Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளப்படுத்திய போது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்ராலின் அவதூற்றிலும், ஸ்ராலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

இதைப் பற்றி டிராட்ஸ்கிகள் எப்படி அன்று பகுத்தாய்கின்றனர் எனப் பார்ப்போம். "இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் சோவியத் யூனியன் யூகோஸ்லாவியாவையும் தன் மேற்பார்வையுள் கொண்டுவர முயன்றது. ஆனால், டிட்டோ ஸ்டாலினிசத்தை தொடர்ந்து கண்டித்து வந்தார். ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடி சூடிவிட விரும்பவில்லை. சோவியத் யூனியனின் சோசலிச நாடுகள் மற்றும் கம்யூனிசக் கட்சிகளுடனான உறவு சோசலிசப் பண்புகள் அற்றது என்று கருதியதோடு "தென் ஸ்லாவிய மக்களின் குடியரசு"  என்ற இலட்சியத்தையும் டிட்டோ கொண்டு இருந்தார்" இப்படித் தான் டிராட்ஸ்கியம் யூகோஸ்லாவிய முதலாளித்துவ பாதையை ஆதரித்தது. அத்துடன் யூகோஸ்லாவியாவை கம்யூனிச நாடு என்று வரையறுத்துக் காட்டினர். குருச்சேவ் சொந்த நாட்டிலும் சர்வதேச கம்யூனிய இயக்கத்திலும் முதலாளித்துவத்தை மீட்ட நிலையில், மீண்டும் இரு முதலாளித்துவ மீட்சியாளர்களும் ஒன்று இணைந்து கைகளை உயர்த்திய போது, அதை டிராட்ஸ்கியம் வானளவு தலையில் தூக்கிப் பாதுகாத்தபடி தங்கள் கைகளை அவர்களுடன் இறுகப் பற்றிக் கொண்டனர்.

இதை அவர்கள் தமது சொந்த வர்க்கக் கோட்பாட்டால் விளக்கும் போது "குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் ஏற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்ராலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்று ஏற்கப்பட்டது. "பிராவ்தா" பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு "யூகோஸ்லாவிய சோவியத் மக்கள் இருவரும் ஸ்லாவிய இனத்தைச் சேர்ந்த இரத்த உறவு கொண்ட மக்கள்" என்று "ஸ்லாவியப் பெருமை" பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்து பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கே உரியது" இப்படி டிராட்ஸ்க்கிய அரசியலோ ஸ்ராலின் அவதூறுகளில் பூத்துக் குலுங்கிய போது, யூகோஸ்லாவியா மார்க்சியத்தை பாதுகாத்ததா? அல்லது முதலாளித்துவத்தை மீட்டதா? என்பதை துல்லியமாக ஆராயும் போது, டிராட்ஸ்கியின் அரசியல் நிர்வாணமாவது தவிர்க்க முடியாது அல்லவா!?

டிராட்ஸ்கியம் பேசுவது மார்க்சியமா!? என்பதையும், ஸ்ராலின் மார்க்சியத்தை பின்பற்றினாரா என்பதையும் யூகோஸ்லாவியா பற்றிய அடிப்படையான நிலைப்பாட்டில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும்;. யூகோஸ்லாவியா முதலாளித்துவ மீட்பை அடிப்படையாக கொண்டே, சோவியத் யூனியனுடனும் சர்வதேச கம்யூனிச இயக்கத்துடனும் முரண்பட்டது. டிராட்ஸ்கியம் இதை மறுத்த போதும், அன்றைய எதார்த்தம் எதைக் காட்டுகின்றது?.

கிரேக்க நாட்டில் நடந்த கம்யூனிச புரட்சியின் போது 10.07.1949 டிட்டோ யூகோஸ்லாவிய - கிரேக்க எல்லையை மூடினார். அத்துடன் கிரேக்க கொரில்லாக்கள் யூகோஸ்லாவியாவில் நுழைவதைத் தடுத்தான்;. கொரிலாக்களை பின்னால் இருந்து தாக்கி அழிக்க, கிரேக்க பாசிட்டுகள் உள்ளடங்கிய அமெரிக்க பிரிட்டிஸ் ஏகாதிபத்திய படைகள் யூகோஸ்லாவியாவின் ஊடாக அனுப்பியதுடன், பின் பக்கமாக தாக்கி அழிக்க உதவினான். சர்வதேசியத்தை கைவிட்டு, ஏகாதிபத்தியத்துடன் கூடிக் கூலாவி மார்க்சியத்தை துறந்து அப்பட்டமாக இதை நிலைநாட்டினான்.  இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் அந்த நாட்டை சோசலிச நாடு என்று எப்படிக் கூறமுடியும்? யூகோஸ்லாவிய ஸ்ராலின் அதிகாரத்தை ஏற்க மறுத்து, சோவியத்தை எதிர்த்ததாக டிராட்ஸ்கியம் ஏன் பசப்புகின்றது. ஏகாதிபத்தியங்களுடன் கைகோர்த்தபடி யூகோஸ்லாவியா சர்வதேச பாட்டாளி வர்க்கத்தையே விலை கூவி விற்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் பினாற்றும் போது "1944 இல் போர்த்துக்கல், கீறிஸ் (கிரேக்கம்), ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுக்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் செய்த தியாகங்களும் நடத்திய போராட்டத்தின் பெறுபேறுகளும் ஏகாதிபத்தியத்திற்கு இலகுவாக விட்டுக் கொடுக்கப்பட்டன." என்கின்றனர். என்ன அப்பட்டமான ஒரு சேறடிப்பை, ஸ்ராலின் மீதும் சர்வதேச கம்யூனிச இயக்கம் மீதும் செய்கின்றனர். டிராட்ஸ்கிகள் உண்மைக்கு மாறாக பினாற்றி தூற்றும் போது "1947 இல் அமெரிக்கா, கீறீஸ் துருக்கி போன்ற நாடுகட்கு ஆயுதங்களை வழங்கியது. இந்த நாடுகளில் ஸ்டாலினால் கைவிடப்பட்ட முதலாளித்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் ஒழித்துக் கட்டப்பட்டனர்" என்கின்றனர். பிரான்ஸ், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சி எப்படி விட்டுக் கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்ல வக்கற்றவர்கள், இப்படி அவதூறுகளை கட்டமைக்கின்றனர். பிரான்ஸ், கிரெக்கம் போன்ற நாட்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவ சோவியத்யூனியன் படை அனுப்பியிருக்க வேண்டுமா! அப்பட்டமான ஆக்கிரமிப்புக்களை செய்யக் கோருபவர்கள் மார்க்சிஸ்ட்டுகளா? ஒவ்வொரு புரட்சியும் ஒரு எல்லைக்குள் நடக்கின்ற போது, அவை சொந்த பலம் சார்ந்து நடத்தப்படாத வரை அவை ஆக்கிரமிப்பாகவே இருக்கும். இக்காலத்தில் டிராட்ஸ்கிகள் யாரைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறி காட்டிக் கொடுத்ததாக ஸ்டாலின் மீது அவதூறைப் பொழிகின்றனரோ, அவர்களை எதிர்த்தே டிராட்ஸ்கிகள் அன்று அணிவகுத்து நின்றனர். அன்று யாரைத் தூற்றி அரசியல் செய்தார்களோ, அவர்களை இன்று கம்யூனிஸ்ட்டுகள் என்று பச்சையாக கூறி அவர்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இது போன்றே யூகோஸ்லாவியா முதலாளித்துவ மீட்பை முடிமறைத்து, ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவியதை பூசிமெழுகுகின்றனர்.

சோசலிச நாடான அல்பேனியாவுக்கு எதிராக யூகோஸ்லாவிய, 1948 முதல் 1958 வரை அதன் எல்லையில் 470 முறை ஆயுதம் ஏந்திய தாக்குதல் மூலம் ஆத்திர மூட்டியது. 1944, 1948, 1956, 1960 என நான்கு முறை பெரிய அளவிலான தேசதுரோக முயற்சியில் ஈடுபட்டது. 1960 இல் கிரேக்க பாசிட்டுகளுடனும், அமெரிக்காவின் 7 வது கப்பற் படையும் சேர்ந்து அல்பேனியாவை தாக்கி அழிக்க யூகோஸ்லாவியா முனைந்தது. இதற்கு முன்னமே அமெரிக்காவுடன் பல தொடர்ச்சியான ஒப்பந்தங்களை, யூகோஸ்லாவியா கம்யூனிச உலகுக்கு எதிராக செய்தது. 1951 இல் அமெரிக்காவுடன் யூக்கோலாவியா கையெழுத்தான இராணுவ உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் "சுதந்திர உலகின் பாதுகாப்பு வலிமையை வளர்க்கவும் நிலைநிறுத்தவும் முழு அளவில் பங்கு செலுத்த வேண்டும்" என்று அறிவித்ததுடன், ஜக்கிய நாட்டுப் படைக்கு துருப்புகளை வழங்கவும் இது வழி செய்தது. அமெரிக்க துருப்புகள் யூகோஸ்லாவிய இராணுவ பயிற்சியை மேற்பார்வையிடவும், ஒப்பந்தம் கோரியது. 1951 இல் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் யூகோஸ்லாவியா செய்தது. இதில் அமெரிக்க இராணுவப் பொருட்கள் யூக்கோஸ்லாவியாவுக்கு வந்து சேர்வதையும், அங்கே விநியோகமாவதையும் கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் ~தங்கு தடையற்ற சுதந்திரம்" வழங்கப்பட்டது. அத்துடன் "போக்குவரத்து மற்றும் தகவல் அமைப்புகளைப் பார்வையிட முழு சுதந்திரம்" அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. 1952 இல் யூகோஸ்லாவியாவும் அமெரிக்காவும் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைச் செய்தனர். அதில் அமெரிக்க உதவியை பயன்படுத்தி "அடிப்படையான தனிமனித உரிமைகளையும், சுதந்திரங்களையும், ஜனநாயக நிறுவனங்களையும் வளர்க்க வேண்டும்" என்று நிபந்தனை விதித்தது. இது போன்று 1954க்கு பின் பல உடன்படிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுடன் செய்தது. 1957 - 1958 க்கும் இடையில் அமெரிகாவுடன் 50 மேற்பட்ட ஒப்பந்தங்களைச் யூகோஸ்லாவியா செய்தது. விரிந்த அளவில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் கம்யூனிச சர்வதேசியத்துக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துடன் சதி திட்டங்கள் பலவற்றில் கையெழுத்திட்டன. இதில் அமெரிக்கா அல்லாத மற்றைய மேற்கு ஏகாதிபத்தியதுடன், கம்யூனிஸ்சத்துக்கு எதிராக ஒரு வலைப் பின்னலை அமைத்து, கம்யூனிசத்தை வேரறுக்க சபதம் ஏற்றது.

சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியையும், சர்வதேச அளவில் கம்யூனிசத்தையும் எதிர்த்து யூகோஸ்லாவியா நடத்திய முதலாளித்துவ தாக்குதலுக்கு கையூட்டை ஏகாதிபத்தியம் தாராளமாக வழங்கியது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் 1963 வரையிலான காலத்தில் ஏகாதிபத்தியங்கள் யூகோஸ்லாவியாவுக்கு கொடுத்த மொத்த "உதவி" 546 கோடி டொலராகும். இதில் அமெரிக்கா கொடுத்தது மட்டும் 360 கோடி டொலராகும்;. இதில் பெரும் பகுதி 1950 பின் கொடுக்கப்பட்டது. உத்தியோக பூர்வமான புள்ளிவிபரப்படி 1961 இல் யூகோஸ்லாவியா பன்னாட்டு நிதி அமைப்புகளில் இருந்து பெற்ற தொகை 34.6 கோடி டொலராகும். இது யூகோஸ்லாவியாவின் மொத்த வரவு செலவில் 47.4 சதவீதமாகும். மற்றயை ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி பெற்றது உட்பட மொத்த 49.3 கோடி டொலராகும். இது மொத்த வரவு செலவில் 67.6 சதவீதமாகும்.

ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி அரசாக, தேசத்தையும் மக்களையும் ஏகாதிபத்தியத்திடம் விற்ற யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் எதிர்க்கவில்லை. மாறாக அதை ஆதரித்ததுடன், அதையே கம்யூனிஸ்சம் என்று விளக்கம் கொடுத்தனர். டிராட்ஸ்கிகள் அதை பெருமையாக அறிவித்தனர். ஆனால் ஸ்ராலின் இதை எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்சத்தின் சர்வதேசியத்தின் உன்னதமான வர்க்கப் போராட்டத்தை நடத்தினார். யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை அம்பலப்படுத்தி உறுதியான ஒரு கம்யூனிஸ்டாக போராடினர். முதலாளித்துவ மீட்சியை யூகோஸ்லாவியாவின் தலைவர் டிட்டோ ஒரே நாளில் அறிவிக்கவில்லை. மாறாக இதற்காக கம்யூனிஸ்ட்டுகளை தொடாச்சியாக சொந்த நாட்டில் வேட்டையாடினர்.

யூகோஸ்லாவியாவில் டிட்டோ தலைமையிலான கட்சி மார்க்சியத்தை கைவிட்டு செல்லும் போக்குக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கட்சிக்குள் எழுந்தது. கம்யூனிசத்தை கைவிடவும் முதலாளித்துவத்தை மீட்டு எடுக்கவும் 1948-1952 வரையிலான காலத்தில் பாரிய களையெடுப்பை கட்சியில் நடத்தினர். மார்க்சிய லெனினிசத்தை அடிப்படையான கோட்பாடாக கொண்ட வர்க்க சக்திகளை ஒடுக்கியதுடன், இரண்டு லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை கட்சியில் இருந்து அகற்றினர். இது மொத்த கட்சி உறுப்பினர்களில் அரைவாசியாகும்;. மிகத் தீவிரமாக முதலாளித்துவ மீட்சியை எதிர்த்த 30000 கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் அடைத்ததுடன், பலத்த சித்திரவதையும் செய்ததுடன், அதில் பலரை கொன்றனர். இந்த கம்யூனிச அழித்தொழிப்பை நடத்தி முடிந்த கையுடன், 1952 இல் "கட்சி என்ற பெயர் இப்போது பொருத்தமில்லை" என்று பிரகடனம் செய்தனர். யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கழகம் என பெயர் மாற்றியதுடன், தன்னை ஒரு முதலாளித்துவ சர்வாதிகார பாசிச அரசாக மாற்றியது. கம்யூனிஸ்சத்தை எதிர்த்து போராடிய எதிர்ப்புரட்சி முதலாளித்துவ கும்பலுக்கு மன்னிப்பு வழங்கியது. சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் அடைக்கப்பட, முதலாளித்துவவாதிகள்; சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் ஆட்சிகளில் பதவி வழங்கினர். 1951 இல் டிட்டோ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் 11000 அரசியல் கைதிக்கு மன்னிப்பு வழங்கியதை உறுதி செய்தார். கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் தள்ளியபடி எதிர்புரட்சி கும்பல்களுக்கும், பாசிட்டுகளுக்கும் மன்னிப்பு வழங்கினர். 1962 இல் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்து நாட்டை விட்டே ஒடிய பாசிட்டுகள் உள்ளடங்கிய 1.50 லட்சம் பேருக்கு மன்னிப்பு அளித்து, முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்தினர். ஆனால் டிராட்ஸ்கிகள் இதை கம்யூனிஸ்சத்தின் உன்னதமான பண்பாகவும், ஸ்ராலினை எதிர்த்த போராட்டத்தில் ஒரு தீரமிக்க பாத்திரமாகவும் காட்டத் தயங்கவில்லை.

ஆனால் யூகோஸ்லாவியாவும் அதன் தலைவர் டிட்டோவும் சர்வதேசியத்துக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து, அன்றைய முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் கை கோர்த்து நின்றதே எதார்த்தமாகும். 1950 இல் கொரியா போரின் போது கம்யூனிஸ்சத்தை எதிர்த்த டிட்டோ கும்பல் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதாரவாக செயல்பட்டது. கொரிய மக்களின் வீரம் மிக்க போராட்டத்தை கூட்டாக ஒருமித்த குரலில் தூற்றினர். டிசம்பா 1ம் திகதி ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசிய யூகோஸ்லாவியப் பிரதிநிதி அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு எதிராக "கொரியப் போரில் முனைப்புடன் குறுக்கிட்டமைக்காக" சீனாவுக்கு எதிராக பேசியதுடன், சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைக்கு ஆதாரவாக வாக்களித்தனர். இதை சர்வதேச கம்யூனிஸ சமூகமும், ஸ்டாலினும் எப்படி மௌனமாக அங்கீகரிக்க முடியும். அமெரிக்காவுடன் அப்பட்டமாகவே சோரம் போய், கம்யூனிஸ்ச உலகுக்கு எதிராக செயல்பட்ட யூகோஸ்லாவியாவை டிராட்ஸ்கியம் ஆதாரிக்கலாமே ஒழிய, கம்யூனிஸ்ட்டுகளால் ஒருக்காலும் முடியாது.

1954 இல் வியட்னாம் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஜெனிவாவில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாக இணைந்து தூற்ற டிட்டோ தவறவில்லை. அவன் இதை சோவியத் சீனாவின் "கெடுபிடி போர்க் கொள்கையின் ஒரு பகடையாக" வியட்னாமிய மக்களை பயன்படுத்துகின்றனர் என்று அவதூறு புரிந்தான். டிராட்ஸ்கிகள் கூறும் சோசலிச யூகோஸ்லாவியா இப்படித் தான் தூற்றியது. வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை "நல்லெண்ண சமிக்ஞை அல்ல" என்று கூறி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இசைவாக மூலதனத்தின் சூறையாடலுக்கு பச்சைக் கொடி காட்டினான்.

இது போன்று 1956 இல் கங்கேரியில் எதிர்ப்புரட்சிக் கலகத்தில் நேரடியாகவே யூகோஸ்லாவியா தலையிட்டது. முதலாளித்தவ மீட்சியை நடத்த முயன்ற துரோகி நேக்கியின் எதிர்ப்புரட்சி கலகத்தை ஆதரித்து, ஒரு கடிதத்தை டிட்டோ வெளியிட்டார். எதிர்ப்புரட்சி தோல்வி பெற்ற போது, துரோகி நேக்கிக்கு கங்கேரிய துரோகத்தில் அடைக்கலம் கொடுத்தான். நவம்பர் 11ம் திகதி டிட்டோ ஆற்றிய உரையில் முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியை டிராட்ஸ்கிகள் போல் "முற்போக்காளர்களின்" போராட்டம் என்றதுடன், வெல்லப் போவது "யூகோஸ்லாவியாவின்" பாதையா அல்லது "ஸ்டாலினியத்தின் பாதையா" என்று பிரகடனம் செய்து எதிர்ப்புரட்சியை ஆதரித்து நின்றான். அமெரிக்காவுடன் கூடிக் குலாவியபடி எதிர்ப்புரட்சிகளுக்கு உற்ற நண்பனாக யூகோஸ்லாவியா செயல்பட்டது.

1958 இல் லெபனானை ஆக்கிரமிக்க அமெரிக்கப் படையும், ஜோர்டானை ஆக்கிரமிக்க பிரிட்டனும் படைகளை அனுப்பியது. இதை அடுத்து இதற்கு எதிராக உலகளாவிய போராட்டங்கள் நடந்தன. படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கோரப்பட்ட உலகளாவிய கிளர்ச்சியை அடுத்து, ஐ.நாவில் அவசரக் கூட்டம் நடந்தது. யூகோஸ்லாவியாவின் ஐ.நா பிரதிநிதி அங்கு பேசிய போது "அமெரிக்காவும் மகா பிரிட்டனும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டிக்கின்றோமா அல்லது அங்கீகரிக்க வற்புறத்துகிறோமா என்பதல்ல பிரச்சனை" என்று பிரகடனம் செய்து ஆக்கிரமிப்புக்கு அப்பட்டமாகவே செங்கம்பளம் விரித்தனர். அத்துடன் இதில் ஐ.நா தலையிடக் கூடாது என்றனர்.

1958 இல் தைவானின் துணையுடன் அமெரிக்க படை சீனாவுக்கு எதிராக செய்த சதிகளை அம்பலப்படுத்தி சீனா போராடிய போது, யூகோஸ்லாவியா "உலகத்துக்கே ஆபத்து" என்றும் "சமாதானத்துக்குக்கு கேடு" என்று கூறியபடி அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் வால்களில் கெட்டியாக தொங்கியது. 1959 இல் சீன இந்திய எல்லை மோதலின் போது டிட்டோ கும்பல் அமெரிக்க கைக்கூலியாக செயல்பட்டு எல்லை மோதலை உருவாக்கிய இந்தியாவுக்கு ஆதரவாக நின்று யூகோஸ்லாவியா, சீனாவைத் தூற்றியது. கியூபா பிரச்சனையின் போது கியூபாவுக்கு எதிராக பல அவதூறுகளை தொடர்ச்சியாக செய்தது. "கியூபா புரட்சி அமெரிக்க நியமங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்த போதே தொல்லைகள் ஆரம்பமாயின"  என்று புரட்சியைத் தூற்றினான். கியூபப் புரட்சி "புரட்சிப் பாதைக்கு முன்மாதிரியாய் அமைவதைக் காட்டிலும், விதி விலக்காகவே அமைகின்றது" என்று யூகோஸ்லாவியா அவதூறு பொழிந்தது. "புரட்சியில் மட்டும் நம்பிக்கை வைப்பதாக" கம்யூனிஸ்ட்டுகளை குற்றம்சாட்டி ஆயுதப் புரட்சியைத் தூற்றத் தயங்கவில்லை.

லாவோஸ்சி மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக 1961 இல் அமெரிக்கா நேரடியாக தனது இராணுவத் தாக்குதலைத் தீவிரப் படுத்திய போது, யூகோஸ்லாவியா தனது அறிக்கையில் அமெரிக்கா "உண்மையிலேயே லாவொஸின் அமைதி குறித்தும், அந் நாட்டை நடுநிலையாக்குவது குறித்தும் கவலை கொண்டுள்ளது" என்று ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினர். லாவோஸ்சில் பாரிய படுகொலைகளை அமெரிக்கா நடத்தி அம்பலமான போது "பழி முழுவதையும் அமெரிக்கா மீது சுமத்தியமைக்காக" சர்வதேச சமூகத்தையும், போராடிய மக்களையும் இழிவுபடுத்தியது. அமெரிக்க படுகொலைக்கு லாவோஸ்சிய மக்களின் போராட்டம் தான் காரணம் என்று பாசிச விளக்கமளித்தது.

1961 இல் அமெரிக்கா "முன்னேற்றத்தின் நேசக் கூட்டுத்" திட்டம் என்ற பெயரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளை இராணுவ பாசிச பலத்தின் மூலம் பலாத்காரமாக இணைத்த போது, லத்தீன் அமெரிக்க மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். ஆனால் அமெரிக்க கைக் கூலியாக சீரழிந்து முதலாளித்துவ மீட்சியை சொந்த நாட்டில் நடைமுறைப்படுத்திய டிட்டோ அமெரிக்கா "லத்தின் அமெரிக்கா நாடுகளின் தேவைகளைப் பெரிய அளவில் நிறைவு செய்ததாக" கூறி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினான். அமெரிக்கா பாசிச வழிகளில் உலகத்தைச் சூறையாட பலாத்காரமாக இணைத்த கூட்டை நியாயப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் போராட்டங்களை கொச்சைப்படுத்தினான்.

முதலாளித்துவத்தை மீட்ட பின்பாக ஸ்ராலின் காலத்தில் தொடங்கி குருச்சேவ் காலம் வரையிலான பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில், யூகோஸ்லாவியா தனது நிலைப்பாட்டை மாற்றிவிடவில்லை. ஆனால் ஸ்ராலினை மறுத்த குருச்சேவ் காலத்தில் சோவியத்யூனியன் தனது நிலைப்பாட்டை யூகோஸ்லாவியா நிலைக்கு கீழ் இறக்கியது. குருச்சேவ் யூகோஸ்லாவியா தலைவர் டிட்டோ போல் ஸ்ராலினைத் தூற்றி, முதலாளித்துவத்தை மீட்ட போதே, இருவரிடையே ஒருமித்த கருத்துகள் உள்நாட்டில் இருந்து சர்வதேச நிலைவரை பொருந்திப் போனது. இதையே டிராட்ஸ்கிகள் "குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் ஏற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்ராலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து, யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்ற ஏற்;கப்பட்டது. "பிராவ்தா" பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு ~யூகோஸ்லாவிய சோவியத் மக்கள் இருவரும் ஸ்லாவிய இனத்தைச் சோந்த இரத்த உறவு கொண்ட மக்கள்" என்று ~ஸ்லாவியப் பெருமை" பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்த பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கேயுரியது" என்று கூறி குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை பராட்டினர். கம்யூனிஸ்சத்துக்கு எதிரான டிட்டோ, குருச்சேவ் நிலையுடன் டிராட்ஸ்கிகள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டனர். ஸ்ராலினை தூற்றுவதில் மூவரும் முரண்பாடு இன்றி ஒன்றுபட்டு நின்றனர். ஸ்ராலின் இது வரை கையாண்ட சர்வதேச நிலையை மறுப்பதிலும், அதைக் கொச்சைப்படுத்துவதிலும் முரண்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த போக்கில் ஏகாதிபத்திய நிலையுடன் முரண்பாடற்ற நிலையை இவர்கள் ஐக்கியத்துடன் பின்பற்றினர். இதை குருச்சேவ் மிக அழகாக கூறத் தவறவில்லை. சர்வதேச பிரச்சனையில் யூகோஸ்லாவியாவுக்கும் எமக்கும் இடையில் "முழுக் கருத்தொற்றுமையும்", "இணக்கமும்" நிலவுவதாக அறிவித்தான். ஆனால் 1960 இல் அமெரிக்க விமானம் சோவியத்யூனியனில் ஊடுருவி வேவு பாhத்த விவகாரத்தில் அமெரிக்காவையே யூகோஸ்லாவியா ஆதரித்தது. ஜப்பானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக மக்கள் போராடிய போது, இதை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று, யூகோஸ்லாவியா 1960 இல் பிரகடனம் செய்தது. இந்தோசீனா கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்ட அனைத்து வகையிலும் யூகோஸ்லாவியா உதவியது. 1960 இல் ஐ.நா கொடியுடன் சட்டவிரோதமாக கங்கோ நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, ஐ.நாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், கங்கோ மக்கள் மேல் குண்டு போட தனது விமானப் படையை அனுப்பியது.

இப்படி யூகோஸ்லாவியா உலகளவில் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கு துணையாக நின்று அடிபணிந்து செயல்பட்டது. மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய மூலதனம் உலகை அடக்கியாண்ட போது, டிட்டோவின் ஒத்துழைப்புக்கு குருசேவ்வும் ஆதரவளித்து நின்றான். இருவரும் முதலாளித்துவ மீட்சியை விரைவுபடுத்தவும், பரஸ்பரம் கோட்பாட்டு ஆதரவை பரிமாறிக் கொண்டனர். இதை விரிவாக கட்டுரையின் தொடர்ச்சியில்; பார்ப்போம்;. இருவரும் ஸ்ராலின் கால கம்யூனிஸ்ச இயக்கத்தின் வர்க்க குணாம்சத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் அதன் வெற்றிகளையும் சிதைப்பதில் ஒன்றுபட்டனர். ஸ்ராலினைத் தூற்றிப் பிழைப்பதில் யார் தலை சிறந்தவர்கள் என்பதில் போட்டியிட்டனர். இதனுடன் டிராட்ஸ்கியவாதிகளும் களம் இறங்கினர். இந்த மூன்று கும்பலுடன் ஏகாதிபத்தியம் முரணற்ற நிலையில் களம் இறங்கி, அவதூற்றை சாரமாக கொண்டு வர்க்க அரசியலை கழுவேற்றினர்.

தொடரும்

பி.இரயாகரன்

1.இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1)