Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என் மீதான சித்திரவதை தொடர்ச்சியாக புலிகளால் நிகழ்ந்தபோது, வெளியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1.என்.எல்.எப்.ரி.யில் இருந்து பிரிந்து சென்ற பில்.எல்.எப்.ரி. அமைப்பில் இருந்த ஒருவர் புலிகளிடம் தானாகவே சென்று, அமைப்பினை முழுமையும் தெரியப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

2. இரண்டாவது சம்பவம் என்.எல்.எப்.ரியில் இருந்து பிரிந்த பில்.எல்.எப்.ரி.யின் வடமராச்சி பகுதியை புலிகள் கைது செய்து, வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்துவந்தனர்.

இதில் முதலாவது சம்பவம் என்னால் வதைமுகாமில் வைத்து யார் என்று ஊகிக்க முடிந்ததுடன் (இந்த நபருக்கும் பில்.எல்.எப்.ரி கும் இடையிலான முரண்பாடு முன்பே தெரிந்துமிருந்தது), இதை நான் தப்பிய பின்பு உறுதி செய்தேன். மற்றைய சம்பவத்தில் தங்களின் வதைமுகாம் சித்திரவதைக்காக இழுத்துவரப்பட்டவர்களின் அனைத்து பெயரையும் கூறி புலிகள் என்னிடம் விசாரித்தன் மூலம் அறிந்து கொண்டேன். இதைக் கையாளும் வகையில் நிலமையை கையாண்டேன். இந்த கைதை நான் தப்பிய பின்பும் உறுதி செய்ய முடிந்தது.

வடமராட்சி கைதின்போது சித்திரவதைகளை சந்தித்தவர்களில் மார்க்சியத்தை அதன் புரட்சிகர குணாம்சத்துடன் அரசியல் நீட்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்து பலரை உருவாக்கிய விசுவானந்ததேவனின் தந்தையும் அடங்குவார். விசு எம் மண்ணில் வரலாற்று ரீதியாக மார்க்சியத்தை புரட்சிகர முன்னோக்காகக் கொண்டு போராடிய ஒருவர். அவரின் தந்தை எமது போராட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்து, ஒரு கடும் எதிரியாக செயற்பட்டார். ஒரு நிலப்பிரபுவாக திகழ்ந்த அவர், விசுவுடன் கூட கதைப்பதில்லை. ஆனால் விசுவின் மரணத்தின் பின்பு இயக்கத்தை நேசித்து, பல உதவிகளை தானாக முன்வந்து வழங்கியதுடன் அதனுடன் சேர்ந்து செயற்பட்டவர். பி.எல்.எப்.ரி.யின் ஆயுதங்களை சொந்தமாக தன் பொறுப்பில் எடுத்து பாதுகாத்தவர். புலிகள் ஒநாய்கள் போல் அவரை இழுத்துக்கொண்டு வந்து, ஈவிரக்கமற்ற சித்திரவதையை செய்தனர். அவர் எதையும் வாய் திறந்து சொல்ல மறுத்தார். அதேநேரம் அவர்களின் சித்திரவதை முகாமில் இருந்து அவர் தப்பியோடிய போது, மீளவும் இழுத்து வரப்பட்டு அவரின் காலை அடித்தே முறித்தனர். அப்போது அவருக்கு 70 வயது. அவரின் பிற்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படி இந்த ஒநாய்கள் புதிதாக தெரிந்து கொள்ளும் பல விடையத்தையும், நான் சமாளித்து எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இதனால் அவர்களை அதிகம் கதைக்க தூண்டுவதை, ஒரு வடிவமாக நான் கையாண்டேன். அடிக்கடி மாத்தையா உள்ளிட்ட முக்கியமானவர்களுடன் விவாதங்களை தொடர்ந்து நடத்த தூண்டிய நான், வதைகளின் தொடர்ச்சியில் இதையும் நடத்தினேன். ஆனால் கீழ்மட்ட உறுப்பினர்கள், வாய் திறக்க மறுத்தனர். இவை பற்றி விபரமாக நடந்த தொடர்ச்சியான சித்திரவதையூடாக பார்ப்போம்.

என் மீதான கோரமான தாக்குதலை தொடர்ந்தனர். வசந்தனிடம் என்ன கொடுத்தாய் உனக்கு யாரைத் தெரியும் என்ற கேள்வி தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. நான் எதுவும் கொடுக்கவில்லை என்றேன். எனது பிரதேசத்தில் மிக பகிரங்கமாக புலிகளுக்கு தெரிந்த, அவர்களுடன் விவாதிக்கின்ற உறுப்பினர் ஒரு சிலரின் பெயரை குறிப்பிட்டு, அவர்களை தெரியும் என்றேன். மீண்டும் என்ன கொடுத்தாய் என்று, தொடர்ச்சியான தாக்குதலை மீளவும் மீளவும் புதிதாக தொடங்கினர். பின் என் கண்ணை திடீரென அவிழ்த்த போது, மூன்று பேர் அருகருகாக நின்று இருந்தனர். நடுவில் விசுவும் இருபுறமும் மாஸ்டரும் சலீமும் நின்றனர். மாமிச மலைகளாக ஓநாய்களின் உடம்பை ஒத்த, இரண்டு மீட்டர் நீள அகலத்தை உடைய மிருகங்களாக விளைந்து காணப்பட்டனர். பார்ப்போர் மிரளும் வகையில் அவர்களின் தோற்றம் அச்சமூட்டியது. அதற்காகவே மூவரும் திட்டமிட்டு அருகருகாக நின்றனர். உழையாது மக்களைச் சுரண்டி தின்று கொழுத்த உடம்பைக் காட்டி, மிரட்டும் வகையில் அவர்கள் அலங்கரித்து நின்றனர்.

அவர்கள் எனது கண்ணை அவிழ்த்தவுடன், வசந்தனிடம் என்ன கொடுத்தாய் என்ற கேள்வியை மீளவும் கேட்டனர். நான் மீளவும் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறினேன். உடனடியாக எனது நெஞ்சில் இருந்து வழிந்த இரத்தத்தை, பெருகி ஒழுகும் வண்ணம் விசு தன் நகத்தால் தழும்புகளை ஆழமாக விறாண்டினான். மீண்டும் மீண்டும் கேள்விகளின் ஊடாக காயத் தழும்புகளின் மேல் விராண்டினான். தழும்பு ஆழமான வெடிப்பு கொண்ட காயமாக மாறும் வண்ணம், விறாண்டுவதை தொடர்ச்சியான ஒரு சித்திரவதையாக அவன் கையாண்டான். அன்று இது புதுப் புண்ணாக இருந்தமையால், அதிக வலி இருக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியான சித்திரவதையின் போது, இந்த புண்ணை விறாண்டி இரத்தம் வரப்பண்ணுவதில் ஒரு ரசனையுள்ள சித்திரவதையை தொடர்ச்சியாக விசு ரசித்துச் செய்தான். இந்த விசுவின் தலைமையில் வந்த குழு தான், பின்னால் அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றது.

தொடர்ச்சியாக அவர்களின் கேள்விக்கான சாதகமான பதிலை மறுத்து நின்ற நிலையில், நான்; சைக்கிளில் ஏற்றி வந்த தீபன் வந்து விசுவுக்கு ஏதோ காதுக்குள் சொன்னான். மறுபடியும் கண் கட்டப்பட்டு தாக்கப்பட்டேன். அதேநேரம் புதிதாக யாரோ ஒருவர் வதை செய்து கொண்டிருந்த அறைக்குள் வந்தார். உடனடியாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. அவர்தான் புலிகளின் மத்திய குழு உறுப்பினரும் பிரதி தலைவருமான மாத்தையா ஆவார். அவர் வசந்தனிடம் என்ன கொடுத்தாய் என்று கேட்டார். நான் எதுவுமில்லை என்றேன். நாங்கள் யார் என்று தெரியுமா என்று கேட்டார். நான் புலிகள் என்றேன்;. அவர் அதை மறுத்து, அவர்கள் தம்மைத் தாம் என்.எல்.எப்.ரி. என்றார். அத்துடன் ஏன் எங்களை புலி என்று கூறுகின்றாய் என்றார். நான் அவர்களின் அதிகாரத்தில் தான் இன்று குடாநாடு உள்ளதாலும், இது போன்ற கடத்தல்களில் அவர்களே ஈடுபடுகின்றனர் எனவும் கூறினேன். அது பற்றி எதுவும் பேசாது தம்மை மீண்டும் என்.எல்.எப்.ரி. என்று கூறினார். இங்கு அதைப் பேசாது விடுவதன் மூலம், தமக்கும் புலிக்கும் தொடர்பு இல்லை போன்ற பிரமையை ஏற்படுத்த முனைந்தார். இங்கு நான் என்.எல்.எப்.ரி. மத்தியகுழு உறுப்பினர் என்பது அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை. என்.எல்.எப்.ரி தலைமை தான் விசாரிக்கின்றது என்ற வகையில், எனக்கு கதை சொன்னார்கள். அத்துடன் அவர் கூறினார் "புலிகள் நிறைய தவறு இழைக்கின்றனர்" என்றார். அதாவது என்.எல்.எப்.ரி. போன்று கதைக்க முற்பட்டார். உம்மை என்.எல்.எப்.ரி.யின் தலைமை விசாரிக்க கோரியதாக கூறினார்.

இதன் மூலம் என்.எல்.எப்.ரி. பற்றி அவர்களின் அறியாமையையும், என்னைப் பற்றி எதுவும் அவர்கள் தெரிந்து இருக்கவில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். அவர்கள் இந்த இடத்தில் இயக்கத்தின் உள்முரண்பாடுகளை கையாளும் வடிவத்தை, தனது சொந்த இயக்கப் பாணியில் புரிந்து கொண்டு தமது புலிக் குணத்தை தன்னை அறியாமலே வெளிப்படுத்தினார். இது போன்று தன்னையறியாமல் தான் சொன்னதுக்கு முரணாக, அவரின் சொந்த முகத்துடன் கூடிய புலிக் குணத்துடன், "எங்களை கொலைகாரர் கொள்ளைக்காரராக மட்டுமே கேள்விப்பட்டிருப்பீர்கள். எமக்கு ஒரு பக்கத்தில் கருணையும், மனிதாபிமானமும் உண்டு" என்றார். நீர் உண்மையைக் கூறும் என்றார். உடம்பைத் தடவி விட்டு இவ்வழகான உடம்பை அநியாயம் செய்யாதீர் என்று எச்சரித்ததுடன், உண்மையை கூறும்படி கூறினார். வசந்தனிடம் என்ன என்ன கொடுத்தீர், வேறு என்ன விடையங்களில் தொடர்பு கொண்டிருந்தீர் என்று கேட்டார். நான் அவரை புளாட் உறுப்பினர் என்ற வகையில் தெரியும் என்று மட்டும் கூறினேன். அவர் தனது மனிதாபிமானத்தை நீ புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் (அருகில் நின்றிருந்த விசு, சலிம், மாஸ்டர்) உனது அழகான உடம்மை அடித்து முறிக்கப் போகிறார்கள். நீ அனைத்தையும் ஒப்புக் கொண்டால், என்னால் உன்னைக் காப்பாற்ற முடியும். நீ அனைத்தையும் ஒப்புக் கொள்ள மறுத்தால், அவர்களின் முரட்டுத்தனத்தை என்னால் தடுக்க முடியாது என்றார். இந்தளவு சொல்லும் போது எனது கண் கட்டப்பட்டே இருந்தது.

மாத்தையா நரித்தனம் கொண்ட ஒரு சதிகாரனாகவே எப்போதும் செயல்பட்டவன். தங்களால் தமது வர்க்க நோக்கத்துக்காக கோழைத்தனமாக கடத்தி வரப்படும் அல்லது கைது செய்யப்படும் சமூக உணர்வுள்ள மனிதர்கள் மேல், இரண்டு வழிகளில் சித்திரவதைகளை கையாளும் நரித்தனம், இந்த மனித வதை முகாமில் கையாளப்பட்டது. ஒன்று அடித்து முறித்து நொருக்குவது. இரண்டாவது அன்பாக பேசி ஆசை காட்டி சலுகை கொடுத்து விலை பேசுவது. இவ் இரண்டு வழி முறைகளையும், புலிகளின் தலைமை தொடர்ச்சியாக என்னிடம் கையாண்டது. இந்த இரண்டு வழியில் லஞ்சத்துடன் கூடிய சலுகை கூட, அவர்களின் பாசிச நோக்கத்தை பூர்த்தி செய்வது வரைதான். இதை புரிந்து கொள்ள முடியாத ஒருவன், தனது உயிரை மக்களுக்காக தியாகம் செய்யப் பயந்தவன், இந்தச் சதிவலையில் சிக்கிவிடுகின்றான்.

இதை இந்த வதைமுகாமின் புலித் தலைமை தொடர்ச்சியாக இடைவிடாது கையாண்டு வந்த அனுபவத்தில் இருந்தே, எனக்கும் அதனைக் கையாள முனைந்தார்கள். இந்த சித்திரவதை அனுபவத்தை சர்வதேச சுரண்டும் அதிகார வர்க்கத்தின் சித்திரவதை கல்விமுறையில் இருந்தே பெற்று, அதை தொடர்ச்சியாக அனுபவரீதியாக புலிப் பாசிட்டுகள் கையாண்டனர்.

புலிகளின் இந்த மோசடிகள் வரலாற்று ரீதியானவை. பல சந்தர்ப்பங்களில் கதைப்பதற்காக என்று கூறி அழைத்துச் சென்று கொன்ற வரலாறுகள் நிறையவே உண்டு. பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்கள் வரும்போது, இடைவழியில் சுடுவது அல்லது முடிந்த பின்பு சுடுவது அல்லது பேச்சுவார்த்தையில் வைத்து சுடுவது என்று பல சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உண்டு. சரணடைந்தவரை  சுடுவது, ஏமாற்றி சுடுவது என்று, புலிகள் வக்கிரமாக மோசடியாக கொலைகளை அரங்கேற்றுவது அவர்களின் நடைமுறையாகும். விடுவிப்பதாக கூறி அழைத்துச் சென்று, திடீரென ரசித்து சுட்டுக் கொல்வது இவர்களின் பண்பு. நண்பர்கள் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில் மோசடியாக சுடுவது, குடும்ப உறுப்பினரைக் கொண்டே சுடுவது, இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாக நடித்தபடி, அவர்களுடன் நட்பை பேணியபடி பின்னர் கொல்வது, புலிகளின் கோழைத்தனமான சதிகாரப் பண்பாகும். மனிதப் பண்புகளின் சிறப்புத் தன்மைகளைக் கூட கேவலமாக, தமது மோசடிப் பாசிச சதிகளுக்கு பயன்படுத்தும் கோழைகளாவர்.

இந்தக் கோழைகள் என்.எல்.எப்.ரி.யின் தலைமையே என்னை விசாரிப்பதாக கூறிய போது,  தங்களின் அறியாமையையும் அவர்களின் வெற்றிடத்தையும் என்னிடத்தில் விட்டுச் சென்றனர். என்.எல்.எப்.ரி. பற்றி எதுவும் தெரியாது என்ற உண்மையை எனக்கு பறைசாற்றியதுக்கு அப்பால், தமது முட்டாள் தனத்தையும் வெளிப்படுத்தினர். என்.எல்.எப்.ரி.யின் மத்தியகுழு உறுப்பினரான எனக்கு இப்படியொரு தகவலை சொல்லுகின்ற போதும், அக்காலத்தில் அமைப்பின் பல பொறுப்புகளை கொண்டிருந்த எனக்கு, புலிகளின் பலவீனத்தை வதைமுகாமில் வைத்து தெரிந்து கொள்வது சாதகமானதாக இருந்தது. புலிகள் பற்றி இருந்த போலியான அச்சமூட்டும் பிரமை அனைத்தையும் இது தகர்த்தெறிந்தது. அவர்கள் கேவலமான கோழைத்தனமான தனிநபர் படுகொலை அரசியலும்;, அச்சமூட்டும் அணுகுமுறையுமே, அவர்களின் சொந்த பலவீனங்கள் வெளிப்படுவதை தடுத்து வந்ததை இது மீண்டும் எனக்கு நிறுவியது. இதுவே புலிப் பாசிட்டுகளின் பொதுவான வடிவமாகும். பலவீனம் மற்றும் மக்களையிட்டு அரசியல் ரீதியாக கொண்டுள்ள பீதியினாலேயே, தனிமனித படுகொலைகளை கண்மூடித்தனமாக தொடர்ச்சியாக பாசிசப் புலிகள் நடத்தினர். இது அவர்களின் சொந்த பலவீனத்திலும் கோழைத்தனத்திலும் இருந்தே எழுகின்றது என்பதை புரிந்து கொள்ளாத எவரும், புலிகளின் பாசிசத்தை எதிர்கொள்ள முடியாத பீதிக்குள் சிக்கிவிடுகின்றனர். மக்களையிட்டும் அவர்களை நேசிக்கும் சமூக அக்கறைக்குரியவர்களையிட்டும் எழும் அச்சத்தால் தான், புலிகளின் பலவீனமும் கோழைத்தனமும் அதிகரிக்கின்றது. இந்த அச்சத்தால் தம்மைப் பாதுகாக்க, தனிமனித படுகொலையை தீவிரமாக்குகின்றார்கள். இந்த பொதுவான புலியின் அரசியலை உறுதிசெய்யும் வகையில், புலித்தலைவர்கள் தம்மைத் தாம் மீண்டும் எனக்கு முன் நிர்வாணப்படுத்தினர். வதைமுகாமில் ஒரு பொறுப்புள்ள புலிகளின் முக்கிய தலைவரிடம் இருந்து, எனக்கு கிடைத்த முதல் அருமையான என்.எல்.எப்.ரி. பற்றிய பிதற்றல், எப்படி எதிரியை எதிர் கொள்ளவேண்டும் என்பதை எனக்கு கற்றுத்தந்தது. அவர்கள் என்னை தமது துப்பாக்கி முனையில், மூடப்பட்ட அறையில் சிறை வைத்திருந்த நிலையில் அவர்கள் பலமானவர்களாக இருந்த போதும், நான் அங்கு அவர்களை அதற்குள் எதிர் கொள்வதில் பலமானவனாக நின்றிருந்தேன். அவர்கள் பலவீனமானவர்களாக இருந்தனர். இந்தச் சிறையில் இருந்து தப்பிய போது, அங்கு அவர்களது பலவீனம் சிறை வடிவத்திலும் தகர்ந்தது. அவர்கள் என்னை என்.எல்.எப்.ரி. க்கு பிரச்சாரம் செய்யும் ஒரு ஊழியராகவே கருதினர். அப்படியே அதையே நானும் ஒத்துக் கொண்டேன். இந்த நிலைமை அவர்களின் வதைமுகாமில் 14 நாட்கள் தொடர்ச்சியாக  நீடித்தது.

தொடரும்
பி.இரயாகரன் 

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)