Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்க்சியத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கினால், பாசிச நடத்தைகளையும் அது சார்ந்த  வக்கிரங்களையும் தொழத் தொடங்கிவிடுகின்றனர். பாசிசத்தைக் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, மார்க்சிய சொற்களைக் கொண்டு உளறத் தொடங்குகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி நடந்து முடிந்த தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கையோ கேவலமானதும், கேலிக்குரியதுமாகும்.

தன்னை ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக கூறிக்கொண்டும், மண்ணில் தாம் ஊன்றி நிற்பதாக காட்டிக்கொண்டும், அரச பாசிசம் நடத்தும் கூத்துகளையும், அது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளையும் மூடிமறைக்கின்றது. ஏன் அதைத் திரித்து இட்டுக் கட்டுகின்றது. இப்படித்தான் கடந்த காலத்தில் புலி பாசிசத்தை மூடிமறைத்து அதைத் தொழுததால், அது புலியின் ஆசியுடன் ஒரு கட்சியாக நீடித்தது.

 

தேர்தலின் மூலம் கட்டவிழ்த்த அரச பாசிசத்தையும், அதன் தேர்தல் மோசடிகளையும்  மூடி மறைத்த படி, தேர்தல் முடிவை திரித்துக் காட்டுகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி கூறுகின்றது "குறிப்பாக வட புலத்து மக்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்திருக்கிறார்கள். மிகக் குறைந்தளவான 18-20 வீத வாக்குகள் மட்டுமே அளித்ததன்" மூலம், மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தனர் என்கின்றனர். வட பகுதி மக்கள் வாக்களிக்க விடாமல், அரச பாசிசம் கட்டவிழ்த்துவிட்ட தேர்தல் கூத்தை இது மறுக்கின்றது. 

 

மகிந்த குடும்ப பாசிசம் தன் அரச இயந்திரம் மூலம், வடக்கில் தமிழ்மக்களின் வாக்களிப்பை தடுத்தது. இது குண்டு வெடிப்புகளை நடத்தியது. இதை மீறி வாக்களித்தோரை கண்காணித்தது. சில பிரதேசத்தில்  வாக்களித்தோரை இராணுவம் வீடியோ மூலம் படம் பிடித்தது மிரட்டியது. வன்னியில் வாக்களிக்க விடாமல் போக்குவரத்தை முடக்கினர். முகாம்களில் இருந்த மக்கள் வாக்களிக்க செல்லாதவாறு, இராணுவம் முகாமை விட்டு மக்கள் வெளியேறுவதையே தடுத்தது. இதை மீறி வாக்களித்தவர்கள் அரசின் இந்தக் கட்டுப்பாட்டை அத்துமீறியே, வாக்களித்தனர். குறைந்த வாக்களிப்பை வெற்றிகரமாக நடத்தியது கண்டு, தேர்தல் முடிவு வரமுன்னமே ஈ.பி.டி.பி.க் குண்டர்கள் அதை வெடி கொழுத்திக் கொண்டாடினர். தேர்தலின் பின் தீவுப்பகுதியில் அரசின் எடுபிடியான ஈ.பி.டி.பி.க்  குண்டர்கள், வாக்களித்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

 

மகிந்தாவுக்கு ஏற்ற பாசிசக் கோமாளியாகிய டக்ளஸ், ராஜினாமா என்ற பாசிச நகைச்சுவையை அரங்கேற்றினார். முதல் நாள் குண்டு வெடிப்பை அரங்கேற்றியவர்கள், அடுத்த நாள் வாக்களித்த மக்களை தாக்கியவர்கள், அதற்கு அடுத்த நாள் ராஜினாமா நாடகத்தையும் நடத்தினர். இதை உலகுக்கு காட்ட வன்முறை மூலமான ஒரு கர்த்தாலையும் நடத்த முனைந்தனர். இதற்கு அடுத்த நாள் தங்கள் தோல்வி பற்றி ஆய்வும் நடத்துகின்றனர். இப்படி பாசிசக் கோமாளிகள் மூலம் வடக்கு மக்கள், தேர்தலை சுற்றி சந்தித்த துயரங்கள் பல. அரசோ இலங்கை தளுவிய அளவில் நடத்திய தேர்தல் மோசடிகள், வன்முறைகள் எல்லையற்றது. அவை இன்னமும் தொடருகின்றது. ஊடகங்கள் முடக்கப்பட்டு, ஊடகவியலாளர்கள் கைதுகள் காணாமல் போதல் முதல் எதிர்க் கட்சியினரை சிறைகளில் தள்ளுகின்றது. எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் சொத்துகளை அழிக்கின்றது. அரச பாசிசமோ கொடி கட்டிப் பறக்கின்றது.     

 

மா.லெ.மா சிந்தனையை உருத்திராட்சைக் கொட்டையாக்கி உளறும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு, இதைப்பற்றி எந்த அக்கறையும் கிடையாது. அதை திரிக்கின்றது. இது இவைகள் பற்றி எதுவும் அது பேசவில்லை. அது அரச பாசிசத்தை தொழுதபடி என்ன சொல்கின்றது என்று பாருங்கள். "நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பேரினவாத முதலாளித்துவ பிரதான வேட்பாளர்களையும் ஆதரித்து நின்ற இரு தரப்பு தமிழ்த் தேசியவாதத் தலைமைகளுக்கும் தமிழ் மக்கள் குறிப்பாக வட புலத்து மக்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்திருக்கிறார்கள். மிகக் குறைந்தளவான 18-20 வீத வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பெரும்பான்மையான தமிழ் மக்கள் உறுதியான பகிஸ்கரிப்பைச் செய்து தமது எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்." என்கின்றனர்.

 

ஒரு கேலியான கேலிக்குரிய அறிக்கை. நாட்டின் நிலைமையை இப்படி கொச்சைப்படுத்தி, மகிந்தா கூட இந்தளவுக்கு குதர்க்கமாக காட்ட முடியாது.

 

தேர்தலை நிராகரி என்பதற்கு பதில் பகிஸ்கரிக்கக் கோரியவர்கள், வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கக் கூறினர். அதை எப்படி பயன்படுத்துவது என்று பு.ஜ கட்சியின் அரசியல் வழிகாட்டியான பேராசிரியர் கூட கவிதை பாடிய நிலையில், "வட புலத்து மக்கள் தகுந்த பதிலடியை" பகிஸ்கரித்ததன் மூலம் கொடுத்தனர் என்கின்றனர். கள்ளவாக்கு போடுவதை தடுக்க, வாக்கைப் போட்டு அதை செல்லுபடியற்றதாக்கக் கோரியவர்கள், இன்று நடந்தது பகிஸ்கரிப்பு தான் என்கின்றனர்.

 

இதற்கு பு.ஜ கட்சி மகிந்தா குடும்பத்துக்கும் அதன் எடுபிடியான ஈ.பி.டி.பி கும்பலுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். வடக்கு மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தவர்கள் இவர்கள்தான். தமிழ் மக்களை தமக்கு எதிராக வாக்களிக்கவிடாமல் தடுக்க, மக்களை "பகிஸ்கரிக்க" வைக்க வேண்டும் என்பது தான் மகிந்தாவின் தேர்தல் சிந்தனையாக இருந்தது. அதைத்தான் அவர் முதல் நாள் இரவே தொடங்கினார். வடக்கு மக்களை எச்சரிக்கும் வண்ணம் குண்டை வீசியபடி, வடக்கு மக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்தார். இதைத்தான் பு.ஜ கட்சி, வடக்கு மக்களின் பகிஸ்கரிப்பு என்கின்றனர். பாசிட்டுகளும் அவர்கள் எடுபிடிகளும் தமக்கு எதிராக மக்கள் வாக்கு விழுவதை தடுக்க, நடத்திய பாசிசக் கூத்தை மூடிமறைத்து வடக்கு மக்களின் சுதந்திரமான பகிஸ்கரிப்பு என்கின்றனர் பு.ஜ.கட்சி.

 

மகிந்த வடக்கு மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து பெற்ற தேர்தல் முடிவை வைத்து, இரண்டு கட்சியையும் மக்கள் நிராகரித்ததாக வேறு "மார்க்சிய" ஆய்வு. இப்படி மகிந்தா குடும்பம் கட்டவிழ்த்துவிட்ட பாசிசத்தின் துணையுடன், மா.லெ.மா சிந்தனையை இப்படி கேலி செய்கின்றனர்.     

 

தேர்தலைச் சுற்றி நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற பாசிச வன்முறைகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. வாக்குரிமையும் தேர்தலும் மக்களின் "ஜனநாயகம்" என்ற மோசடியை சுற்றி மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, அந்தத் தேர்தலையும் வாக்கையும் மோசடி செய்து மக்களை ஏமாற்றும் பன்றித் தொழுவம்தான், இந்த சட்டம் நீதி ஜனநாயகம் என அனைத்தும்.

 

இந்தக் பாசிசக் கூத்து பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி போராடுவதுதான் மா.லெ.மா சிந்தனை. அதை உருத்திராட்சைக் கொட்டையாக்கி உருட்ட வெளிக்கிட்டால், என்ன தான் நடக்கும்? பாசிசம் நடத்தும் திருவிளையாடல்களையும் விளைவுகளையும், மக்கள் தீர்ப்பாக காட்டுவது தான் மார்க்சியம் என்ற நிலைக்கு, வர்க்கப் போராட்டத் தத்துவத்தையே தின்று ஏப்பமிடத் தொடங்கிவிட்டது பு.ஜ.கட்சி.       

 

பி.இரயாகரன்
05.02.2010