Language Selection

வறுமையிலும் வெறுமையிலும் அல்லலுறும் வர்க்கங்களுக்கு, இடையறாது உழைக்கும் வர்க்கங்களுக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு நன்மை செய்ய நாடாளுமன்ற ஜனநாயகம் தவறிவிட்டது என்றால், அதற்கு இந்த வர்க்கங்களே முக்கியமான பொறுப்பாகும். முதலாவதாக, மனிதர்களின் வாழ்க்கையை உருவாக்குவதில் பொருளாதாரத்திற்குள்ள முக்கிய பங்கை, இந்த வர்க்கத்தினர் மிகப் பெருமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டனர். பொருளாதார மனிதன் ஒரு போதும் பிறப்பதில்லை என்ற ஒரே காரணத்திற்காக, பொருளாதார மனிதனின் முடிவு பற்றி உண்மையில் நாம் எதுவும் பேச முடியாது.

 

“மனிதன் ரொட்டியைக் கொண்டு மட்டுமே வாழ்வதில்லை’ என்று மார்க்சுக்கு பொதுவாக அளிக்கப்படும் மறுப்புரையில், கெட்ட வாய்ப்பாக ஓர் உண்மை பொதிந்துள்ளது என்றே கூறவேண்டும். பன்றிகளைப் போன்று மனிதர்களைக் கொழுக்க வைப்பதே நாகரிகத்தின் குறிக்கோள் அல்ல என்று கார்லைல் கூறியிருப்பதில், எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், இந்தக் கட்டத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். உழைக்கும் வர்க்கத்தினர் பன்றிகளைப் போல தின்று கொழுத்திருக்கவில்லை. மாறாக, அவர்கள் கவ்வும் குடலை இறுகப் பிடித்துக் கொண்டு, பசி பட்டினியால் வாடுகின்றனர். எனவே, முதலில் ரொட்டி மற்றவை எல்லாம் பிறகுதான் என்று அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

 

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரூசோவின் “சமூக ஒப்பந்தம்’, மார்க்சின் “கம்யூனிஸ்டு அறிக்கை’, தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக் கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான்ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆனால், உழைக்கும் வர்க்கங்கள், இந்த ஆவணங்கள் மீது உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டன. இதற்கு மாறாக, பழங்கால மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய கற்பனைக் கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர்; இந்தக் கெட்டப் பழக்கத்திற்கு அவர்கள் அடிமைகளாகிவிட்டனர்.

 

மற்றொரு மாபெரும் குற்றத்தையும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே இழைத்துக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தைக் கைப்பற்றும் ஆர்வ விருப்பம் எதையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக, அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்பதையும்கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அரசாங்கம் குறித்து அவர்கள் எத்தகைய அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மனித இனத்துக்கு நேர்ந்த எல்லா அவலங்களிலும் இதுதான் மிகப் பெரியதும், மிக மிக வருந்தத்தக்கதுமாகும். அவர்கள் எத்தகைய தொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அது தொழிற்சங்க வடிவத்தையே கொண்டிருக்கிறது.

 

இதை வைத்து நான் தொழிற்சங்கங்களை எதிர்ப்பவன் என்று எண்ணிவிட வேண்டாம். அவை மிகவும் பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றுகின்றன என்பதில் அய்யமில்லை. ஆனால், தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள எல்லாக் கேடுகளுக்கும் தொழிற்சங்கங்கள்தான் சர்வரோக நிவாரணி என்று நினைப்பது தவறு. தொழிற்சங்கங்கள் என்னதான் ஆற்றல் மிக்கவையாக இருந்தாலும், முதலாளித்துவத்தை நேர்மையான வழியில் இட்டுச் செல்லும்படி முதலாளிகளை நிர்பந்திக்கும் ஆற்றல், வலிமை அவற்றுக்கு இல்லை. அவை நம்பி இருக்கும்படியான ஒரு தொழிலாளர் அரசாங்கம் அவற்றுக்குப் பின்னால் இருந்தால், தொழிற்சங்கங்கள் கூடுதல் ஆற்றல் கொண்டவையாக இருக்க முடியும்…

 

உழைக்கும் வர்க்கங்களை ஆட்கொண்டிருக்கும் மூன்றாவது நோய் “தேசியம்’ என்ற முழக்கத்திற்கு அவர்கள் மிக எளிதில் மயங்கிவிடுவதாகும். தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லா வகைகளிலும் வறியர்களாக இருக்கின்றனர்; தங்களுடைய மிகக் குறைந்தபட்சத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, தேசியம் என்று கூறப்படும் லட்சியத்துக்காக தங்களிடமிருக்கும் எல்லாவற்றையும் பல நேரங்களில் தியாகம் செய்து விடுகின்றனர். தாங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அந்தத் தேசியம் வெற்றி பெற்றுவிடும்போது, அது தங்களுக்கு சமூக சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமா என்று அறிய அவர்கள் ஒருபோதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல, தேசியம் வெற்றிவாகை சூடி அதிலிருந்து உதயமாகும் ஒரு சுதந்திர அரசு, இவர்களது எண்ணற்றத் தியாகங்களால் கருவாகி உருவான அரசு, இவர்களது முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி, இவர்களுக்கே பகையானதாக மாறிவிடுவதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். தொழிலாளர்கள் தங்களை இலக்காக்கிக் கொள்ளும் மிக மிகக் கொடிய சுரண்டல் வகையைச் சேர்ந்ததாகும் இது.

 

தொடரும்

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.

நன்றி:தலித்முரசு