தமிழ் ஈழத்தை சிலர் மீண்டும் வட்டுக்கோட்டைக்கு பின்நோக்கி இழுத்துச் செல்கின்றனர்! புலம்பெயர் மககள் மத்தியிலுள்ள "புலன் பெயர்ந்த" சிலர் இதற்கு கொள்கை கோட்பாடுகள் வகுத்து, புலம்பெயர் மக்களை வட்டுக்கோட்டைக்கு அழைத்துச் செல்ல முற்படுகின்றனர்!
தமிழ்த் தேசியத்தின் மிதவாத வலதுசாரியத் தலைவர்களில ஒருவரான் காலம் சென்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களே, வட்டுக்கோட்டை மாநாட்டின் பிரதான தீர்மானமான தமிழ் ஈழக் கோரிக்கையை அன்றே ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அவரின் மைந்தர்களே ஒப்புக்கொணடுள்ளனர். வட்டுக்கோட்டை மாநாட்டில் அமிர்தலிங்கம் உட்பட உணரச்சிவசப்பட்ட இளைஞர்களின் நிர்ப்பந்தத்தின் நிமிர்த்தமே செல்வநாயகம் அவர்கள் தமிழ் ஈழத்தை மனப்பூர்வமின்றி ஏற்றுக்கொண்டார்!
வட்டுக்கோட்டை "தமிழ் ஈழம்" தமிழர் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒன்று. இது தமிழ்பேசும் மக்களின் முழு அபிலாசைகளையும் பிரதிபலிக்காத ஒன்று! இதை எவ்வித சமூக விஞ்ஞானப் பார்வையோ ஆய்வோ இன்றி இளைஞர் இயக்கங்கள் அன்று கையில் எடுத்தன! இதன் விளைவு பல இயக்கஙகள் துரோகிகள் (புலிகளால்) ஆகி, பின்பு ஐனநாயக நீரோட்டமாகி, இன்று தமிழ் மக்களின் விரோதிகளாகியுள்ளனர்! புலிகள் வட்டுக்கோட்டையில் இருந்து புறப்படடு நந்திக் கடற்கரையில் தங்கள் தமிழ் ஈழ அரசியலை முடித்து வைத்துள்ளனர்!
தமிழ் ஈழம் பொத்தாம் பொதுவாக பேசுவதற்கு–கேட்பதறகு இதமான ஒன்றுதான்;! ஆனால் அதற்குள் ஆழமான ஆய்வோ-சமூக விஞ்ஞானப் பார்வை என்பதோ இல்லை!
தமிழ்மக்கள் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட ஓர் சமூக அமைப்பல்ல! குறுந்தேசிய இனப்பார்வை கொண்ட "தமிழ்தேசியம்" இதை இவ்வாறே கணிக்கின்றது! இத்தமிழ்த்தேசியம் மலையக முஸ்லீம் மக்களை தேசிய இனமாக கருதுவதே இல்லை! இவற்றை விடுத்து யாரும் தேசிய இனப்பிரச்சினையை கணித்துவிட முடியாது!
புலிகளின் கடந்த முப்பது ஆண்டுகால குறுந்தேசிய இனவாத அரசியல் சிங்கள-முஸ்லீம்-தமிழ் மக்களை கடும் விரோதிகள் ஆக்கிற்று! மலையக தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்திலிருந்து மேலும் அந்நியமாக்கிற்று! இதனால் தமிழ்மக்கள் தமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான பலவற்றை இழந்துள்ளனர்! இழந்தவற்றை மீளப்பெற மீள்போராட்டமும் கால அவகாசமும் தேவை!
இன்று தமிழ்மக்களின் தாயக பூமி சிங்களப் பேரினவாதத்தின் காலடியில் நசுங்குண்டுள்ளது! குடாநாடு திறந்த வெளிச் சிறைச்சாலை ஆகியுள்ளது! வன்னியில் லட்சக்கணக்கான மக்கள் முட்கம்பி வேலிக்குள்! இவை எல்லாவற்றிற்கும் மேலாக வன்னி நிலப்பரப்பில மாபெரும் மனிதப் படுகொலைப் பேரலவமே நடந்தேறியுள்ளது! இப்பேரவலத்தால் வன்னி நிலப்பரப்பு மயான பூமியாகியுள்ளது!
இப் பூமியிலேயே பிரபாகரன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் படுகொலைகள் செய்யப்பட்டு, எலும்புக்கூடுகளாக தலையற்ற முண்டங்களாக கிடக்கின்றனர்! இவர்களுக்கு கடந்த காலங்களில் வட்டுக்கோட்டை நோக்கிப் புறப்படவுள்ள "தமிழஈழக்கார்கள" ஓர் அர்த்தமுள்ள இறுதி அஞ்சலியோ இறுதி மரியாதையோ செய்ய முயலவில்லை! மாறாக இயேசு சீவிக்கின்றார்! என்ற பாங்கிலேயே காட்டினர்! காட்டுகின்றனர்!
இம்மனோநிலை கொண்ட புலம்பெயர் வாழ்வின் சிற்சிலதுகள் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழ்ஈழம், பிரபாகரன் சீவிக்கின்றார் என்ற பாங்கில் பல கதைகள் சொல்கின்றார்கள். இவர்கள் சமகால சர்வதேசிய-தேசிய நிலைமைகளை கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. மாறாக பழமைவாத பிற்போக்கு குறுந்தேசியத்தின் தொடரையே தொடர்கினறனர்.
இன்று எமது நாடு மகிந்தாவின் குடும்ப ஆடசி ஒன்றையே மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகின்றது. அரசின் சகல மேல்மட்டங்களிலும் மகிந்தாவின குடும்ப உறவினர்கள் 300பேர் வரை பதவி வகிக்கின்றனர். இதற்கிசைவாக சர்வதேசியக் கூட்டாளிகளின் உதவியுடன் அரசு இயந்திரமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி அமைப்பு முறையும் இதற்கு ஒத்தாசை புரிகின்றது
இதனூடே எமது நாட்டின் அரசியல் சர்வாதிகார-பாசிசத்தை நோக்கியே செல்கினறது. பேச்சு-பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்க்ள படுகொலை செய்யப்படுகின்றனர். பலர் நாட்டை விட்டே வெளியேறிவிட்டனர். ஐனநாயகம் உள்ளிட்ட அனைத்துச் சுதந்திரங்களையும் தமிழ்மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் இழந்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியவாதிகள் வட்டுக்கோட்டையில் இருந்து புலம்பெயர்வரை சொல்ல முற்படுவதும், தனிஈழம் கிடைத்து இனத்தை இனம் ஆள்வதால் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீரும் என்பதே. உலகில் பலநாடுகளில் இனத்தை இனம் ஆள்கின்றனர். இதனால் அம்மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததாக வரலாறே இல்லை. எமது நாட்டிலும் இவர்கள் சொல்வது போல் சிங்கள இனத்தை சிங்களவர்கள்தான் ஆட்சி செய்கின்றனர். இதனால் சிங்கள மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக சொல்லமுடியுமா?
சிங்கள மக்களே ஐனநாயகம் உட்பட்ட அனைத்துச் சுதந்திரங்களுக்கும் தாங்களே போராட வேண்டியுள்ளது. தாம் நினைக்கும் ஓர் சுதந்திரமான ஐனநாயகப் பண்புடைய நிர்வாக அரசியலை, அரசியல் கட்சிகளை குறைந்தது உள்ளுராட்சி சபைகளிலேயே நிலைநிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி ஆட்சி முறையையே மாற்றத் திராணியற்றவர்களாகவே உள்ளனர். காரணம் மகிந்தா இன்னொரு புலியாக –பிரபாகரனாக செயற்படுகின்றார்.
புலிகளின் கடந்த முப்பது வருட செயற்பாட்டால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, நாடு கடந்து "வட்டுக்கோட்டைக்கு வாக்களிப்பதால்" பெறமுடியும் என்று சொல்ல முன்வருவது நகைப்பிற்குரிய புலுடா அரசியலே.
தமிழ்ஈழம் நாடு கடந்த புலம்பெயர் மக்களின் பலத்தால் கட்டியெழுப்பப்படும்! இப்பாங்கில் இணையதளங்களில் கட்டுரைகள் கூட புனைகின்றார்கள். புலிகள் கூட தம் இறுதிக் காலங்களில் புலம்பெயர் சமூகத்தை ஓர் வலுவான சக்தியாகவே நம்பிச் செயற்பட்டனர். ஆனால் அவர்களால் (புலிகள் நினைத்ததுபோல்) அப்படி செயற்பட முடியாமலே போயிற்று.
புலம்பெயர் சமூக எண்ணிக்கை சில நிகழ்வுகளுக்கு மக்களின் திரளான வருகை போன்றவைகளை வைத்து அதை ஓர் வலுவான போராடும் சக்தியாக கருதமுடியாது. புலம்பெயர் மக்கள் அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் ஆர்வம் அற்றவர்கள் நிலையிலும், குறிப்பாக இளைய தலைமுறை அரசியல் புரிதல் அற்ற சமூகமாக அந்நியப்பட்ட நிலையிலும் உள்ளது. எப்படி இருந்தபோதிலும் இச்சமூகம் புலத்தின் துணைச் சக்தியாகவே செயற்படமுடியும்.
சமகால அரசியல் நிலையில் புலத்தின் மக்கள் அரசியல் தலைமையற்ற அநாதைகள் ஆகியுள்ளனர். கடந்த காலஙகளில் அரச-புலி பயங்கரவாதம் நடாத்திய தொடர்ச்சியான ஒடுக்குமுறையால் போராடும் ஆற்றலை இழந்துள்ளனர். இதனால் அவர்களின் உடனடித் தேவை, அவர்களை அநாதைகள் அற்றவர்களாக்கி, சகல ஓடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் ஆற்றலை பெற சிந்திக்க வைப்பதுமேயாகும்;! இதுவே புலம்பெயர் சமூகத்தின் பாரிய பணியுமாகும்!
14.11.2009