“ஆப்பிரிக்கா” என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே
மேற்குலக ஊடகங்களால் பரப்பப்படுகின்றன. “இருண்ட கண்டம்” என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை, தமிழ் மக்கள் மத்தியிலும் பொதுக்கருத்துகளாக போதித்தது. இதனால் ஒரு ஐரோப்பியரின் பார்வையிலேயே, நாமும் ஆப்பிரிக்காவை பார்க்க கற்றுக்கொண்டுள்ளோம்.
உலகம் முழுவதும் தமது காலனிகளாக்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய வல்லரசுகள், ஆப்பிரிக்காவை மிக தாமதமாகத் தான், அதாவது 19 ம் நூற்றாண்டில் “கண்டுபிடித்தன”. ஐரோப்பியருக்கு தான் ஆப்பிரிக்காவை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. ஆப்பிரிக்க மக்கள் அதனை எப்போதோ கண்டுபிடித்து விட்டார்கள். அன்றைய ஐரோப்பியர்கள், அரபு மொழிபேசும் வட ஆப்பிரிக்க பகுதியை மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். பைபிளை எழுதிய ஆண்டவருக்கே எகிப்திற்கு அப்பால் இருந்த பிரமாண்டமான நிலப்பரப்பு பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமானது!
ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலான சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரேபியர்களுடன் போர் மூண்ட பிறகுதான், மாற்றுக் கடல்வழி பாதை தேடிய ஐரோப்பிய (போர்த்துகீசிய) மாலுமிகள் ஆப்பிரிக்காவை தற்செயலாக கண்டுபிடித்தார்கள். மேற்கு ஆப்பிரிக்க கரை நாடுகளான, செனெகல், கானா போன்ற நாடுகளில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட மக்களை, புதிதாக கண்டு பிடித்த அமெரிக்க கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் வாணிபம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் ஸ்பானிய, போர்த்துகீசிய அடிமை வியாபாரிகளின் ஏகபோகமாக இருந்த வர்த்தகத்தில், விரைவில் ஒல்லாந்து, ஆங்கிலேய வியாபாரிகளும் ஈடுபட்டனர்.
ஐரோப்பியருக்கு முன்னர் அரேபியர்கள் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டிருந்த வரலாறு உண்மை தான். ஆனால் அப்போது எல்லாம் பஞ்சம் அல்லது ஏழ்மை காரணமாக விற்கப்படும் அடிமைகளை, வீட்டு வேலைகளுக்காக வைத்துக் கொள்ளும் வழக்கமே நிலவியது. இனமுரண்பாடுகள் இருந்த ஆப்பிரிக்காவில், அடிமைகளை சக ஆப்பிரிக்கர்களே பிடித்துக் கொடுத்தனர். அதனால் அவர்களும் லாபமீட்டினர். இதனை ஐரோப்பியர்கள் வர்த்தக நலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். இனக்குழுச் சமுதாயங்கள் பரவலாக காணப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்தில், ஒரு இனம் அயலில் உள்ள பிற இனங்கள் மீது போர் தொடுப்பதும், வென்றவர்கள் தோற்ற இனத்தை சேர்ந்தவர்களை அடிமைகளாக்குவதும் வழமையாக நடந்து வந்தது. போர் தொடுக்கும் இனத்திற்கு ஐரோப்பியர்கள் ஆயுதங்கள் வழங்கி, அடிமை வேட்டையை இலகுவாக்கினர். இவ்வாறு அன்று அடிமைகளை பிடித்து விற்ற பல இனங்கள், இன்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக உள்ளன. உதாரணத்திற்கு கானாவை சேர்ந்த “அஷாந்தி” அரச பரம்பரை. இவர்கள் தமது முன்னூறு ஆண்டு கால “பாரம்பரியத்தை” பேணுவதற்காக, இன்றுவரை ஒல்லாந்து அரச குடும்பத்துடன் நட்புறவை பேணி வருகின்றனர்.
அந்தக் காலத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்கள், பல மடங்கு லாபம் சம்பாத்தித்தன. ஐரோப்பாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், அவற்றை ஆப்பிரிக்கர்களுக்கு விற்பனை செய்து, அடிமைகளை வாங்கிக் கொள்ளும். அமெரிக்க கண்டத்தில் உள்ள பெருந்தோட்டங்களுக்கு அடிமைகளை விற்பனை செய்து விட்டு, அங்கிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வந்து ஐரோப்பாவில் விற்பனை செய்வார்கள். இதிலே ஆங்கிலேயர்கள் மிக மலினமான உத்திகளை கையாண்டனர். நடுக்கடலில் வைத்து பிறநாட்டு வணிகக் கப்பலை கொள்ளையடித்தனர். இவ்வாறு கொள்ளையடித்த தங்கத்தை மூலதனமாகக் கொண்டு இங்கிலாந்தின் தொழிலகங்கள் பல தோன்றின.
ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பை சுரண்டி அமெரிக்கா பணக்கார நாடானது. அடிமை வியாபாரத்தினால் மேற்கு ஐரோப்பியர்கள் செல்வந்தர்களானார்கள் என்று சுருக்கமாக கூறலாம். இருப்பினும் தாம் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியைக்கூட நஷ்டஈடாக ஆப்பிரிக்க வளர்முக நாடுகளுக்கு கொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. அதற்கு மாறாக, அபிவிருத்திக்காக என்று சொல்லி, வட்டிக்கு கடன் கொடுத்து மேலும் மேலும் செல்வம் சேர்த்து வருகின்றனர். இதனால் மேற்குலகம் செய்வதையெல்லாம், மறுகாலனியாதிக்க சதிகளாக இன்று ஆப்பிரிக்க மக்கள் சந்தேகிக்கின்றனர்.
ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் நடந்த யூத இனப்படுகொலைக்கு நஷ்டஈடாக, வருடந்தோறும் ஒரு தொகைப் பணத்தை ஜெர்மனி இஸ்ரேலுக்கு கொடுத்து வருகின்றது. இஸ்ரேல் பணக்கார நாடாக இருப்பதற்கு இந்த நஷ்டஈடு ஒரு காரணம். அதைப்பார்த்து, முன்னாள் காலனியாதிக்க நாடுகள் நஷ்டஈடு வழங்கவேண்டுமென்று ஆப்பிரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலத்தில், அண்மையில் இத்தாலி மட்டுமே லிபியாவிற்கு காலனிய கால நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ளது. லிபிய தலைவர் கடாபியின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், ஆப்பிரிக்க அகதிகளை வரவிடாமல் தடுப்பதில் இத்தாலிக்கு உள்ள கரிசனை இங்கே கவனிக்கத்தக்கது.
ஆப்பிரிக்க கண்டத்தை பட்டினிச்சாவு நிறைந்த வறண்ட பூமியாக ஒருபக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் ஐரோப்பா தனது உணவுத் தேவைகளுக்காக ஆப்பிரிக்காவில் தங்கி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மீன்பிடி வள்ளங்கள், மேற்கு ஆப்பிரிக்க கடல்களில் கேட்பாரற்று மீன்களை அள்ளிச் செல்கின்றன. தினசரி மரக்கறிகளையும், பழங்களையும் ஆப்பிரிக்கா ஏற்றுமதி செய்வதை நிறுத்தினால், ஐரோப்பியர்கள் உருளைக்கிழங்கையும், ஆப்பிளையும் தான் சாப்பிட வேண்டி இருக்கும். ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் முரண்பாடுகளின் பூமி தான். பாலைவன வளைகுடா நாடுகள், சூடானில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு, தமது மக்களுக்கு உணவிட்டு வருகின்றனர். அதேநேரம் சூடான் டார்பூர் பிராந்திய மக்கள், அன்றாட உணவுக்காக தொண்டு நிறுவனங்களிடம் கையேந்துகின்றனர்.
நைஜீரியாவும், அங்கோலாவும் பிரதான எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகள். ஆனால் அந்நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக அல்லலுறுகின்றனர். உலகில் விலை உயர்ந்த விற்பனைப் பண்டங்களில் ஒன்றான எண்ணை விற்று வரும் லாபம், அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் போய்ச் சேருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாம் இந்த ஏற்றத்தாழ்வை காணலாம். “அதிகாரத்திற்கு வந்தால், எமது நாட்டு வளங்களை அந்நிய நாடுகளுக்கு விற்று பணக்காரனாகலாம்.” என்ற எளிய தத்துவமே பல ஆயுதக்குழுக்கள் உருவாக காரணமாக உள்ளன. போர்வீரனாக ஆயுதம் ஏந்த வருபவர்கள் கூட அதிக ஊதியம் எதிர்பார்ப்பதால் தான், யுத்தபிரபுக்கள் குழந்தைப் போராளிகளை சேர்க்கின்றனர்.
சூடானில் குழந்தைப்போராளிகளை சேர்த்து வைத்திருக்கும் SPLA இயக்கத்திற்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை, எனது நண்பர்களான முன்னாள் SPLA உறுப்பினர்கள் சிலர் ஒப்புக் கொண்டனர். அதே நேரம் அப்படி உதவி பெறுவதில் என்ன தவறு? என்றும் கேட்டனர். சில வருடங்களுக்கு முன்னர் எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட சாட் நாட்டை சேர்ந்த, தற்போது புகலிடத்தில் வாழும், எனது நண்பரொருவர், அரசுக்கெதிரான ஆயுதக்கிளர்ச்சி திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு அமெரிக்க பக்தரான அந்த நண்பர், எதிர்பார்த்த கிளர்ச்சி வெற்றி பெற்றிருந்தால், எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகளுக்கு தாரை வார்த்திருப்பார் என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.
மேற்குலகில் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல, ஆப்பிரிக்காவின் பிரச்சினைகளை அங்கே காளான்கள் போல முளைத்துள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தீர்த்துவிடப் போவதில்லை. அல்லது மத நம்பிக்கையாளர்கள் நினைப்பது போல, இன்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் கிறிஸ்தவ மதம், மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்யப்போவதில்லை. உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகள் எவை என்று பட்டியலிட்ட போது, ஏழைகளாக இருந்தாலும் மத நம்பிக்கை என்ற மாயைக்குள் வாழும் கானா, நைஜீரிய மக்கள் முன்னணியில் நின்றனர். ஆப்பிரிக்காவை வளம்படுத்த மக்களுக்கு தொழில்நுட்ப அறிவு தேவை. அதைக் கொடுக்க மேற்குலகம் மறுத்து வருகின்றது. இப்போதும் காலனிய காலத்தில் நடந்தது போல, மலிவு விலையில் மூலப்பொருட்களை வாங்கிக் கொண்டு, அதிக விலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றன.
“நமது நாடு இயற்கை வளம் நிறைந்தது. அது தான் எமது சாபக்கேடு.” என்று பல ஆப்பிரிக்கர்கள் குமுறுகின்றனர். வளங்களை சூறையாட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஆப்பிரிக்க தலைவர்கள் உள்ளூர் தரகு முதலாளிகளாக செயற்படுகின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் இனவெறிப் போர்கள் (உ+ம்: ருவாண்டா), மதவெறிப் போர்கள் (உ+ம்: சூடான்), சித்தாந்தப் போர்கள் (உ+ம்: அங்கோலா); இவை எல்லாமே வளங்களை யார் கைப்பற்றுவது என்ற போட்டிக்கு மேல் போடப்பட்டிருக்கும் மாயத்திரைகள். இந்தப் போர்களினால் பாதிக்கப்படுவது, வழமை போல அப்பாவி மக்கள் தான். ஓரளவு வசதி உள்ளவர்கள், இன்னல்களில் இருந்து தப்புவதற்காக ஐரோப்பா செல்ல நினைத்தால், அங்கே ஐரோப்பிய ஒன்றியம் என்ற கடுமையாக பாதுகாக்கப்பட்ட கோட்டை மதில்கள் தடுக்கின்றன.
ஆப்பிரிக்காவின் பிரச்சினையை பிராந்திய ஒருமைப்பாட்டால் தீர்க்கலாம், அல்லது அந்த பாதையில் எடுத்து வைக்கப்படும் முதல் அடி என்று, பல சமூக ஆர்வலர்கள் நம்புகின்றனர். பலர் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பை ஒத்த ஆப்பிரிக்க ஒன்றியத்தை, தமது நீண்ட கால கனவாக காண்கின்றனர். இது குறித்த மகாநாடுகள் நடைபெறும் போதெல்லாம், “மேற்குலகில் கையேந்தும் பிச்சைக்கார நாடுகள் ஒன்று கூடி எதை சாதிக்கப் போகிறார்கள்?” என்று சில மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் ஏளனமாக குறிப்பிடுகின்றனர். ஐக்கிய ஆப்பிரிக்க கூட்டமைப்பிற்கு பாடுபடும் கடாபி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது: “பல ஆப்பிரிக்க நாடுகளும், இனங்களும் பரமவைரிகளாக தமக்குள் மோதிக் கொள்கின்றனர் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய கண்டமும் இதே நிலைமையில் தான் இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் போது, மேற்குலகில் கையேந்த வேண்டிய தேவை இருக்காது.”
ஆப்பிரிக்க ஒற்றுமை நடைமுறைச் சாத்தியமா? தனக்கு காலனிய மனோபாவம் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பிரான்ஸ் முதல், முன்பு பனிப்போர் இப்போது சுதந்திர வர்த்தகம் என்ற சாட்டுகளை கூறி தலையீடு செய்யும் அமெரிக்கா வரை, தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அரசியலை இன்னும் கைவிடவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எதோ ஒரு வல்லரசின் கைப்பொம்மையாக இருப்பதை பார்க்கலாம். உலகம் முழுவதும் ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலகம், ஆப்பிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளை ஆதரித்து வருகின்றது. மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் கூட பதவியில் இருந்து பலாத்காரமாக அகற்றப்பட்டனர். அந்த இடத்தில் கொடுங்கோல் சர்வாதிகாரிகளை நியமித்தனர்.
காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளில், ஜனநாயகத்தை கொன்று சர்வாதிகாரத்தை அரியணை ஏற்றிய மேற்குலக சதிகள், இயற்கை வளம் நிறைந்த கொங்கோவில் இருந்து ஆரம்பமாகியது. 1960 ல் பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற கொங்கோவின் மக்கள் மனங்கவர்ந்த தேசியவாதத் தலைவர் லுமும்பாவை நஞ்சு கொடுத்து கொலை செய்யுமாறு, அமெரிக்காவில் இருந்து உத்தரவு வந்தது. அந்த கொலை பாதகச் செயலை செய்யச் சொன்னது யார்? அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர்!
—- தொடரும் —-
தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com