மே 16 வரை ஆயுதமேந்திய இரண்டு பாசிசத்துக்கு நடுவில் மக்கள் சிக்கித்தவித்தனர். இதன் மூலம் மக்கள் சந்தித்த அவலங்களைத் தான், அவர்கள் விடுதலை என்றனர். ஒருபுறம் புலிகள் மறுபுறம் அரசு.
இதன் பெயரில் மக்களைக் கொல்வதிலும் வதைப்பதிலும், கைதேர்ந்தவர்களாக மாறினர். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டியபடி, மனித அவலத்தை உருவாக்கினர். இந்த அவலத்தில் இருந்து மக்களை விடுதலை செய்யப்போவதாகக் கூறினர்.
காணாமல் போதல், கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, கட்டாய ஆள்பிடிப்பு, மக்களை பலி கொடுத்தல், பலியெடுத்தல், சிறை, வதைமுகாங்கள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், அகதிமுகாம் என்ற பெயரில் சிறைக் கொட்டகைகள், களையெடுப்பு …. என்று எண்ணற்ற அவலத்தை திட்டமிட்டே மக்கள் மேல் திணித்தவர்கள் இருதரப்பினரும் தான். யாரும் இதில் சளைத்தவர்கள் அல்ல.
இப்படி பாசிசத்தின் இரு முகங்கள், மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. அவரவர் தங்கள் தங்கள் ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க ஒருபுறம் தேசியம் என்றனர், மறுபுறம் ஜனநாயகம் என்றனர்.
இப்படித்தான் மே 16 இல் முடிந்துபோன புலிவரலாறு வரை, கதை சொன்னார்கள். இவ்விரண்டையும் எதிர்த்து, மக்களைச் சார்ந்து ஒரு அரசியல் ரீதியான முன்னெடுப்புடன் மக்களுக்காக குரல்கள் எழுவது என்பது முற்றாக மறுக்கப்பட்டது.
மிகச் சிலர் இவ்விரண்டையும் எதிர்க்கத் தயாராக இருந்தனர். அதில் பலர் தேசியம், ஜனநாயகம் என இவ்விரண்டையும், அரசியல் அடிப்படையாகக் கொண்டு போராடத் தயாராக இருக்கவில்லை. அதை நாங்கள் மட்டும் செய்தோம். ஜனநாயகம், தேசியம் இவ்விரண்டையும் அரசியல் ரீதியாக முன்னிறுத்தி, அரசியல் ரீதியாக எதிர்கொண்டோம். நாங்கள் என்கின்ற போது, அது ஒரு அரசியல். இருந்தும் நாம் அம்பலப்படுத்துவதற்கு அப்பால், முன்னேற முடியாது தனிமைப்படுத்தப்பட்டு இருந்தோம்.
சமூகத்தில் தம்மை முன்னிலைப்படுத்தியவர்கள் அனைவரும், அரசு – புலி என்ற இரு தளத்தில் இரண்டு அணியாக பிளவுபட்டு நின்றனர். அவர்கள் கருத்துத்தளத்திலும்; பிரச்சார தளத்திலும் செல்வாக்கு வகித்தனர். எமது உண்மைகள், மக்கள் மத்தியில் செல்வதைத் எல்லா வடிவத்திலும் தடுத்தனர். தன்னை மூடிமறைத்துக் கொள்ள தேசியம் - ஜனநாயகம் என்ற கருதுகோளை முன்தள்ளினர்.
இது தான், அன்று ஓருவரை ஒருவர் நியாயப்பபடுத்திக் கொள்ளும் அரசியல் அடிப்படையாக இருந்தது. மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையாக இவை இரண்டும் இருந்தது. ஆனால் அரசம் – புலியும், ஒன்றையொன்று சொல்லி, மற்றதை மறுத்தனர்.
இப்படி இரண்டு தரப்பும் மக்களுக்கு எதிராகவே இயங்கியது. இவை இரண்டையும் முன்னிறுத்தி போராட, யாரும் இருக்கவில்லை. இவ் இரண்டு போக்கையும் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களில் பலர், சில கூறுகளை கண்டிக்கவும், அதை தவறு என்று சொல்லவும் கூட முன்வந்தனர். ஆனால் அதை அரசியல் ரீதியாக, முன்னெடுக்க தயாராகவிருக்கவில்லை. அவர்கள் தம்மை வெறும் புத்திஜீவிகளாகவும், தம்மை சமூகத்தில் முன் முதன்மைப்படுத்தி நிறுத்தவும் மட்டுமே இதைப் பேசினர்.
அதாவது சமூகத்தை அணிதிரட்டும் ஒரு மாற்று அரசியல் வழியை மறுத்தனர். மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டும் கோட்பாட்டுகளை மறுத்து, ஏகாதிபத்திய கோட்பாட்டுத் தளத்தை ஆதாரமாக கொண்டு இயங்கினர். இதன் மூலம் மக்களை ஏய்க்கும் அரசியல் வித்தைகளைச் செய்தனர். புலி - அரசு அரசியல் செயல்தளத்தைக் கண்டிக்கும் போர்வையில், மக்கள் தம் விடுதலைக்காக தனியாக அணிதிரட்டி போராடும் அரசியலை மறுத்தனர். இதன் மூலம் அரசும் - புலியும் செய்தவற்றுக்கு மறைமுகமாக உதவினர்.
மக்கள் தம் விடுதலையை தாம் பெற வேண்டும் என்றால், அவர்கள் அரசியல் ரீதியாக தம்மை அணிதிரட்டவேண்டும். இதற்கு வெளியில் மக்கள் விடுதலை பெற முடியாது. இதை மறுப்பதுதான், இந்த உதிரி லும்பன் கும்பலின் எதிர்ப்புரட்சி அரசியலாகும். இது தன்னை மூடிமறைக்க, அரசு மற்றும் புலியின் செயல்களைக் கண்டித்தல் மூலம், தாம் மக்கள் பக்கத்தில் நிற்பதாக காட்டிக்கொண்டனர். மக்கள் அமைப்பாவதையும் அமைப்பாக்குவதையும் மறுத்தனர். அதற்கு எதிராக கோட்பாடுகள் மூலம் மக்களுக்கு குழிபறித்தனர்.
இன்றும் இது புத்திஜீவித்தனத்தை தன் அடிப்படையாகக் கொண்டு, அரசு மற்றும் புலிக்கு எதிராக நிற்பதாக தன்னை மிதப்பாக காட்டிக் கொண்டு, எதிர்ப்புரட்சி தளத்தில் இயங்குகின்றது. இந்த எதிர்ப்புரட்சி அரசியல் மையமானது, மக்கள் அரசியல் ரீதியாக அமைப்பாகுவதை மறுத்தல். இது எதிர்ப்புரட்சி அரசியல் கூறாகும். கோட்பாட்டிலும், நடைமுறையிலும் இது இயங்குகின்றது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முரண்பாடுகளை, முரணற்ற வகையில் தீர்க்கும் வண்ணம் மக்களை ஒருங்கிணைக்கும் அரசியலையும், அதன் நடைமுறையையும் இந்த எதிர்ப்புரட்சி அரசியல் மறுக்கின்றது. அதற்கு மாறாக ஏகாதிபத்திய கோட்பாடுகளையும், தீர்வுகளையுமே இவர்கள் முன்தள்னுகின்றனர். அரசு-புலி இரண்டுக்கும் மறைமுகமாக இதனால் உதவுகின்றனர்.
மே 16 புலிப் பாசிசத்தை அரச பாசிசம் வெற்றிகொண்ட போதும், மக்கள் அரச பாசிசத்தை எதிர்த்து தம்மை அணிதிரட்ட முடியாத வண்ணம் உள்ளனர். அதற்கு புலிப்பாசிசத்தின் எச்சங்கள் மட்டும் தடையாக இருக்கவில்லை, மக்கள் அணிதிரள்வதையும், திரட்டுவதையும் மறுக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுகளும் கூடக் காரணமாக உள்ளது.
பி.இரயாகரன்
14.05.2010