Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்களை நேசித்தான் என்ற ஒரு காரணத்துக்காக, 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் புலிகள் மற்றொரு படுகொலையை நடத்தியிருந்தனர். எதற்காக? தங்களை “அரசியல் அனாதையாக்கும்” போராட்டம் என்று எதைப் புலிகள் கூறினரோ, அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விமலேஸ்வரனை உரிமை கோராது, அரசியல் கோழைகளான புலிகள் படுகொலை செய்தனர்.

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் நடமாடிய தெருக்களில், இந்தியாவுக்கு எதிராக போராடுபவர்களை புலிகள் கொல்லமாட்டார்கள் என்று நம்பியவனை கொன்றனர். இப்படி அன்று எதிரிக்கு உதவிய புலியின் அனாதையான அரசியல் தான், இறுதியாக அரசியல் அனாதையாக மடிந்து போன பிரபாகரனின் வரலாற்றுடன் முடிந்து போனது. அது வரை தாங்கள் அரசியல் அனாதையாகாமல் இருக்க, தாமல்லாதவர்களை ஆயிரம் ஆயிரமாக கொன்று குவித்தனர். இறுதியில் கொலைகாரர்களின் தலைவர் கூட, அரசியல் அனாதையாகவே, நாயை விடக் கேவலமாக மடிந்தது போனதே புலியின் வரலாறாகி விட்டது.

விமலேஸ்வரனைக் கொன்ற அடுத்த நாள், என்னைக் கொல்ல புலிகள் வெறிபிடித்த நாயைப் போல் அலைந்தனர். அன்று அதில் இருந்து தப்பிப் பிழைத்ததால், இந்த கொலைகார அரசியல் அனாதைகளின் கோழைத்தமான வெறிச் செயலை இன்று என்னால் பேச முடிகின்றது.

ஆம் அன்று இப்படி பேசக் கூடியவர்களை, கொன்று குவித்தனர். இந்த மக்கள் விரோத புலிப் போராட்டத்தின் அழிவை முன் கூட்டியே அன்று சொன்னவர்களை தேடி அழித்தனர். மக்களின் விடுதலையை முன்னிறுத்திய உண்மையான மக்கள் தலைவர்களை, இல்லாதொழித்தனர். இதன் மூலம் மக்கள் விரோத பாசிசக் கொலைகாரர்கள், தங்களைத் தாங்களே தலைவர்களாக்கினர். “மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகை சுதந்திரம்,” கொடுத்தால், “மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ, அரசியல் நடத்தவோ சுதந்திரம்” இருந்தால் புலிகள் அரசியல் அனாதையாகி விடுவார்கள்." என்று சொன்ன புலிகள் தான், இதைக் கோரிய விமலேஸ்வரனைக் கொன்றனர். இப்படித்தான் புலிகளின் அரசியலும், படுகொலைகளும் அரங்கேறின.

இந்தப் புலித் தேசியம் என்பது மக்களுக்கு எதிரானது என்று, உலகறிய தங்கள் போராட்டங்கள் மூலம் சொன்னவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின், முன்னணி தலைவர்களில் ஒருவன் தான் 22 வருடத்தின் பின்பும் இன்று நாம் நினைவு கூறுகின்றோம். புலிகள் மட்டும் அவனைக் கொல்லவில்லை, புலியல்லாத மாற்று பற்றி பேசிய கூட்டம் கூட, அவனை இருட்டடிப்பு செய்து அதன் மூலம் கொன்றது. அன்றைய போராட்டம், அதன் சரியான அரசியல் திசை வழி என அனைத்தும் எம்மூடாக மட்டும் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு, மீளவும் நாம் மட்டும் அந்த மக்களிடம் அதை எடுத்துச்செல்லும் அளவுக்கு எங்கும் எதிர்ப்புரட்சி அரசியல் சூழ்ந்து காணப்படுகின்றது.

அன்று யாழ்பல்கலைக்கழக போராட்டத்தின் அரசியல் திசைவழியை தீர்மானித்ததில், விமலேஸ் முக்கிய பங்காற்றினான். குறிப்பாக போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக் குழுவின் ஊடாக அவன் இதை முன்வைத்ததன் மூலம், அதை முழு மக்களுக்கான அரசியல் கோரிக்கையாக்கினான். இதைத் தான் புலிகளை அரசியல் அனாதையாக்கும் கோரிக்கை என்று புலிப் பாசிட்டுகள் கூறியதுடன், கொலை வெறியுடன் அவனைக் கொன்றனர். அவனின் வரலாறு, போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

அவன் முதலில் புளட் அமைப்பில் இணைந்து வேலை செய்தவன். புளாட்டுடன் இருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புளட்டின் அராஜகத்தை இனம் கண்டது முதல், புளட்டில் இருந்து முதன் முதலில் விலகியவர்கள் அவர்கள்தான். அதில் அரசியல் முன்னோடியாக விளங்கியவன் விமலேஸ்வரன். 1986 இன் இறுதியில் என்.எல்.எவ்.ரி.யுடன் இணைந்தவன், அதன் மாணவர் அமைப்பினை வழி நடத்திய குழுவின் முன்னணி உறுப்பினரானான்.

இக்காலத்தில் அன்ரி ராக்கிங் உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டதோடு. அதற்கு தலைமை தாங்கினான். புலிக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கி அமைப்புக் குழு உறுப்பினராகவும், அதன் செயலாளராகவும் மாணவர்கள் தெரிவு செய்தனர். அதன் பின்னான விஜிதரன் போராட்டத்தின் அரசியல் திசைவழியை தீர்மானித்த அவன், முழு மாணவர்கள் சார்பாக என்.எல்.எவ்.ரி.யின் கருத்தை (என்.எல்.எவ்.ரி. எழுதிய) தன் அறிக்கையாக முன்வைத்தான். அதை முழு மாணவர்களின் அன்றைய அரசியல் கருத்தாக்கினான்.

உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தை என்.எல்.எவ்.ரி.யின் அரசியல் நிலையுடன் சேர்ந்து நிராகரித்தான். ஆனால் அமைப்புக்குழு அதை முன்னிறுத்திய போது, அதில் அவனே முன்னின்று ஈடுபட்டான். என்.எல்.எவ்.ரி. யின் மூன்று உறுப்பினர்கள் (குகன், அவ்வை, விமலேஸ்) உண்ணாவிரதம் இருந்ததுடன், மற்றொரு நபரான செல்வநாயகம் கூட என்.எல்.எவ்.ரி.யின் ஆரம்பகாலம் முதல் தொடர்ப்பில் இருந்தவர் தான். இப்படி என்.எல்.எவ்.ரி. இதில் முழு மூச்சுடன் பங்காற்றி வழிநடத்திய போராட்டத்தில், விமலேஸ் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தான். இதன் போது, அவன் தன்னை பலியிட்டாவது மக்கள் விடிவு கிடைக்க வேண்டும் என்று கூறி, அதில் உறுதியாகவே தலைமைதாங்கி இறங்கினான்.

இந்தப் போராட்டத்தில் இடையிடையே ஏற்பட்ட திசைவிலகல்களுக்கு எதிரான தன் போராட்டத்தில், உறுதி வாய்ந்த அரசியல் நிலை எடுத்து போராடினான். பரந்து பட்ட மாணவர்களையும், மக்களையும் ஒருங்கிணைப்பதிலும் தலைமைத்துவ பண்பை அரசியல் ரீதியாக வழங்கினான்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் முடிந்த கையோடு, புலிகள் விமலேஸ்வரனையும் (மாணவர் அமைப்பக் குழு செயலாளர்) சோதிலிங்கத்தையும் (தலைவர்) விசாரணைக்காக ஓப்படைக்கக் கோரினர். இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள்.

விமலேஸ் பாசறை (நாவலன் துணையுடன்) அமைப்பு வேலை செய்த தாழ்த்தப்பட்ட கிராமம் ஒன்றில், தலைமறைவானான். அங்கு அந்த மக்களுடன் சேர்ந்து நாள் கூலியாக வேலைக்கு சென்றது முதல் அரசியலை கற்றும் கற்பித்தது மட்டு மின்றி, இரவில் அந்த கிராமத்து குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தான்.

நான் 1987ம் ஆண்டு புலிகளால் உரிமை கோராது கடத்தப்பட்டு, இருண்ட அறையில் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கொல்வதற்கு முந்திய சித்திரவதைகளைச் செய்து வந்தனர். இப்படி 80 நாட்கள் கடந்த நிலையில், அங்கிருந்து நான் தப்பினேன். தப்பிய அன்று விமலேஸ் தலைமறைவாக இருந்த அதே கிராமத்துக்கு, அவனிடமே சென்றேன். சித்திரவதை மற்றும் எனது விகாரமாகியிருந்த தோற்றத்தால், அவனால் என்னை முதலில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

அப்படிப்பட்ட நிலையில் அன்று இரவு என் தோற்றத்தை மாற்ற குளிப்பாட்டி, புலிகள் அடையாளம் காண முடியாத வண்ணம் என்னை மாற்றினான். நான் தப்பி வருவதற்கு கூரை மேல் இருந்து குதித்ததால் ஏற்பட்ட கால் சுளுக்குக்கு மருந்திட்டது முதல் இரவு இரவாக எனக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சலுக்கு விழித்திருந்து கை வைத்தியம் செய்தான். என்னை வேறு ஒரு இடத்துக்கு நாவலன் மாற்றும் வரையான நாட்களில், என் மீதான புலிகளின் கேள்விகள் மற்றும் வதைகள் பற்றிய திகதி வாரியான குறிப்புகளை நான் சொல்ல அவன் கைப்பட எழுதினான். இன்று அந்தக் குறிப்புகள் அவனின் சொந்தக் கையெழுத்துடன், என்முன் கிடக்கின்றது. கடந்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.

இதன் பின் நாம் கொழும்பில் சந்தித்தது முதல், உன் தனிப்பட்ட காதல் வாழ்க்கையை அரசியல் ரீதியாக முன்னிறுத்தி நீ உறுதியான விட்டுக்கொடுக்காத போராட்டம் நடத்தினாய். எல்லாவற்றையும் நான் நினைத்து பார்க்கின்றேன். என்.எல்.எவ்.ரி. ஜயாவுக்கு (முன்பு புலிகள் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்) திருமணத்துக்கு நீ எடுத்த அக்கறையையும் ஏற்பாட்டையும், நீ கொல்லப்பட்ட பின்னால் உன் தங்கை தான் அந்தத் திருமணத்தை நடத்த உதவியதை எண்ணிப் பார்க்கின்றேன். இதன் மூலம் உன் தங்கை, உன்னை மீள வாழ்வாக்கினார்.

ஆம் அவர்கள் தங்கள் ஒரே செல்வக் குழந்தைக்கு, உன் பெயரைத் தான் இட்டனர். ஆம் இப்படி உன்னை நேசிக்க ஒரு சமூகம் இருந்தது. நீ நடுவீதியில் கொல்லப்பட்ட கிடந்த நிலையில், நீ அணிந்திருந்த கண்ணாடி, நீ சென்ற சைக்கிள் எல்லாம் அனாதரவாக நடுவீதியல் கிடக்க, உன் தலையில் இருந்து இரத்தம் வழிந்தோடியது. இந்த நிலையில் தான் நான் அன்று இறுதியாக தரிசித்தேன். அன்று நீ கிடந்த காட்சியும், நீங்காத உன் நினைவுகள், அங்கு உன் தங்கை விமலேஸ்வரியின் கதறல்கள் என் மனதைவிட்டு அகலவில்லை.

ஆம் அன்று உன் தங்கை என்னிடம் கோரினாள், உன் உடலை பல்கலைக்கழகம் எடுத்துச் செல்லுங்கள் என்று. உன் உடலைக் கூட புலிகள் கைப்பற்றி கொண்டு செல்லும் வண்ணம், உனது உறவினர்களை ஏற்பாட்டு செய்த பின்தான் உன்னை அவர்கள் கொன்றனர் என்பதை அங்கு நாம் கண்டோம். உடலைத் தர மறுத்து, வன்முறை மேவிய நிலையில் நான் தன்னம் தனியாக தோற்றுப் போனேன். உன் தங்கை உனக்காக தானும் நாங்களும், போராட விரும்பிய அந்த உணர்வும் கூடத்தான், அன்று கருகிப் போனது. ஒரு புறம் கொன்று குவித்த இந்திய ஆக்கிரமிப்பு வல்லுறுகள், மறுபுறும் தேசியத்தின் பெயரில் போட்டுத் தள்ளிய புலிப் பாசிட்டுகள். அன்று உனக்காக நாம் போராட முடியவில்லை. கண்டன அறிக்கையையும், ஒரு நாள் பகிஸ்கரிப்பையும் அடுத்த நாள் நாம் நாடத்தினோம்.

நல்லூரில் இளைஞர் சுட்டுக் கொலை

கலைப்பீட மாணவர் கவலை தெரிவித்து அறிக்கை (உதயன்)

அன்றே என்னைப் போட்டுதள்ள புலிகள் முயன்ற நிலையில், நான் தலைமறைவானேன். இதன் பின் உனக்காக நாங்கள் கொழும்பில் தான் தமிழ்  யாழ்பாண பல்கலைக்கழக மாணவ தலைவன் த. விமலேஸ்வரன் புலிகளினால் கோரக் கொலைமற்றும் சிங்களத்தில் (விமலேஸ்வரன் படுகொலை தொடர்பான சிங்களப் பிரசுரம் )  துண்டுபிரசுரத்தை வெளியிட்டோம். காலத்துக்கு காலம் உன் போராட்டத்தை முன்னிறுத்தி வந்தோம்.

உன் அரசியல் கனவுகள், மக்களை நேசித்த உன் மகத்தான உணர்வுகள், என்றும் எம்மைவிட்டு அகலாது. நீ எந்த அரசியல் இலட்சியத்துக்காக போராடினாயோ, அதற்காக உன் நினைவுகளை முன்னிறுத்தி உன் போராட்டப் பாதையில் தான் நாம் தொடர்ந்து போராடுகின்றோம். மனித குலம் உள்ளவரை, அவர்கள் போராடுவார்கள். உனக்காகவும் உன் இலட்சியத்துக்காகவும் தங்கள் வாழ்வுக்காவும் போராடுவார்கள். மனித வரலாற்றில் நீ என்றும் மக்களுடன் வாழ்வாய். அதை யாரும் இனி வரலாற்றில் அழிக்க முடியாது.

பி.இரயாகரன்
18.07.2010

http://www.tamilcircle.net/administrator/index.php?option=com_content