வினவு எதிர்ப்பு ஆணாதிக்க அரசியல், சந்தனமுல்லையையும், லீனாவையும் ஒன்றாகக் காட்ட முனைந்தது. சந்தனமுல்லை விவகாரத்துக்குள், லீனாவைக் கூசுவினர். இப்படி அனைவரும் ஆணாதிக்க பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டு, வினவு எதிர்ப்பு சின்டிகேட்டை போட்டுக்கொண்டு, எல்லா சமூக ஒடுக்கும் பிரிவுகளும் களத்தில் குய்யோ முறையோவென கும்மியடித்தன.
ஆணாதிக்க சிந்தாந்தமோ, லீனாவுடன் தன்னை இனம் கண்டது. லீலாவை முன்னிறுத்தி, வினவு அரசியலுக்கு எதிராக ஆணாதிக்கமே பெண்ணியம் பேசியது. லீனா என்ற பெண் அடையாளத்தின் ஊடாக, இதை முன்னிறுத்தியது. லீனா பேசியது பெண்ணியமாம்! இதை மறுத்தது ஆணாதிக்கமாம்! லீனா பேசியது, எப்படி பெண் விடுதலைக்கு வழிகாட்டியது, அது பெண்ணியமாகும் என்பதை எந்த மக்கும் விளக்க முடிவதில்லை என்பதே இதில் உள்ள சூக்குமான அரசியல் உண்மை. லீனா பேசியது என்ன? ஆண் பேசும் இடத்தில் நின்று பெண் பேசும் போது வெளிப்படும், ஆணாதிக்க பெண் வசைப்பாட்டு.
இதை பெண் சொல்வதால் பெண்ணியம் என்று கூறுமளவுக்கு, இவர்களின் ஆணாதிக்க பெண்ணிய அரசியல் இருக்கின்றது. ஆண் பெண்ணைப் புணர்ந்தால் அது ஆணாதிக்கம், பெண் ஆணைப் புணர்ந்தால் அது பெண்ணியம் என்று சொல்லுகின்ற அளவில், லும்பன் பெண்ணியம் உள்ளது.
சந்தனமுல்லையை ஆணாதிக்க வக்கிரத்துடன் எழுதிய கூட்டத்துக்கு, யார் பக்கவாத்தியம் வாசிக்கின்றனர் என்றால், இவர்கள் தான். இதற்குள் தான் இவர்கள், லீனா வில்லுப்பாட்டு நடத்துகின்றனர்.
சந்தனமுல்லை விவகாரத்தை எடுப்போம். லீனா உள்ளிட்ட பல பெண்கள் தமிழ்மணத்தில் இருந்தபோதும், பெண் என்ற அடிப்படையில் கூட சந்தனமுல்லைக்காக குரல் கொடுக்கவில்லை. சந்தனமுல்லை பாதிக்கப்பட்ட முதல் பெண்ணுமல்ல என்பதை, சந்தனமுல்லையே கூறியுள்ளார். ஆக பெண்கள் மட்டுமல்ல, வினவு அரசியலுக்கு எதிராக துடித்துப் பதைத்து புலம்பும் ஆளும் வர்க்கக் கூட்டம் கூடத்தான் குரல் கொடுக்க முன்வரவில்லை. அனைவரும் ஆணாதிக்க எல்லைக்குள் தான், அதன் சமரச எல்லைக்குள் தான் கூடி கும்மியடிக்கின்றனர். இப்படித்தான் பெண் அடையாளம் கொண்ட பெண்கள், எழுத்துலகில் இருக்கின்றனர். இங்கு விதிவிலக்கு என்பது, வினவு முன்னிறுத்தும் அரசியல் பொதுத் தளத்தில் தான் எப்போதும் இருந்து வந்துள்ளது.
பெண் அடையாளம் கொண்ட லீனா, பெண்ணியம் பேசுவது கிடையாது. பெண்ணை புணரும் ஆணின் ஆணாதிக்கத்துக்கு பதில், ஆணைப் புணரும் பெண்ணின் ஆணாதிக்கத்தனத்தை பெண்ணியம் என்கின்றனர். ஆண் செய்வதை, பெண் செய்யும் போது அதை பெண்ணியம் என்கின்றார். இதுதான் அவரின் ஆணாதிக்கம் பற்றிய அரசியல் எல்லை. ஆண் தான் இப்படி செய்யமுடியும் என்று கூறப்பட்ட ஆணாதிக்க கூறுகளை, பெண் செய்யும் போது அதைப் பெண்ணியம் என்கின்றனர். இதுதான் இதில் உள்ள நுட்பமான வேறுபாடுடன் கூடிய ஆணாதிக்கம். ஆணுக்கு பதில் பெண் செய்வது, பொது ஆணாதிக்க உலகில் அதிர்வாகின்ற போது, அதை முன்னிறுத்தி பெண்ணியம் என்கின்றனர். இந்த அதிர்வு கொடுக்கும் விளம்பரத்தனத்துக்குள் தன்னை முனைப்பாக்கி, சமூகத்துக்கு எதிராக தன்னை முன்னிறுத்துகின்றது.
இந்த விளம்பர ஆணாதிக்க பெண் அரசியல், ஆணாதிக்கத்துக்கு எதிராக சமூகத்தை அணி திரட்டுவதை அரசியல் ரீதியாகவே மறுக்கின்றது.
இந்த வகையில் லீனா பேசியது பெண்ணியமல்ல. அதைத்தான் வினவு அல்ல, வினவு அரசியல் அம்பலமாக்கியது. ஒடுக்கப்பட்ட பெண்களின் மேலான ஆணாதிக்க அரசியலை முன்னிறுத்தி, லீனாவின் ஆணாதிக்கத்தனத்தின் மீது வினவு அரசியல் எதிர்வினையாற்றியது. இங்கு எதிர்வினையின் மொழி குறித்தும், அம்பலப்படுத்திய விதம் குறித்தும் பேசுகின்றவர்கள், லீனாலின் ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் அரசியல் தளத்தில் இருந்து அதைச் செய்கின்றனர். அதாவது லீனாவின் ஆணாதிக்க அரசியலை விமர்சிக்காத, அம்பலப்படுத்தாத அரசியல் தளத்தில் நின்ற இந்த மொழி பற்றி புலம்புகின்றனர்.
சந்தனமுல்லை விவகாரத்திலும் ஆணாதிக்கத்தை மூடிமறைக்க, யார் எழுதியது உள்ளிட்ட பலவிதமான திசை திருப்பல்கள் இதுபோல் கையாளப்பட்டது. இவ்விரண்டு விடையத்திலும் ஆணாதிக்கத்தை பாதுகாக்கவும், மூடிமறைக்கவும் முனைகின்றனர். விமர்சித்தவர்களை குற்றம் காண்கின்றனர். இறுதியில் வினவு முன்வைத்த அரசியல் மீதான, அரசியல் எதிரிகளின் எதிர்வினையாக இது இருப்பது அம்பலமாகியது.
லீனா பேசியது எப்படி பெண்ணியமாகும் என்ற விவாதம் மறுக்கப்பட்டு, பெண் என்றால் அது பெண்ணியம் என்று கூறிக்கொண்டு தன்னை புலப்படுத்த முனைகின்றது. இதன் மூலம் வினவுவின் பெண் அரசியல் மறுப்பாகவே அது அரங்கேறியது. இதனால் இவை இரண்டும் சிண்டிக்கேட் போட்டுக்கொண்டு, வினவுவை அரசியல் ரீதியாக எதிர்த்தனர்.
லீனா கும்பல் ஆணாதிக்கத்தை போர்த்தி மூட, வித்தை காட்டுகின்றது. லீனாவின் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்த, லும்பன் அரசியல்தனத்தை முன்னிறுத்தி அராஜகவாத அரசியலை சார்ந்து நிற்கத் தொடங்கியது.
இதை குறிப்பாக பார்ப்போம். ஒரு ஆண் அல்லது பெண் இன்றைய சமூக முறைமைகளை மீறி, தனிநபராக வாழ்வதும், தன்னளவில் தனக்குள் மட்டும் வாழ்வது எப்போதும் கேள்விக்குள்ளாவதில்லை. அதே ஆண் அல்லது பெண் இதுதான் சமூகத்துக்கான தீர்வு என்கின்ற போது, அது பொது அரசியலாகின்றது.
இங்கு சமூகத்தில் வாழ்ந்தபடி, சமூகத்தை மறுக்கின்ற அரசியலாக அது பரிணாமிக்கின்றது. சமூகத்தை மாற்றாது, தான் மட்டும் வாழ்வது தான் தீர்வு என்பது சமூகத்தை மறுக்கின்றது. சமூக மாற்றத்தை, அது மறுக்கின்றது. தன்னளவில் சரியானதை கொண்டு சமூக மாற்றத்துக்காக போராடுவதை மறுப்பது, சமூகத்தை மறுக்கும் லும்பன்தனமாக அராஜகவாத அரசியலாகும். தனிமனித அராஜகவாத வாழ்வு, என்றும் சமூகத்தின் பொதுத் தீர்வாகாது. இந்த வகையில் இந்த அரசியல், சமூகத்துக்கு எதிரான அரசியல்.
இதைத்தான் லீனா பெண்ணியத்தின் பெயரில் கையில் எடுக்கின்றார். சமூகம் மீதான தன் லும்பன்தனமாக அராஜகவாதம் மூலம் சமூகத்தைக் குதறுவதையே, பெண்ணியமாக கட்டமைக்கின்றனர். இது சமூகத்தில் பல சமூக ஒடுக்குமுறைகள் மேல் கூட, இந்த அராஜகவாத சித்தாந்தமும் நடைமுறையில் காணப்படுகின்றது. இங்கு லீனாவின் லும்பன்தனமான அரசியல், அராஜகவாதமாக வெளிப்பட்டு அது பெண்ணியத்தில் பெயரில் பூச்சூடுகின்றது.
நிலவும் ஆணாதிக்க சமூகத்தை மாற்ற, எந்த பெண்ணியக் கோட்பாட்டையும் இது முன்னிறுத்தி சமூகத்தை அணிதிரட்டுவது கிடையாது. சமூகத்துக்கு எதிராக தன்னை முன்னிறுத்தும் விளம்பர உத்திக்கேற்ப, தன் லும்பன்தனத்துடன் கூடிய அராஜகவாதத்தையே சமூகத்தின் மேல் இது காறி உமிழ்கின்றது. உண்மையில் இந்த தனிமனித லும்பன்தனம், தன் சொந்த நலனைத்தான் இதன் மூலம் எப்போதும் எங்கும் அடைகின்றது, அடையத் தூண்டுகின்றது. சமூகத்தின் விடுதலைக்கு, எதையும் வழங்குவது கிடையாது.
இதில் குறிப்பாக பாலியல் புணர்ச்சியை எடுப்போம்;. ஒரு ஆண் பலரை புணரும் ஆணாதிக்க சமூக அமைப்பில் வாழ்கின்றான். இதை பெண் அடைவதா பெண்ணியம்!? ஆம் என்கின்றது, லும்பன் அராஜகவாத பெண்ணியம்;. ஒரு பெண் தான் பல ஆணை புணரும் சொந்த நலனை, இந்த லும்பன்தனமான அராஜகவாத ஆணாதிக்க நிலை மூலம் பெறுகின்றாள். இங்கு ஆண் செய்யும் ஆணாதிக்க அதே உரிமையை, பெண் பெறுவது பெண்ணியமல்ல. அதுவும் ஆணாதிக்கம் தான். இதைத்தான் லீனாவும் சரி, அவரைச் சுற்றி கும்மியடிக்கும் கூட்டமும் சொல்லுகின்றது, செய்கின்றது.
நிலவுகின்ற சமூக ஒழுங்குக்கு வெளியில், யாரும் சுதந்திரமாக வாழ முடியாது. சமூகம் தான், தனிமனிதனின் எல்லை. தனிமனிதனின் வைக்கும் எல்லையல்ல சமூகம். நாங்கள் சமூகத்துக்கு வெளியில் வாழ்கிறோம், இருக்கின்றோம் என்கின்ற போது, அது நிலவும் சமூகத்தை பாதுகாக்கும் கோட்பாடாகி விடுகின்றது. தனிமனிதன் சமூகத்தை மாற்றுவதற்காக போராடாது, தனக்கு மட்டும் என்பது இந்த தனிமனித சமூக அமைப்பின் சுரண்டல் கோட்பாடாகும். சமூக மாற்றத்துக்காக போராடாது, தனிமனிதன் தான் மட்டும் இப்படி இருப்பதாக கூறுவது பொய்யானது பித்தலாட்டமானது. அது லும்பன்தனம் கொண்டது. தன்னளவில் அது தனிமனித அராஜகவாதத்தைக் கொண்டு, இந்த சமூகத்தைப் பாதுகாக்கின்றது.
சமூகத்தில் வாழ்ந்தபடி, சமூக மாற்றத்தின் ஊடாக செய்ய வேண்டிய மாற்றத்தை மறுத்து இது எப்போதும் முன்வைக்கப்படுகின்றது. இது பெண் சார்ந்து பெண்ணியமல்ல, மூடிமறைக்கப்பட்ட சுயநலம் கொண்ட ஆணாதிக்கம். இதை ஆண் மட்டுமல்ல, பெண்ணும் கூட கோரமுடியும்.
பி.இரயாகரன்
06.06.2010