Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனிமையாகத்தான்
இருந்திருக்கும்
எல்லாருக்கும்

எப்போதாவது,
சொந்த ஊருக்குச்
செல்வதென்பது!

ஏதோ,
இழவு வீட்டிற்குச்
செல்வது,
போன்ற துயரம்
கவ்விக் கொள்கிறது
எனக்கு மட்டும்!

யாரைப் பார்த்தாலும்,
“என்ன பொழப்பு இது,
செத்த பொழப்பு”
என்று அலுத்துக் கொள்ளும்,
ஊருக்குத்
துள்ளிக் கொண்டா
போகமுடியும்?

கடலை விளைந்த,
சாலையோர வயல்கள்
எல்லாம்,
கல்லறை போல,
கற்கள் முளைத்து,
காமாட்சி, மீனாட்சி
என புதிய நகர்களைப்
பிரசவித்திருக்கின்றன!

கரம்பு வயல்களில்,
கணுக்கள் வெட்டப்பட்டு,
கழுத்து வலிக்குமளவு,
வளர்ந்து நிற்கின்றன,
சவுக்கு மரங்கள்
காகித ஆலைகளுக்கென!

நான்கைந்து வாரங்களாய்,
தண்ணீரின்றி,
நாசமடைந்து நிற்கிறது
நவீனக் கரும்பு வயல்,
நாற்பதாயிரத்தை விழுங்கிவிட்டு!

தாய் மனத் தலைவனின்
பால்விலை உயர்வுச்
செய்தியைக் கூட அறியாமல்,
துருத்திய எலும்புகளுடன்
தேடியலைகின்றன
காய்ந்த புற்களை,
பால் வற்றியப் பசுக்கள்!

ஊரே சுடுகாடு போலக்
காட்சியளித்தாலும்,
உள்ளூர சந்தோசம்தான்
இன்னும் யாருமே
தூக்கில் தொங்கவில்லை!

கடனை வாங்கியாவது,
கல்லைக் குடைந்து
நீர் பார்க்கத்
துடிக்கிறார்கள்
எல்லாருமே!

ஊரே நாறும்போது,
வீடுமட்டும்
மணக்குமா என்ன?

கால் நூற்றாண்டாய்,
காடு மேடெல்லாம் சுற்றிக்,
குருவி போல் சேர்த்து,
கடன்பட்டு வாங்கிய
காடு முழுவதும்,
காய்ந்து கிடக்க,
கால் மூட்டுத்
தேய்ந்து போய்,
கருக்கரிவாள்களை
எல்லாம்,
துருப்பிடிக்க விட்டபடி,
கனவு காணும் பெற்றோர்களே!

அடித்துப் பிடித்துப்
படிக்க வைத்த
அருமை மகன்,
அரசு வேலையோடு
வருவானென!

ஆயிரம் பேரில்
ஒருவனுக்கு,
வேலை தரவே,
ஆறேழு வருடம்
யோசிக்கும்
அரசாங்க யோக்கியதை
அவர்களுக்கெப்படித் தெரியும்.

விவசாயி வாழ்வே
வெறுங்கனவாகிப் போன பின்பு
நடுமண்டியில் உறைக்கிறது
நாட்டு நிலைமை!

விரக்தியின் விளிம்பில்,
வெறுபேறிப் போனவர்களாய்
தூக்குக் கயிற்றை,
முத்தமிட்டு,
வீரர்களாகிறார்கள்
விவசாயிகள்.

அந்த,
நல்வாய்ப்பை நல்கி
நாடெங்கும்,
பசுமையே இல்லாமல்
செய்தவர்கள்
பசுமைப் புரட்சியின்
தந்தைமார்கள்!

இவர்கள்,
இளைஞர்களை
கனவு காணச் சொல்லிவிட்டு,
இந்திய இதயங்களின்
கனவுகளை,
கருவறுத்தவர்கள்
முதுகெலும்பை
முறித்துப் போட்டவர்கள்.

இவர்கள்,
பரிந்துரைத்த,
விதைகளின் வீரியம்
பிரதிபலிக்கிறது
தரிசு நிலங்களில்,
விதவிதமாய்
முளைத்திருக்கின்றன
களைச் செடிகள்,
கட்சி கொடிகள் போல,
பிடுங்குவாரின்றி!

வயலில் அடிக்கும் போது
வேலை செய்யாத
பூச்சிக் கொல்லி கூட
வஞ்சனை செய்கிறது
விவசாயி குடிக்கும் போது!

வெகு வேகமாய்
அழிக்கப்படுகிறது
விவசாயி வர்க்கம்!
விதவிதமாய்ப்
புள்ளி விவரங்கள்
செத்தவர்களைப் பற்றித்தான்!

கணக்கெடுக்க
வக்கின்றி,
விழி பிதுங்கிறது,
வீணர்களின் அரசாங்கம்!

ஒற்றை அஸ்தமனத்தில்,
முடிந்து போவதில்லை
விடியல்கள்!

அழிந்து விடவில்லை
இளைய தலைமுறை!

எவ்வளவு
நாளைக்குத்தான்

மறைத்து வைப்பீர்கள்
கருக்கரிவாள்களை!

அவர்கள்
தயாரில்லை!

அறுவடையைத்
தள்ளிப் போட!

- விடிவெள்ளி

http://vidivellee.wordpress.com/

 

http://www.vinavu.com/2009/09/12/saturday-poems-4/