திரம் வைத்து அடியொற்ற தண்ணீரை உறுஞ்சுவதற்கு இதனை ஒப்பிட்டு நோக்கினால் மீன்களின் மறுஉற்பத்தி வேகத்திலும் கூடுதலாக வேகத்தில் அவற்றை கடலிலிருந்து இழுத்து எடுக்கும் கொள்ளை இலாபம் ஒன்றே குறி என்றியங்கும் இந்தப் பெரும் முதலைகள் மீன்வளத்தை அழித்தொழித்த பின்னர் இன்னும் வேறு நாட்டு கடல்வளங்களை கொள்ளையிட நகர்ந்து கொண்டேயிருப்பார்கள்.
இயற்கைக்கு முரணான நாசகார மீன்பிடி- ஒரு சர்வதேச உதாரணம் .
மேற்கூறியது போன்று இயற்கைசார் மீன்பிடிக்கு முரணாக நாசகார மீன்பிடியை மேற்கொண்டு கடல்வளத்தை அழித்த நாடுகள் பலவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின் பின, அழிந்துபோன பொருளாதாரத்தை கட்டவேண்டிய பாரிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியமானதாகவிருந்தது. பொருளாதார வளர்ச்சியையே முக்கியமானதாக இந்த நாடுகள் கருதின. இயற்கைவளங்களை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிகளாக நினைத்து பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் பாரிய முதலீடுகளை மீன்பிடியில் முதலிட்டனர். பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இப்பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் பாரிய அழிவை இந்நாடுகளின் கடல்வளங்கள் கண்டன. உதாரணமாக இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த நாடுகளில் மிகப் பாரதூரமான கடல்சார்வள அழிவை ஏற்படித்திய நாடு ஸ்பெயின் ஆகும்.
பல பில்லியன்களை முதலிட்டு தனது மீன்பிடித்திறனை அதிகரித்த ஸ்பெயின், அதற்கு வசதியில்லாத அருகில் இருந்த நாடான போர்த்துக்கல்லின் கடல் பிராந்தியத்திலும் தனது இராட்சத படகுகள் மூலமும் றோலர்கள் மூலமும் மீன்பிடித்தது. கண் மண் தெரியாத மீன்பிடி காரணமாக எண்பதுகளின் நடுப்பகுதியில் மீன்வளம் அறுபதுகளில் இருந்ததை விட 90 சதவீதத்தால் குறைந்து போயிருந்தது. பாரிய முதலீட்டுடன் உலகத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்டிருந்த ஸ்பானிய நாட்டின் மீன்பிடி முற்றாக ஸ்தம்பித்தது. வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார வறுமையும் ஸ்பானியக் கரையோர பிரதேசங்களை வாட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடாத்திய கடல்ஆய்வு பல்லாயிரக்கணக்கான கடல் மைல் கடலடித்தளம் முற்றுமுழுதாக அழிந்து போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் அறுபதாம் ஆண்டின் நிலையை மறுபடியும் இயற்கை தானாகவே உருவாக்க குறைந்து நூறு வருடங்களாவது எடுக்குமென கணக்கிட்டனர். அத்துடன் சிலவகை கடலடித் தாவரங்களும், மீன் இனங்களும் இனி அந்தக் கடற்பரப்பில் உருவாக சந்தர்ப்பம் இல்லை என்றும் முடிவு கூறினார். வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்கவும், தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக சந்தை வைப்பை பெறவும், வேறும் பல முக்கிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்பானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது. வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதலாவது இராஜதந்திர உறவுகளையும், கடற்படை அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடித்தலாகும். அத்துடன் டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வடகடல் பிரதேசத்தில் அந்நாடுகளின் நல்லெண்ண அனுமதியுடன் குறிப்பிட்ட அளவு தொன் மீன்களைப் பிடித்தல். இரண்டாவது ஸ்பானிய கரையோரப் பிரதேசங்களில் உல்லாசப் பயணக் உள்கட்டுமானங்களை உருவாக்கி உல்லாசப்பயணிகள் மூலம் வரும் வருவாயில் வறுமையை ஒழித்தலாகும். இன்று இருபது வருடங்களில் பின் இந்த இரு திட்டங்களில் இரண்டாவது திட்டம் பல வழிகளில் வெற்றி அளித்துள்ளது. ஆனால் மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடிக்கும் திட்டமானது ஸ்பானியாவின் அத்துமீறலால் பல்லாயிரம் ஆபிரிக்க மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. அவர்களின் கடல்வளம் பாரிய ரோலர்களின் மூலம் களவாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையில் இதைப்பற்றிய விவாதம் வந்தபோதெல்லாம் தமது அதிகாரத்தைப் பாவித்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பானியாவின் அத்துமீறலையும், மேற்காபிரிக்க கடல்வளங்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும் நியாயப்படுத்தியது. இன்றும் தொடர்ந்து அதையே செய்கின்றது. அது மட்டுமல்லாமல் செனகல் போன்ற நாடுகளில் ஸ்பானிய காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக போராட வெளிக்கிட்ட உள்நாட்டு மீனவர்களையும். அவர்களில் அரசியல் வழிகாட்டிகளையும், இலஞ்சம் வாங்கும் உள்நாட்டு அரசியல் கைக்கூலிகளின் உதவியுடன் கொலைசெய்தது ஸ்பானிய அரசு. அதேவேளை ஸ்பானியா கொள்ளையடிக்கும் ஆபிரிக்க கரையோரநாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் தனது அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கடல்வள அழிவுக்கு எதிரான மக்கள் போராட்ட உத்வேகத்தை தடுத்து நிறுத்திய வண்ணமுள்ளது. எப்படித்தான் இருந்தாலும், எந்தவகை கடற்கொள்ளையின் ஈடுபட்டாலும், ஒருகாலத்தில் உலக அளவில் மீன்பிடியில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருந்த ஸ்பானியா இன்றுவரை அந்த இடத்தை திரும்பவும் பிடிக்கமுடியவில்லை. இன்று அயல் நாடுகளினதும், வேறு வளைய நாடுகளினதும் கடல்வளங்களை கொள்ளையடிக்க புறப்படிருக்கும் புதிய கடற்கொள்ளைக்காரர்களான சீனர்களும் இந்தியர்களும் 2003 ஆம் ஆண்டிலிருந்து, உலக அளவில் மீன்பிடியில் முதன்மை வகிக்கும் முதல் பத்துநாடுகளில் முறையே முதலாம் இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார்கள்.
ஆம் இன்று எம்தேசம் மேற்கு ஆபிரிக்க கடல்வளம் ஸ்பெயின் நாட்டின் கடற்கொள்ளைக்கு ஆளாகும் நிலைபோல தெற்கில் சீன அரக்கர்கள் கொள்ளையை ஆரம்பித்துள்ளனர். வடக்கில் இந்தியக் கொள்ளையர்கள் எமது கடல்வளங்களை பலவருடங்களாக கொள்ளயிடுகின்றனர்.
மணலை மைந்தன்
தொடரும்