Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெண்களின் ஒழுக்கம், பண்பாட்டை முன்னிறுத்திய யாழ் உயர்குடி தமிழ் சமூகம், இன்று பெண்களையே நுகர்வுப்பண்டமாக்கி நாலு காலில் நின்று நுகருகின்றது.  பல்கலைக்கழக மாணவிகள் முதல் சிறு குழந்தைகள் வரை இந்த உயர் மேட்டுக்குடியின் நுகர்வு வெறியில் இருந்து தப்பிப் பிழைக்கவில்லை.

இப்படி யாழ் பல்கலைக்கழக மாணவிகள் முதல் சிறு குழந்தைகள் வரை பாலியல் ரீதியாக குதறப்படுகின்ற சூழலும், சமூகத்தின் முன் என்றுமில்லாத ஒரு பாரிய சமூக பிரச்சனையாக மாறி வருகின்றது. யாழ் அரச அதிபர் இதை வெளிப்படையாக குற்றம் சாட்டும் அளவுக்கு, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட இதில் ஈடுபடுகின்றனர். 

பெண்களின் மன உளைச்சல், கற்பம் தரித்தல், தற்கொலையில் போய் முடிகின்ற அளவுக்கு, சமூகம் விழிப்புணர்வுவின்றி, சமூகம் மேலிருந்து கீழாக சீரழிந்துள்ளது. உயர் வர்க்கங்கள் தலைகால் தெரியாது வீங்கி வெம்பிய நுகர்வு தளத்தில், சமூகத்தை அதிகாரம் கொண்டு குதறுகின்றன. கீழ் இருந்து கண்காணிக்கின்ற சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கான சூழல் எப்படி எங்கிருந்து உருவானது? புலித் தமிழ்த் தேசியம் தன் பாசிச சர்வாதிகாரத்தை மக்கள் மேல் நிறுவ, அது கீழிருந்த சமூகக் கட்டுமானங்கள் அனைத்தையும் இல்லாதாக்கியது. எந்த சமூக சுய எதிர்ப்புமற்ற, தன்னை தான் அழித்துக்கொள்ளக் கூடிய சுயஅழிவு சமூகத்தை புலிகள் உருவாக்கினர். இதன் மேல்தான் புலிகள் தங்கள் பாசிச வக்கிரங்களை எல்லாம், தேசிய விடுதலையாக காட்டினர்.

மேட்டுக்குடி வர்க்கங்கள் முதல் சமூகத்தின் அறிவுத்துறை வரை, புலிகளின் பின் நக்கிப்பிழைக்கும் நாய்க் கூட்டமாக மாறியது. பினாமியாக, பிழைப்புவாதியாக, சந்தர்ப்பவாதியாக மாறி, புலித்தேசியத்தின் பின் ஒளிர்மயமான எதிர்காலம் உண்டு என்று கூறினர். இதன்பின் சமூகத்தை வழிநடத்தினர். இதுவல்லாத அனைத்தையும் புலியுடன் கூடி நின்று அழித்தனர். சமூகம் எந்த சுய எதிர்ப்புமற்ற, அழிவுச் சமூகமாக மாற்றப்பட்டது. இங்கு அனைத்து சமூகவிரோத இழிவான கூறுகளும், புலிகளின் அனுசரணையுடனும், அதன் மரண தண்டனை என்ற அலுக்கோசுத் தனமாக தீர்ப்புக்குள் இசைவாக்கமடைந்தே காணப்பட்டது.

இப்படி புலி உருவாக்கிய எதிர்ப்பற்ற யாழ் சமூகத்தை இராணுவம் கைப்பற்றிய போது, அரசுக்கு செங்கம்பளம் தான் விரிக்கப்பட்டது. மேட்டுக்குடி கும்பல் புலிக்கு பின் எதைச் செய்து வாழ்ந்ததோ, அதையே அரசுக்கு சார்பாக செய்தது. சமூகத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாத, ஆனால் புலிகளின் அலுக்கோசு தனத்தில் இருந்து நெளிந்து தப்பும் எல்லையில் அது தனது வக்கிரங்களை தொடர்ந்து இசைவாக்கம் செய்து வாழத்தொடங்கியது. நிலைமைகள் மாறிய போது, வேகமாக தன்னை மாற்றிக்கொண்ட இந்த கூட்டம் புலியின் அழிவுடன் தன்னை அதிகாரமிக்க அரச எடுபிடிகளாகவும் மாற்றிக்கொண்டது. தன்னை கண்டு அஞ்சும், ஆள்காட்டியாக மாறியது.

அரசு இந்த உயர் வர்க்க சமூக புல்லுருவிகளை சார்ந்து, சமூகத்தின் மேல் தன் கண்காணிப்பை இறுக்கிக்கொண்டது. கடந்த காலத்தில் புலித்தேசியத்தின் பின் நின்ற கூட்டம் தான், இன்று அரசின் பின் அதிகாரம் கொண்ட கூட்டமாக இன்று உள்ளது. அது தான் இன்று வெளிப்படையாக சமூகத்தை மேய்கின்றது. சமூகத்தை வழிகாட்டுகின்ற உறுப்பாக அது இல்லை. தன் சுயநலத்தின் மூலம் சமூகத்தை அடிமைப்;படுத்தி ஆட்டம் போடுகின்றது.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அங்கு கற்கும் பெண்கள் மேல் நடத்துகின்ற பாலியல் வன்முறை என்பது இன்று உதிரிச் சம்;பவங்கள் அல்ல. அதுவே ஒரு குற்றமற்ற, அதிகார வர்க்கத்திற்கு இணங்கி ஏற்றுப் போகச் செய்யும் ஒரு செயலாக மாறிவிட்டது. அதன் விளைவு  தான் சமூகத்தில் பிரதிபலிகின்றது. யாழ் அரச அதிபர் ஒரு பெண் என்பதனாலோ என்னவோ, பெண்கள் தங்கள் மேலான பொது வன்முறை பற்றிய முறைப்பாட்டை கடிதங்கள் மூலம் தமக்கு எழுதுவதாக அவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

பெண்கள் சமூகத்தில் இருந்து எந்த ஆதரவையும் இன்று பெறமுடியாத நிலை, அதிகாரம் உள்ள நபராக நம்பும் அரச அதிபரிடம் பெண்கள் முறையிடுகின்ற அளவுக்கு சமூகம் பலவீனமாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழக பெண்கள் தங்கள் பேராசிரியப் பெரும்குடிகளுக்கு எதிராக குற்றம்சாட்டினால், அதைக் குற்றம் சாட்டுபவர்கள் தான் நிறுவ வேண்டும் என்ற அடிவருடித்தனத்துக்குள் பெண்கள் இணங்கிப் போகின்றனர். மௌனம் சாதிக்கின்றனர். சகித்துக் கொள்கின்றனர். யாரிடம் தான் போய் முறையிடுவது. தம் மீதான குற்றத்தையே நிறுவமுடியாத அளவுக்கு, குற்றங்கள் திட்டமிடப்பட்டும் சமூகம் வக்கிரங்களால் சூழப்பட்டும் காணப்படுகின்றது.  இன்று குற்றத்தை திட்டமிட்டு சமூகமயமாக்கிவிட்ட ஒரு சூழலில்தான், இது பொதுவான சமூகப் பிரச்சனையாக இன்று அது உருமாறி நிற்கின்றது.

பெண்கள் அதை எதிர்த்து நிற்க முடிவதில்லை. குற்றத்தை செய்பவர்கள் முன் கூட்டியே திட்டமிடN;ட செய்கின்றனர். தங்கள் அதிகாரம் மூலம் இணங்க வைத்து செய்கின்றனர். சமூகம் மலடாகிக் கிடக்க, நுகர்வே சமூக உணர்வாகி நிற்;க, பெண்களை வன்முறை மூலம் மட்டும் நுகரவில்லை. பாலியல் வக்கிரங்களுக்குள் குழந்தைகள் சிக்கி, வரைமுறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுகின்றனர்.

யாழ் அரச அதிபரின் கூற்று இதை நிரூபிக்கின்றது.  திருமணமாகாத இளம் பெண்கள் கர்ப்பம் தரித்தல் குறைந்தது மாதம் ஒன்றுக்கு 10 , சிறுவர் மேலான பாலியல் வன்முறை குறைந்தது மாதமொன்றுக்கு 20 யும்,  மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றனர். சமூகத்தின் மேலான வன்முறையும், சீரழிவும், இதனால் ஏற்படும் விளைவும் பல மடங்காக இருப்பதை குறைந்தபட்ச புள்ளிவிபரங்கள் மீள எடுத்துக் காட்டுகின்றது.               

சமூகம் தன்னை உழைத்து வாழும் ஒரு சமூகமாக மாற்றாத வரை, உழைப்பின் பெறுமதியை தன்னளவில் உணராத வரை, மற்றவரை அண்டி வாழும் நுகர்வு சமூகம், தொடர்ந்து நுகர்வுக்காக சுரண்டப்படும். அதே நேரம் தானாகவும் சீரழியும். இந்த வகையில் இந்த நுகர்வு சமூக ஆணாதிக்க நோக்கில் பெண்களும் நுகர்வுப்பொருளாக இருப்பதால், வன்முறை மூலமும் சீரழிவு மூலமும் பெண் நுகரப்படுவாள். நுகர்வு சமூகத்தில் வாழும் பெண்ணும், தானாகவே இந்த நுகர்வில் இணங்கிவிடுகின்ற ஒரு பண்டகமாகி விடுகின்றாள். மேட்டுக்குடி வர்க்கங்கள் முதல் புத்தியீவிகள் வரை, இதற்குள் தான் சமூகத்தினை வழிகாட்டுகின்றனர். அவர்களின் சமூக இருப்பும், பிழைப்பும் இதை அண்டித்தான் உள்ளது. புலிக்குப் பின் துதிபாடிய கூட்டம், அரசின் பின் நக்கும் கூட்டம், எப்படி சமூகத்தை வழிநடத்தும்!? சமூகத்தை படுகுழியில் தள்ளிய விளைவுகள், பொதுவான ஒரு சமூக விளைவாக மாறி  நிற்கின்றது. 

பி.இரயாகரன்
13.10.2010