Language Selection

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது!

இலங்கை மக்கள் இன்னொருமுறை வாக்களித்து விட்டால், இன்னொரு ஐந்தாண்டுகள் அரசியல்பற்றி சிந்திக்கத் தேவையில்லை! வாக்கு வாங்கியவர்கள் உங்களின் அரசியல் வாழ்வை கொண்டோடி    விடுவார்கள்!

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அரசியலுக்கு, மக்களும், மக்களுக்கு இவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள்!

 

அரசியல் கட்சிகள் பலவற்றை செய்வதில்லை, நடைமுறைப்படுத்துவதில்லை, என்ற ஏமாற்று நோக்கில் இருந்தே, மக்களை நோக்கி தேர்தல் வாக்குறுதிகளை வைக்கின்றார்கள். ஆனால் நடைமுறைப்படுத்தும் விதத்தில், உத்திகளை, சாகசங்களை கையாண்டு மக்களை மயக்கி, மக்கள் பிரதிநிதிகள் ஆகிவிடுகின்றார்கள். இதுதான் முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பாசாங்கு அரசியல்!

 

இலங்கையில் மட்டுமல்ல, சர்வ உலகிலும் பாராளுமன்றத்திற்கு ஊடான அரசியல் ஏகப்பெரும்பான்மையான மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதில்லை. பாராளுமன்றமும், பாராளுமன்ற ஜனநாயக அரசியலும் “மக்களுக்காக, மக்களால், மக்களுடையது”—என்றொரு வேத வாக்கையும்  கொண்டுள்ளது. ஆனால் பாராளுமன்றம் என்பது, ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாளும் அரசு இயந்திரமே! இதுவே இதன் யதார்த்த நடைமுறை!

 

இவ்வகை ஏற்றத்தாழ்வான, அடக்கி-ஒடுக்கல் கொண்ட சமூக அமைப்பை, தொடராய் தொடரவே, ஏப்ரலில் பாராளுமன்றத்தேர்தல். அத்துடன் அதுவோர் விகிதாசாரப் பிரதநிதித்துவ தேர்தலும் கூட. இதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட (தனிநபர் சர்வாதிகார) ஜனாதிபதி அமைப்பும் துணை நிற்கின்றது!

 

நிறைவேற்று அதிகாரம் கொண்டதில், மகிந்தா தொடர் அதிஸ்டசாலியாகியுள்ளார். தொடர்ந்தும் பாராளுமன்றத்தை தக்கவைப்பதற்கும், தனதாக்குவதற்குமே – ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தல். அதிலும் அவர் தன் குறித்த இலக்கை அடைவார். காரணம் ஜனாதிபதித் தேர்தலில் கையாண்ட வியூகமும் கொப்பியடிப்பும், இத்தேர்தலிலும்; தொடரும். பிரதிபலிக்கும்! மக்களும் “எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” என்ற பழமொழிக்கு ஏற்பவே  செயற்படுவார்கள்!

 

வரலாறே! உன் உந்துசக்திகள் தொடராய்-தொடரும்-இந்த பாராளுமன்ற மாயை அரசியலில் இருந்து விடுபட, அது புரட்சிகர வெகுஜனப் போராய் மாற, அவர்களுக்கு வல்லமை தாராயோ? என்று மலரும் ஓர் மாற்றுக்கான மனோநிலை!

 

கருணாவிற்கு தேசியப்பட்டியலில் இடம் கிடையாது!     —ஜனாதிபதி

செக்கில் எள்ளு-எண்ணெய் ஆனால், பின் புண்ணாக்கிற்கு என்ன வேலை? இது ஓரிரு மிருகத்திற்காவது உதவும்! அது மக்களுக்கல்ல, மகிந்த குண்டர் படைக்கும் சரிவராது

 

பாராளுமன்றத் தேர்தல்களில், சண்டித்தனம், அச்சுறுத்தல், மோசடி, ஆள்மாறாட்டம் போன்றவைகள் தொடராகவுள்ளது இதனால் மக்கள் தம் இஸ்டப்படி மக்களை தெரிவு செய்ய முடியவில்லை. அரசு இதை இல்லாதாக்க ஆவன செய்யவேண்டும்   –ஆனந்தசங்கரி

இவை யாவும் மகிந்த கூட்டுத்தாபனத்தின் தேர்தல்கால உற்பத்திகள். இது சமகால அதீத விற்பனைப் பொருட்களும் கூட, இதை இப்போ சந்தைப்படுத்த வேண்டாம் என்கின்றாரோ சங்கரியார். வீணாக உங்கள் மாட்சிமை தங்கியவரின் ஆத்திரத்திற்கு ஆளாகாதீர்கள்.

 

வணக்கத்திற்கு உரியவர்களும்-மகிந்தாவின் காலில்!

இலங்கையின் பேரினவாத அரசியல், மகாசங்கத்தினரின் அனுசரணையின்றி, ஆமோதிப்பின்றி இயங்கவேயில்லை. அந்தளவிற்கு பேரினவாதமும்-பௌத்தமும் ஓன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தே செயல் ஆற்றிற்று. பலவிடயங்களில் பௌத்தம் அரசியலின் தலைமைப் பாத்திரங்களை வகித்தவேளை, பேரினவாத அரசுககள் கூனிக் குறுகி நின்ற வரலாறும் உண்டு. பண்டாரநாயக்கா கொலைக்கு ஓர் தேரோவே காரணமென சொல்லுமளவிற்கு, பௌத்தம் கனதியான “கசாப்புக்கடை” பாத்திரத்தையும் வகித்தது. தமிழ்மக்களின் நியாயமான உரிமைகளை வழங்க மறுத்ததில் பௌத்த்த்தின் பங்கும் மிகப் பெரியது. இப்படியான இப்பௌத்தமும், அதன் சங்கங்களும் இன்று மகிந்தாவின் காலில் வீழ்ந்துள்ளது.

 

அரந்தலாவ பிக்குவை கொலைசெய்து, தலதாமாளிகை மீது, குண்டுத்தாக்குதல் நடாத்திய கருணா மற்றும் பிள்ளையானுக்கு அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை வழங்கியது போல், தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவை விடுதலை செய்யவேண்டுமென பௌத்தத்தின் எல்லாச் சங்கங்களும் கேட்டிருந்தன. “ஆத்திரத்தை ஆத்திரத்தால் தீர்க்கக் கூடாதென்ற” புத்தபகவானின்  போதனையை இவர்கள் மகிந்தாவிற்கு போதித்தனர்.

 

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த எங்கள் இராணுவத் தளபதியை விடுதலை செய்யவேண்டும் என்றார்கள். இது மகிந்த மன்னனுக்கு கோபத்தையே வரவழைத்தது.

 

நானா பொன்சேகாவா பயங்கரவாதத்தை ஒழித்தது? என்ற “ஈகோ”வில் இருந்து தன் கருமங்களை பௌத்த சங்கத்திற்கு எதிராக ஆற்ற முனைந்தார் என் அதிகாரம் கொண்டு எது செய்யவேண்டுமென துறவிகள் எனக்கு உபதேசிக்கத் தேவையில்லை. இப்பாங்கில் பகிரங்கமாகவே செயற்பட்டார்.

 

இதன் விளைவு “பொன்சேகாவின் விடுதலைக்காக” கூட்டவிருந்த துறவிகளின் மாநாட்டையே இல்லாதாக்கினார். தன் தூதுவர்கள் மூலம் தூது அனுப்பி மாநாட்டை ஒத்திவைக்கும்படி எச்சரித்தார். என் சொல்லை மீறி மாநாடு நடந்தால், பர்மாவில் ஏற்பட்ட துர்ப்பாக்கியமே உங்களுக்கும் என்றார். மாநாடு நடைபெற்றால், அங்கு புகுந்து பாரிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு துறவிகள் (தன் குண்டர்கள்) தயாராகி இருப்பதாகவும் எச்சரித்தார். இதனால் மாநாடும் ஒத்திவைப்பு! துறவிகளும் பெட்டிப்பாம்பாகினர்.

 

துறவிகளும்–சங்கங்களும் கடந்தகாலங்களில் பேரினவாதத்திற்கு துணைபோகாமல், ஏகப்பெரும்பான்மையான அடக்கி ஓடுக்கப்பட்ட மக்களோடும், அவர்களின் அபிலாசைகளோடும், புத்ததர்ம வழியில் பயணித்திருந்தால், மகிந்த மன்னன் உங்களுக்கு எம்மாத்திரம்! நீங்களும் படிப்பது புத்தம!; இடிப்பது விகாரையை அல்லவோ!

 

பொன்சேகாவின் கைதை கண்டித்து, அரசிற்கெதிரான புலம்பெயர் சிங்கள மக்களின் எதிர்ப்பை, ஆர்ப்பாட்டத்தை, மேற்குலகின் சதித்திட்டமாம்—-தேசப்பற்றுடைய இயக்கத்தின் தலைவர்

இவருக்கு, அரச கண்ணாடியில் பார்ப்பதெல்லாம் மேற்கின் சதியாக தெரிகின்றது! இது போதாதென்று ஊர்வலம் போனவர்களின் பட்டியல்களை, அந்தந்த நாட்டு தூதரகங்களும் சேகரிக்கின்றதாம்! இவர்கள் இலங்கை வர அவர்களை கைதாக்கவாம்! அத்துடன் எம்மவர்pல் சிலர் இவ்வார்ப்பாட்டத்தை  “சிங்களவர்கள் தங்களுக்குள் அடிபடுகின்றார்கள்” என்கின்றார்கள்! ஓர் அரசுக்கெதிரான நடவடக்கையை அரச எடுபிடிகள் சதியென்றிட , எம்மவர்கள் குறுந்தேசியத்தில் சிங்களவர் சண்டை எனகின்றனர்.  இவர்கள் எல்லாம் குருடர்கள் யானை பார்த்த  கணக்கில் கதை சொல்கின்றார்கள்.

 

“தேசம்நெற் மகிந்த-கோத்தபாயா அன்ட் கோ” ஆகியுள்ளது!

புலிகளின் அழிவின் பின்னான அரசியல் வெற்றிடம் பலரை பல வகையாக்கியுள்ளது. இதில் சிற்சிலதுகள் அபிவிருத்தி என்ற பெயரில் மகிந்த மடியில் தவழ்ந்து விளையாடுதுகள்! அவர் ஞானப்பால் ஊட்டிட, உண்டு மகிழ்ந்து, ஈசனடி போற்றி – மகிந்த மன்னடி போற்றியென  மகிந்த புராணம் பாடுதுகள். இம்மகிந்தப் பக்தர்களில் தேசம்நெற் ஜெயபாலனும் ஒருவர்.

 

ஜெயபாலனுக்கு பகிரங்கமாக மகிந்த புராணம் பாடத் தயக்கம். தற்போது கொன்ஸ்ரன்ரைன். என்றொரு “மகிந்த-கோத்தபாயா–கொன்ராக்றரிடம்;” தேசம்நெற்றை குத்தகைக்கு கொடுத்துள்ளார். தற்போது தேசம்நெற் “மகிந்த கோத்தபாயா அன்ட் கோ” ஆகியுள்ளது!.  இந்த “அன்ட் கோவின்” கட்டுரைகளும்;, பின்னோட்டங்களுமே, தேசம் நெற்றாகியுள்ளது.

 

கொன்ஸ்ரன்ரைன் தான் ஓர் யதார்த்தவாதியென வில்லுப்பாட்டுப் பாட, ஜெயபாலனும் பின்னிருந்து “சிஞ்சாவுடன்” ஆமாம் போடுது.

 

சமகால வடக்கின் பிரதான குறை “உல்லாசப் பயணத்துறையே” என்றிட,  ஆ! இதுவெல்லோ “யதார்த்த மார்க்சிஸம்” என வக்காலத்து வாங்குது. இதை விமர்சனத்திற்கு உள்ளாக்குவோரை  “கீபோட்” என்றிட்டால், ஆமாம் என்றிடுது!. தாங்கள் யார்? என்றிட்ட பின்னூட்டக் கேள்விகளுக்கும் பதிலின்றி ஓடி ஒளிக்குது! கொன்ஸின் “மகிந்த அன்ட் கோ” அபிவிருத்தி கட்டுரைகளே  தேசம் நெற்றின் தொடராகின்றது!.

 

யாழ் மக்களின் தற்போதைய அவசர அத்தியாவசியங்கள் என்னவோ இருக்க,  கொன்ஸிற்கும் – தோழருக்கும் உல்லாசத்துறையே பிரதான யதார்த்தக் கண்டுபிடிப்பாகி உள்ளது! உண்டி கூழுக்கு அழ, கொண்டை பூவுக்கு அழுதது போல் உள்ளது, இந்த “மார்க்சிஸ முகமூடி” அணிந்த, மகிந்த சிந்தனையாளர்களின் கோட்பாடு!

 

இன்றைய யாழின் சமூகக் கட்டுமானம் கலாச்சார சீரழிவில் உள்ளது! உங்களின் உல்லாச விடுதிகள் ஏன் விபச்சார விடுதிகள் ஆகாது!

 

எமக்கோர் உண்மை தெரிந்தாகணும்? இந்த உல்லாச விடுதிகள் அமைப்பிற்கான தகுதிகள் கொன்ஸிற்கு உண்டு! ஆமாம் போடுவோரும், அதை நோக்கி நகர்கின்றாரோ? மகிந்தாவிற்கும் இதுதான் நோக்கமென்றால், அதுக்காக, நீங்கள் எந்த முகமூடலும் போடுவீர்கள்! நீண்டகாலம் நிலைக்காது உங்களின் இந்த “மார்க்சிஸ முகமூடி”

 

லங்கா பத்திரிகையின் ஆசிரியரின் கைதை நான் அறிந்திருக்கவில்லை!  —ஜனாதிபதி

மன்னர்களுக்கு மழை பெய்வதே தெரிவதில்லை. உங்களுக்கும் இதுவும் தெரியாமல் போனதில் நியாயம் உண்டு.

 

பிழையான நேரத்தில் அரசு பொன்சேகாவை கைது செய்துள்ளது!———-தயான் ஜயதிலகா

சரத் பொன்சேகா விவகாரத்தில் இலங்கை அரசு பின்பற்றிய தந்திரோபாயங்கள் மற்றும் கைது செய்த நேரம் ஆகியன பொருத்தமற்றவை. என ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இலங்கைப் பிரதிநிதி தயான ஐயதிலகா கூறியுள்ளார்.

 

சுதந்திரத்திற்குப் பின் ஜே.வி.பி. கிளர்ச்சி புலிகள் யுத்தம், இவ்விரண்டும் இலங்கையின் முக்கிய பிரச்சினைகள். சரத் பொன்சேகா கைது விவகாரம் முன்றாம் கிளர்ச்சி ஒன்றை நோக்கி நகர்கின்றதா? என என்னை ஐயம் கொள்ள வைத்தது. ஆனால் அரசின் தற்போதைய நடவடிக்கைகள், அப்படி அல்ல என்ற முடிவிற்கு வரவைத்துள்ளது என்கின்;றார்.

 

ஜனாதிபதித் தேர்தலின் நள்ளிரவு, பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலில், இராணுவக் கமாண்டோக்களை நிறுத்தியது முதல், தொடராக அரசாங்கம் தனக்கு அபகீர்த்தியை தேடிக்கொள்ளும் செயற்பாடுகளையே செய்து வருகின்றது.

 

கந்தபுராணத்து சூரன் முதல், இலங்கைப் புராணத்தின் ராஜபக்ஸா வரை–தவமிருந்து பெற்ற வரத்தை, கொடுத்தவர்களுக்கு எதிராக–அதிகாரவெறி கொண்டு அடக்குகின்றனர்.

 

மகிந்தா தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்காவிடில், தி.மு.க.அரசு வேடிக்கை பார்க்காது–கலைஞர் கருணாநிதி

தமிழ்மக்களின் அவலத்தில் தொடர் வேடிக்கை பார்த்த இக்காவலன், இனி என்ன பொறுத்தது போதும் பொங்கி எழு என உடன் பிறப்புக்களுக்கும், சோனியாவிற்கும் மடல் எழுதப் போகின்றாரோ?