Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம்

 நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டது. அமைதியாக இருந்த பல ஊர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியால் வருடா வருடம் கலவரங்களைச் சந்திக்கின்றன. இன்றைய பா.ஜ.கவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த பெருமை இந்த கதர்க் கட்சியினருக்கு உண்டு.

 

அப்புறம் வந்த காந்தி அஹிம்சை என்ற பெயரில் மக்களிடம் முன்முயற்சியோடு எழுந்து வந்த ஏகாதிபத்தியப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து வெள்ளையனுக்கு வாழ்வு கொடுத்தவர். இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தோல்வியுற்றதும் இனிமேல் இந்தியாவைச் சுரண்டுவதற்கு பொருளில்லை என்று காங்கிரசுக் கோமான்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அதற்குத் தோதாக பிசினஸ் உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆனான் வெள்ளைக்காரன்.

 

இதைத்தான் கதர் வேட்டி நரிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாக கூச்சமேயில்லாமல் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 47க்கு முந்தைய காலத்தில் இந்த நரிகளின் தலைவர்கள் எல்லா வகையிலும் பிற்போக்கிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருந்தனர். தேவதாசி முறையைத் தடை செய்வதை சத்யமூர்த்தி அய்யர் வெறியோடு எதிர்த்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கும், மற்ற சாதிக்காரர்களுக்கும் தனிப்பந்தி வைத்து சநாதனத்தை வெறியோடு காப்பாற்றிய வ.வே.சு.அய்யரும் இந்த மாட்டுக்கட்சியில்தான் குப்பை கொட்டினார். இந்தி ஆதிக்கத்தையும், குருகுலக் கல்வியையும் கொண்டு வரத்துடித்த ராஜாஜி என்ற துக்ளக் சோவின் தாத்தாவாக இருக்கும் தகுதி கொண்டவரைப்பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இவருக்குப் பிறகு பதவிக்கு வந்த பச்சைத்தமிழர் காமராஜரின் காலத்தில்தான் பண்ணையார்களாக இருந்த பல நரிகள் தொழிலதிபர்களாக அவதாரமெடுத்தன. இதைத்தான் காமராஜரின் பொற்காலமென்று நரிகள் நிறுத்தாமல் ஊளையிடுகின்றன. அவ்வப்போது இந்தப் பொற்கால ஆட்சியினை மீட்டு வரப்போவதாக பாச்சாவும் காட்டுகின்றன.

 

இப்படி தோற்றத்திலிருந்தே கோமான்களின் கட்சியாக மேய்ந்து வந்த இந்த நரிகளின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புதான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அன்றிலிருந்து தொண்டர்களில்லாமல் தலைவர்களாக உள்ள நரிகள் மட்டும் மேயும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது இந்த நரிகளின் கட்சிதான். மாவட்டத்திற்கு ஒரு நரி வீதம் கோஷ்டி வைத்துக்கொண்டு அடித்துக் கொள்வதும், வேட்டி கிழியும் வண்ணம் ஒரு பாக்சிங் ஸ்டையிலயே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்த குள்ள நரிகளின் கட்சிக்குத்தான் உண்டு என்பதை நாளை பிறக்கப்போகும் ஒரு குழந்தை கூட அறியும்.

 

நிலப்பிரபுக்களாகவும், தியேட்டர், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களாகவும், பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகளின் முகவர்களாகவும், பிரபலங்களுக்கு கடன் கொடுக்கும் மேட்டுக்குடி பைனான்சியர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகவும், சிறு, நடுத்தர தொழிலதிபர்களாகவும், சுய நிதி கல்லூரிகளின் அதிபர்களாகவும், தொழில் செய்யும் இந்த நரிகள் இந்தப் பதவிகளை அதிகாரத்தில் இருக்கும் வலிமை கொண்டு பிக்பாக்கட் அடித்திருக்கின்றன. இந்த தொழில் வியாபாரத்தைத் தக்கவைப்பதற்காகவே அரசியல் கட்சி என்ற பெயரில் கூச்சநாச்சமில்லாமல் மூவர்ணக் கொடியை கட்டிக்கொண்டு தமிழகத்தை கேட்பார் கேள்வியில்லாமல் ரைட்ராயலாக மேய்ந்து வருகின்றன.

 

தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இந்நரிக் கட்சியினர் இதுவரை எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் தெருவில் இறங்கி போராடியது கிடையாது. தி.மு.கவும், அ.தி.மு.கவும் போடும் பிச்சையினால் தொகுதிகளைக் கைப்பற்றி தொந்தி வளர்க்கும் கூட்டம் என்றுமே மக்களைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. ராஜீவின் கொலையாளிகளை சோனியா காந்தியே மன்னித்தாலும் இந்த கு.நரிகள் மட்டும் மன்னிக்காதாம். காலையில் எழுந்து தினத்தந்தி பார்த்து யார் நரிகளின் தமிழகத் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் கொழுப்பெடுத்த அடிமை நரிகள் ஈழத்தின் துயரத்தை கண்டால் ஆவேசத்துடன் மோத வருகின்றன. இது இன்று நேற்றைய விவகாரமல்ல. பகத்சிங்கையே தூக்கில் போடுவதற்கு வெள்ளையனுக்கு முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்த முண்டங்கள்தான் இந்த நரிகளின் முன்னோர்கள் எனும்போது ஈழத்தில் சாகும் அப்பாவித் தமிழனெல்லாம் எம்மாத்திரம்? ஆனாலும் அடிமைகள் ரோஷம் கொண்டவர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் பசப்பலைத்தான் சகிக்க முடியவில்லை.

 

டெல்லியில் கனைத்தால் சென்னையில் இருமும் இந்த சுயமரியாதை கிஞ்சித்துமற்ற கு.நரிகள், புலிகள் என்றதும் பங்குச் சந்தை காளை போல சிலிர்த்துக்கொண்டு பாய்கின்றன. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமென்பதால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டுமாம். விடுதலைப்புலிகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனுமளவுக்கு பல இலட்சம் ஈராக்கிய, ஆப்கானிய மக்களை கொன்ற பயங்கரவாதி செருப்பு புகழ் புஷ்ஷுவிடம் இந்தியா உங்களை நேசிக்கிறது என்ற நரிகளின் டர்பன் கட்டிய பிரதம நரி பீற்றிக் கொண்டதாம். கோழி மாக்கான் புஷ்ஷை அயோத்தி ராமனுக்கு மேலாக பூஜை செய்யும் நரிகள் ஈழத்தில் தமிழனென்பதால் கொல்லப்படும் போரை மறைமுகமாய் ஆதரித்துக் கொண்டு கூடவே புலி பீதியைப் பரப்பி வருகின்றன. அமெரிக்க பயங்கரவாதி புஷ்ஷையும், இலங்கை பயங்கரவாதி பக்ஷேவையும் ஃபிரண்ட்லியாகப் பார்க்கும் கு.நரிகளிடம் போய் ஈழத்தமிழருக்காக ஆதரவைக் கேட்ட தமிழக அரசியல்வாதிகளை எதைக்கொண்டு அடிப்பது? சத்திய மூர்த்திமேல் சில சிறுகற்கள் பாதிப்பேயில்லாமல் வீசப்பட்டதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் நரியொன்று இதை மத்திய அரசு கவனிக்கும் என்று மிரட்டுகிறது. இப்படி பல அனாமதேயங்களெல்லாம் வாய் திறந்து பேசுவதற்குக் காரணம் கருணாநிதியின் சரண்டர் அரசியல்தான்.

 

ஈழத்தமிழனைக் கொல்வதற்கு துப்பாக்கியும் கொடுத்து, ரவையையும் திணித்து கூடவே சாகப்போகும் தமிழன் வயிறு ஃபுல்லாக நிரப்பிக் கொண்டு சாக வேண்டுமென்பதற்காக வாய்க்கரிசியையும் கொடுத்த புண்ணியவான்களை வைத்தே போரை நிறுத்தி விடப்போவதாக கருப்பு சிகப்பு மாடுகள் பிலிம் காட்டுவதை எந்த லேப்பில் கழுவி சுத்தம் செய்வது? இதில் பிரணாப் முகர்ஜியை வேறு கொழும்புக்கு அனுப்பி சாதனை படைக்கப் போகிறார்களாம். எதற்கு? ரேடார் வேலை செய்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காகவா? ஈழத்தில் நடக்கும் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை, புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்று ராஜ பக்க்ஷே மட்டுமல்ல தமிழகத்து குள்ள நரிகளும் ஒரே சுவரத்தில் ஊளையிடுகின்றன. இந்த நரிகளே இப்படி பேசும்போது சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் சோ, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற ஈழத்திற்கு எதிராக துவேசத்தைக் கக்கும் கொட்டை போட்ட நரிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.

 

சீமான் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக ஈழத்து ஆதரவாளர்கள் சிலர் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள். சீமான் ஒரு ரசிகரைப்போல புலிகளையும், பிரபாகரனையும் ரசிப்பதில் எங்களுக்குக்கூட உடன்பாடு இல்லைதான். மேலும் ஈழத்தமிழரின் விடுதலை என்பது பிரபாகரனின் வீரத்தில் முடிந்து வைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மனமுருகி பேசும் சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன. என்றாலும் அப்படி இரசிப்பதற்கு உரிமை கிடையாதா என்ன? அவர் என்ன கொலைக் குற்றமா செய்து விட்டார்? கண்ட கஸ்மாலங்களுக்கெல்லாம் ரசிகர் என்ற பெயரில் பாலபிஷேகம் செய்யும் நாட்டில் பிரபாகரனைப் பற்றி பேசக்கூடாதா என்ன? பேசினால் உடனே ராஜீவின் ஆவியை சாமியாடி வரவழைத்து விடுவார்களாம். ஒருவேளை ஆவி வரவில்லையென்றாலும் இவர்களே போதையேற்றிக் கொண்டு ராஜிவுக்காக உளறுவார்களாம். அப்படி என்னதான் கிழித்து விட்டார் இந்த ராசீவ்காந்தி? டெல்லி சீக்கியர்களிடன் கேட்டால் ராஜீவின் காலத்திய கதர் நரிகள் இரத்தம் குடித்த கதையை ஆத்திரத்துடன் விவரிப்பார்கள். போபால் மக்களிடன் கேட்டால் பல நூறு உயிர்களைக் கொன்ற யூனியன் கார்பைடு நிறுவனம், ராஜீவின் உதவியோடு ரத்த பானம் குடித்த கதையை மறக்க முடியாமல் கதறுவார்கள். இதுபோக ஈழத்திற்கு அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ஆக்கிரமிப்பு படையை அனுப்பி பலநூறு உயிர்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி ஒரு பயங்கரவாதிதான் என்று சீமான் கேட்டதில் என்ன தவறு?

 

இந்திய இராணுவம் இலங்கை, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என எங்கெல்லாம் தனது படையை அனுப்பியதோ அங்கெல்லாம் கொன்ற கணக்கும், தின்ற கணக்கும், கற்பழித்த கணக்கும் பெருக்கிப்பார்த்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. எனில் இதற்குக்காரணமான கு.நரிகளின் தலைவர்களை கேவலம் ஒரு வைக்கப்போரில் தைக்கப்பட்ட பொம்மைக் கொடும்பாவியாகக் கூட கொளுத்தக் கூடாதா?

 

பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொடும்பாவி கொளுத்தியதற்காக இதுவரை கருப்புதாரின் கறையை மிதிக்காத கதர் வேட்டி நரிகளெல்லாம் உடனே அண்ணா சாலையில் மறியல் என்று சீனைப்போடுகின்றன. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அடித்தால் எனென்று கேட்க ஆளில்லாத  இந்த துப்புக்கெட்ட நரிகள் ஒரு இடத்திற்கு பத்து அல்லது பதினைந்து என்ற கணக்கில் கூடிக் கொண்டு போர் செய்கின்றனவாம். இதையே மானங்கெட்ட தமிழ் தொலைக்காட்சிகள் மாபெரும் போராட்டமாகக் கவரேஜ் பண்ணும் கொடுமையை என்னவென்று சொல்ல?

 

சீமானும், கொளத்தூர் மணியும், மணியரசனும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழனுக்கு நேர்ந்த மாபெரும் அவமானம் என்று கருத வேண்டும். ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அதுவும் நரிகள் விரும்பியபடி கொடுக்காவிட்டால் உடனே கைது என்றால் இந்த அயோக்கியத்தனத்துக்கு ராஜபக்ஷேயே மேல் என்று ஒத்துக் கொண்டு போய்விடலாமே? செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பதை விட தமிழ்நாட்டு தமிழனுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டுவது காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் சற்றே காரமான மொழியில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.

 

சட்டசபைக்கு ஐம்பது சீட்டும், பாராளுமன்றத்திற்க்கு பத்து சீட்டும் பெற்றுக்கொண்டு ஏதோ தமிழகமே இவர்களின் ஆணைக்கு கீழே செயல்படக் காத்து நிற்பதைப் போல பாவ்லா காட்டும் இந்த கு.நரிக் கட்சியை தமிழக மக்கள் உடனே தடை செய்யவேண்டும். இது ஈழத்தமிழருக்குச் செய்யவேண்டிய உதவியை விட அவசரமான கடமை. இல்லையேல் இந்த நரிகள் ஈழத்திற்காக  இங்கயே ஒரு கல்லறையைக் கட்டி சோனியா காந்தியை வைத்து திறப்பு விழாவும் நடத்திவிடுவார்கள்.