Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நோர்வே ஈழத் தமிழர் பேரவையும், அதன் தலைவர் பஞ்சகுலசிங்கமும் சொல்வது இதைத்தான். புலிப் பினாமி என்பதை மூடிமறைக்க நாங்கள் புலிகள் அல்ல என்பதும், புலியை பாதுகாக்க அவர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்று கூறுவதும், இவர்கள் தங்களை மூடிமறைத்து சொல்லும் அரசியல் மந்திரமாகும். புலியைப் பற்றி பேசாமல், அரசைப் பற்றி மட்டும் பேசும் புலி மந்திரமும் இதில் ஒரு வகை. இப்படி வலதுசாரியம் தன்னை அரசியல் ரீதியாக நிலைநிறுத்த, தன்னை மூடிமறைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றது.  இடதுசாரித்தனத்தைப் பயன்படுத்தி தன்னை மிதப்பாக்கவும், அது எல்லா விதமான நரி வேசமும் போடுகின்றது. தன்னை தீவிர அரசு எதிர்ப்பாளனாக காட்டிக் கொள்ளவும், மக்களின் அவலத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யவும் கூட, அது தயங்குவதில்லை. தான் மட்டும்தான் அதை பேசுவதாகவும், செயல்படுவதாகவும் காட்டி அதை நிறுவ முனைகின்றது. அதே தளத்தில் புலி வலதுசாரியத்தை மூடிமறைப்பதன் மூலமும், அதைப் பேசாது தவிர்ப்பதன் மூலமும், தன்னை அரசியல் ரீதியாக முன்னிறுத்துகின்றது. பினாமிப் பெயர்கள், இடதுசாரி வேசம், தனிமனித பாதிப்பு … என்று அனைத்தையும் அணிந்து கொண்டு மிதக்க முனைகின்றது.

இந்த வலதுசாரிய கூத்தை அம்பலப்படுத்த, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரமாக அதை எடுத்துச் சென்றது. இந்த வகையில் நோர்வேஜிய மொழியில் வெவ்வேறு இடங்களில் வெளியிட்ட துண்டுப்பிரசுரமும், நோர்வே சிவப்பு அணியின் பெண் உறுப்பினரும் நோர்வே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியும் எடுத்தியம்பிய பகிரங்க கருத்துக்களை அடுத்து, புலிப்பினாமிகள் வெலவெலத்து போனார்கள். தங்கள் புலிப் பினாமி வேசம் கலையாதிருக்க, அவர்கள் தங்கள் பாணியில் பதிலளிக்கின்றனர். இந்த உரை சார்ந்த நிகழ்வின் பின், குறித்த பெண் வேறு ஒரு பிரதேசத்தில் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த போது, நோர்வே ஈழத் தமிழர் பேரவையினரால் அச்சுறுத்தப்பட்டார். இந்த நிகழ்வை கண்டிக்கக் கூட முன்வராதவர்கள், தம்மை முற்போக்குகள், இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டு ஒருபுறம் திரிகின்றனர். மறுஆய்வு மற்றும் இலங்கை நெற் மட்டும், இதை ஓட்டிய எமது கட்டுரையை மறுபிரசுரம் செய்திருந்தது. புலிகளின் இந்த அச்சுறுத்தலை மீறி, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தொடர்ந்து, அடுத்த வாரமும் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தது.

இப்படியிருக்க தம்மை மூடிமறைத்துக் கொள்ளும் பாசிசப் புலிகள், வேசம் போட்டுக் கொண்டு வெவ்வேறு பெயர்களில் திரிகின்றனர். நோர்வே ஈழத் தமிழர் பேரவையும், அதன் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையாவும் நாங்கள் புலிகள் அல்ல என்கின்றார். தாங்கள் புலிகள் என்று தவறான தகவல்களை, நோர்வே மக்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்கின்றார். சரி அப்படி என்ன தவறான தகவல் என்றால், புலியை பற்றி நாம் கூறுவது தான். புலியைப் பற்றி பேசாத, அதன் மனித விரோத செயலைப்பற்றி பேசாத, ஆனால் நாங்கள் புலியல்ல என்ற நோர்வே ஈழத் தமிழர் பேரவையின் முகமூடியோ, நோர்வே மக்களுக்கானது, தமிழ் மக்களுக்கானதல்ல. இது வெட்ட வெளிச்சமானது. இப்படியிருக்க, நோர்வே ஈழத் தமிழர் பேரவையும், அதன் தலைவர் பஞ்சகுலசிங்கமும் புலிப்பினாமியாக இருந்தபடி வேடிக்கை காட்ட முற்படுகின்றார். 

அரசின் போர்க்குற்றங்களை மட்டுமே பேசும் இந்த புலியல்லாத கனவான், தமிழ் மக்களுக்கு புலிகள் இழைத்த குற்றங்களைப் பேசுவது கிடையாது. இப்படிப்பட்டவர்கள் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கு இழைத்த குற்றங்கள் பற்றி பேசுவதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அப்பாவி மக்களல்ல, கொடுமையான கொடூரமான மனித விரோதிகள். பேரினவாத அரசு எப்படி தமிழ்மக்களைக் கொன்றதை மறுக்கின்றதோ, அப்படி இந்த ரை கட்டிய புலிப் பினாமிகள், தமிழ்மக்களை புலிகள் கொன்றதை மட்டுமல்ல மற்றைய இனமக்களைக் கொன்றதையும் கூட மறுக்கின்றனர்.

புலிகள் போர்க்குற்றத்திலும், மக்களுக்கு எதிராக ஈடுபட்டதாகவும் கூறுவது, அரச கைக் கூலிகளின் பொய்ப் பிரச்சாரம் என்கின்றனர் நோர்வே ஈழத் தமிழர் பேரவையும், அதன் தலைவர் பஞ்சகுலசிங்கமும். தான் அல்லாத அனைத்தும் துரோகங்கள் என்று சொல்லியே, போராட்டத்தை அழித்த புலிக்கும்பல் இப்படித்தான் இதற்கு விளக்கம் கொடுக்கும். இதை விட, இது பற்றி சொல்ல வேறு அரசியல் எதுவும் அதனிடம் கிடையாது. 09.06.2010 அன்று புலிப் பினாமி அமைப்பின் பெயரால், புலிகள் நடத்திய கூட்டத்தில் வைத்து பஞ்சகுலசிங்கம் கந்தையா இதைத்தான் கூறினார்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி (புகலிட சிந்தனை மையம்) நோர்வே மொழியில் விநியோகித்த துண்டுபிரசுரமும், ஒரு பெண் தோழர் நோர்வேயின் சிவப்பு அணியின் நாடு தளுவிய கட்சி கூட்டத்தில் எடுத்தியம்பிய கருத்துக்களையடுத்து, புலிப்பினாமிகள் கலக்கம் பிடித்து பல வழிகளில் இதை முடக்க முனைகின்றனர். குறித்த கட்சி, கம்யூனிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் போது, எப்படி புலிகள் அதில் உரையாற்ற முடியும் என்று பகிரங்கமாக அதன் பெண் உறுப்பினர் தன் தோழர்களை நோக்கி வினாவினார். நோர்வே வலதுசாரிகளையும், புலி வலதுசாரியத்தையும் எதிர்த்து தேர்தலில் நின்றதன் மூலம், நோர்வே மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் அவர். கூட்டத்தில் ஓடுக்கப்பட்ட மக்கள் சார்பாக, புலிகள் தங்களை ஓளித்துக் கொண்டு வேசம் போட்டு நின்றதை அவர் அங்கு அம்பலப்படுத்தினார். அத்துடன், அதை ஒரு கட்டுரையாக வினியோகித்தார். இந்த நிலையில் பஞ்சகுலசிங்கம் கந்தையா அங்கு நெளிந்ததுடன், தவறான தகவலை கொடுப்பதாக கூறினார். தான் ஒரு புலிப்பினாமி என்பது தவறான தகவலாம். புலிகள் போர்க் குற்றத்தில் ஈடுபட்டது தவறான தகவலாம். ஆனால் புலிக்காக குத்தி முறிவது மட்டும் உண்மையாக இருப்பதை, கருத்தாலும்; நடைமுறையாலும் மறுத்து நிறுவ முடியவில்லை.

என்ன செய்கின்றார், அந்த பெண்ணின் ஈமெயில் முகவரியை புலிகள் வழிகளில் எடுத்து அதன் மூலம் தான் புலியல்ல என்று சொல்ல முற்படுகின்றார். இப்படி தனிப்பட்ட உரையாடலை நடத்தி, தம்மை மூடிமறைக்க முனைந்தார். (பார்க்க அவர்  நடத்த முனைந்த உரையாடலை: நோர்வே தொரம்சோவில் தனியாக நின்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்ணை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்மத்துடன் பாசிசப் புலிகள் அச்சுறுத்தினர் ) தாம் புலிகளல்ல என்று அவர் சொல்ல, பகிரங்கமான வெளிப்படையான அரசியல் வழி இருக்கின்றது. புலியை விமர்சிப்பதன் மூலம், புலியின் போர்க்குற்றத்தையும் முன்னிறுத்தி தமிழ்மக்களை நோர்வே ஈழத் தமிழர் பேரவை அணிதிரட்டுவதன் மூலம், தாங்கள் புலியல்ல என்பதை உலகறியச் சொல்லமுடியும். இதை விடுத்து தவறான தகவல் என்று கூறி, அந்த பெண்ணை தனிப்பட்ட ரீதியில் ஏன் அணுக வேண்டும்!?

இது இப்படி இருக்க, அரச மற்றும் புலிகள் உள்ளடங்கிய போர்க்குற்றத்தை அடிப்படையாக கொண்டு, துண்டுப்பிரசுரத்தை நாம் வினியோகித்தோம். தொரம்சோ பல்கலைக்கழகம் மற்றும் போடா நகரத்திலும், குறிப்பாக இடதுசாரிகள் மத்தியில் பரவலாக இது கொடுக்கப்பட்டது. இதன் போது தொரம்சோ நகரில் அந்த பெண் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்த போது, நோர்வே ஈழத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணை மிரட்டினர். அதன் விநியோகத்தை தடுத்து நிறுத்த முனைந்தனர். அந்த பெண் தான் அங்கம் வகிக்கும் நோர்வே கட்சி பெண்ணின் துணையை நாட, அவர்கள் தலையிட்டதை அடுத்து, புலிப்பினாமிகள் முயற்சி தோல்வி கண்டது.

இது தொடர்பாக பொலிசில் ஒரு முறைப்பாட்டை செய்துள்ளோம். அத்துடன் அக்கட்சி இதற்கு எதிரான கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. (பார்க்க) அதைத் தொடர்ந்து துண்டுப்பிரசுர விநியோக மூலமும், எமது நோர்வே இணையம் மூலமும் (பார்க்க) இதைப் பரந்தளவில் எடுத்துச் செல்லுகின்றோம்.

இப்படிப்பட்ட நிலையில் புலிகளின் வட்டுக்கோட்டை பிரிவான புலியின் பினாமியப் பிரிவான, நோர்வே ஈழத் தமிழர் பேரவை அம்பலமாகத் தொடங்கியுள்ளது. நோர்வே தான், இந்தப் பிரிவின் தலைமையகம் கூட. நோர்வே மக்களை ஏய்ப்பதும், அங்கு ஜனநாயக வேசம் போட்டு நிற்பதையும் அம்பலப்படுத்தும் பணி எம்மளவில் தொடருகின்றது.

இந்தப் பினாமிகள் அமைப்பு, பினாமிகளைக் கொண்டு தன்னை நடுநிலையாளனாக நிலை நிறுத்த முனைகின்றது. ஈழத் தமிழர் பேரவை தனது பினாமியாக தனியார் தன்னார்வ நிறுவனம் ("அமைதியை உருவாக்கும் மையம்" பார்க்க கூட்ட அழைப்பை) மூலம், ஒரு நடுநிலைக் கூத்தை 09.06.2010 அன்று அரங்கேற்றினர். அந்த தன்னார்வ நிறுவனத்தின் வருடாந்த நிகழ்ச்சியில் இல்லாத ஒரு திடீர் கூட்டத்தை, 09.06.2010 நடத்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு மூடிய தெரிவு செய்யப்பட்ட அழைப்பினால் மட்டும் பங்கேற்பாளர்களை இது கொண்டு இருந்தது. இதில் இடதுசாரியம் பேசியவர்கள் முதல் முற்போக்குவாதிகள் வரை அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தக் கூட்டத்தின் மூன்றாவது உரையாடல் தமிழில் நடத்தப்பட்டது. இப்படி இவர்கள் இடதுசாரியம் என்பது வலதுசாரியம் தான் என்ற, புலம்பெயர் இடதுசாரிய அரசியல் வங்குரோத்தை பயன்படுத்தியதை இது மறுபடியும் எடுத்துக்காட்டியது.

 

புலிப் பினாமிகளின் பின்னும், அவர்களுடன் கூடியும், அவர்களுடன் முரண்பட்டும் ஒரே அரசியல் தளத்தில் நடத்துகின்ற இடதுசாரியம் பேசும் வலதுசாரியம், அன்றைய இயக்கங்களில் இருந்து இன்று வரை தொடருகின்றது. இந்த எல்லைக்குள் அரசியல் முற்போக்கு என்பது, தமிழ் என்ற இன அடையாளத்துக்கு உட்பட்டது என்பதைத் தாண்டி, இவர்களுக்கு என்று எந்த மக்கள் அரசியலும் சுயமாக கிடையாது என்பதை தொடர்ந்து நிறுவி வருகின்றனர். அதாவது சொந்த மக்களை அணிதிரட்ட, புலிக்கு வெளியில் அரசியல் ரீதியாக இவர்கள் தயாராகவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றனர். புலியுடன் கூடி விவாதிக்கவும், சேர்ந்து நிற்கவும் முடிகின்றது என்பது தான், இவர்களின் எதார்த்தம். அரசியல் பிரமுகத்தனம், அறிவுத்தனம் மூலம் வலதுசாரியத்தில் மிதக்கும் தங்கள் வெள்ளாட்டுத்தனத்தை நிலைநிறுத்த, அதை நியாயப்படுத்துவது மட்டும் தான் இவர்களின் அரசியல் எல்லையாகும். (இது தொடர்பாக எழுதப்பட்ட இன்னுமொரு கட்டுரை )

09.06.2010 அன்று பிற்போக்குவாதிகளான வலதுசாரிய இனவாதிகள் கூட்டிய சதிக் கூட்டத்தில், இடதுகள் என்று கூறிக்கொள்ளும் நோர்வே முற்போக்குவாதிகள் கூடிக் கூத்தாடி நடத்திய விவாதங்கள், ஆலோசனைகள், முடிவுகள் அனைத்தும், வலதுசாரியத் தமிழ் இனவாதத்தை பாதுகாப்பதே கூட்டத்தின் அரசியல் நோக்கமாக இருந்தது. அவர்கள் கூட்டிய கூட்டத்தில், இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டவர்கள் கூடினர். இங்கு நோர்வே ஈழத் தமிழர் பேரவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா ஆற்றிய உரையில், புலிகள் எந்த மனிதவிரோத செயலையும் செய்யவில்லை, எந்தப் போர்க் குற்றத்தையும் செய்யவில்லை என்றார். அத்துடன் அப்படி சொல்வது இலங்கை அரச கைக்கூலிகளின் நச்சுப் பிரச்சாரம் என்றார்.

இப்படி இடதுசாரிய மற்றும் முற்போக்கு குஞ்சுகள் கூடிய கூட்டத்தில்தான், இப்படிப் பாசிச முத்துக்கள் பொழியப்பட்டது. இப்படிப் புலியின் வலதுசாரிய சித்தாந்தம், பல அரசியல் தளத்தில் பொது அரசியலாக இருக்கின்றது. தமிழ்மக்களுக்கு எதிரான புலிகள் நடத்தையை, இதன் மூலம்  மூடிப்பாதுகாக்க முனைகின்றனர்.

இந்த நிலையில் புலிகளின் மனிதவிரோத செயல்களை எடுத்துக்காட்ட பெரிய பட்டியலையே எம்மால் தர முடியும். இதைப் புரிய வைக்க ஓரேயொரு உதாரணம் போதும்;.

யாழ்மண்ணில் வாழ்ந்த முஸ்லீம் மக்களை, ஒரு இரவில் புலிகள் துரத்திய கதை இது. அவர்களிடம் இருந்த சகல பொருட்களையும் பறித்துவிட்டு, துரத்தியவர்கள் புலிகள். 120000 பேரை இப்படி உடுத்த உடுப்புகளுடன் மட்டும் துரத்தினர். அவர்களது அனைத்து உடைமைகளையும் பறித்தனர். நோர்வே ஈழத் தமிழர் பேரவை பினாமி அமைப்பின் பின்னுள்ள புலியின் சொத்துகள், இப்படிப்பட்ட செல்வங்களால் ஆனது. அன்று இனம் காணப்பட்டு புலிகளால் பிடிக்கப்பட்ட 100 பேரளவிலான முஸ்லீம் மக்கள், காணாமல் போனார்கள். இன்று வரை, அதாவது 20 வருடமாக, அந்த மக்களை அரசு கைவிட்ட நிலையில், அகதியாக சேரிகளில் வாழ்கின்றனர். எந்த தமிழ் உணர்வு, அநீதிக்கு எதிரான மனித உணர்வு இதற்காக போராடியது!? போராடுகின்றது!?

இறுதி யுத்தத்தை அடுத்து 300000 தமிழ் மக்கள் அகதியானார்கள். ஆம் அவர்கள் புலிகளினால் கட்டாயமாக யுத்தப் பிரதேசத்தில் மனிதக் கேடயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இருதரப்பாலும் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் இருந்து தப்பி அகதியாக வந்தவர்களை, பேரினவாதம் திறந்தவெளிச் சிறைமுகாங்களில் சிறைவைத்தது. இதன் மூலம் மேலும் அவர்களின் வாழ்வைச் சிதைத்து நாசமாக்கினர்.

இப்படி இரண்டு விடையத்திலும், இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட நோர்வே ஈழத் தமிழர் பேரவை, வேறுயாருமல்ல புலிகள்தான். புலிகள் செய்ததை பாதுகாக்கும் அதே தளத்தில், புலி வேசத்தை யாராலும் மூடிமறைக்க முடியாது. மக்களுக்காகவும், உண்மைக்காகவும், நேர்மையாக நிற்பவர்கள் யார்? யாரெல்லாம் மக்களுக்கு எதிராக செயல்பட்டனரோ, அவர்கள் அனைவரையும் அம்பலப்பபடுத்தி போராடுவர்கள்தான்.

இதுவல்லாது ஒன்றை மட்டும் மக்களின் எதிரியாக காட்டி எதிர்ப்பவர்கள், மக்களை ஒடுக்கும் நயவஞ்சகக் கூட்டம் தான். இது தமிழர் மத்தியில் புலியாக, வலதுசாரிய சித்தாந்தமாக அது உள்ளது. இது தன்னை மூடிமறைத்து கொள்ள பினாமி வேசம் போடுகின்றது. தன்னைச் சுற்றி இடதுசாரியத்தையும், முற்போக்கையும் அலங்கரித்துக் கொண்டு புது திருமணத் தம்பதிகளாக நடமாடத் துடிக்கின்றது. அரசியல் முதுகெலும்பற்ற முற்போக்குகள் முதல் இடதுசாரியம் வரை, தமிழ் இன அடையாளத்தை முன்னிறுத்தி, வலதுசாரி அரசியலுக்கு காவடி எடுக்கின்றனர். இந்தப் பின்னணியில் தான் புலிப் பினாமியான நோர்வே ஈழத் தமிழர் பேரவை, தொடர்ந்தும் நோர்வேயில் பாசிச ஆட்டம் போடுகின்றது.        

பி.இரயாகரன்

14.06.2010