தேசம்நெற் தனது வலதுசாரிய அரசியல் பின்னணியுடன், போராட்டத்தை இழிவாகக் காட்டி அதைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றது. திரிபுகளையும் புரட்டுகளையும், தமது வலதுசாரிய அரசியல் காழ்ப்புடனும் தனிநபர் வெறுப்புடனும் புனைந்து, இதுதான் பல்கலைக்கழகப் போராட்டம் என்று வரலாற்றை திரித்துக் காட்டியது. இதற்கு நாவலனின் திடீர் அரசியல் வருகைக்கு ஏற்ப, அவர் தன்னை நிலைநிறுத்த முன்வைத்த கூற்றுகளின் துணையுடன், தேசம்நெற் தன் அரசியல் அவியலைச் செய்துள்ளது. இப்படி தேசம்நெற் கொச்சைப்படுத்திய இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றிய பலர், பின்னால் புலிகளால் உதிரிகளாகவே கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டம் எந்தக் கட்டத்தில், எந்தச் சூழலில், எப்படி யாரால் முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
இலங்கையிலும், யாழ் மண்ணிலும் நடந்த போராட்டங்களில் இது குறிப்பிடத்தக்க போராட்டம். சரியான கட்சியின் வழிநடத்தல் இன்றி, கட்சிக் கண்ணோட்டம் கொண்டதும் மக்கள் நலனை முன்னிறுத்தியதுமான ஒரு அரசியல் போராட்டம். இந்த போராட்டத்தின் முன்னின்று ஈடுபட்டால், மரணத்தையே புலிகள் தருவார்கள் என்பதை நனகு தெரிந்து கொண்டு நடத்தப்பட்ட போராட்டம். உயிருக்கு உத்தரவாதம், நாட்டை விட்டு வெளியேறினால் தான் உண்டு என்ற சூழலில் நடந்தேறிய போராட்டம். யாழ்பல்கலைக்கழகம் அன்று வெளியிட்ட துண்டுப்பிசுரத்தில் குறிப்பிட்டது போல் "பேசாமல் சாப்பிட்டுக் கொண்டு மட்டுமிரு அல்லது வெளிநாட்டுக்குப் போ" என்று புலிகள் சொன்ன காலமது. இதை மறுத்து ஒரு மனிதனாக இருக்கப் போராடிய வரலாறு.
இதை வெளியில் இருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து, வழிநடத்த சரியாக ஒரு கட்சியில்லை. ஒரு போராட்டம் என்ற வகையில், அதை நாம் முன்னெடுத்த போது, அது வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லையைத் தாண்டி நிலவும் வலதுசாரியத்தின் போக்கை மாற்றி அமைக்காது என்பதை நான் அன்று புரிந்து கொண்டிருந்தேன். பரந்துபட்ட மக்கள் எம் போராட்டத்துடன், அதன் நியாயத்துடன் ஒன்றுபட்டு ஓரே குரலாக இருந்ததை நான் கண்டேன். மக்கள் சரியான மாற்றத்தை, உணர்வுபூர்வமாக விரும்பினர். இயக்க அராஜகத்தை வெறுத்து, தம்மை வெளிப்படுத்திய காலமது. இந்த நிலையில் போராட்டத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு எம்மிடம் இருந்தது.
இப்படி போராட்டத்தினை முன்னெடுக்கும் முக்கிய பொறுப்பையும், வழிகாட்டலையும், பங்களிப்பையும் நெறிப்படுத்திய போது, அதன் உயர்ந்தபட்ச எல்லையில் நான் விட்டுக் கொடுக்காத உறுதியை கடைப்பிடித்தேன். எந்தவொரு துரோகத்துக்கும், சோர்வுக்கும் அப்பால், வீரம்செறிந்த போராட்டமாக நடத்துவதில் நான் உறுதியாக இருந்தேன். அமைப்புக் குழுவுக்குள் ஊசலாட்டத்தின் தன்மைகளை இனம் கண்டு, உடனுக்குடன் அதைத் தகர்ப்பதில் மிக கவனமாக இருந்தேன். இந்த வகையில் வெளிப்படையாக இயங்காது, அமைப்புக் குழுவைச் சுற்றி இயங்கிய நாவலனும் எனது அதே நிலைப்பாட்டுடன் இயங்கினான். அமைப்புக்குழுவில் இருந்த இதே நிலைப்பாட்டை கொண்ட விமலேஸ்வரனும் கூட, இந்த வகையில் தான் இயங்கினான்.
உண்ணவிரதப் போராட்டத்துக்குப் பதில் வேறு போராட்டத்தை என்னுடன் சேர்ந்து முன்வைத்த விமலேஸ்வரனின் கருத்துக்குப் பதிலாக, சோதிலிங்கம் முன்னிறுத்திய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டதையே அமைப்புக் குழு முன்னிறுத்தியது.
முன் கூட்டியே இதில் ஏற்படும் ஊசலாட்டத்தை கவனத்தில் எடுத்த விமலேஸ்வரன், தானே உணர்வுபூர்வமாக உண்ணாவிரதம் இருந்து தான் சாகும் ஒரு நபராக தன்னை முன்னிறுத்தினான். இப்படி போராட்டத்தை திசைவிலகலின்றி, அமைப்பை வழிநடத்தக் கூடிய விமேலேஸ்வரன் உண்ணாவிரதத்தில் இருந்தது போராட்டத்தை ஊசலாட்டமின்றி நடத்திய அதே தளத்தில், அமைப்புக்குழுவில் ஊசலாட்டம் ஏற்பட்டது. அது போராட்டத்தை இடையில் கைவிட்டுவிடும் அளவுக்கு சென்றது. குறிப்பாக அமைப்புக்குழுவின் தலைவர் சோதிலிங்கம் தான், வேறு போராட்டத்துக்குப் பதில் உண்ணாவிரதப் போராட்டத்தையே நடத்த வேண்டும் என்று அடம்பிடித்தவர், அவர்கள் சாகப்போகின்றார்கள் என்று கூறி, இடையில் உண்ணாவிரதத்தை நிறுத்தப் போவதாக தன்னிச்சையாக தனித்து முரண்டுபிடித்தார். இதில் நான் - நாவலன் எடுத்த பல்வேறு முயற்சிகள் தான், இதை இடையில் நிறுத்தப்படுவதை பின்போட்டது. இது பற்றி பின்னால் விரிவாக பார்க்க உள்ளேன். இந்தப் போராட்டம் நடந்த சூழல் அசாத்தியமானது.
புலிகள் இதற்கு ஆறு மாதத்துக்கு முன்னதாகவே ரெலோ இயக்க உறுப்பினர்களை வீதிகளில் உயிருடன் போட்டு கொழுத்தியிருந்தனர். இப்படி அந்த இயக்கத்தையே அழித்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை இப்படி படுகொலை செய்து இருந்தனர். பல நூற்றுக்கணக்கானவர்களை தமது சித்திரவதை முகாமில் அடைத்து வைத்து, சிறுக சிறுக கொன்று வந்தனர். எங்கும் கைதுகள், கடத்தல்கள், காணாமல் போதல் தான், புலியின் அரசியல் மொழியாகவும் பதிலாகவும் இருந்தது.
தமிழினம் தன் மாற்றுக் கருத்தையும், சுதந்திரத்தையும் படிப்படியாக இழந்து வந்த காலம். இந்த நிலையில் இதற்காக, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பு எம்மிடம் வருகின்றது. பல நூற்றுக்கணக்கான சமூக அக்கறை கொண்டவர்கள், எம்முடன் போராடுவதற்காக தம்மை சுயமாகவே முன்நிறுத்துகின்றனர்.
தமிழ் மக்களின் இறுதி மூச்சு இப்படித்தான் அன்று எம்மூடாக வெளிப்பட்டு நின்றது. அரசியல் ரீதியாக நாம் எம்மை ஸ்தாபனப்படுத்தாத நிலையில், நாம் ஒரே அணியாக ஓரே குறிக்கோளோடு நின்றோம். விமலேஸ்வரன் - நாவலன் - நான், இதை முன்னின்று அன்று வழிநடத்தியது என்பது, புலிக்கு எதிரான போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்மாதிரியை ஒரு போராட்ட வரலாறாக விட்டுச் சென்றது. சரணடைவுக்கும், துரோகத்துக்கும், அரசியலைத் துறந்த பந்சோந்தித்தனத்துக்கும் மாறாக, போராடு என்பதை முன்னிறுத்தி வழிநடத்திய போராட்டம். புலிகள் உட்பட பச்சோந்தி சிவத்தம்பி வகையறாக்கள் எல்லாம் சேர்ந்து, உடைக்க முனைந்து முடியாது போன போராட்டம். புலிகளைக் கண்டு நாம் அஞ்சவில்லை. புலிகளிடம் மண்டியிடவில்லை. கோழைகள் போல் ஓடி ஒழியவில்லை. அரசிடம் சென்று சரணடையவில்லை. மக்களை நம்பி அவர்களுடன் களத்தில் நின்றோம்;
புலிகள் படுகொலைகள், கைது, கடத்தல்களை … தம் அரசியல் மொழியாக அமுல்படுத்திய காலத்தில், நாம் இதை வழிநடத்தினோம். போராட்டம் தன் பலவீனங்களுடன் முடிந்த பின் என்ன நடந்தது? அதே மாதமே விமலேஸ்வரன், சோதிலிங்கம் போன்றோரை புலிகள் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி அவர்களை தம்மிடம் ஒப்படைக்க கோரியதை அடுத்து, அவர்கள் தலைமறைவானார்கள். போராட்டம் நடந்த மூன்று மாதத்தின் பின், என்னை புலிகள் இனம்தெரியாத நபராக தாம் மாறி கடத்திச் சென்றனர். இதன் பின்பாக, அதாவது 18 மாதத்தின் பின், வீதியில் வைத்து விமலேஸ்வரன் புலிகளால் படுகொலை செய்யப்பட்டான். அடுத்த நாள் என்னை கொல்ல முயன்றனர். மற்றொரு அமைப்புக்குழு உறுப்பினரை வன்னியில் வைத்து புலிகள் சுட்டுக் கொன்றனர். இந்த போராட்டத்தில் முன்னின்ற பலர், பின்னால் புலிகளால் கொல்லப்பட்டனர். பலர் நாட்டை விட்டு வெளியேறினர். இந்தப் போராட்டத்தை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள மறுக்கும், திடீர் அரசியல் பித்தலாட்டங்கள் இன்று அரங்கேறுகின்றது. தேசம்நெற் இந்த வலதுசாரிய அரசியலில், ஒரு அங்கம் தான்.
இன்று இவர்கள் மறுக்கும் அந்தப் போராட்டம், இயக்கங்களிடம் கோரியது என்ன? புலிகள் மறுத்தது எதை?
பி.கு : விஜிதரன் கூட ஒரு அமைப்புக் குழு உறுப்பினர் தான். முந்தைய கட்டுரையில் நான் எழுதியது தவறு. அடுத்த தொடரில் இந்த தவறு சரிசெய்யப்படும்.
தொடரும்
பி.இரயாகரன்
08.07.2010