மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தின் ஜங்கல் மகால் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மேதினிப்பூர் பகுதியிலுள்ள சங்கராயில் போலீசு நிலையத்தைத் தாக்கி, அதிந்திர நாத் தத்தா என்ற போலீசு அதிகாரியைக் கடந்த அக். 20 அன்று மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். பி.பி.சி. செய்தியாளர்களின் முயற்சியால் அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமிடையே பேரம் பேச்சு வார்த்தை நடந்து அக்.22ஆம் தேதியன்று போலீசு அதிகாரியான அதிந்திரநாத் தத்தா விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 14 பழங்குடியினப் பெண்கள் உள்ளிட்ட 23 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப் 3ஆம் தேதியன்று கைது செய்யப் பட்டு, எவ்வித விசாரணையுமின்றி ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்கார் வட்டார பழங்குடியினப் பெண்கள் மீது கொலை முயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள், சதி செய்தார்கள் என்றெல்லாம் பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன. தாங்கள் எதற்காகக் கைது செய்யப்பட்டோம், தற்போது எதற்காக விடுதலை செய்யப்படுகிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்த 14 பெண்களுக்கு ஊருக்குத் திரும்பிச் செல்வதற்குக் கூட போக்குவரத்து செலவுக்குக் கையில் காசில்லை. அவர்களது உற்றார் உறவினர்கள் கூட, தங்களையும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று கைது செய்வார்களோ என்ற அச்சத்தால் சிறையிடப்பட்ட அவர்களைப் பார்க்க வரவில்லை.
கைக்குழந்தையை கணவனிடம் தவிக்கவிட்டுக் கைதாகியுள்ள 22 வயதான பெண் முதல், இன்னொருவரின் தோளைப் பிடித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி நடக்கும் சுதாராணி பாஸ்கே என்ற 70 வயதான மூதாட்டி வரை அனைவருமே மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாம்! இவர்கள் போலீசுக்காரர்களைக் கொன்றொழிக்க முயற்சித்தார்களாம்!
""தேடுதல் வேட்டை என்ற பெயரில் போலீசார் எங்கள் குடிசைகளை இடித்துத் தள்ளிவிட்டார்கள். எங்களை ஆபாசமாகத் திட்டி அடித்து நொறுக்கிய போலீசார், எங்களது தட்டுமுட்டுச் சாமான்களைக்கூட நாசப்படுத்திவிட்டனர். எங்களிடம் சமைப்பதற்கு மண் பானை கூட இல்லை. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் யார் என்று கேட்டு எங்களைச் சித்திரவதை செய்கிறார்கள். எங்களுக்கு அவர்கள் யாரென்றே தெரியாது என்று சொன்னதற்காக, போலீசார் எங்களை மானபங்கப்படுத்தி அடித்து இழுத்து வந்து, அவர்களைக் கொல்ல முயற்சித்ததாக வழக்கு போட்டுள்ளார்கள்'' என்று சிறை வாயிலில் குழுமியிருந்த செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க குமுறினார், ஒரு பழங்குடியினப் பெண். நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்டாலே, மக்களுக்கு போலீசு அதிரடிப்படையின் கொடூர முகம் நினைவுக்கு வரவேண்டும் என்பதும், அவர்கள் அஞ்சி நடுங்கி நக்சல்பாரிகளை விட்டு ஒதுங்க வேண்டும் என்பதும்தான் இந்த நடவடிக்கைகளின் நோக்கம். மே.வங்க போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில், போலீசும் துணை இராணுவப் படைகளும் நடத்திவரும் அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கும் அட்டூழியங்களுக்கும் இதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்?
வங்கத்திலிருந்து ஆந்திரா வரை இம்மாநிலங்களில் நடந்துவரும் மறுகாலனியாதிக்கச் சூறையாடலையும், பழங்குடியின மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதையும் எதிர்க்கும் எவரும் நக்சல்பாரிகள், தீவிரவாதிகள், அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். இப்படித்தான், சட்டிஸ்கரில் மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென் சிறையிலடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார். அதாவது, ""நீ எங்களோடு இல்லையென்றால், நீ ஒரு பயங்கரவாதி!'' என்பதுதான் அரசின் வாதம். இதன்படியே, அரசின் பயங்கரவாதத்தை எதிர்த்து நக்சல்பாரிகளுக்கு தார்மீக ஆதரவளிப்போரைக் கூட மிரட்டும் நோக்கத்துடன் மருத்துவர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை இயக்கத்தினரின் பட்டியலைத் தயாரிக்கக் கிளம்பியுள்ளது, மைய அரசு.
இனி கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் என்று பேசுவோரும், தோழர்களே என்று அழைப்போரும், செங்கொடி ஏந்துவோரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போரும் தீவிரவாதிகள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்படலாம். உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலை எதிர்ப்போர் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கிறார்கள் என்று பயங்கர வாத ""ஊபா'' சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம். எண்ணெய்க்காக ஈராக் மீது போர்தொடுத்து அந்நாட்டு மக்களைக் கொடூரமாக வதைத்து, ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் வழியில், இந்திய ஆட்சியாளர்கள் உள் நாட்டு வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறை யாடலுக்காக உள்நாட்டு மக்கள் மீதே ஆயுதப் படைகளையும் அடக்குமுறையையும் ஏவி நாட்டை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கக் கிளம்பிவிட்டனர்.
இனி ஒளிந்து கொள்ளவோ, நடுநிலை வகிக்கவோ வாய்ப்பில்லை. மறுகாலனியாக்க உள்நாட்டுப் போரின் ஆணி வேராக உள்ள இன்றைய அரசியலமைப்பு முறையை வெட்டியெறியாதவரை, இந்தப் போர் நிற்கப் போவதுமில்லை.
ஆனால், மிக மூர்க்கமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இப்போருக்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட் டிப் போராடும் மாபெரும் அரசியல் கடமையை மாவோயிஸ்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். மக்களைப் புரட்சிக்கு அணியமாக்குவதும் தலைமை தாங்குவதும்தான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பணியே அன்றி, மக்களின் சார்பாக புரட்சி செய்வதல்ல. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களுடன் புரட்சியாளர்கள் "ஒண்டிக்கு ஒண்டி' நடத்தும் சண்டையுமல்ல. ஆனால், மக்களுக்குத் தாங்களே "விடுதலையை வழங்கப் பொறுப்பேற்றிருக்கும்' இடது சாகசவாதிகளான மாவோயிஸ்டுகள் இப்படித்தான் கருதிக் கொள்கிறார்கள். அவர்களுடைய சுத்த இராணுவவாதக் கண்ணோட்டம், மக்களின் அரசியல் முன்முயற்சியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் பிற தனியார்மய தாராளமய நடவடிக்கைகளுக்கு எதிராக நாடெங்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மறுகாலனிய எதிர்ப்பு என்ற அரசியல் கண்ணோட்டமோ, இந்த அரசியலமைப்பைத் தூக்கியெறிய வேண்டுö மன்ற இலட்சியமோ அத்தகைய போராட்டங்களுக்கு இல்லை. அத்தகைய அரசியல் முழக்கங்களை முன்வைத்து மக்களைத் திரட்டுவதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமை. புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது என்பதன் பொருள் இதுதான். இப்படிப்பட்ட புரிதலோ, இவ்வாறு புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட முடியும் என்ற நம் பிக்கையோ மாவோயிஸ்டுகளிடம் இல்லை. அரசுக்குத் "தொந்திரவு' தரும் தமது இராணுவ சாகச நடவடிக்கைக ளின் மூலம், மக்கள் விழிப்புற்று புரட்சிக்கு அணிதிரண்டு விடுவார்கள் என்று மாவோயிஸ்டுகள் இன்ன மும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.
அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்களது இராணுவ சாகசவாத நடவடிக்கைகள் அனைத்தும், ஆளும் வர்க்கங்கள் தம்மை தேசத்தைப் பாதுகாக்கும் நாயகனாகக் காட்டிக் கொள்ளவும், தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்ளவும், புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தித் தாக்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. மிகப் பெரிய உள்நாட்டுப் போர் நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சூழலில், அதற்கெதிராக அனைத்துப் புரட்சிகரஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலையில், மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் புரட்சிக்கு பெரும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தி வருகின்றன.
· பாலன்