Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் தேசியம், இன்று தேர்தல் சாக்கடையில் நாறுகின்றது. நாதியற்றப் போன மக்கள், கதியற்று நிற்கின்றனர். எந்த சமூக உணர்வுமின்றி, ஏனோ தானோ என்று மக்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர். இதுவே வடக்கின் வசந்தமாகவும், கிழக்கில் உதயமாகவும், மொத்தத்தில் இனத்தின் அவலமாகிக் கிடக்கின்றது. இதைக் கண்டுகொள்ளாத சமூக போக்கில், பிழைப்புவாதிகள் ஏய்த்துப் பிழைக்கின்றனர்.    

புலிகள் தங்கள் துப்பாக்கி முனையில் தமிழ் இனத்தை அடக்கியொடுக்கியாண்டனர். தேசியத்தின் பெயரில், தேசியத்தை அழித்ததன் மூலம் மானிடத்தை அடிமைப்படுத்தினர். விளைவு  சுயமானதும் நேர்மையானதுமான அரசியல் முதல் சமூக பங்களிப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

விளைவு

 

1.அரசு சார்பு ஒட்டுண்ணிகளும், கைக்கூலிகளும் புலிக்கு வெளியில் புளுத்தனர்.

 

2.புலியின் குடையின் கீழ் சமூகத்தை கட்டுப்படுத்தியவர்கள் சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும்;, புல்லுருவிகளும், சுத்துமாத்து பேர்வழிகளுமே. 

 

இப்படி சமூகம் ஆகக் கீழ்நிலையான, கழிசடைப் பேர்வழிகளால் கட்டுப்படுத்தப்பட்டது. சமூகம் சார்ந்த எந்த உயிர்த்துடிப்புமுள்ள முயற்சியையும், இரு தரப்பும் அனுமதிக்கவில்லை. சமூகம் கூட்டில் அடைக்கப்பட்ட மிருகத்தின் நிலைக்கு தரம் தாழ்ந்து போனது. போடுவதை உண்ணும் நிலைக்குள், தமிழினம் காட்சிப் பொருளாகிவிட்டது. யாரும் மேய்க்கும் நிலைக்குள், சமூக அறியாமையும் மலட்டுத்தனமும் சமூகத்தின் இன்றைய நிலையாகிவிட்டது.  

 

புலிகளின் நடத்தை, இதைத்தான் தமிழ் மக்களின் நிலையாக்கியது. இதை உருவாக்கிய புலிகளின் அழிவும், அதன் வன்முறை சார்ந்த அதிகாரமும் இன்று தகர்ந்துவிட்டது. புதிய பிழைப்புக்கு வழி ஏற்படுத்தும் தேர்தலோ, இந்த சாக்கடையை உடைத்துவிட்டுள்ளது. புலி மற்றும் புலியெதிர்ப்பின் பின்னணியில் இயங்கிய எல்லா மக்கள் விரோத கழிசடைகளும், தங்கள் தலைமயிரைப் பிடித்துக் கொண்டு மோதுகின்றது.

 

இந்த நிலையில் தொடர்ந்து தமிழின அழிப்புக்கு உதவ, ஒன்றுபட்டு பக்கமேளம்  வாசிப்பவர்கள் பலர். தமிழரின் ஒற்றுமை வேண்டி தங்கள் வேட்டியை கிழித்துக் கட்டுபவர்கள் சிலர். இவை எல்லாம் ஒருபுறம். மறுபக்கத்தில் இடதுசாரியத்தின் பெயரில் தேர்தல் கடை விரிக்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி. இன்னொரு பக்கத்தில் புதிய இடதுசாரி முன்னணி ஊடாக மே 18 இயக்கக்காரர்கள்;. அவர்களுடன் உள்ள புலிகள் முதல் கூட்டமைப்பு சிவாஜிலிங்கம் வரை "தூய தேசியத்தின்" பெயரில், புதிய இடதுசாரி முன்னணி ஊடாக களமிறங்குகின்றனர்.   இப்படி இவர்கள் புலியின் பொது அடையாளத்தை பயன்படுத்தி, தேர்தலில் நுழைகின்றனர்.

 

இப்படி சாக்கடைகளை அடைக்கும், பல வண்ண வலது இடது அடைப்புகள். சமூகத்தை தேர்தல் சாக்கடையில் புரண்டு குளிக்கக் கோருகின்றது.

 

இதில் ஐரோப்பாவில் இயங்கும் புலியெதிர்ப்பு இணையங்களை, இலங்கை அரசு தனக்கு சார்பாக இயக்குகின்றது. இலங்கையின் அரசு சார்பாக கூலிக்கு எழுதும் தமிழ்ப் பிரச்சார ஊடகவியலாளர்கள் தான், ஐரோப்பிய புலியெதிர்ப்பு இணையங்களில் வெளிவரும் பெரும்பாலான கட்டுரைகளை எழுதுகின்றனர். அவர்களின் நோக்கம் கூட்டணியை தோற்கடித்தல். புலியை தோற்கடித்தது போல் கூட்டணியைத் தோற்கடித்தல்.

 

இதனால் கூட்டமைப்பு தோற்கடித்தல் பற்றியும், அவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் முதன்மை பெற்று நிற்கின்றது. இடதுசாரிய அடிப்படையைக் கொண்டு நகர்த்தும் பாரிய பிரச்சாரம், மகிந்தாவை வெல்ல வைத்தல் அல்லது கூட்டமைப்பு அல்லாதவர்களை வெல்ல வைத்தல் என்ற வடிவத்தில் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரம் தயாரிக்கப்படுகின்றது.

 

சரி, ஏன் இவர்கள் இதை முன்னெடுக்கின்றனர். கூட்டமைப்பின் வெற்றி, தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகவும், தமிழ் மக்களின் உரிமையினை மறுக்கும் அரசியல் எதிர்வினையாக அமையும். இதனால் இதைத் தடுக்க, பேரினவாதத்தின் நிலைப்பாட்டை முன்தள்ளுகின்றனர்.

 

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை மறுக்கும் பேரினவாதம், தமிழர்கள் சார்பாக வெல்வதை தோற்கடித்து, அதை உலகுக்கும் காட்ட விரும்புகின்றனர். இதன் மூலம் இனவழிப்பை நிரந்தரமாக்க முனைகின்றனர். கூட்டமைப்பை தோற்கடித்தல், பேரினவாத அரசின் இன்றைய நிகழ்ச்சி நிரலாகும். 

 

தமிழன் அடையாளமாக இன்று இருப்பது, கூட்டமைப்பு. இதனால் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதுடன், அதை பிளவுற வைத்தல் முதல் இதற்கு எதிராக பல குழுக்;களை போட்டியிட வைக்கின்றனர். வாக்கை பிரித்து, வெற்றியை குறைத்து, தமிழனின் பிரச்சனையை உலகம் முன் இல்லாதாக்க விரும்புகின்றனர். இப்படி பேரினவாதம் தமிழனுக்கு பல ஆப்பு வைக்கின்றது.

 

மறுபுறத்தில் கூட்டமைப்பை தனது எடுபிடி அமைப்பாக புலிகள் உருவாக்கியது முதல், அது புலியின் வடிவில் சர்வாதிகார வலதுசாரி அமைப்பாகவே இருந்து வந்தது. மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்ற, புலியின் நலனை முன்னிறுத்தி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தும் வந்தது. இதன் பின்னணியில் சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும்;, புல்லுருவிகளும், சுத்துமாத்து பேர்வழிகளும் கூடி கும்மியடித்தனர்.

 

இப்படி புலிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப சமூகவிரோதிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் கூட்டி அள்ளி உருவாக்கி கூட்டமைப்பை, தங்கள் துப்பாக்கி முனையில் ஒன்றுபடுத்தி வைத்திருந்தனர். இன்று புலியின் துப்பாக்கியில்லை.

 

இதனால் குழிபறிப்பு முதல் மகிந்தாவுக்கு செங்கம்பளம் விரிக்கும் எடுபிடிகளாக செல்வது வரை, கூட்டமைப்பில் இருந்து பலர் ஓடி நக்குகின்றனர். மறுபக்கத்தில் இந்தியாவின் காலடியில் கூட்டமைப்பு தூசுதட்டிக் கொண்டு, டில்லியில் அலுவலகம் அமைப்பது வரை முன்னேறி,  இந்தியாவின் கூலிக் குழுவாக தன்னை வெளிக்காட்டி நிற்கின்றது. இந்தியாவின் தயவில் தமிழருக்கு ஒரு தீர்வு என்ற நெம்புகோலைக் கொண்டு, தமிழ்மக்களை கவிட்டுப்போட கனவு காண்கின்றது.

 

சிவாஜிலிங்கமோ புலியை அழித்த, அழிக்க உதவிய இந்தியாவுடன் தனக்கு முரண்பாடு என்று கூறிக்கொண்டு, புலி அனுதாபிகள் வாக்கைப் பெற்று பிழைக்க களமிறங்கியுள்ளார். இதன் பின்னணியில் மே 18 கும்பல். பிரபாகரன் "செத்த" தினத்தை தன் இயக்கத்தின் பெயராக கொண்டு, அதன் தொடர்ச்சியாக அதன் வாரிசாக தான் நிற்பதாக காட்டி விக்கிரபாகு பின்னால் களமிறங்குகின்றனர்.

 

அதே புலி அரசியல். விக்கிரபாகுவை பயன்படுத்தி நுழையும் புலிப்பாணி அரசியல். எந்த கொள்கையும், கோட்பாடுமற்ற தமிழ் தேசிய அரசியல். அதாவது பழைய இயக்க அரசியல்.  இப்படி சாக்கடைக்குள் பல அடைப்புகள். மக்களை தேர்தல் சாக்கடையில் மூழ்;கி எழக் கோரும் பிழைப்புவாத அரசியல். இதுதான் இன்று தமிழ் சமூகத்தை சுற்றி நடக்கும், இனவழிப்பு அரசியல்.

 

பி.இரயாகரன்
23.02.2010