Language Selection

என் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு உடைய நாளாக 28.4.1987 அன்று இருந்தது. அன்று அமைப்பு சார்ந்த பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரின் சில தன்னிச்சையான முடிவு ஒன்றைப் பற்றி அவருடன் கதைக்க வேண்டியிருந்தது. அதனால் காலை ஆறு மணிக்கே, நான் பாதுகாப்புக்காக இரவு தங்கியிருந்த ஒரு ஆதரவாளர் வீட்டில் இருந்து வெளியேறினேன். சைக்கிளில் ஏழு மைல்கள் கடந்து சென்று இருந்தேன். அதிஸ்டவசமாக அது கண்காணிக்கப்பட்டு இருக்கவில்லை. அதிகாலையாக இருந்தமையால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து தப்பி இருந்தேன். இதை நான் பின்பு அவர்களின் வதைமுகாமில் வைத்து உணரமுடிந்தது. ஏனெனில் என்னை பின் தொடர்ந்து இருந்தால், அந்த சம்பவம் பற்றி எனது விசாரணையில் வந்திருக்கும். அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். இந்த தன்னிச்சையான அப் பெண்ணின் முடிவு பற்றியும் சற்று பார்ப்பது நல்லது.

1986 இல் ரெலோ இயக்கத்தை வீதிவீதியாக புலிகள் படுகொலை செய்தது மட்டுமின்றி, அவர்களை உயிருடன் வீதிகளில் போட்டுக் கொழுத்தினார்கள். உதாரணமாக தெல்லிப்பழை சந்தியில் ரெலொ உறுப்பினர்களை அரைகுறையாக சுட்ட பின்பு, உயிருடன் துடிக்கத் துடிக்க மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் சுற்றி நிற்க விறகு இட்டு புலிகள் கொழுத்தினர். இதன் போது கூட்டணியின் 2001 இல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவமகாராஐh, உயிருடன் எரித்து களைத்த பாசிட்டுகளின் தாகம் தீர்க்க 1986இல் கொக்கோ கோலாவை இனாமாக கொடுத்து உற்சாகப்படுத்தினார். இவன் அமிர்தலிங்கத்தின் முன்னாள் எடுபிடி தான். இப்படி இவன் இனாமாக கொடுத்த கொக்கோகோலாவையும், மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் பலநோக்கு கூட்டுறவுச் சங்க செலவிலேயே அன்று வழங்கினார். ஜனநாயகம் காக்க மக்களின் பெயரில் தெரிவான இந்த நாய்கள், காலத்துக்கு காலம் அதிகாரத்தில் உள்ள பாசிட்டுகளின் பாதம் நக்கி தெருவில் வாழும் சொறி நாயாகவே காலம் தள்ளியவர்கள் தான். இதனால்தான் 2001 இல் பாராளுமன்ற உறுப்பினரானார். இப்படித் தான் இலங்கையில் அரசியல்வாதிகள் முதல் பத்திரிகைத் துறை வரை பாய்விரித்து விடுகின்றது. சிவமகாராஐh இதன் பின்னான தேர்தலில் தோற்ற நிலையில், பேரினவாதக் கூலிப்;படையால் கொல்லப்பட்டான். புலிகள் தங்கள் பாசிச கொலைக் கலாச்சாரத்துக்கு உடந்தையாக இருந்ததனால் "மாமனிதன்" என்ற கவுரவப்படுத்தினர்.

ரெலோவை கைது செய்தும், படுகொலைகளைச் செய்தும் அவ் அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், எமது அமைப்பில் கடும் நெருக்கடி தோன்றியது. இந்த நாட்களில் எமது சொந்த வான்(வாகனம்) ஒன்றை, புலிகள் துப்பாக்கி முனையில் பறித்திருந்தனர். அமைப்பின் மத்திய குழு கூட்டத்தில் புலிகளின் நடவடிக்கையை வெள்ளைப் பயங்கரவாதமாக வருணித்ததுடன், அமைப்பில் சில மாற்றங்களை செய்ய கோரியது. யாழ் மண்ணில் எனது பொறுப்பில் நடந்த இரண்டாவது இராணுவப் பயிற்சி முகாம், உடனடியாக தற்காப்புக் கருதி மூடப்பட்டது. அமைப்பு தற்காப்புக்கான தயாரிப்பில் ஈடுபடவும், ஆயுதபாணியாவதன் அவசியத்தையும் அமைப்பு முன்வைத்தது. எதிர்த்தாக்குதலுக்கு தயாராகும்படி மத்தியகுழு, அமைப்பைக் கோரியது. உடனடியாக இந்தியாவுக்கு பயிற்சிமுகாமை மாற்றுவது என்ற ஒரு முடிவுடன், அதை நகர்த்தும் பொறுப்பு மத்திய குழுவின் தலைமையில் உடனடியாகவே அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வகையில் ஒரு மத்திய குழு உறுப்பினரும், பயிற்சிக்கான சில நபர்களும் இந்தியாவுக்கு மிக குறுகிய காலத்தில் நகர்த்தப்பட்டனர். அத்துடன் அமைப்பில் நிறைய விடையங்களை தெரிந்த ஆதரவு நபர்களும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதேநேரம் மத்திய குழுவில் செயற்பட்ட, பலரால் அமைப்பு என்று நன்கு தெரிந்த நான் உட்பட, பலர் நாட்டில் தங்கியிருந்தோம்;. பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து நாட்டை விட்டு வெளியேறிய மத்தியகுழு உறுப்பினர் பலர் பகிரங்கமாக பலருக்கும் தெரிந்து இருக்காத நிலையில், அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடுவதில் அக்கறையாகவும் குறியாகவும் இருந்ததை பிந்திய சம்பவங்கள் நிறுவின. இதில் அமைப்பை அரசியல் ரீதியாக தலைமை தாங்கிய நபர், தான் வெளியேறி தப்பிச் செல்வதற்கு ஏற்ற கொள்கையை முன்வைத்து உடன் அதை அமுல்படுத்தினார். வெள்ளைப்பயங்கரவாதம் என்று மிகச் சரியாக அந்த சூழலை அவர் வரையறுத்து முன்வைத்ததுடன், எதிரான தற்காப்பு தாக்குதலை புலிக்கு எதிராக நடத்த, ஆயுதபாணியாக்கும் முடிவுடன் தானே முதலாவது நபராக அவர் எமது உடன்பாட்டுடன் நாட்டைவிட்டு வெளியேறினர்.

மத்தியகுழுவின் இரு உறுப்பினர் (நான் உட்பட) மட்டுமே நாட்டில் இருந்தோம். இருவரும் பலர் அறிந்த நபர்கள். உண்மையில் நாட்டினுள் தான், அமைப்பு தலைமறைவாகி இருக்க வேண்டும்;. இது அன்று நிகழ்ந்திருந்தால், புலிகளின் பாசிச சர்வாதிகார ஆட்சியை, இடதுசாரியான ஆயுதரீதியான எதிர்ப்பின்றி நிறுவி இருக்க முடியாது. நம்பிக்கைக்குரிய மாற்று சக்தியாக, மக்கள் முன் நாம் இருந்திருப்போம். பின்னால் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தை விட, குறைந்த சேதத்தை தற்காப்பு யுத்தம் ஏற்படுத்தியிருக்கும். எம்மால் மட்டுமே தொடர்ச்சியான ஒரு போராட்டத்தையும், புதிய தொடர்புகளையும் அரசியல் ரீதியாக ஏற்படுத்தி ஒரு சமூகப் புரட்சிக்கு வித்திட்டிருக்க முடியும் என்ற நிலைமையே,   அன்று நிலவியது என்பது அன்றைய எதார்த்த உண்மையுமாகும்.

எமது முடிவுக்கு அமைய இந்தியாவில் முதல் இராணுவ பயிற்சி முகாமை தொடங்கிய நிலையில், அங்கிருந்த மத்தியகுழு உறுப்பினர்கள் பயிற்சிக்கு ஆட்களை அனுப்ப வேண்டாம் என்ற முடிவை தன்னிச்சையாக திடீரென தளத்துக்கு அறிவித்தார்கள். அனைத்து மத்தியகுழு உறுப்பினரையும் இந்தியா வரும்படியும், அங்கு தங்கியிருந்து மார்க்சியத்தை படிக்க வேண்டும் என்றும், ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்றும் அறிவித்ததுடன், மறைமுகமாக கலைப்பு வாதத்துக்கு அழைப்பு விடுத்தனர். இங்கு மையமான பிரச்சனையாக, அமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாகவே எழுந்தது. பாசிச நிலைமை தொடரும் பட்சத்தில், இந்தியாவில் இருந்தபடி தலைமை தாங்குவது என்பது சாத்தியமில்லை. சொந்த மண்ணில் போராடாமல் எதிர்காலத்தில் இந்த தலைமை நிலைக்காது என்பதே, இந்தியாவில் இருந்தவர்களின் அச்சமாக இருந்தது. ஆனால் தளத்தில் செயல்பட்ட மத்திய குழு, பயிற்சியை நிறுத்துவதை கடுமையாக எதிர்த்தது. பயிற்சியை தீவிரமாக்க கோரியதுடன், இராணுவரீதியான தாக்குதலை புலிக்கு எதிரான தற்காப்பில் நடத்த வேண்டும் என்ற முடிவை எடுத்த அமைப்பு, ஒரு கெரில்லாக் குழுவையும் உருவாக்கியது. அதை நான் என் தலைமையில் முன்னின்று செய்தேன். இந்த முடிவுகளை இந்தியாவில் தங்கியிருந்த மத்தியகுழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் மத்தியகுழுவை இந்தியாவில் கூட்டிக் கதைக்க விடுத்த அழைப்பு தளத்தில் இருந்தவர்களால் நிராகரிக்கப்பட்டது. மாறாக சொந்தமண்ணில் மத்திய குழுவை கூட்டக் கோரினோம்;. 1986 பிந்தைய 1987 முந்தைய நாட்களில் இது நடந்தது. 

இந்தநிலையில் அங்கிருந்து வந்த ஒரு மத்தியகுழு உறுப்பினர் ரமணி (இவரை பின்பு 1990 இல் கடத்திய புலிகள், அவரை சித்திரவதை செய்தே கோழைத்தனமாக படுகொலை செய்தனர்) எம்முடன் நடந்த விவாதத்தின் பின்பு, எமது முடிவை ஏற்று திரும்பிச் சென்றார். அவர் அங்கு போய் எம்முடன் இணைந்து எடுத்த முடிவுக்கு எதிராக மீண்டும் மாறி நின்றார். இந்த நிலையில் அமைப்பினுள் இந்த விவாதங்களை எடுத்துச் சென்றோம்;. யார் இந்த முரண்பாட்டின் நபர்கள் என்பது தெரியவராத வகையில், கருத்தியல் ரீதியாக இந்த விவாதம் அணிகளுக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதில் இந்தப் பெண் பிரதிநிதியும், எமது நிலையை உறுதியாக ஆதரித்து நின்றார்.

ஆனால் அவரின் காதலராக இருந்த மத்தியகுழு உறுப்பினரே இதற்கு எதிரானவர் என்பதை, நாம் எந்தக் கணத்திலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கும் இது தெரிந்திருக்கவில்;லை. அமைப்பில் முரண்பாடு தீவிரமாகிச் சென்றது. அத்துடன் அப் பெண்ணிடம் நேரடியாக தன்னுடன் வந்து வாழும்படி அவர் கோரியதை, அப் பெண் எமக்கு தெரிவித்தார். அப் பெண் இந்தியா செல்ல வேண்டும் என்றார். இந்த விடையத்தில் அமைப்பு முரண்பட்டது. காரணம் இப் பெண்ணும் அமைப்பின் ஒரு உறுப்பினராக உள்ளவர். அமைப்புத் தான் முடிவு எடுக்க வேண்டுமே ஒழிய, தனிப்பட்ட ரீதியில் முடிவு எடுக்க முடியாது என்பதை இருவருக்கும் தெரிவித்தோம். அவர் அமைப்பிடம் தன் காதலியுடன் சேர்ந்து வாழ அல்லது அப் பெண் தனது காதலனுடன் சேர்ந்து வாழ கோரியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி கோரவில்லை. மாறாக தனது மார்க்சிய படிப்பு வேலைக்கும் ஆய்வுக்கும் ஒரு உதவியாள் வேண்டும் என்றே கோரினார். இதை நாம் திட்டவட்டமாக நிராகரித்தோம்;. உதவியாள் அவசியமில்லை என்பதை தெரிவித்ததுடன், அதற்கு தேவையானால் இந்தியாவில் பயிற்சி பெற்று தங்கியிருப்போரை பயன்படுத்த கோரினோம். குடும்ப வாழ்க்கையில் இணைந்து வாழ விரும்பின் மட்டும், இந்தியா செல்ல அமைப்பு அனுமதித்தது. இதை மறுத்த அப் பெண்ணும் அவரும் தன்னிச்சையாக செயல்பட்டனர். அப்பெண் அமைப்பை விட்டு விலகி தன்னிச்சையாக செல்லவும் தயாரான நிலையில்  முடிவு எடுத்து இருந்தார். இதன் மீதான முடிவு ஒன்றை எடுக்கவே, நான் கடத்தப்பட்ட அன்று அப்பெண்ணை அதிகாலையில் சந்தித்தேன். அவரிடம் அமைப்பு உங்களை இந்தியா அனுப்பவில்லை என்பதை அறிவித்ததுடன், அதற்கான செலவுகளை அமைப்பு பொறுப்பு எடுக்காது என்பதை தெளிவுபடுத்தினேன். அவரிடம் இருந்த பொருட்கள் சிலவற்றை, வேறு ஒரு நபரின் பொறுப்பில் ஒப்படைக்கவும் கோரினேன்.

அங்கிருந்து திரும்பிய நான், வசந்தனை (எனக்கு முன் கைதானவர்) புலிகள் கைது செய்ததற்கான காரணத்தை அறிய விரும்பினேன். அவரின் அளவெட்டி உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்றேன். விபரம் எதையும் பெற முடியாத நிலையில், அம்பனையில் இருந்த எமது இயக்க ஆதரவாளர் வீட்டுக்குச் சென்றேன். அந்த வீட்டில் நின்ற போது வீதிவழியாக என்னை நேரடியாக அன்று மாலை கடத்திய நபர் (இவர் வேறு யாருமல்ல, பின்னாட்களில் புலிகளின் முக்கிய தனபதியாக இருந்த தீபன்), அடிக்கடி வீதியால் சென்றதை அவதானித்தேன். அத்துடன் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையில், அந்த நபர் அடிக்கடி ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளி இயக்க முயற்சிப்பதையும் அவதானித்தேன். எந்த விதத்திலும் அவர் என்னைக் கடத்தவே, இந்த நாய் வேடங்களை போடுகின்றார் என்பதை யூகிக்கவில்லை. மதியம் எனது குடும்பத்தினர் அகதியாக தங்கியிருந்த சுண்ணாகத்துக்குச் சென்றேன். மதிய உணவை முடித்த பின்பு, அங்கிருந்து தெல்லிப்பழை சென்றேன். தெல்லிப்பழை சந்தியில் பல புளட் உறுப்பினர்கள் இருந்தமையால், அவர்களுடன் நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன்;. அப்போது என்னைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்த சலீமும் (1990 களில் யாழ் மாவட்ட பாஸ் அனுமதி  பொறுப்பாளர்), விசுவும் (இவர் அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்ற குழுவின் தலைவர்) அக் கூட்டத்தில் கலந்து நின்றிருந்ததை, வதை முகாமில் என்னால் நினைவுக்குள்ளாக்க முடிந்தது. அவர்கள் என்னை கடத்த உபயோகித்த சிவப்பு மோட்டார் சைக்கிள் அருகிலேயே நான் நின்று கதைத்துக் கொண்டிருந்தை, எனது வதைமுகாம் சித்திரவதையின் போது உறுதி செய்தேன். அவர்கள் சந்தியில் பொதுவாக நிற்பது போல் நின்றதுடன், அருகில் இருந்த கூல் பாருக்குள் சென்று கொக்கோகோலாவை உறிஞ்சியபடி, மனிதவிரோத கடத்தலுக்காக ஓநாய்கள் போல் காத்துக்கிடந்தனர். அண்ணளவாக இரண்டு மணி நேரமாக நான் உரையாடிக் கொண்டிருந்தேன். அதுவரை அவர்கள் அருகில் இருந்த குளிர்பானக் கடைக்குள் சென்று (கூல்பாரில்), தொடர்ச்சியாக கொக்கோகோலாவை உறிஞ்சியபடியே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அடிக்கடி அருகில் வந்;து எனது உரையாடலை ஒட்டுக் கேட்பதுமாக மாறிமாறி நின்றதை, வதைமுகாமில் அதை ஒட்டிய கேள்விகள் முதல் என்னாலும் நினைவுபடுத்த முடிந்தது. இதன் பின்பு நான் காலை சென்ற அதே அம்பனை ஆதரவாளர் வீட்டுக்குச் சென்றேன். முன்பு கண்ட அதே நபரை மீளவும் அதே கோலத்தில் காண நேர்ந்தது. ஆனால் எந்தக் கணத்திலும் நான் சந்தேகம் கொள்ளவில்லை.

தொடரும்
பி.இரயாகரன்

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)