தனிமனிதனிடம் "காதலை", "திருமண பந்தங்களையும்" வடிகட்ட கோருகின்றது. நிபந்தனை போடுகின்றது. நீ நிபந்தனை பூர்த்தி செய்யாவிட்டால் சேர்ந்து வாழமுடியாது என்கின்றது. இப்படியொரு கொடுமையான பிரிட்டிஸ் சட்டம். தனிமனித உரிமைகளை மறுக்கும் சட்டம். நீயே அதை செய், இல்லையென்றால் சட்டப்படி சேர்ந்து வாழ இடமில்லை என்கின்றது.
அது என்னடா சட்டம் என்றால், ஆங்கிலம் தெரியாதவர்களை நீங்கள் திருமணம் செய்யக் கூடாது என்கின்றது. அப்படிச் செய்தால் அவர்கள் சேர்ந்து வாழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டம் போட்டு சொல்லுகின்றார்கள். அன்று செவ்விந்தியர்களைக் கொன்றால் தலைக்கு இவ்வளவு பணம் என்று சட்டம் போட்ட ஆண்ட பரம்பரை இது. அன்று ஆண், பெண், குழந்தை, செவ்விந்திய பிரிவுகளை வகைப்படுத்தி, ஒவ்வொரு தலைக்கும் இவ்வளவு என்று கூறி, கொன்று குவித்ததற்கு பணம்கொடுத்து இதில் கொழுத்த பரம்பரைதான், இந்த சட்டத்தைப் போடுகின்றது.
அண்மையில் ஆட்சிக்கு வந்துள்ள வலதுசாரிய ஆட்சியாளர்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கி வருகின்றது. இதில் ஒன்று பிரிட்டனில் வாழும் ஒருவர் திருமணம் செய்தால், அவரை திருமணம் செய்தவருக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரியவேண்டும் என்கின்றது. அப்படி தெரியாவிட்;டால் அவர்கள், குடும்பமாக சேர்ந்து வாழமுடியாது. இதன் மூலம் திருமணம் செய்தவர்களின் வருகையை, 10 சதவீதத்தால் தடுக்க முடியும் என்று அரசு அறிவிக்கின்றது. இப்படி இனவாதப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கான சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
உலக பொருளாதாரத்திலும், பிரிட்டனிலும் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியை பூசிமெழுகவும், தீவிரமாக தொடரும் சமூக வெட்டு மீதான சமூகக் கொந்தளிப்பை தடுக்கவும், வெளிநாட்டவர் மீதான இதுபோன்ற இனவெறி வாதங்கள் மூலம் ஆட்சியாளர்கள் திசைதிருப்புகின்றனர்.
ஜனநாயகம் பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், தனிமனித உரிமை பற்றியும் வாய் கிழிய பேசிக் கொண்டு, இதை மறுக்கின்ற இனவாதம்தான் இது. ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், உரிமைகள் என்பது சுரண்டுவதற்கு அப்பால், மக்களுக்கு கிடையாது என்கின்றனர். வெள்ளையனுக்கு உண்டு, மற்றவனுக்கு கிடையாது என்று வெள்ளை நிறவெறியைச் சார்ந்து நின்று சட்டம் போடுகின்றனர்.
அன்று நாசிகள் ஆரிய இரத்தம் உடலில் இல்லை என்றால், அவர்களை கொல்லும் உரிமை வரை பேசி, இனவாதத்தை கொண்டு ஜெர்மனியை தூய்மைப்டுத்தினர்.
அந்த வகையில்தான் பிரிட்டிஸ் அரசு ஆங்கிலம் தெரியாதவனை திருமணம் செய்தால், அவர்கள் கூடி வாழ முடியாது என்று சட்டம் போடுகின்றது. இதே வகையில் சில ஐரோப்பிய நாடுகள், ஏற்கனவே இப்படியான இனவாத சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.
உலகெங்கும் சமூக நல நிதிகளை வெட்டக்கோரும் இந்த ஏகாதிபத்திய நாடுகள், சொந்த நாட்டில் அதை செய்கின்றது. இந்த வகையில் கல்விக்கான செலவுகளை உலகெங்கும் குறைப்பதுடன், இதைத்தான் சிக்கன நடவடிக்கை என்கின்றது. இப்படி அடிப்படைக் கல்வியை மறுக்கும் அரசுகள், அதை அமுல்படுத்துவிக்கும் ஏகாதிபத்தியங்கள், கல்வியற்ற தற்குறிகளை உலகெங்கும் உருவாக்குகின்றனர்.
அதேநேரம் தன் நாட்டுக்கு ஆங்கிலம் தெரியாது வரமுடியாது என்ற இனவாத சட்டத்தை, தனிமனித உரிமைகளை மறுக்கும் வண்ணம் இயற்றுகின்றது.
இப்படி இனவாதம் மூலம் மக்களை பிளந்தும், கூடி வாழும் தனிமனித உரிமைகளை மறுத்தும் நிற்பது தான், சட்ட ஆட்சியாம்! ஜனநாயகத்தின் தெரிவாம்! இப்படிக் கூறி மக்களை ஒடுக்குகின்றது.
உலகெங்கும் சமூக நல நிதிகளை வெட்டக்கோரும் ஏகாதிபத்தியங்கள், அப்படி வெட்டி நிதியை தனது முதலுக்கான வட்டியாக அறவிடுகின்றது. வட்டியை வேறுவிதத்தில் அறவிட, அங்கு எதையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. சமூக நல நிதியை குறைத்து, அதை தனக்கு தரும்படித்தான் கோருகின்றது. சமூகநல நிதிகளின் வெட்டால் ஏற்படும் சமூக விளைவுகளைத் தடுக்க, மக்களை ஓடுக்கும் படைப் பலத்தை அதிகரிக்கக் கோருகின்றது.
சமூகம் எங்கும் தற்குறிகளும், பணம் கொடுத்தால் கல்வி என்ற பண ஜனநாயகமும் தான் உலகெங்கும் ஜனநாயகமாகின்றது. இங்கு இவர்கள் எதையும் இன்று மூடிமறைப்பதில்லை. அதேநேரம் அங்கிருந்து செல்வத்தை திருடி குவிக்கும் இந்த நாடுகளின் திசையை நோக்கி, ஏழை எளிய மக்கள் பிழைப்புத் தேடி ஓடி வருகின்றனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள். குடும்பங்கள் ஒன்றிணைவதைத் தடுக்க தனிமனித உரிமை மீறல் சட்டங்கள். இதன் மூலம் தாங்கள் கொள்யைடித்த பணத்துக்கு, வேலி போடுகின்றனர். அதேநேரம் பணக்காரனுக்கு தலைகீழாக நின்று விசுவாசமாக சேவை செய்யும் ஆங்கிலம் தெரிந்த பண்பட்ட அடிமைகளை மட்டும் தான் நாம் அனுமதிக்க முடியும் என்கின்றனர். இது தான் சட்டம்.
ஆங்கிலம் தெரிந்ததுகள், ஏன் அவர்கள் படிக்கலாம் தானே என்று, இந்த இனவாதத்துக்கு தம்பங்குக்கு பல்லாக்கு தூக்குகின்ற கூட்டம் சுயவிளக்கம் அளிக்கின்றனர். இப்படி சுயவிளக்கம் கொடுக்கும் புலம்பெயர் வலதுசாரி தமிழிஸ்டுகள், கண்ணை மூடிக்கொண்டு உலக வெளிச்சம் பற்றி பீற்றிக்கொள்கின்றனர்.
இப்படி ஆங்கிலம் தெரிந்த தமிழிஸ்ட்டுகள் வேறுயாருமல்ல. சொந்த மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியை மறுத்த கூட்டம். ஏழை எளிய மக்களின் கல்வியை மறுத்த கூட்டம். இப்படி உங்களால் கல்வி கற்க முடியாது போன, எழுத்தறிவற்ற மக்கள் எப்படி ஆங்கிலத்தை கற்க முடியும்;? அதற்கான அடிப்படைக் கல்வியைக் கூட மறுத்தவர்கள், தமிழிஸ்ட்டுகளாக மாறி இனவாதத்தை, தங்கள் வலதுசாரி அரசாங்கத்துடன் கூடி நின்று கூத்தாடுகின்றனர்.
இது வெறும் தமிழிஸ்ட்டுகள் மட்டுமல்ல, எல்லா நாட்டு ஸ்ட்டுகளும் தான், இப்படி இனவாதம் கக்குகின்றனர். வலதுசாரிய இனவாதமும், பண ஜனநாயகமும் இப்படி கூடி நின்று மக்களை ஒடுக்குவதையும், பிளப்பதையும் நியாயப்படுத்துகின்றனர்.
இந்த பிரிட்டிஸ் அரசில் இனவாதத்துக்கு எதிரான குரல்களோ, இதை அம்பலப்படுத்தி போராடுகின்றன. உலகெங்கும் ஒடுக்குமுறையும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் தான், மனித வரலாறாக உள்ளதுடன். இது தொடருகின்றது. இந்த வகையில் பிரிட்டிஸ் இனவிரோதம் கொண்ட தனிமனித உரிமை மறுப்புக்கு எதிரான போராட்டமும், இன்று புதிதாக இணைந்துள்ளது.
பி.இரயாகரன்
10.06.2010