Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் துயரம், முதலில் அவர்கள் தங்களை அறியாது இருத்தல் தான். சுய ஆற்றல் அற்றவராக இருத்தல் தான். சுய முனைப்புடன் எதையும், தெரிந்து கொள்ளாது இருத்தல் தான். தம்மை புரிந்து கொள்ள முடியாத இருட்டில் வாழ்தல் தான், அவர்களின் சமூக அறிவு அழிவாகிவிட்டது. அனைத்தையும் மற்றவன் சொல்ல நம்புவதும், கேட்பதும் தான் வாழ்வாகிவிட்டது. தனக்கு நடந்ததையும், தன்னைச் சுற்றி நடந்ததையும் கூட, சுயவிசாரணை செய்வது கிடையாது. இன்று அதை செய்ய எந்த வரலாற்று ஆவணமும் கிடையாது.

புலிகள் மற்றவர்களை அழித்த போது, தாமல்லாத அனைத்து ஆவணங்களையும் அழித்தனர். அவர்கள் சொன்னது தான் வரலாறு என்றாகியது. கிளிப்பிள்ளைகளைக் கொண்டு தாம் சொல்வதை சமூக வரலாறாக்கினர். புலியை அழித்த அரசோ, இன்று தான் சொல்வதுதான் வரலாறு என்கின்றது.

 

இந்த நிலையில் எமக்குப் பின் எதையும் தெரிந்து கொள்ளமுடியாத நிலை. கடந்த காலத்தில் நடந்தவை எல்லாம், இன்று வரலாற்றில் காணாமல் போய்விட்டது. புதிய அரசியல் வியாபாரிகள் தங்களை புனிதர்களாக காட்ட, தங்கள் கடந்தகாலத்தை மிக வேகமாகவே மூடிமறைக்கின்றனர். எங்கும் இருட்டு. சொல்வதை மட்டும் கேள் என்கின்றனர். 

 

தம்மைத் தக்கவைக்க மக்களை இருட்டில் வைத்திருத்தல் தான், அன்றைய இயக்கங்கள் முதல் இன்று திடீர் மார்க்சியம் பேசுவோர் வரை கையாளும் அரசியல் உத்தி. தாமல்லாத மற்றவர்களைத் தெரிந்து கொள்ளாதே, படிக்காதே, கேட்காதே, அவர்களுடன் கதையாதே என்பது, இவர்கள் சொல்லும் அரசியல் உபதேசம். சுய அறிவுடன் அணுகுவது, தேடுவது எங்கும் தடுக்கப்படுகின்றது, தடைசெய்யப்படுகின்றது. அரசும் இதையே செய்கின்றது.

 

இதை தகர்க்க, எல்லோரும் சுயமாக கற்றுக்கொள்வதும், விவாதிப்பதும், வரலாற்றை தெரிந்து கொள்வதும் அவசியம். இதற்கான எமது போராட்டமும், நீண்ட திட்டமிடல் ஊடாக, பல ஆவணங்களை திரட்டி வந்தோம். சிலர் தம்மிடமிருந்த ஆவணங்களைத் தந்தனர், பலர் தர உறுதியளித்துள்ளனர். மேலதிகமாக

 

நூலகம்  எமக்கு தங்கள் ஆவணங்கள் மூலம் உதவினர்.
 

இந்த வகையில் எமது தோழர்களின் கூட்டு முயற்சி ஊடாகவும், கடுமையான உழைப்பின் ஊடாகவும் தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் (www.tamilarangam.net) என்ற இணையத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். இது பல பத்தாயிரம் பக்கங்களைக் கொண்டது. இதற்குள் அன்றாடம் புதிய பக்கங்கள் பல இணைக்கப்பட்டு வருகின்றது. பல பகுதிகள் ஆவணங்களைக் கொண்டிருந்த போதும், அவை இன்னமும் முற்றுப்பெறவில்லை. விரைவில் அவை பூர்த்தியாகும். 

 

இந்த தளத்தின் ஆவணங்களை நாங்கள் மட்டும் திரட்டி வந்தோம், இன்றிலிருந்து இருந்து  உங்களிடமும் அதைக் கோருகின்றோம். உங்களிடம் இருக்கும் ஆவணங்களையும் கோருகின்றோம். எம்மிடமில்லாததும், உங்களிடம் இருக்கின்றதா, அதை இந்த ஆவணப்பகுதியில் இணையுங்கள். அதைப்பற்றிய விபரங்களை எம்முடன் பகிருங்கள். எப்படி கூட்டாக இணைந்து நீங்களும் செய்ய முடியும் என்பதை அறியத்தாருங்கள்.  

 

இந்த ஆவணச் சுவடி காட்சிப் படங்கள் முதல் கட்டுரைகள் வரை உள்ளடங்கும். புலிகள் முதல் அரசு வரை உள்ளடங்கும். ஒரு விடையத்தில் முரண்பட்டவைகள் கூட, இது கொண்டு இயங்கும். உங்கள் அபிப்பிராயங்கள், கருத்துகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றது. ஏன், உங்கள் பங்களிப்புகளும்; கூட. 

 

நோக்கம் மிகத்தெளிவானது

 

1.அனைத்தையும் சுயமாக கற்றுக்கொள்ள உதவுவது.
 
2.ஆவணங்களை அழிவில் இருந்து பாதுகாத்தல்

 

3.மூடிமறைக்கப்பட்ட அனைத்து வரலாற்றையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருதல்

 

4.எந்த ஒளிவு மறைவுமற்ற ஒன்றை அப்படியே தருவது.

 

இந்த வகையில் சமூகத்தை அதன் மந்தைத் தனத்தில் இருந்து, மனிதத்தன்மை கொண்ட பகுத்தறிவை ஏற்படுத்த இந்த ஆவணங்கள் உதவும். எம் மக்களுக்கு நடந்ததை எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்க உதவும். போர்க் குற்றத்தையும், மனித விரோத போக்குகளையும், இந்த ஆவணச்சுவடிகள் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதன் நோக்கம் தெளிவானது. மனித நலனே முதன்மையானது.

 

எம்முன் குவிந்து கிடக்கும் ஆவணங்கள். நம்ப முடியாத அளவுக்கு பல விபரங்களையும்,  தரவுகளையும் கொண்டது. இதை உங்கள் முன் மிக விரையில் முழுமையாக கொண்டு வரமுனைகின்றோம். உங்களிடம் இருப்பதை இந்த ஆவணப்பகுதிக்கு இணையுங்கள். இந்த வகையில் எதிர்காலச் சமூகத்தின் வளர்ச்சிக்கும், அதன் வாழ்வுக்கும் அடிப்படையாக இது அமையும் என்று நம்புகின்றோம். சிலர் அரும்பாடுபட்டு சேர்த்த ஆவணங்கள், அவர்கள் இல்லாத ஒரு நிலையில் அழிந்து போகின்றது. இதை தடுக்க, இந்த ஆவணப்பகுதி உதவும்.

 

 

ஆவணத்தைப் பாதுகாத்தல்

 

இந்த ஆவணப்பகுதி சமூக உணர்வு சார்ந்த தோழர்களின் சுய உழைப்பால் உருவாக்கப்பட்டது. இதை வர்த்தக ரீதியாக சந்தைப்படுத்தல், இதை கொண்டு அன்னிய நாடுகளில் பணம் பெறுதல் என்பது அருவருக்கத்தக்க இழி செயல். இப்படி செய்கின்ற பேர்வழிகளைக் கொண்டது, எமது சமூகம். இதை தாம் ஆவணப்படுத்தியதாக காட்டி, அன்னிய நாடுகளில் பணம் பெறுகின்ற பிழைப்புவாத கூட்டத்தைக் கொண்டது எமது சமூகம். அதையும் சமூகம் சார்ந்து நின்று, செய்யக் கூடியவர்கள் தான் எம்மவர்கள். தேசியம் அப்படித்தான் விற்கப்பட்டது.

 

குறிப்பாக இலங்கை நூல்களை ஆவணமாக கொண்ட (அண்ணவாக 6000 நூல்கள்) நூலகம்  இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் ஒரு கூட்டு முயற்சியிலானது. இது இலங்கையில் இருந்து இயங்குகின்றது. இதை தாம் செய்ததாக காட்டி, லண்டனில்  பணம் பெற்றதாக ஒரு செய்தி மெதுவாக கசிந்து வெளிவருகின்றது.

 

இதை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இது போன்றவை நடக்கும் என்பது மட்டும் உண்மை. எம் தேசியத்தை சுற்றியும், அதற்கு வெளியிலும் அதுவே நடந்தது. பணம் சம்பாதிக்க, எதையும் பயன்படுத்தக் கூடிய கூட்டம் தான் இன்று சமூக மேலாண்மையில் இன்று இருப்பது வெளிப்படையான உண்மை. இதனால் எம் சமூகம் தோற்கடிக்கப்பட்டு, இழிநிலைக்கு தள்ளப்பட்டது.

 

நூலகம் பற்றிய தகவலை அடுத்து, இந்த ஆவணப் பகுதி தன் சொந்த அடையாளத்தை ஆவணத்தில் இட்டுள்ளது. இதனால் இதை அறிமுகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. மற்றும்படி இதை நீங்கள், இலகுவாக தரவிறக்கம் செய்து பாதுகாக்கும் வண்ணம், இலகுபடுத்தப்பட்டுள்ளது. எம்மிடம் தொடர்பு கொண்டு, அதைப் பெறவும் முடியும்.

 

தரவிறக்கம் தொடர்பாக எம் தோழர்கள் மத்தியில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தது. போலிகளும், பொறுக்கிகளும், இதையும் விற்றுத்; தின்பார்கள் என்ற நியாயமான கருத்தை அவர்கள் முன்வைத்து, தரவிறக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவை முன்வைத்தனர். ஆனால் இது ஆவணத்தை பாதுகாக்க உதவாது என்ற அடிப்படையிலும், எமக்குப் பின் இதன் எதிர்காலத்தையும் கவனத்தில் எடுத்து இந்த தரவிறக்கத்தையும், எம்மூடாக பெறும் ஏற்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

 

இதை சமூக நோக்கத்துடன் பயன்படுத்துவதை நாம் வரவேற்கின்றோம்;. வர்த்தக நோக்கில் இதை பயன்படுத்துவதை வெறுக்கும் நாம், அதை கண்காணிக்கும் உரிமையை சமூகத்திடமே விட்டு விடுகின்றோம்.

 

இந்த ஆவணப்பகுதியை ஒருங்கிணைத்து இயக்கும் தோழர்களின் ஒருவனாக நான் இருந்தபடி, உங்கள் முன் தமிழ் தேசிய ஆவணச் சுவடிகள் (www.tamilarangam.net) என்ற இணையத்தை அறிமுகம் செய்கின்றேன்.

 

இதன் தொடர்புக்கும், ஆவணங்களை அனுப்புவதற்கும்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

பி.இரயாகரன்