ஆகஸ்டு பதினைந்து. தெருவெங்கும் தோரணங்கள். செவியை பிளக்கும் ‘சுதந்திரகீதங்கள்’. முச்சந்திகளில் முளைத்திருக்கும் சாமியானா பந்தல்கள். கதர்சட்டை போட்ட கந்துவட்டி அன்னாச்சியிலிருந்து, சபாரிசூட் போட்ட ரியல்எஸ்டேட் அதிபர் வரைக்கும் அவரவர் தகுதிக்கேற்ப மிட்டாய் கொடுத்தும் பிரியாணி வழங்கியும் பரிமாறிக்கொண்டனர் ‘சுதந்திரதின’ வாழ்த்துக்களை!அயிட்டம் பாட்டுக்கு ஆடிச்செல்லும் அம்மணிகளை அழைத்து வந்து, அர்ஜூனின் ‘தேசபக்தி காவியங்களை’ திரையிட்டு, தொலைக்காட்சிகளும் கொண்டாடின ‘சுதந்திரதின’த்தை! இந்தக் கூத்துக்களுக்கு இது அறுபத்து மூன்றாமாண்டு.
தொலைக்காட்சிக்குள்ளே தலையைவிட்டுக் கொண்டு பொழுதைக் கழிப்பதில் எனக்கு அவ்வளவு சுவாரசியமில்லை. கூடவே ‘சுதந்திரதின’ சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்கும் அளவுக்கு பொறுமையுமில்லை. வீட்டிற்குள்ளே அடைபட்டுக்கிடக்க மனமில்லை. ‘சுதந்திரமாய்’ வெளியே சென்று சுற்றிவிட்டு வரவேண்டும் எனக்கு.
எட்டாங்கிளாசில் என்கூட படிச்ச சோமசுந்தரத்தை பார்த்து வரலாமென திடீர் திட்டம். மதுரவாயலில் அவன் வீடு. ஆசியாவின் மிகப்பெரியதும் ‘சகலவசதி’களும் நிறைந்ததுமான கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கிறது மதுரவாயல். நாசியைத் துளைக்கும் நெடி, கூவத்தின் கரையெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் அவலட்சனமாய் அமைந்திருக்கும் அந்த குடிசைகளில் ஏதோ ஒன்றுதான் சோமுவின் வீடு.
ஏற்கெனவே, ஒன்றிரண்டு முறை சென்றிருக்கிறேன் என்றாலும், வாரமலரில் வரும் புதிர்விளையாட்டுக் கோடுகளைப் போலவே, தலையைச் சுற்றவைக்கும் அந்த தெருக்கள் இன்னும் பரிச்சயமாகவில்லை. வடக்கு தெற்கு தெரியாமல் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்த அனுபவமும் இருக்கிறது. டயர்வண்டி ஓட்டித்திரிந்த அரைடிக்கட்டுகளிடம் கேட்டு விசாரித்துக் கொண்டே, ஒரு வழியாய் போய்ச்சேர்ந்தேன் சோமுவின் வீட்டுக்கு.
சென்ற முறை பெய்த மழைவெள்ளத்தில் அடித்து சென்றது போக, செங்களோடு ஒட்டிக்கொண்டிருந்தது செம்மண்பூச்சு. போன பொங்கலுக்கு அடிச்ச சுண்ணாம்பின் அடையாளம் தெரியாதபடிக்கு அப்பிக்கொண்டிருந்தது அடுப்புக்கரி.
பல வருடங்களுக்கு பிறகு வந்திருக்கிறேன் என்றாலும் என்னை அடையாளம் கண்டு, பேரைச்சொல்லி கூப்பிட்டு, நலம் விசாரித்தாள் சோமுவின் தாயார். மதிய உணவு அப்போதுதான் தயார் செய்துகொண்டிருந்தார். வந்த களைப்பிற்கு இதமாய் இருந்தது அவர் வழங்கிய நீராகாரம்.
சோமுவைப் பற்றி விசாரித்தேன். எட்டாங்கிளாசோடு படிப்பை நிறுத்திவிட்டு டிரைவிங் கற்றுக்கொண்டான் என்றும், தற்போது மெக்கானிக்செட் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் கூறியதைக் கண்டு கலக்கமுற்றேன். பள்ளிப் படிப்பில் அவனுக்கு கீழ்தான் நான். படிப்பிலும் விளையாட்டிலும் படுசுட்டி சோமு. மதுரவாயல் கபடி டீம் கேப்டனாகவும் இருக்கிறான் என்பதுதான் எனக்கு ஆறுதலான ஒன்று.
ஊருக்குதான் ‘சுதந்திரதின’ கொண்டாட்டம். அவனுக்கு இல்லை. ஏதோ கல்கத்தாவிலிருந்து வந்த லாரி ஒன்றை அவசரமாக பழுதுநீக்கி தரவேண்டுமென்று காலையிலே அழைத்து சென்றுவிட்டதாய் தெரிவித்தார் சோமுவின் தாயார். சற்றுநேரம் குடும்ப விசாரிப்புகளை முடித்துக் கொண்டு மெக்கானிக் ஷாப்பிலே அவனை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு கிளம்பினேன்.
சரக்கு லாரிகள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் ஓர் ஓரமாய் ஒதுங்கியிருந்தது அந்த மெக்கானிக் ஷாப். கிழிசலும் கிரீசும் மலிந்திருந்த முரட்டுத் துணியுடுத்தி மும்மரமாய் இயங்கிக் கொண்டிருந்தான் என் சோமு, அந்த லாரிக்கடியில்.
முன்னங்கையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு, அதிர்ச்சி விலகாத விழிகளை மூடித்திறந்தபடியே வந்துநின்றான் என் முன்பு. “டேய் சம்பு பார்த்து எவ்ளோ நாளாவுது எப்படீடாயிருக்க” அவன் குரலில் ததும்பி வழிந்தது ஆறு வருடங்களுக்கு முந்தியிருந்த அதே உற்சாகம்.
“டேய் சம்பு கொஞ்சம் பொறுடா, இன்னும் கால் அவர்ல வேலையை முடிச்சிருவேன். வண்டி உடனே கல்கத்தா கிளம்பனும். ரொம்ப அர்ஜென்ட் வேலை. சாரிடா” அவனிடமிருந்து அடுத்தடுத்து விழுந்தது வார்த்தைகள். வெற்று புன்னகையைத் தவிர வேறொன்றும் வெளிப்படவில்லை என்னிடம்.
சோமு வரவழைத்திருந்த தேநீரைப் பருகிமுடிப்பதற்குள் அவனும் தயாரானான். பழைய நினைவுகளை அசைபோட்டபடியே அவன் வீட்டையடைந்தோம். மதிய உணவு அவனோடுதான். தக்காளி மசியலில் இரண்டு முட்டையை அவித்து போட்டிருந்தார் சோமுவின் தாயார். “நீ வருவன்னு முன்னமே சொல்லக்கூடாது தம்பி, ரெண்டுநாளா மார்கெட்டுக்கு போவலை. நீ வந்த நேரத்துக்கு வீட்ல காயிகூட இல்லை.” உண்மையிலே வருத்தப்பட்டுக்கொண்டார் அவர். “அதனால் என்னம்மா இன்னொருநாள் சொல்லிட்டு வாரேன்” என சொல்லிவைத்தேன்.
“என்ன சோமு வீட்டை கொஞ்சம் சரிபண்ண கூடாதாடா? மழையில எப்படிடா சமாளிக்கிறீங்க” வெகுளியாய் கேட்டேன். “அதையேண்டா கேக்குற இதுவே இன்னிக்கா நாளைக்கானுட்டுருக்குது. நாங்க இங்க வந்து வருசம் இருபது ஆகுது. இப்ப திடீர்னு கார்ப்பரேசன்லேருந்து வந்து கூவம் ஆத்துக்குமேலே அதிஉயர் மேம்பாலம் கட்டப்போறோம். வீட்டை காலிபண்ணுங்கன்னு எல்லாத்தையும் மிரட்டிட்டு போயிருக்கான். அதிகாரிலேருந்து அமைச்சர் வரைக்கும் கேட்டுப்பார்த்தும் நமக்கு சாதகமான நிலைமை எதுவுமில்லைடா. வெறுத்துப்போச்சு. இப்படியே வருசம் ஒன்னும் ஓடிடுச்சி. என்ன பன்றதுன்னே தெரியலை” என நொந்து கொண்டவனிடம் ஆறுதலாய் பேசக்கூட வார்த்தைகளில்லை என்னிடம்.
“சரி நேரமாச்சு நான் கிளம்புறேன். நாளைக்கு காலேஜுக்கு போகனும்.” விடைபெற்றுக் கொண்டேன் அந்தக்குடும்பத்திடமிருந்து.
“சரி வா சம்பு போகலாம்.” என கூடவே வந்தான் சோமு.
அந்த குடிசைகளையொட்டி எழும்பியிருந்த ஆளுயுர காம்பவுண்ட் சுவற்றை கையால் உரசியபடியே நடந்து சென்றோம். கூவத்தை மறித்து கம்பீரமாய் கட்டப்பட்டிருந்தது அந்தக் கட்டிடம். அதன் முகப்பு டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி என்று அடையாளப்படுத்தி நின்றது. ஆயிரம் கேள்விகள் மனதில் தோன்றி மறைந்தாலும் என் வாயில்தான் வந்து தொலைக்கவில்லை. என்னதான் இருந்தாலும், இந்த விசயத்தில் ஏ.சி.எஸ்.க்கு இருக்கும் ‘சுதந்திரம்’ அந்த ஏழைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிட்டிடுமா என்ன? சரி, அது கிடக்கட்டும்.
நீண்ட மௌனத்திற்கு பிறகு, மெல்ல பேசினான் சோமு.
“நாங்க கூட எவ்வளவோ தேவலாம் சம்பு. இங்க பாலம் கட்டறதுக்காக வடமாநிலங்களிலிருந்து வந்து வேலைசெய்யிறவங்களை நினைச்சா, ரொம்ப வேதனையாயிருக்கு. இது எல்லாம் என்ன பிழைப்பு என என்னத்தோனும். பாவம் அவர்கள். சொந்த பந்தங்களை விட்டுட்டு, வருசம் முழுதும் அநாதையா இங்க கிடக்கிறாங்க. ஒண்ட குடிசை கூட இல்லை. காத்து மழைக்கு தாங்காத வெறும் தகர சீட்டு போட்ட கூடாரத்துலதான் வாழ்க்கையை ஓட்டுறாங்க.” என அவர்களுடைய வாழ்க்கைக்கான போராட்டத்தை விவரிக்கத்தொடங்கினான், சோமு.
“அடச்சே என்ன வாழ்க்கை இது. ஊருல விவசாயம் பண்ணி போண்டியாய் போன ஆளுங்களையெல்லாம், காண்ட்ராக்ட்காரனுங்க பத்தாயிரம் இருபதாயிரம் மொத்தமா தாரேன்னு சொல்லி குடும்பத்தோட அங்கயிருந்து கூட்டிட்டு வந்திடுறானுங்க. இங்கவந்ததும் அடிமை மாதிரி வேலை வாங்கிட்டு, அன்னன்னைக்கு வயித்த ரொப்ப ஒரு குடும்பத்துக்கு அம்பதோ அறுபதோ தர்ரானுங்க. அதில வேலைசெஞ்ச களைப்பு தீர முப்பது நாப்பதுக்கு ஆம்பிள ஆளுக பாக்கெட் சாராயத்தை ஊத்திகிரானுங்க. மிச்ச இருக்கறதுல்ல, ‘கலைஞர் அரிசி’யை பிளாக்ல வாங்கி பொங்கி திங்கிறாங்க. அந்த கொழந்த குட்டிக என்ன பாவம் செஞ்சிச்சோ தெரியலை. படிப்புமில்லாம ஊட்டமுமில்லாம இவங்க கூடவே கிடந்து வதைபடுதுங்க.
நோய் நொடின்னு வந்தா டாக்டருகிட்ட போக காசு பணம் இல்லாம திண்டாடுறாங்க. அதுல பலர் வேற வழியே இல்லாம, காண்ட்ராக்ட் காரண்ட்டேயும் லாரி டிரைவருகிட்டேயும் பொண்டாட்டிங்களையே அனுப்பி வைக்கிற கொடுமையும் நடந்துட்டுருக்குது” என மூச்சிறைக்க சோமு சொல்லி முடித்த போது, நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பனை சந்தித்த சந்தோசம் அது தோன்றிய கனமே மறுத்துப்போயிருந்தது. இத்தனை காலம் நான் அறிந்திராத வேறோர் உலகை கண்டு மனம் சிறுத்துப்போனது. வழக்கம் போல வார்த்தைகள் எதுவுமின்றி, வெறுமை அப்பிய புன்னகையோடு வெளியேறினேன் மதுரவாயலை விட்டு.
ஆம். இன்று ஆகஸ்டு பதினைந்து. தெருவெங்கும் தோரணங்கள். செவியை பிளக்கும் ‘சுதந்திரகீதங்கள்’. முச்சந்திகளில் முளைத்திருந்தன சாமியானா பந்தல்கள். கதர்சட்டை போட்ட கந்துவட்டி அன்னாச்சியிலிருந்து, சபாரி போட்ட ரியல்எஸ்டேட் அதிபர் வரைக்கும் அவரவர் தகுதிக்கேற்ப மிட்டாய் கொடுத்தும் பிரியாணி வழங்கியும் பரிமாறிக்கொண்டிருந்தனர் ‘சுதந்திரதின’ வாழ்த்துக்களை!
http://rsyf.wordpress.com/2009/09/30/பொன்னான-ஆகஸ்டு-பதினைந்து/
-சம்பு.
பொன்னான ஆகஸ்டு பதினைந்து…
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode