Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தாமல்லாத அனைத்தையும், இல்லாதொழிப்பதே மகிந்த சிந்தனை. இது இன்று இலங்கை பௌத்த பேரினவாத பாசிசக் கட்டமைப்பின் அரசியல் அடித்தளமாகும். அது தன்னைத்தான் மூடிமறைத்துக் கொள்ள, குறுகிய சமூகப் பிளவுகளை முன்தள்ளுகின்றது. பௌத்தம் முதல் சிறுபான்மை இனங்களை முன்னிலைப்படுத்துகின்றது. இதைப் பிரதான பொருளாக்கி, இதற்குள்  கைதுகள் முதல் தடை செய்தல் வரையான ஒரு சட்டவரம்பைக் காட்டுகின்றது. மறுதளத்தில் சட்டத்துக்கு புறம்பாக கடத்தல், காணாமல் போகப்பண்ணுதல், இனம்தெரியாத படுகொலை, மிரட்டல், விலைக்கு வாங்குதல், அதிகாரத்தை பயன்படுத்தல் மூலம், நாட்டில் பொதுவான அச்சத்தையும் பீதியையும் விதைத்து எதிர்ப்பை அடிபணிய வைக்கின்றது. இதுதான் மகிந்த சிந்தனை. இந்த வகையில் தான் புலிகள், தங்கள் பாசிச அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இலங்கை மகிந்த அரசு, அதையே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

எதையெல்லாம் இலங்கையில் ஜனநாயக நடைமுறை என்று காட்டிப் பீற்றினரோ, அதை இன்று தன் எதிராளிக்கு மறுத்து வருகின்றது. இப்படி மறுப்பதை சமூகத்தின் பொது இயல்போட்டத்தில் ஒன்றாக்கி, அதை சமூகத்துக்கு இல்லாததாக்குவதுதான் இன்றைய மகிந்த அரசின் நடைமுறையாகும்;. உதாரணமாக தேர்தல் என்றால் மோசடியுடன் வன்முறையுடன் வெல்வது தான் தேர்தல், என்று பொது நடைமுறை உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கமுனைகின்றனர். இப்படித்தான் அனைத்தும்.

 

இந்த வகையில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பை தடைசெய்வது பற்றிய அரசின் நிலையுமாகும். இது சிறுபான்மை மக்களின் (தமிழ் மக்களின்) பிரச்சனையைத் தீர்க்க மறுக்கின்ற பௌத்த பேரினவாதத்தின், தொடர்ச்சியான ஒரு இனவொடுக்கல் கொள்கையாகும். 60 வருடத்துக்கும் மேலாக இதுதான் பௌத்த பேரினவாதத்தின் நடைமுறை அரசியலாகும்.  இலங்கை சிறுபான்மை இனங்கள் மேல் காலத்துக்கு காலம், பௌத்த பேரினவாதிகளால் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதாகட்டும், சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்பதாகட்டும், தமிழ் மாணவர்களை மட்டும் குறிவைத்து நடைமுறைப்படுத்திய தரப்படுத்தலாகட்டும், திட்டமிட்ட குடியேற்றங்களாகட்டும், இப்படி பல. இவை அனைத்தும் தமிழ் மக்களை ஒடுக்கிய, பௌத்த பேரினவாத அரசின் இனவொடுக்குமுறையாக இருந்துள்ளது. இதில் சில மீள அரைகுறையாக சரிசெய்யப்பட்டபோது, புதிதாக புதிய வடிவத்தில் ஒடுக்குமுறைகள் தொடர்ந்தன தொடர்கின்றது. இதிலிருந்துதான் சிறுபான்மையின (தமிழினவாத) அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. அவர்கள் சிறுபான்மை இனங்களின்  பிரதிநிதிகளானார்கள். இப்படித்தான் சிறுபான்மை இனவாதம் தோன்றியது.  தமிழ், முஸ்லீம், மலையகம் என்று எங்கும் சிறுபான்மை இனங்களை, இனம் சார்ந்த பிரதிநிதிகள் பிரநிதித்துவப்படுத்தினர். இப்படி தோன்றக் காரணம் வெளிப்படையானது. பௌத்த பேரினவாதம் சிறுபான்மை இனங்களை ஒடுக்கியதன் பொது வினைவாகும். இது வெறும் தமிழ் பேசும் மக்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் நிலையும் இதுதான். இப்படி பேரினவாதத்தால் உருவான மிதவாதத் தலைமையினால், இந்தப் பேரினவாதத்தை தொடர்ந்து இதன் இனவொடுக்குமுறைக்கு எதிராக அதை எதிர்கொண்டு போராட முடியாமல் போனது. இந்த ஒரு நிலையில்தான் அது வன்முறை சார்ந்த ஒரு போராட்டமாக மாறியது. இப்படி பேரினவாதமே ஆயுமேந்திய போராட்டம் முதல் புலிப் பாசிசம் வரை தோற்றம் பெறக் காரணமாகியது.

 

இறுதியாக எஞ்சியது புலி. அது தன் சொந்த பாசிசத்தின் விளைவால், இலகுவாக பௌத்த பேரினவாத அரசால் அதனை அழிக்க முடிந்தது. இது எந்தவிதத்திலும் சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக இல்லாததாக்கியதால் அழிந்ததல்ல. மாறாக புலிகளின் மக்கள் விரோத பாசிசம் தான், அதை அழிக்க உதவியது.

 

பௌத்த பேரினவாதிகள் புலிகள் அழிந்தவுடன், சிறுபான்மைப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று காட்ட முனைந்தனர். மக்களின் துன்ப துயரங்கள் முதல் வாழவியல் சீர்கேடுகள் மூலம், சிறுபான்மை இனங்கள தங்கள் உரிமையைக் கோருவதை நிறுத்திவிடும் என்றே பேரினவாதம்  கருதியது. யாழ் மக்களுக்கு எல்லையில்லாத ஆடம்பர வாழ்க்கையையும்;, கிழக்கில் பிச்சைக்கார வாழ்க்;கையையும் வழங்கிய அரசு, வன்னி மக்களை இனப் படுகொலையூடாக மிரட்டியும் பேரினவாதத்துக்கு அடிபணியக்கோரியது. மறுதளத்தில் சிறுபான்மை இனத்தில் பல பிளவுகளை விதைத்தும், விலை பேசியும் அவர்களை மோதவிடுகின்றது. இப்படி பேரினவாதம், சிறுபான்மைகளின் (தமிழ்மக்களின்) உரிமையை மறுத்து கொக்கரிக்கின்றது.

 

இதை மீறித்தான், சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமையின் அடிப்படையில், அரசுடன் முரண்பாட்டு பிளவுபட்டு நிற்கின்றனர். தேர்தலில் அவை தெளிவாக பிரதிபலிக்கின்றது.

 

பேரினவாதத்தின் சூழ்ச்சிகளை மீறி, இது பிரதிபலிக்கின்றது. இலங்கை தளுவிய ஒரு அரசியல் மூலம், மக்களை வெல்ல முடியவில்லை. சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படாமல், பௌத்த பேரினவாதத்தின் மூலம் ஒரு நாளும் மக்கள் வெல்லப்பட முடியாது. இதுதான் இன்றைய எதார்த்தம்.

 

இப்படிப்பட்ட உண்மையின் பின்னணியில்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இருப்பே நீடிக்கின்றது. அரசியல் ரீதியாக இனப்பிரச்சனை தீர்க்கப்படாத வரை, சிறுபான்மை இனங்களின் கட்சிகள் தோன்றும். இதைத் தடைசெய்வதன் மூலம், ஆயுதமேந்திய வடிவத்தையே சிறுபான்மை இனங்கள் தேர்ந்தெடுக்க வைக்கும்;. இங்கு இதை பௌத்த பேரினவாத அரசுதான் தீர்மானிக்கின்றது. 1980 களில் கூட்டணியின் மிதவாத அரசியலை இல்லாதாக்கி, எப்படி ஆயுதப் போராட்டத்தை அரசு திணித்ததோ அதே நிலைதான் இன்று. சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்கி, சிறுபான்மை கட்சிகளை மக்களே இல்லாதாக்க வேண்டும். இதற்கு மாறான நடைமுறை, அதைப் பாதுகாக்கும், உருவாக்கும்.

  

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் வலதுசாரிய அன்னிய எடுபிடி துரோக அரசியலே, அதன் அரசியலாக நடைமுறையாக இருந்தபோதும், தொடர்ந்து சிறுபான்மை இனத்தின் குரலாக தன்னை அது தக்கவைக்க முடிகின்றது. அரசின் இனவிரோதக் கொள்கையும், புரட்சிகரமான ஒரு கம்யூனிஸ்ட்கட்சி இந்த பிரச்சனையை தன் கையில் எடுக்காத வரையும், வலதுசாரிய சிறுபான்மை பிரதிநிதிகள் இதில் நீடிக்கவே செய்வர். இதை இந்தத் தேர்தல் முடிவுகள் மீளவும் காட்டும். தடை செய்வதாலும், மக்களை அடிபணிய வைப்பதாலும் உரிமைகளை கோருவதை கைவிட்டுவிடுவார்கள் என்பது பகற்கனவாகும். பலஸ்தீன மக்களின் இன்றைய நிலையில் இலங்கை சிறுபான்மை இன மக்கள் வாழ்கின்றனர் என்பதும், போராடுகின்றனர் என்பதுமே உண்மை.

 

பி.இரயாகரன்
01.04.2010