Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கருப்புப் பணம் அறுபத்துநான்கு இலட்சம் கோடிகள் பற்றிய செய்தி ஒரு பக்கம். வறுமையின் கொடுமையால் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட ஏழ்மைத் தாயைப் பற்றிய செய்தி மறுபக்கம்.


உலகிலுள்ள ஏழை மக்களில் முப்பது சதவிகிதம் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்றொரு அதிர்ச்சி செய்தி வேறொரு பக்கம். செய்தித்தாள்களில் இந்தச் செய்திகளையெல்லாம் பார்க்கும் போது இந்தக் கொடிய ஏழ்மையையும், ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வளமையில் செழிப்பதையும் மாற்ற, ஒரு சூப்பர் ஹீரோ பிறக்க மாட்டானா என்ற அதீத ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம். இந்தியாவின் ஏழ்மையைப் போக்க முடியுமென நிரூபித்துக் காட்டும் செல்லூலாய்ட் அவதாரம்தான் இந்த ‘கந்தசாமி’ ” என்கிறார் இயக்குநர் சுசி கணேசன், குமுதம் இதழில்.

ஏழ்மையை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது என்பது ஒருபுறமிருக்க, ஏழைகளின் அவலத்தை துடைக்க வந்த இந்த சினிமாவின் பட்ஜெட்டும் ஏழைகளைப் போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் தவறு.

இதற்கு இயக்குநர் என்ன கூறுகிறார் என்றால் கதையே பிரம்மாண்டத்தை டிமாண்ட் பண்ணும் கமர்ஷியலான கதையாம். ஏழைகளை கடைத்தேற்ற வந்த நாயகன் விக்ரமின் காஸ்ட்யூமிற்கு மட்டும் முக்கால் கோடி, ஏழைகளுக்கு தொண்டு புரியும் நாயகனை குஷிப்படுத்தும் ஸ்ரேயாவின் கர்ச்சீப் துணி காஸ்ட்யூம் ஒண்ணேகால் கோடி, இருவரும் டூயட் பாடும் மெக்சிகோ ஷூட்டிங்கிற்கு எட்டுக்கோடி, இத்தாலி படப்பிடிப்பிற்கு இரண்டு கோடி, ஏழ்மையை க்ராபிக்ஸ்ஸில் காட்டுவதற்கு மூன்று கோடி இப்படி ஏழைப்பங்காளான் கந்தசாமியின் மெகா பட்ஜெட் நீள்கிறது. எதையும் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டும் தாணு இந்தக் கருமத்தின் பாடல் வெளியீட்டிற்காக இத்தாலியிலிருந்து அழகிகளை குத்தாட்டம் ஆடுவதற்காக கொண்டு வருகிறாராம்.

கந்தசாமி எனும் சூப்பர்மேன் கோலத்தில் விகரம் எதையே முறைத்துப் பார்க்க பக்கத்தில் அடுத்தவன் கண்ணீரை துடைப்பவனே கடவுள் என்ற தலைப்பில் இந்தப் படத்திற்காக வரும் விளம்பரங்களை நீங்களும் பார்த்திருக்கலாம். அதில் பூஜையன்று இந்த படக்குழு இரண்டு கிராமங்களை தத்து எடுத்ததையும், பாடல் வெளியீடன்று முப்பது கிராமங்களை முப்பது வி.ஐ.பிகள் தத்து எடுக்கப் போவதாகவும் மார் தட்டியிருந்தார்கள். புரட்சிப்புயலின் சீடரான கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த ஏழைகளுக்கான கலைப்படைப்பை மார்கெட் செய்யும் இந்த தத்தெடுப்பு நாடகத்திற்கு எத்தனை ஆயிரங்களை பிச்சை போட்டார்கள் என்ற பட்ஜெட் ரகசியத்தை மட்டும் தெரிவிக்கவில்லை. அது அநேகமாக ஸ்ரேயா அணியும் உள்ளாடைகளின் விலையை விட நிச்சயமாக அதிகமிருக்காது.

கந்தசாமி

(படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

 

அதே விளம்பரத்தின் இறுதியில் எல்லாம் அரசாங்கமே செய்து விடும் என இருக்காமல் நாமே உழைத்து முன்னேற வேண்டுமாம் என்ற அரதப் பழசான தத்துவத்தையும் பொறித்திருந்தார்கள். உன்னால் முடியும் தம்பி என்ற இந்த சுய முன்னேற்ற கப்சாவின் யோக்கியதயை அமெரிக்க ரிடர்ன் எம்.எஸ். உதயமூர்த்தியிடம் கேட்டால் அழுது புலம்புவார். ஏதோ முன்னேறுவதற்கான வழி தெரியாமல்தான் இந்த நாட்டின் ஏழைகள் கால் வயிற்றுக் கஞ்சி குடித்துக்கொண்டும், வழி தெரிந்த சுறுசுறுப்பான அம்பானி போன்ற அறிவாளிகள் பத்தாயிரம் கோடி செலவில் வீடு கட்டியும் வாழ்கிறார்கள்! அம்பானிகள் அம்பானிகளாக ‘முன்னேற’ வேண்டுமென்றால் ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாக மாறினால்தான் முடியும். இதைத்தான் ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் இன்னொரு வர்க்கத்திற்கு கொடுக்க முடியாது என்றார் மார்க்ஸ்.

அது போகட்டும், தமிழ் சினிமா முண்டங்கள் இப்படி காஸ்ட்லியாக ஏழ்மையை ஒழிப்பதற்கு பதில் அரசாங்கத்திடம் சொல்லி ஏழைகளை ஆங்காங்கே குண்டு போட்டு கொன்றுவிட்டால் சுலபமாக ஏழ்மையை ஒழித்துவிடலாமே?

 

http://www.vinavu.com/2009/05/29/kandhasamy/