பார்ப்பனியம் உயிர்ப்புடன் இருக்கும் வரை, மக்கள் அதை விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் வரை - ஒரு பிரிவினருக்கு உரிமைகளையும், இன்னொரு பிரிவினருக்கு இடையூறுகளையும் அது விளைவிப்பதால் - பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வது அவசியம். அவர்கள் அப்படித் திரள்வதால் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாவது, முதலாளிகளுடைய முயற்சியின் காரணமாக நேர்கிறது என்று வைத்துக் கொண்டால், அதைப் பற்றிப் புகார் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும்… ஆனால், நாம் இப்படி அமைப்பு ரீதியாகத் திரள்வதற்கு முதலாளிகள் பின்புலமாக அமைந்திருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல எந்த விமர்சகராவது இருக்கிறாரா என்று நான் சவால் விட்டுக் கேட்கிறேன்.
எனவே, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக வெட்கப்படத் தேவையில்லை; அதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமுமில்லை. மாநாடு கூட்டப்படுவதை நியாயப்படுத்துவதற்கு உரிய காரணங்களும், நோக்கங்களும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஓரிருவர், இந்த மாநாட்டை ஏற்கவில்லை. அவர்கள் போக்கில் புதுமை எதையும் நான் காணவில்லை. அவர்களில் சிலர் மற்றவர்களின் கூலிப்படைகள். சிலர் தவறாக வழிகாட்டப்பட்டவர்கள். சங்கம் என்கிற வார்த்தையே அவர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரிகிறது. செல்வாக்கு மிக்க பிரச்சாரகர்கள் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளிவரும்போது அவர்கள் மயங்கி விடுகிறார்கள். அதனால் ஒருவருக்கொருவர் உணர்வுகளிலும், அணுகுமுறையிலும் முரண்பட்டுக் கிடக்கிறார்கள்.
ஒருவன் உரிமை கேட்கிறான். அவனுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அதன் நோக்கம். இதுவே மற்றவர்களுடைய நலன்களுக்கு எதிராகத் தோன்றுகிறது என்கிறபோது, அவர்களிடையே உண்மையான சங்கம் எப்படி சாத்தியமாகும்? பலவீனமானோர், துன்புறுவோரைப் பொறுத்தவரை, இந்தச் சங்கம் ஒரு மோசடியே தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த மோசடியை தோலுரித்துக் காட்டும் நேர்மையான மனிதன், மோசடிப் பேர்வழிகளால் தூற்றப்படுவது இயற்கைதான். அவனைப் பிரிவினைவாதி என்று அவர்கள் ஏசுவதும் இயற்கைதான். அவன் செய்வது பிளவுபடுத்தும் வேலைதான். எங்கே உண்மையான வேறுபாடு இருக்கிறதோ - எங்கே முரண்பாடு இருக்கிறதோ, அதை அவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். இந்த முரண்பாடும் மோதலும் ஏன் தோன்றுகின்றன? தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். அவர்கள் மீது மற்ற பிரிவினர் ஆதிக்க உரிமைகளைக் கோருகின்றனர். அதனால் பிளவும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. வேண்டுமென்றே யாரும் வேறுபாடுகளை உருவாக்கவில்லை. நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வேறுபாடுகள் மூலம் நமக்கு அநீதி இழைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன்.
உங்கள் குறைபாடுகளைக் களைய வேண்டுமானால், அவற்றிற்குத் தீர்வு காண வேண்டுமெனில், நீங்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டாக வேண்டும். அப்படித் திரளும்போது அந்த அமைப்பு எந்த நோக்கத்தோடு பணிபுரிய வேண்டும் என்பது அடுத்த கேள்வி. வணிக மேம்பாடு அதன் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும். சங்கம் ஒன்றில் சேருவதா அல்லது உங்களுக்கென்று தனியாக சங்கம் தொடங்குவதா என்பது இன்னொரு கேள்வி. உங்கள் திசை வழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால், இந்தக் கேள்வியைப் பற்றி நீங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறது. அதன் தலையாய நோக்கம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிடாமல் பாதுகாப்பதே அதன் தலையாய நோக்கம். அய்ரோப்பாவில் ஒரு சராசரி மனிதன் தன் பிறப்பு, பயிற்சி ஆகியவற்றிற்கு ஏற்ப வழக்கமான அதே வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான். அதைக் குறைக்க முற்படும் எந்த முயற்சியையும் அவன் உறுதியாக எதிர்க்கிறான். இந்த உறுதி இந்தியத் தொழிலாளர்களிடம் இல்லை. இவர்களுக்கு நாட்களை ஓட்டினால் போதும், வேலையில் நீடித்தால் போதும். தரமுள்ள வாழ்வில் இவர்களுக்கு வேட்கையில்லை. இப்படித் தரம் தாழ்ந்து போவதை எதிர்க்கும் உறுதி இல்லை என்றால், அந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் மேலும் மேலும் கீழ்நிலைக்குதான் போவார்கள்.
என்னைப் பொறுத்தவரை, தொழிற்சங்க இயக்கம் என்பது வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவுக்கு மிக மிகத் தேவை. நான் முன்பே சொன்னபடி, இன்றைய இந்தியத் தொழிற்சங்க இயக்கம் தேங்கிப் போய் நாற்றம் வீசுகின்ற குட்டையாய்க் கிடக்கிறது. இதற்கான காரணம், இதன் தலைவர்கள் கோழைகள், சுயநலக்காரர்கள் என்பதும்; தவறாக வழிகாட்டப்பட்டவர்கள் என்பதுமாகும். இன்னும் சில தலைவர்கள் வெறும் சாய்வு நாற்காலித் தத்துவ ஆசிரியர்களாக அல்லது அரசியல்வாதிகளாகவே உள்ளனர். அவர்களுடைய கடமை, பத்திரிகைகளுக்கு அறிக்கை தருவதோடு நின்று விடுகிறது. தொழிலாளர்களைத் திரட்டுவது, அவர்களுக்கு கல்வி புகட்டுவது, அவர்கள் போராட உதவுவது போன்ற கடமைகள் அவர்களுக்கு இல்லை. தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு, அவர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயார். ஆனால், தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.
-தொடரும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:181)
நன்றி:தலித்முரசு