யுத்தத்தை நடத்த தீர்வு பொதியைக் காட்டுவது, பேரினவாதத்தின் இனவழிப்பு தந்திரம் என்பதை அனைவரும் அறிவர். இது போல் தேர்தலை வெல்ல, தேர்தல் வாக்குறுதிகள். இதே போல் தமிழினத்தை அமைதியாக அழிக்க, அதிரடியான தேர்தல் நாடகங்கள். இந்தவகையில் முன்வைக்கும் அதிரடித் தீர்வுகள், அந்த மக்களின் இருப்பையே சிதறடித்து வருகின்றது.
யுத்தம் மூலம் தமிழ் மக்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கியவர்கள், தங்கள் யுத்தக் குற்றத்தை மூடிமறைக்க அந்த மக்களை முட்கம்பிக்கு பின்னால் பலாத்காரமாக அடைத்து வைத்தனர். இங்கு அவர்களை மூச்சுவிடக் கூட விடவில்லை. எல்லாவிதமான வன்முறையும் அவர்கள் மேல் ஏவப்பட்டது. பாலியல் வன்முறை முதல் அரச எடுபிடி குழுக்களின் கப்பங்கள் வரை பரிசாக கிடைத்தது. இதையே இந்த மக்கள் முட்கம்பிக்கு பின்னால் ஒரு வாழ்வாக அனுபவித்தனர். இப்படி அந்த மக்களை முட்கம்பிக்கு பின்னால் கூட இந்த அரசு நிம்மதியாக இருக்க விடவில்லை. எந்த சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க கூட அனுமதிக்கவில்லை. தமக்கு நடந்ததைச் சொல்லி புலம்பக் கூட உரிமையிருக்கவில்லை.
ஏன் இந்த முட்கம்பிக்கு பின்னால் பலர் காணாமல் போனார்கள். பலர் வாழ்விழந்தனர். பலர் நிரந்த நோயாளியானார்கள். அங்கவீனர்கள் ஆனார்கள். பலர் விதவையாக்கப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படிப் பல. மனித வாழ்வின் நரகல்கள் அனைத்தையும், இந்த முட்கம்பிக்கு பின்னால், இந்த அரசு அரங்கேற்றியது.
இந்த முட்கம்பிக்கு வெளியில் வாழ்ந்த அகதிகள், குறிப்பாக கிழக்கு மக்களும் அகதிகளும் படும் பாடு எண்ணிப் பார்க்க முடியாத துயரங்களுடன் தம் வாழ்வைத் துலைத்து வருகின்றனர். அங்கு பெண்கள் தன் குழந்தைக்கு ஒரு நேர உணவு கொடுக்க, தன் உடலை விற்பதைத் தவிர வேறு எந்த வழியையும் இந்த அரசு வழிகாட்டிவிடவில்லை.
ஒரு நேரக் கஞ்சிக்கு கூட அவர்கள் போராட வேண்டிய நிலை. கிழக்கு விடிவெள்ளிகள் கிழக்கு "உதய"மாக்கி கிழக்கு மக்களை பரதேசிக் கூட்டமாக்கி வருகின்றது.
இந்த நிலையில் தேர்தலை மையமாக வைத்து திணிக்கும் திடீர் அதிரடித் தீர்வுகள், மக்களை நட்டாற்றில் வெம்பவிட்டு கைவிடுகின்றது. உடனடியான முகம் கொடுக்கும் விடையங்களுக்கு எந்த நிவாரணமுமின்றி, அதிரடித் தேர்தல் தீர்வை வழங்குகின்றது.
இது இந்த மக்களின் வாழ்வை, திடீரென நடுவீதிக்கு கொண்டு வருகின்றது. வீட்டை தரைமட்டமாக்கியவர்கள், அவர்கள் சொத்தையே சூறையாடிவர்கள், அந்த மக்களை மீள் குடியேற்றம் என்ற பெயரில் "மீள் குடியேற்றத்தை" தேர்தல் நாடகமாக்கி வெட்டவெளிகளில் திடீரென குடியேற்றுகின்றனர். தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம் இந்தியாவிடம் பயிற்சி பெற்று வீங்கி வெம்பியது போல், இந்த மக்கள் அதிரடியாக வெம்பவைக்கப்படுகின்றனர்.
இப்படி இன்று பல தேர்தல் கூத்துகள், நாடகங்கள் அரங்கேறுகின்றது. இதன் மூலம் புதிதாக மக்களை ஏதுமற்ற பரதேசிக் கூட்டமாக்குகின்றது இந்த இனவாத அரசு. முன்பே இந்த நிலையில் கையேந்தி, எதை விற்று எப்படி வாழ்வது என்று தவிக்கும் நிலையில் பல பத்தாயிரம் மக்கள் தவிக்கின்றனர். புதிதாக பல பத்தாயிம் மக்களை, தேர்தலை ஓட்டி நிர்வாணமாக வீதியில் இறக்கியுள்ளது.
அதிரடியான மாற்றங்கள், திசைதெரியாது வீங்கி வெம்பி அழுகுகின்றது. தேர்தல் மூலமான இரண்டாவது யுத்தமாக, பேரினவாத அரசு இதை தமிழினத்தின் மேல் திட்டமிட்டு நடத்துகின்றது.
எப்படி தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வை வழங்க மறுத்து அரசியல் பித்தாலாட்டம் செய்கின்றதோ, அதுபோல் யுத்தம் மூலம் தான் அழித்து அகதியாக்கிய மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி ஒரு வாழ்வை வழங்கப் போவதில்லை.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக பொறுக்கித் தின்னும் தமிழ் எடுபிடிகளை காட்டுவது போல், கண் துடைப்புக்கு அற்ப நிவாரணங்களைக் காட்டி நிற்கின்றது. மக்களை ஏதுமற்ற பரதேசிக் கூட்டமாக தமிழ்மக்கள் வாழ்வதையே, பேரினவாதம் முனைப்பாக முன்தள்ளுகின்றது.
மறுபக்கத்தில் வாய்ப்பும் வசதியும் கொண்ட தமிழனை, எல்லா வசதியும் வழங்கி வருகின்றது. இதன் மூலம், ஒரு லும்பன் சமூகமாக மாற்றி வருகின்றது. யாழ்குடா இந்த வகையில் உச்ச நிலையை அடைந்துள்ளது. சமூக விழுமியங்களை எல்லாம் இழந்து, அராஜகத்தின் போக்கிலான லும்பன்தனத்துடன் கூடிய ஒரு நுகர்வெறி சமூகமாக சிதைய வைக்கப்பட்டுள்ளது.
பேரினவாதமும், தன்னார்வ நிதிமூலதனமும் யாழ் சமூகத்தை எதுவுமற்ற நுகர்வு வெறிச் சமூகமாக்கியுள்ளது. இதற்கு புலம்பெயர் பணம் ஊக்கமளிக்கின்து. இந்த யாழ் சமூகத்துக்கு வெளியில் நுகரவே முடியாத பரதேசிக் கூட்டமாக தமிழ்மக்களை மாற்றியுள்ளது. இது கிழக்கில் உச்ச நிலையை எட்டியுள்ளது. மகிந்த சிந்தனையிலான பேரினவாத பாசிசம், பரதேசித்தனத்தை கிழக்கில் "உதயமாக்க", வடக்கில் நுகர்வு வெறி லும்பன்தனத்தை வடக்கின் "வசந்தம்" ஆக்கியுள்ளது.
மக்களை ஏமாற்றி வெல்வதை குறிக்கோளாக கொண்ட தேர்தல் நாடகங்கள், திடீர் கூத்துகள், இதை பலமடங்காக்கி வெம்பவைக்கின்றது. சமூக அடிப்படையற்ற தமிழ் சமூகத்தை, பேரினவாதம் திட்டமிட்டு விதைக்கின்றது. இதற்குள் அரசியல் புளுக்கின்றது. புளுக்களை கையில் தூக்கி வைத்துக்கொண்டு, சமூகத்தை வழிநடத்த முடியும் என்கின்றனர் "முன்னேறிய" மலட்டுக் கூட்டங்கள். அரசியல், இலக்கியம்… என அனைத்தும், சமூகத்தை சார்ந்து நின்று அறிவூட்டும் சமூக கடமையை மறுத்து இயங்குகின்றது. இதை மீறி போராடுவதே, வரலாறு எம் மீது சுமத்தும் கடமையாக நாம் காண்கின்றோம்.
பி.இரயாகரன்
16.01.2010