Language Selection

(3)

சிறுபான்மை மக்களின் விடுதலைப் போரடாட்டத்தைப் பொறுத்த வரையில், தரகு முதலாளிய அரசின் இன ஒடுக்கு முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்ற பிரச்சினையே இன்றும் முதன்மை பெற்றிருக்கிறது. இன்று இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்ககடிகளால், மக்களிடம்

 இருந்து எழுந்து வரும் ஜனநாயகக் கோரிக்கைகளை தீர்க்க முடியாமல் கிடப்பில் போட்டு வரும் இவ் அரசு, இதை மூடி மறைப்பதற்காக இனமுரன்பாட்டை முன்தள்ளி வருகிறது. இவ்வாறு இனமுரண்பாட்டை முன்தள்ளி, சிறுபான்மை தேசிய இனங்கள் மீது இன அழித் தொழிப்பாக இதை இலகுவாக நடத்தி வருகிறது. பெருகிவரும் அரசின் ஜனநாயக விரோதத்துக்கு எதிராக மக்கள் போராடாமல் தடுப்பதற்கும், மறுபுறத்தே சிறுபான்மை தேசிய இனங்களின் தேசிய அடையாளங்களை அழித் தொழித்து அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக்குவன் ஊடாக, அவர்கள் ஒரு பலமான தேசிய புரட்சியை நடத்தி விடாதபடியும், இவ் ஏகாதிபத்திய மூலதனத்தைப் பாதுகாக்க இவ்வரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. ஏனெனில் தமிழ்தேசிய புரட்சி, இலங்கையில் வர்க்கப் புரட்சியின் வெளிப்பாடு என்பதை அரசு தெளிவாகவே உணர்ந்துள்ளதுடன், இது ஏகாதிபத்தியத்தின் மையத்தை தாக்கி அழிக்கும் முனைப்பைக் கொண்டது என்பதையும் அது அறியும்.

 

அரசு என்பது ஒரு வர்க்கத்தின் பிரதிநிதி! ஆகவே இவ் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அவ்வர்க்கம், சிறுபான்மை இனத்துக்குள் இல்லையா? என்ற கேள்வியும் உண்டு. நிச்சயமாக சிறுபான்மை இனங்களுக்குள்ளும் உண்டு. அவ்வாறானால் இவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது? அவர்களும் அவ்வாறே இருப்பர். இருக்கின்றனர்.( நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்கள் செயற்படுவர்) இதில் எந்தத் சந்தேகமும் இல்லை. சிறுபான்மை மக்கள் மீது பலத்த இன ஒடுக்குமுறை இருப்பதால் இவர்கள் இதற்குள் ஒளித்து விளையாட, மாறு வேடத்தில் இருக்க முற்படுகின்றனரே ஒழிய, அவ்வர்க்கத்தின் அசல் வரிசுகளாகவே என்றும் இருந்தனர். இருப்பர். இதுதான் இயங்கில்.

 

1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் - தமிழீழத்துக்கான - பிரிவினைக் கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் குதித்திருந்தனர். ஆனால் இக் கூட்டணியை உருவாக்கும் போது, அதாவது 74ல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கிய போது, அதில் யூ.என் பியின் வேதநாயகமும் இணைக்கப்பட்டே இது உருவானது. 77தேர்தலுக்கு முன், ஜே.ஆருக்கும், அமீர் மற்றும் தொண்டமானுக்கும் இடையே இடம்பெற்ற இரகசிய உடன்படிக்கையின் பிரகாரம்: தென் இலங்கையில் தமிழர்கள் யூ.என்.பிக்கு வாக்களிக்குமாறு கூட்டனியால் தூண்டப்பட்டனர். (இவ் உடன்படிக்கை பற்றி 83 இனக்கலவரத்தின் பின்னர் தொண்டமானால் பாராளுமன்றத்தில் பகிரங்கப் படுத்தப்பட்டது.) வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களிடம் பிரிவினைக் கோரிக்கையையும், தெற்குத் தமிழ் மக்களிடம், இனவாத அரசு இருப்புக்கு ஆதரவையும் கோரி, திட்டமிட்ட இரட்டை வேடத்தில் ஏகாதிபத்திய நலன்களுக்காக ஒரு தேசிய இனத்தை அழித்தொழிக்க முற்ப்பட்ட மேற்தட்டு வர்க்கப் பிரிவினரின் சதிதான் இது. ஒரு நூலின் நடுப்பகுதிக்கு எவ்வாறு இரு நுனிகளிலிருந்தும் எதிர் எதிர் திசையில் பயணிக்க முடியுமோ, அவ்வாறான ஒரு வர்க்கத்தின் நலன்களுக்கான சதிப்பயணம்தான் இது. 77ல், 40 வீத விருப்பு வாக்குக்ளை மட்டுமே பெற்ற தமிழீழ பிரிவினைப் போராட்டம், இன்று மிகக் கொடிய இன அழிப்பு யுத்தத்தில் எந்தப்பக்க மக்கள் அழிவுகளையும் பொருட்படுத்தாது, அது தனது வர்க்க நலனை உயர்த்திப்பிடிப்பதில் உயிர்மூச்சோடு இருக்கிறது.


(4)


ஏகாதிபத்திய சிங்கள இனவெறி அரசின் கொடிய ஒடுக்கு முறையில் தமிழ் தொழிலாள, விவசாயிகள், நடுத்தர வகுப்பினர், சிறு உடமையாளர்கள், தேசிய முதலாளிகள் பாதிக்கப்படுவதோடு: தமிழ் தரகு முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் கூட பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். இதனால், அரசுக்கு எதிரான சிறுபான்மை மக்களின் போராட்டத்தில் எல்லா வர்க்கப்பிரிவின் தலையீடும், தலைமைச் சூழ்ச்சியும் இதில் சாத்தியமானதே. இந்நிலையில் இலங்கையில் இன வேறுபாட்டின் பகை உணர்வில் இன நலனா? அல்லது வர்க நலனா? முதன்மைப்படுத்தப் பட்டன என்பது மிகத் தெளிவாக ஆராயப்பட வேண்டும். ஏனெனில், இன முரண்பாட்டின் ஒடுக்குமுறையின் வளர்ச்சிப் போக்கு, ஒடுக்கப்படும் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களை மேலே தள்ளுவதால், இம் முன்னெடுப்பில் உள்ளவர்களின் வர்க நலன் தேசிய நலனுக்குத் தகுந்ததா? அல்லது எதிரானதா? என்பது கறாராக வரையறுக்கப்பட்டே தீர வேண்டும். இதில் ஏற்படும் சந்தர்பவாதம், திசைவிலகல், ஒரு தேசிய இனத்தை அழித்தொழிப்பதில் மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் நியாயமான போராட்டத்தின் வீழ்ச்சியை செங்குத்தாக வீழ்த்தியும் தீரும். இவ் அபாயம் சிறுபான்மை மக்களின் விடுதலையின் தனித்துவமான அபாயமுமாகும். ஏனெனில் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களின் விடுதலைப் போராட்டம், அதன் அடிமை நிலையில், ஒருபகுதி மக்கனான பொரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கும் அபாயத்தை இது தன்னகத்தே கொண்டுள்ளது!

 

பிரிட்டீசாரின் நிர்வாகத்தின் கீழிருந்த காலனித்துவ நாடுகளில், சர்வசன வாக்குரிமையைப் பெற்ற முதலாவது காலனித்துவ நாடு இலங்கையாகும். பிரிட்டனில் தேர்தல் நடத்தப்பட்டு, இரண்டாண்டுகளின் பின்னர், இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. உலகிலேயே முதலாவதாக வாக்களிக்கும் வயதெல்லையை 21 வயதிலிருந்து 18 வயதாகப் பெற்ற பெருமையும் இலங்கையையே சாரும். இவ்வாறு வாக்குரிமை இலங்கையில் முக்கிய உரிமையாக இருந்தது. இதை பரிட்டீசார் வழங்கியபோது, இலங்கையிலிருந்த மானிய காலத்து நிலப்பிரபுக்கள் - இனங்களைக் கடந்து - இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆயினும் பிரிட்டீசார் இவ்வர்கத்தை எதிர்த்துத் இதைத் திணித்தனர் என்பதே உண்மையாகும். இதன் காழ்ப்புணர்ச்சியும், பீதியுமே சிறுபான்மை மீதிதான ஏறி மிதிப்புக்கும் உந்தித் தள்ளுகின்றன. இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர், சிறுபான்மை இனமான மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் குடியுரிமை பறிக்கப்படுவதற்காக, வடக்குக் கிழக்குப் பிரதிநிதிகள், பெரும்பான்மை உடன் இணைந்து, பொருவாரியாக வாக்களித்தமை, இன நலன்களை விட வர்க்கநலனே முன் நிலை என்பதை துல்லியமாக எடுத்துரைத்தது.இங்கு இடதுசாரிகள் மட்டுமே இதை எதிர்த்து நின்றனர். (1928 ஜுலை டொனமூர் விசாரனைக்குழு வாக்குரிமை பற்றி வெளியிட்ட முடிபுகளின் பின்னர், 1929 ல் இலங்கை சட்டசபையில் பல சிங்கள அரசியல் பிரமுகர்களால் இது எதிர்க்கப்பட்டும் இருந்தது. )

 

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால்: இந்தியருக்கான வாக்குரிமை பற்றிய முடிவு 1930 ஜுன் 14 ம் திகதி தெரிவிக்கப்பட்டது. இந்தியர் இலங்கைப் பிரசைகளாகப் பதிவு செய்வதில், வீண் புரளிகளைப் பரப்பி அவர்களைப் பதிவு செய்வதில் இருந்து தடுப்பதற்கு எத்தனித்த நபர்களுடனும், இயங்கங்களுடனும், ஒர் இந்திய நிறுவனம் சிங்களவர்களுடன் இணைந்து செயற்பட்டிருந்ததும் இங்கு கறைபடிந்த வரலாறாகும். இலங்கை சுதந்திரமடைந்து இன்று 60 வருடங்களின் பின்பும் மலையக மக்களின் -நாடற்றவர் - என்ற இப்பிரச்சனை இன்னும் தொடர்கிறது. ..

 

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் நடந்த இரண்டு தேர்தல்களில், முதல் தேர்தலை யாழ்ப்பாணம் பகிஸ்கரித்திருந்தது. இத்தேர்தல் இனவாரி பிரதிநிதித்துவத்தை கோரி இருந்தது. (இதில் சிங்கள - தமிழ்ப் பிரதிநிதித்துவம் 3:2 என்ற விகிதத்தில் இருந்தது.) இதன் பின்னர் நடந்த தேர்தல் பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரி இருந்தது. இதில் சிங்களவர்- தமிழர் 5:2 என்ற நிலைக்கு மாறியும் இருந்தது. ஆயினும் இவ் இரண்டு தேர்தல்களிலும் மக்கள் இன அடிப்படையிலேயே வாக்களித்திருந்தனர் என்பதையே வரலாறு சுட்டிக்காட்டி நிற்கிறது.

 

தொடரும்...

 

சுதேகு
290309