Language Selection

[கட்டுரை: 44]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

கருந்துளை ஒரு சேமிப்புக்
களஞ்சியம் !
விண்மீன் தோன்றலாம் !
ஒளிமந்தைகள் பின்னிக் கொள்ளலாம் !
இருளுக்குள் உறங்கும்
பெருங் கருந்துளையை எழுப்பாது
உருவத்தை மதிப்பிட்டார் !
உச்சப் பெரு கருந்துளைக்கு
வயிறு முட்டிய விதம்
தெரிந்து போயிற்று !
பிரியாவின் அடிக் கோலால்
பெரிய கருந்துளையின்
உருவத்தைக் கணிக்க முடிந்தது !
விண்மீன்களை விழுங்கியும்
கும்பி நிரம்பாது
பிண்டங்களைத் தின்று
குண்டான உடம்பை
நிறுத்தும் உச்ச வரம்பு !
“பிரியா வரம்பு”
கடவுளின்
கைத்திறம் காண்பது
மெய்த்திறம் ஆய்வது,
வையகத்தார் மகத்துவம் !

“பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட காலாக்ஸிகளில் பூதப் பெரு வடிவுக் கருந்துளைகள் குடியிருக்கும் ! நமது பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப்படுகிறது ! அசுரப் பெரும் கருந்துளைகள் அண்டையில் இருக்கும் பிண்டங்களை விழுங்கி உச்ச நிறைக்கு மீறி வளராமல் நிறுத்தம் அடைகின்றன. சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்தி நிறுத்தமான கருந்துளைகளைக் காண முடிகிறது. உச்ச நிறை அடைந்த கருந்துளைகள் இப்போது வயிறு நிரம்பி நிற்கவில்லை ! பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்ப காலத்திலே அவற்றின் நிறை உச்ச வரம்பு நிலை அடைந்து விட்டது,”

“கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera).”

டாக்டர் பிரியா நடராஜன் (Associate Professor, Dept of Astronomy & Physics, Yale University, Connecticut, USA)

“என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். ஸ்டீ·பென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள் மணல் பற்றியும் (Granularity of Dark Matter) நான் ஆராய்ச்சி செய்தேன்.”

டாக்டர் பிரியா நடராஜன்

“சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன ! காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைத் திறந்து காட்டி விட்டது !”

ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

“புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது. அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”

ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

“கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல ! அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.

ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் ! அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை. அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

பேருருவக் கருந்துளைக்குப் பிரியாவின் உச்ச நிறை வரம்பு

விண்வெளியில் கருந்துளைகள் கண்களுக்குத் தெரியாமல் போயினும் அவற்றின் வடிவை விஞ்ஞானிகள் மறைமுகமாக மதிப்பீடு செய்ய முடிகிறது ! அணுவைப் போல் சிறிதாகவும் கருந்துளைகள் இருக்கலாம் ! அசுர வடிவத்திலே பல கோடிப் பரிதிகளின் நிறையிலே கருந்துளைகள் குடியிருக்கலாம் ! அப்படி அவற்றின் நிறைகள் குறைவதற்கும், கூடுவதற்கும் தூண்டுகோலானக் காரணங்கள் என்ன ? நிறைகள் கூடி வயிறு பெருத்துக் கருந்துளைகள் பெரிதாகிப் பெரிதாகி வரையறை யின்றி பூத வடிவம் பெறுகின்றனவா ? அல்லது அவை ஓரளவுக்கு மேல் மீறாமால் நிலைத்துவம் அடைந்து உச்ச வரம்புடன் நின்று விடுகிறதா என்று ஆராய்ச்சி செய்த இந்தியப் பெண் விஞ்ஞானி டாக்டர் பிரியம்வதா நடராஜன். பேருருவக் கருந்துளைகளின் நிறைக்கு முதன்முதல் “உச்ச நிறை வரம்பை” (Mass Limit of Black holes) 2008 செப்டம்பரில் உலகுக்கு எடுத்துக் கூறியவர் பிரியா நடராஜன். அவ்விதம் பெரும் பூதக் கருந்துளைக்கு அவர் கூறிய உச்ச வரம்பு நிறை பரிதியைப் போல் 10 பில்லியன் மடங்கு ! அதற்குத் தமிழ் விஞ்ஞானத்தில் நாம் “பிரியாவின் வரம்பு” (Priya’s Limit) என்று பெயர் வைப்போம்.

பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளிக்கு ஓர் விண்வெளி ஆராய்ச்சிச் சவாலாகப் பிரபஞ்சத்தின் தீராத பெரும் புதிராகக் கருந்துளைகள் இருந்து வருகின்றன ! பல வல்லுநர்கள் இராப் பகலாக கருந்துளையின் இரகசியத்தை உளவு செய்து வருகிறார். அந்த ஆய்வு முயற்சிகளில் யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிக பெண் விஞ்ஞானி பிரியா நடராஜன் ஓர் அரிய கருத்தைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அதாவது வளரும் எந்தக் கருந்துளைக்கும் ஓர் உச்ச வரம்பு நிறை உள்ளது என்பதே ! பிரியாவின் அந்த அரிய அறிவிப்பு ராயல் வானியல் குழுவினரின் (Royal Astronomical Society) மாத இதழிலும் வெளிவந்துள்ளது !

பிரபஞ்சக் கருந்துளை என்பது என்ன ?

1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ! ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றிமுப்பது ஆண்டுகள் கடந்தன !

1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டத்தையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டு விழுங்கிவிடும்.

எத்துணை அளவு நிறை வரைப் பெருக்கும் கருந்துளைகள் ?

அணு வடிவில் சிறிதாயும் பூத உருவத்தில் பெரிதாகவும் பெருத்து வளர்பவை கருந்துளைகள் ! சிறு நிறைக் கருந்துளை, பெருநிறைக் கருந்துளை என்று பிரிவு பட்டாலும் இரண்டுக்கும் இடைப்பட்ட நிறையில் உள்ள கருந்துளைகளும் விண்வெளியில் கருவிகள் மூலமாகக் காணப்படலாம் ! பொதுவாகக் கருந்துளைகள் அருகில் அகப்படும் வாயுக்கள், தூசித் துகள்கள், ஒளிவீசும் விண்மீன்கள், ஒளியிழந்த செத்த விண்மீன்கள் போன்றவற்றை அசுர ஈர்ப்பாற்றலில் இழுத்து விழுங்கி வயிறு புடைத்துப் பெருக்கும் ! அப்போது கருந்துளையின் நிறை ஏறிக் கொண்டே போகிறது ! ஆனால் அந்த நிறைப் பெருக்கத்துக்கும் ஓர் எல்லை உள்ளது என்று பிரியா நடராஜன் முத்திரை அடிக்கிறார். எந்தப் பீடத்தில் இருந்தாலும் இட அமைப்பு கருந்துளை நிறையின் உச்ச அளவு வரம்பை மீற விடாது என்று அழுத்தமாகக் கூறுகிறார். பெரும் பூத வடிவுக் கருந்துளையின் (Ultra-massive Black Hole) நிறை மதிப்பு பரிதியைப் போல் ஒரு பில்லியன் மடங்காக அறியப் படுகிறது !

பிரியா நடராஜனும் அவரது விஞ்ஞானக் கூட்டாளர் டாக்டர் எஸிகுயில் டிரைஸ்டர் (Dr. Ezequiel Treister, A Chandra/Einstein Post-Doctoral Fellow at the Institute for Astronomy Hawaii) அவர்களும் விண்வெளி நோக்ககச் (Space Observatory) சான்றுகளிலிருந்தும், கோட்பாடுத் தர்க்கங்கள் மூலமாகவும் கருந்துளை உச்ச நிறை வரம்பு 10 பில்லியன் பரிதி அளவு என்று மதிப்பீடு செய்திருக்கிறார்கள். “சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்திப் பெருக்காமல் நிறுத்தமான கருந்துளைகளைக் காண முடிகிறது. பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட காலாக்ஸிகளில் அத்தகைய வயிறு புடைத்த பூதப் பெரு வடிவுக் கருந்துளைகள் குடியிருக்கும் என்று பிரியா கூறுகிறார் ! நமது பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப் படுகிறது ! உச்ச நிறை பெற்ற கருந்துளைகள் இப்போது வயிறு நிரம்பியவை அல்ல ! பிரபஞ்சத் தோற்றத்தின் காலத்திலே அவற்றின் நிறை உச்ச நிலை அடைந்து விட்டது,” என்று கூறுகிறார் பிரியா.

கருந்துளை வளர்ச்சி எப்படி நிறுத்தம் அடைகிறது ?

“அருகில் அகப்படும் அண்ட பிண்டங்களை விழுங்கும் கருந்துளை, தான் புறவெளியில் உறிஞ்சிய கதிர்ச்சக்திக்குச் சமமான அளவுக்குக் கதிர்ச்சக்தியை வெளியேற்றும் போது மேலும் வாயுப் பிண்டத்தை இழுக்க வலுவற்று, வயிறு நிரம்பித் தடைப்பட்டு ஓர் வரையறையைத் தொடுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது ! ஏனெனில் காலாக்ஸி மையத்தில் இருக்கும் கருந்துளை பிண்டங்களின் ஒரு சேமிப்புக் களஞ்சியமாய் வீற்றிருந்து விண்மீன் பிறப்புக்கும் காலாக்ஸி அமைப்புக்கும் வழிவகுக்கிறது,” என்று சொல்கிறார் பிரியா. “கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera). பல்வேறு துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த போது, நான் எதிர்பாராத விதமாய்க் கண்டுபிடித்த இந்த அரிய நிகழ்ச்சி எனக்குப் பூரிப்பளிக்கிறது” என்று சொல்கிறார் பிரியா.

விண்மீன் பிறப்புக்கும், கருந்துளை வளர்ச்சிக்கும் அண்டவெளி வாயுப் பிண்டங்கள் தேவை. கருந்துளைகள் இரண்டு விதம். ஒன்று பசியின்றி உயிருடன் இருக்கும் வயிறு நிரம்பியது ! இரண்டாவது பசியோடு முடங்கிய குறை வயிறுப் பட்டினியானது ! அவை யாவுமே எக்ஸ்-ரே கதிர்கள் வீசுபவை ! கண்ணோக்கு அலைப் பட்டையில் சுடரொளிக் குவஸாராகக் காணப்படுபவை (Optical Wave Band as a Bright Quasar) ! இதில் விந்தையான கோட்பாடு என்ன வென்றால் கருந்துளைகள் யாவும் “சுய வளர்ச்சி பெறும் அண்டங்கள்” (Self Regulating Growth Objects) என்பதே ! அதாவது உச்ச நிறை வரம்பு எய்திடும் ஒரு சில பூதப் பெரும் கருந்துளைகள் உள்ளன என்பதே இப்போது மகத்தானதோர் கண்டுபிடிப்பு,” என்று பெருமைப் படுகிறார் பிரியா நடராஜன் !

பெண் விஞ்ஞானி பிரியாவின் வாழ்க்கை வரலாறு

பிரியம்வதா என்னும் பிரியா ஓர் வானியல் பௌதிக விஞ்ஞானி. அவர் டெல்லியில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினியர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். டெல்லியில் பௌதிகத்தில் கீழ்நிலை விஞ்ஞானப் பட்டதாரியாகிப் பௌதிகம், கணிதத் துறைகளை மேலாக விரும்பி மேற்படிப்புக்கு M.I.T (Massachusetts Institute of Technology, Cambridge, Mass, USA) ஆராய்ச்சிப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ந்தார். பிறகு கோட்பாடு வானியல் பௌதிகத்தில் (Ph.D. in Theoretical Astrophysics) டாக்டர் வெகுமதி பெற இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், டிரினிடி கல்லூரியிலும் (1997 முதல் 2003 வரை) பெரும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஸர் மார்டின் ரீஸ் (Dr. Martin Rees) மேற்பார்வையில் பயின்றார்.

வானியல் பௌதிக விஞ்ஞானியான பிரியாவுக்கு விருப்பப் பிரிவுகள் : பிரபஞ்சவியல், ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு, கருந்துளைப் பௌதிகம் (Cosmology, Gravitational Lensing & Black Hole Physics). “என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டேன். ஸ்டீஃபென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள்மணல் (Granularity of Dark Matter) பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன்.” என்று பிரியா நடராஜன் கூறுகிறார். Ph.D. ஆய்வுப் பயிற்சி முடிவதற்குள் டிரினிடி கல்லூரி ஐஸக் நியூட்டன் ஸ்டூடன்ஷிப் ஆராய்ச்சி -வானியல் பௌதிக ·பெல்லோஷிப்பில் பங்கெடுத்து முதல் இந்தியப் பெண் ·பெல்லோஷிப் ஆய்வாராளாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்போது யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கு வருவதற்கு முன்பு டொரான்டோ கனடாவில் (Canadian Institute for Theoretical Astrophysics, Toronto) சில மாதங்கள் டாக்டர் முன்னோடிப் பயிற்சிக்கு விஜயம் (Postdoctoral Fellow Visits) செய்தார். ஓராண்டு யேல் பல்கலைக் கழக விடுமுறை எடுத்து 2008-2009 தவணை ஆண்டுப் பங்கெடுப்பில் ஹார்வேர்டு ராட்கிளி·ப் மேம்பாட்டுக் கல்விக் கூடத்தில் (Radcliffe Institute for Advanced Study at Harvard) ஓர் ஆராய்ச்சி ·பெல்லோஷிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் பிரியா “கருமை அகிலவியல் மையத்தின்” இணைப்பாளராய் டென்மார்க் நீல்ஸ் போஹ்ர் கருமை அகிலவியல் மையத்தில் (Associate of the Dark Cosmology Centre, Niels Bohr Institute, University of Copenhagen, Denmark) இருந்து வருகிறார்.

பிரியா நடராஜன் தனது வானியல் பௌதிகத் துறை ஆய்வுகளை ஆராய்ச்சி இதழ்களில் அடிக்கடி எழுதியும், மேடைகளில் உரையாற்றியும், கருத்தருங்குகளை ஏற்படுத்தி விவாதித்தும் பங்கெடுத்து வருகிறார். 2008 அக்டோபர் 25 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் (Science News) அசுரப் பெருநிறை கருந்துளைகள் (Ultra-massive Black Holes) பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை அட்டைக் கட்டுரையாய் வரப் போகிறது. அவற்றின் அரிய உட்கருத்துக்கள் மேலும் ஏற்கனவே டிஸ்கவர் இதழ், இயற்கை, வெளிநாட்டு இந்தியா வார இதழ், ஹானலூலூ டைம்ஸ், டச் பாப்புளர் சையன்ஸ், ஹார்டேர்டு காஸெட், யேல் தினத் தகவல் (Discover Magazine, Nature, India Abroad, Honolulu Times, Dutch Popular Science, Harvard Gezette, Yale Daily News) ஆகியவற்றிலும் வந்துள்ளன.

 

 

விஞ்ஞானப் பெண்மணி பிரியம்வதா நடராஜன் நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் ஓர் உன்னத ஆராய்ச்சியாளாராய் அடியெடுத்து வைக்கிறார். நோபெல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளான மேரி கியூரி, புதல்வி ஐரீன் கியூரி, (Marie Curie, Irene Curie) அணுப்பிளவை விளக்கிய லிஸ் மெய்ட்னர் (Lise Meitner) ஆகியோர் அணியில் பிரியா தடம் வைக்கிறார். அவர் முதன்முதல் கண்டுபிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “இராமன் விளைவு” (Raman Effect), “சந்திரசேகர் வரையறை” (Chandrasekhar Limit) போன்று “பிரியா வரம்பும்” (Black Hole Ultra-Mass Limit) விஞ்ஞான வரலாற்றில் சுடரொளி வீசும் மைல் கல்லாக விளங்கப் போகிறது. ஒளிமயமான எதிர்காலத்தில் பிரியாவுக்கு வெகுமதியாக வானியல் பௌதிக விஞ்ஞானத்துக்கு நோபெல் பரிசும் கிடைக்கவும் பெரியதோர் வாய்ப்புள்ளது.

 

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe - What Happens When Black Holes Collide ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science - Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies - An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic - Frontiers of Scince - The Family of the Sun (1982)
14 National Geographic - Living with a Stormy Star - The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 Astronomy Magazine - What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
21 National Geographic Magazine - Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712061&format=html (Black Hole Article -1)
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40808282&format=html (Black Hole Article -2)
24. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810091&format=html [Collision of Balck Holes)
25 Discover Magazine - Whole Universe - Invisible Universe By Martin Rees & Priyamvada Natarajan. [Fall 2008]
26. The Evolution of Massive Black Hole Seeds By Marta Volonteri, Giuseppe Lodato and Priyamvada Natarajan, MNRAS, 383, 1079, [2008]
27. Science News - Upcoming Issue -Ultramassive (Black Hole) : As Big As it Gets By : Charles Petit [Oct 25, 2008]
28 Is There an Upper Limit to Black Hole Masses ? By Priyamvada Natarajan & Ezequiel Treister [in Press 2008]
29 India Abroad International Weekly - Priyamvada Natarajan Puts a Cap pn Black Holes : 10 Billion Times the Sun By : Aziz Haniffa [Sep 19, 2008]
30. Science Blog -Size Limit for Black Holes [Sep 11, 2008]
31. Yale Astronomer (Dr. Priyamvada Natarajan) Discovers Upper limit for Black Holes [Sep 4, 2008]
32 Dr. Priyamvada Natarajan Webpage : http://www.astro.yale.edu/priya/index.html - Associate Professor, Departments of Astronomy and Physics, Yale University, 260 Whitney Avenue, New Haven, CT 06511.

******************
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். [October 16, 2008]

 

http://jayabarathan.wordpress.com/first-indian-tamil-woman-scientist/